Featuredஇலக்கியம்பத்திகள்

நீங்கள் சொல்லாவிடில், வேறு யார் சொல்லுவார்!…….

பெருவை பார்த்தசாரதி

எங்கு சென்றாலும், தமிழர்களுக்கென்று தனி மதிப்பு எப்போதுமே உண்டு என்பதை அனைவரும் அறிவர். தமிழர்கள் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளும் அனைவரும் தமிழில் உரையாடுவதை விரும்புகிறார்களா?….

தமிழ் நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ இடம் பெயர்ந்தவர்கள் தமிழைச் சரியாக உச்சரிக்கிறார்களா?….இதைப் பற்றிய ஒரு சிந்தனை.

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழில் பேசுவதைக் கெளரவக் குறைச்சல் என்று நினைக்கின்ற தமிழர்கள் அனேகர். நன்றாக தமிழ் தெரிந்த விருந்தாளிகள், நம் வீட்டிருக்கு வந்திருக்கும் போது கூட, அந்த நேரத்தில்  நம் குழந்தைகளோடு தமிழில் உரையாடுவதைத் தவிர்க்க விரும்புகிறோம். அரைகுறை ஆங்கிலத்தில் பேசிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் தம்முடைய மதிப்பு உயர்ந்துவிடும் என்ற எண்ணம் பலரிடம் மேலோங்கி இருப்பதே இதற்க்குக் காரணம். அன்றாட உரையாடலில் இருக்கும் பேச்சுத் தமிழில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழை இன்று பலரும் கடைபிடிப்பதில்லை. கலப்புத்தமிழ் பற்றி நாம் சிந்தித்தோமானால், நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தமிழை முழுவதுமாக ஏற்கவில்லையா?….என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும்.

சீன மொழியைப் போல், தமிழ் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று என்பதும், இந்த மொழியை எப்படிப் பேணிக்காக்க வேண்டும், அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற செயல்முறையை நமது முன்னோர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

நாம் பேசும் போது மொழியை எப்படி உச்சரிக்கிறோமோ, அதே போல் அதற்கு எழுத்து வடிவம் கொடுக்கப் படுவதில்லை, எழுதுவதைப் போல் பேசுவதில்லை என்பதை அனைவரும் அறிவோம். உதாரணமாக சென்னையில் புழங்கும் கொச்சைத் தமிழை அப்படியே எழுத முடியாது. சில மெட்ராஸ் பாஷைகள் பின்வருமாறு, ‘ஏய் இன்னா சொல்ற’, ‘ஏய் மச்சி, இஸ்த்துகினு வா புள்ள’, ‘சும்மானாச்சுக்கும் சொல்லாத’, இது போன்ற கொச்சைத் தமிழ் பள்ளி மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

இன்னொரு பக்கம், எங்கு சென்றாலும், மற்றவர்கள் கவனம் நம் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடுவதை பலர் வழக்கத்தில் கொண்டுள்ளார்கள்.  குறைந்த அளவு கல்வித் தகுதி பெற்றவர்கள்தான் துணிக்கடையில் வேலைசெய்கிறார்கள், இவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லைதான், இருந்தாலும், ‘இந்த டிஸைன் வேண்டாம்’, ‘டேக் தட் பீஸ்’,‘நோ ப்ளைன் கலர்’, ‘ஒன்லி ஆர்டினரி கலர்’, ‘ஐ வாண்ட் செக்டு கலர்’ என்கிறார்கள்.

