Advertisements
இலக்கியம்கவிதைகள்

வேள்வியின் நாயகனே…

 

செண்பக ஜெகதீசன்

அறிவியல் அறிந்த இன்றும்
அறியாமல் இருக்கிறோம்
பல
அடிமை விலங்குகளை..

அறிந்திருந்தோம் அன்று
அன்னை இந்தியாவுக்கு
அன்னியர் அளித்திருந்த
அடிமை விலங்கினைத்தான்..

அறிந்திருக்கவில்லை
அதனை
அகற்றிடும் வழியைத்தான்…!

முறுக்கு மீசையும்
முண்டாசுக் கட்டும்
துண்டான நெருப்பில்
நனைத்த வார்த்தைகளும்,

பெருக்கெடுக்கவைத்தன
உருக்குலைந்து கிடந்த இந்தியர்
ஒற்றுமை உள்ளத்தை
ஊறும் அறிவு வெள்ளத்தை…!

சோறு போடாது
சுதந்திரம் என்று
சோம்பிக் கிடந்தவர்களை
வீறுகொண்டு எழச்செய்தன
பாரதியின்
வீரம்செறிந்த வார்த்தைகள்..

அவன்
கண்ணொளியின் கனல்பொறி
கலங்கரைவிளக்கமானது
கலங்கிக்
கரையேறத் துடித்த இந்தியர்க்கு..

இன்னும் சொல்லப்போனால்-
இதயத்துடிப்பை அதிகமாக்கி
இந்திய சுதந்திர உதயத்திற்கு
உதவிய கரங்கள்
இந்த
உயர்கவியின் கரங்கள்…!

எட்டயபுரத்து நெருப்புப்பொறி
பட்டுத் தெறித்து
பற்றி எரிந்தது
பாரத தேசமெல்லாம்-
வீரசுதந்திரப் பெருநெருப்பாய்..

அணைக்கமுடியவில்லை
அதை
ஆங்கில ஆட்சியாளரால்…!

தாங்கிக்கொள்ளலாம்
தலையில் விழுவது
பந்து என்றால்..

பாறாங்கல்லே பறந்து வந்தால்…,
பறந்துவிட்டான் பறங்கியன்,
உறங்கிக்கிடந்த இந்தியா
உரிமைகேட்டு எழுந்ததைப் பார்த்து…!

பாரத சுதந்திரம்
பக்கத்தில் வருமுன்னே
பள்ளுப் பாடிய பாரதியை
மறந்திடுமோ
பாரத நாடு…!

எட்டயபுரத்துக்கு
ஏற்பட்டிருந்த கறை
எல்லாம் அகற்றப்பட்டுவிட்டது,
நம்
ஏழைக்கவிஞன்
இங்கு பிறந்ததாலே..

காட்டிக்கொடுத்ததில்
பட்ட கறை பாரதியின்
ஏட்டுப் பாக்களால்
எடுக்கப்பட்டு விட்டது…!

பாரதி என்ற
பளிங்கு வானில்
கருத்து மேகங்கள்
சூல்கொண்டு உலவி
கவிமழை பொழிந்ததால்,
சாதா மேகங்கள்
சத்தில்லாமல் அலைந்து

இந்த
மானம்மிக்க கரிசல் பூமியை
வானம்பார்க்க வைத்துவிட்டனவோ…!

வானிடிந்து வீழ்ந்தாலும்
வாராது அச்சமென்று
வாக்கிலே உறுதிசொன்னான்..

வனிதையர்க்கும்
வீரம் தந்தான்-
வாழ்வில் காணகிறோம்
வந்திட்ட பலனை இன்று…!

காக்கைக் குருவியிடம்
அவன்
காட்டவில்லை பேதம்,
அதனால் அவன்
பாட்டெல்லாம் ஆனது

பாரதத்தின் வேதம்,
அது
பறக்கவைத்தது
பரங்கியரைப் பல காதம்…!

கண்ணனையே தன்
எண்ணம்போல் ஆக்கியவன்
நம்
எண்ணத்தில் நிற்கிறான் உயர்ந்து..
பாப்பாக்களுக்கும் பாட்டு:ச்சொல்லி
பண்பிலே நிற்கவைத்தான் நிமிர்ந்து…!

மானிடவாழ்வின் கேள்விக்கெல்லாம்
தேனுடன் தந்த
பதிலாய் நிற்பவன் பாரதி,
நடக்கும்
புத்துலகத் தேருக்கு சாரதி..

அந்தக்
கேள்வியின் நாயகனை
வாழ்த்துவோம் நாம்-

விடுதலை
வேள்வியின் நாயகனின்
வீரம்
வரட்டும் நமக்கும் என்றே…!

வந்தேமாதரம்..
வணங்குவோம் பாரதத்தை..
வணங்குவோம் பாரதியை…!

 

படத்திற்கு நன்றி:

http://perumandraanjal.blogspot.in/2011/09/blog-post_03.html

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here