அடுத்து ‘தமிழுக்காக முழுவதும் அற்பணிக்கப் பட்ட நாளிதழ்’ என்று சொல்லிக் கொள்ளுகின்ற பத்திரிகைகள், நாளேடுகள், புத்தகங்கள் எல்லாவற்றிலுமே தமிழ் கலந்த ஆங்கிலம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கிறோம். ‘க்ரைம் பக்கம்’, ‘சிடி டுடே’, ‘டுடேஸ் ஸ்பெஷல்’, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ போன்ற வாசகங்கள் மக்கள் மனதை ஈர்க்கின்றன. இந்த மாதிரி ‘ஸ்பெஷல்’ எல்லாம் எங்கிருந்தோ வந்து நம்மிடம் ஒட்டிக் கொண்டுவிட்டது. இதைப் பற்றிய சிந்தனையோடு, பேருந்து (பஸ் என்று சொல்லாமல்) ஒன்றில் ஏறப் போனபோது நல்ல வேளையாக தூய தமிழில், பேருந்தின் முகப்பில் இருந்த “மகளிர் மட்டும்” என்ற வாசகம் கண்ணில் பட்டு மனதுக்குச் சற்று ஆறுதலளித்தது. பேருந்தில் ஏறிய உடன், “கண்டக்டர் எலிபெண்ட் கேட்டுக்கு ஒரு டிக்கட் கொடுப்பா” என்கிறோம்.  மாறாக நடத்துனர் அய்யா, ‘யானைக் கவுனிக்கு’ (Elephant Gate)ஒரு பயணச்சீட்டு தாருங்கள் என்று சொல்ல முடிவதில்லை.  ஏனென்றால், எங்கு சென்றாலும் தமிழுக்குள் ஒரு போராட்டம். அப்படியே தமிழில் பேசினாலும், அங்கே உடனிருப்பவர்கள் நம்மை கேலி செய்யமாட்டார்களா என்று கேட்பவர்களும் உண்டு.

என்னப்பா எல்லாத்துக்கும் தமிழ் உபயோகப் படுமா என்கிறார் என் நண்பர். ஒரு இடத்திற்குச் செல்வதற்கு, அவசரமாக கால் டாக்ஸியை அழைக்கிறோம்.

கால் டாக்ஸியைத் தமிழில் சொன்னால் புரியுமா?……தமிழில் புரியவைக்க முயன்றால், செல்லும் இடத்திற்குச் செல்ல முடியாமல் முடியாமல் கூட போகலாம். கால் டாக்ஸியில் செல்லும்போது வானொலி ஒலிப்பதைக் கேட்கிறோம். அதிலும் ‘ஹலோ FM’,‘ரேடியோ மிர்ச்சி ஹாட் மச்சி’, போன்ற முற்றிலும் தமிழையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கும் வானொலி நிலையம் என்று சொல்லிக் கொள்ளுகிற, ஆனால் தங்களுடைய பெயரில் ஆங்கிலம் கலந்த தமிழ் பெயருடைய வானொலி நிலையங்கள்.

கலப்படம் என்பது எதையும் விட்டு வைக்கவில்லை போலும். உணவில் கலப்படம், தண்ணீரில் கலப்படம் இப்படி எல்லாவற்றையும் கடந்து, கடைசியில், அது மொழியையும் விட்டு வைக்கவில்லை. “எங்கும் தமிழ்” “எதிலும் தமிழ்” என்று கூக்குரலிடும் பத்திரிகைகள் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மூலமாக வரும் தமிழிலும் வேற்று மொழிக் கலப்படம் கண்ணில் தெரிகிறது. ஒரு சில தமிழ் திரைப்படங்களின் பெயர்களைப் பாருங்கள்………..‘ரெட்’, ‘ரெயின் போ’, ‘ட்வெல் பி’, இதுபோல் இன்னும் பல.தமிழ் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களும் ஆங்கிலம் கலந்து வெளிவருகிறது. ‘மணமக்கள் தேவை’பகுதியில் ஆங்கிலம் கலந்த ‘only daughter’, ‘widow no encumberance’, ‘same community’ போன்ற ஆங்கில வாசகங்கள் தென்படுகின்றன.

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை, தாய்மொழி அல்லல் படுகிறது நம் தமிழ்நாட்டில். வேற்று மொழியின் ஆளுமை குழந்தைப் பருவம் முதலே ஆரம்பித்து விடுகிறது என்றே சொல்லலாம். இது ‘நர்சரிப் பள்ளி’,‘கிண்டர் கார்டன்’, ‘ப்ளே ஸ்கூல்’ என்று ஆரம்பித்து மெட்ரிக் வரை தொடருகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன், ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்குப் பிறகே ஆங்கிலம் அறிமுகப்படுத்தப் படும் என்று சொன்னதைக் கேள்விப் பட்டு இருக்கிறேன்.  ஆனால் இன்று முதல் வகுப்புக்கு முன்பே “பிரீகேஜி” முதல் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தால் ‘தமிழை’ முற்றிலும் அகற்றி விடுகிறது.  ஆங்கிலம் படிக்காவிட்டால், ஒரு உபயோகமும் இல்லை, சமூகத்தில் மரியாதை இல்லை என்று சொல்பவர்களுக்கு, தமிழ் நாட்டிலே பிறந்து, தமிழிலேயே படித்து, மற்ற மொழிகளில் சிறந்து விளங்கியவர்களைச் சொன்னால் அவர்கள் வாயடைத்துப் போவார்கள். உதாரணத்திற்கு, இந்திய விஞ்ஞானி ‘அப்துல் கலாம்’, ‘சீனிவாச சாஸ்த்திரி’ போன்ற எண்ணற்ற தமிழர்களைப் பற்றிச் சொல்லலாம். தாய்மொழி தமிழாக இருந்தாலும், தமதுமொழிப் புலமையால் ஆங்கிலேயரை வியக்க வைக்கவில்லையா?…இருந்தும் அவர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். எங்கு சென்றாலும் தமிழறிஞர்கள் சொன்னதை மேற்கோள்களாக எடுத்துச் சொன்னார்கள்.

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலை செய்கின்ற என் நண்பர் ஒருவர் ஆயுள் காப்பீட்டுக் கழகம் அறிமுகப் படுத்தியுள்ள புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை எனக்கு அறிமுகம் செய்யும் போது, புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ‘ஜீவன் சரள்’, ‘ஜீவன் மித்ரா’, ‘ஜீவன் ஆங்குர்’ போன்ற ஆயுள் காப்பீட்டுப் பாலிசியின் பெயர்களை உச்சரிப்பதற்குக் கூட மிகவும் சிரமப்பட்ட அந்தத் தமிழரிடம் “ஏன் இந்தப் பெயர்களைத் தமிழிலே மொழி மாற்றம் செய்து விளக்க முடியாதா?……என்று கேட்டதற்கு, இந்தியாவில் இந்தி மொழி பொது மொழி என்பதால் எல்லாப் பெயர்களும் அந்த மொழியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனவாம்.

நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அவ்வப்போது, இந்தி மொழி கற்காதவர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தி மொழி கற்க வேண்டும் என்று வலியுறுத்தப் படுகிறார்கள். “இந்தி மே போலோ, இந்தி மே பாத் கரோ” என்ற வாசகங்கள் தமிழரின் மேலதிகாரிக்குச் சொந்தமான மேசையை அலங்கரிக்கிறது. மற்ற மொழியைக் கற்க வேண்டாம் என்றோ, மட்டப் படுத்துவற்காகவோ இதைச் சொல்லவில்லை. மொழிமேல் உண்மையிலேயே பற்று இருந்தால், “சேமமுற வேண்டுமெனில் வீதியெங்கும் தமிழ் முழக்கம் செய்திடுவோம்” என்ற வாசங்களையும் மற்ற மொழியின் முன் வைக்கலாமே. இந்தி மொழியே பெரும்பாலும் நடைமுறையில் உள்ள வட இந்திய மாநிலங்களில், மாணவர்களுக்கு வழங்கும் கேள்வித் தாள்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதுபோல் இங்கு இல்லை.

அடுத்து தமிழர்கள் தங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கும் முறை. முன்பெல்லாம், ஒருவரது பெயரை வைத்து அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அடையாளம் காணமுடியும். தற்போது அப்படியில்லை, நிலைமை தலைகீழ். மரபு வழிப்பெயர்களும், தெய்வத்தின் பெயர்களும் முற்றிலும் தவிர்க்கப் பட்டு வருவது, தமிழ் மேல் நாட்டம் உள்ளவர்களை மேலும் வருந்தச் செய்கிறது. பெயர் சூட்டும் போது, தாத்தா பாட்டியின் பெயர்கள் பேரன் பேத்திகளுக்கு சூட்டிய காலம் மலையேறி, இப்போது இணையத்தின் வழிபுகுந்து, மற்ற மொழிகளுக்குள் நுழைந்து, கடைசியில் வாயில் நுழைய முடியாத பெயர் ஒன்று நம் வாயில் அகப்பட்டுக் கொண்டு காலம் பூராவும் சிக்கித் தவிக்கிறது. கணேசன், முருகன் என்ற பெயர்களெல்லாம் ‘முருகேஷ்’ ‘கணேஷ்’ என்றாகி, ‘ன்’ இருக்கின்ற இடத்திலெல்லாம் ‘ஷ்’ எடுத்துக் கொண்டு விட்டது. வேற்று மொழிகளில் இருக்கும் இடங்களின் பெயர்களைக் கூட தமிழில் ‘நேத்திராலயா’, ‘வித்யாலயா’, ‘மந்திர்’ என்று சேர்த்து எழுதுகிறார்கள்.

இந்த இடத்தில், நான் ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு வங்கிக்குள் நுழைந்தபோது, அருகில் இருந்தவர் என்னிடம் வங்கி மேலாளருக்கு, ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதித் தரச் சொன்னார். தமிழிலே எழுதப்பட்ட அந்தக் கடிதம் வங்கி மேலாளர் முதல் அனைத்து ஊழியர்களிடமும் சென்று மறுபடி வங்கி மேலாளரிடமே வந்து சேர்ந்தது. வங்கி மேலாளர் அந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து தருமாறு என்னை வலியுறுத்தியதை, நான் ஏற்க மறுத்து விட்டேன். தமிழ் நாட்டிலே இருந்துகொண்டு செயல் படுகின்ற அந்த வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே தமிழர்கள்தான், ஆனால், அங்கே நான் எழுதிய “தமிழ்க்கடிதம்”, அன்று தமிழர்களின் கையில் அகப்பட்டு கேலிக்கூத்துக்கு ஆளாகியது என்னை வருத்தமடையச் செய்தது. பிறகு மேலாளர் இந்த விஷயத்தைப் பெரிது படுத்த விரும்பாமல் என் வாதத்தை ஏற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளருக்கு வழிகாட்டும் ஆங்கில வாசகங்களுக்குக் கீழே, ஒன்றிரண்டு தமிழ் வாசங்களையும் எழுதிக் கொடுத்து அதையும் ஆங்காங்கே ஒட்டி வைக்க உதவினேன். இதேபோல திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பவர்கள் ‘Wedding Invitation’ என்று எழுதி, ‘you all cordially invited’ போன்ற நான்கு ஆங்கில வார்த்தைகளை எழுதிக் கொடுத்துவிட்டால் பெருமை எனக் கருதுபவரும் உண்டு.

இன்று, தமிழ் ஆசிரியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில், பொதுவாக நிலவும் ஒரு குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. அதாவது, தமிழர்கள் தமிழ் படிப்பதை விரும்பவில்லை என்ற  பரவலான இவர்களின் கருத்து வாதத்துக்குரியது.  ‘தமிழுக்காகவே வாழ்கிறேன்’ என்று சொல்லிக் கொள்பவர் கூட தங்களுடைய பிள்ளைகளை மட்டும் கான்வெண்ட் பள்ளிகளில் சேர்க்கத் தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இப்போதெல்லாம் தமிழில் உலா வருகின்ற தமிழ் ‘மின் இதழ்கள்’, ‘தமிழ் இணையதளம்’, ‘தமிழ் வலைப்பூ’ போன்ற இணைய வழி மூலம் தமிழ் படிப்பதில் தமிழ் மக்களுக்கு ஆர்வம் மேலோங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இவை எல்லாவற்றிலும் வேற்று மொழிக் கலப்படம் இருந்தாலும், பேச்சு மொழியே எழுத்து மொழியாக பாவிக்கப் பட்டாலும், இடை இடையே ஓரளவுக்கு தமிழில் புதிய சொற்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இன்றைக்கு உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும், ஒன்று கூடி உரையாடுவதும், தமிழுக்கெனத் தனியாகச் செயல்படும் இணைய தளங்களும் தமிழைக் காக்கப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.  தமிழில் செயல்படும் பலரது சொந்த வலைப்பூக்களில், தமிழை ஆங்காங்கே கொச்சைப் படுத்தி இருப்பதையும் காணமுடிகிறது. ஆயிரக்கணக்கில் தமிழில் உலா வரும் இணையத் தொடர்புகள் இருந்தாலும், இனிமையான தமிழைக் காண்பது சற்று அரிதாகவே உள்ளது.

பழக்கத்தில் உள்ள பல்வேறு சொற்களுக்கும் பொருந்தக்கூடிய தமிழ்ச்சொற்களைக் கண்டறிந்து, அவ்வப்போது இணைய தளத்தில் பதிவு செய்தால் மட்டும் போதாது. அது நடைமுறையில் கடைபிடிக்கப் படுகிறதா என்பதையும் தமிழ் ஆர்வலர்கள் அறிய முற்படவேண்டும். தனி ஒரு மனிதனால் இது சாத்தியமாகாது என்பதால், ‘தமிழ் ஆய்வு மன்றங்கள்’ மற்றும் ‘தமிழ் ஆர்வலர்கள்’ எல்லோரும் இதற்குத் துணை நிற்க வேண்டும்.

தமிழை “செம்மொழி” என்று அறிவித்தும், மொழிப் பயன்பாட்டைப் பற்றி யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை என்பதையே இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. தமிழ் மொழியின் இன்றய நிலைப்பாடு, இதே நிலையில் சென்றால் செம்மொழியின் திறம், நிறம் மாறிப் போய் விடாதா?….காலப் போக்கில் எல்லாத் தமிழ்சொற்களும் மறைந்து போகத் தொடங்கி, தமிழின் நிலை தடுமாறும் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். காலம் செல்லுகின்ற வேகத்தில், மொழிக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிக் கவலைப் பட யார் இருக்கிறார்கள்?…………………பெற்றோர்களும், ஆசிரியர்களும் சற்று சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டிய விஷயம்.

நேரில் தாய்மொழிக்கு நடந்ததெல்லாம், வேடிக்கை பார்த்திட்ட நீங்கள், தாய் மொழியின் மகத்துவத்தைப் பற்றி உங்கள் சந்ததிகளுக்கு,   “நீங்கள் சொல்லாவிடில், வேறு யார் சொல்லுவார்கள்”.

**************

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    totally true situation. still i love tamil.

  2. Avatar

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் பணிசெய்துவரும் மத்திய அரசு சார்பு அலுவலகத்தில் என் உடன் பணிபுரியும் சில அன்பர்கள் சில சில்லரை காசுகளுக்காக வருகைப் பதிவேட்டில் இந்தியில் கையெழுத்திடுகின்றனர். இன்று தமிழ் எங்கள் சுவாசம் என்று முழக்கமிடும் தலைவர்கள் தாங்கள் சொத்து சேர்ப்பதற்காகவே அந்த முழக்கத்தை முழங்குகின்றனர், முழு மனதுடன் அல்ல.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க