ஐரேனிபுரம் பால்ராசய்யா


ரயில்நிலையத்தில் முன்னறிவிப்பு செய்துவிட்டு வரும் பிரயாணியை வரவேற்கும் சொந்தக்காரர்களைப் போல, குட்டன் ஆசானும், நேசமணியும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தார்கள்.

ஐலண்ட் எக்ஸ்பிரஸ் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து இளைப்பாறிக்கொண்டிருந்தது. அனந்தகிருஷ்ணனும் சொர்ணாவும் ரயிலைவிட்டு இறங்கியபோது எதிரில் நின்ற குட்டன் ஆசானையும் நேசமணியையும் பார்த்து அதிர்ந்தார்கள்.

“கிருஷ்ணா, என்ன ஏமாத்தியிட்டியேடா, ஆறுமாசத்துல இளைச்சு துரும்பாயிட்டியே, வாடா வீட்டுக்கு போலாம், உங்க ரெண்டு பேரையும் ஊருக்கு வரவழைக்கிறதுக்குத்தான் தங்கம்மைக்கு ஆக்சிடென்ட்ன்னு ஒரு பொய்யச் சொல்ல வெச்சோம், நீங்களும் வந்துட்டீங்க, வெளியுல கார் நிக்குது, வந்து வண்டியுல ஏறு!’’ குட்டன் ஆசான் தனது மீசையை முறுக்கியபடியே சொன்னார்.

“அப்பா, சொர்ணா!’’ அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் குட்டன் ஆசான். அனந்தகிருஷ்ணனின் பின்பக்கக் கழுத்தை தள்ளிக்கொண்டே ரயில்நிலையம் விட்டு வெளியேறினார். வெளியில் நின்ற கார் கதவு திறக்கப்பட்டு அனந்தகிருஷ்ணன் உள்ளே அடைக்கப்பட்டான். கார் மார்த்தாண்டம் நோக்கி நகர்ந்தது.

ரயில் நிலையத்தில் பிரம்மை பிடித்தவள் போல் நின்றாள் சொர்ணா. தன் கண் முன்னால் தனது கணவன் அனந்தகிருஷ்ணனை அடித்து அழைத்துச்சென்ற காட்சி அவள் மனதைவிட்டு மறையாமல் திரும்ப திரும்ப வந்து போனது. யாருமற்றதொரு காட்டில் தனித்து விடப்பட்ட அனாதையைப் போல, ரயில்நிலைய பிளாட்பாரத்தில் நின்றாள்.

ஒருவகையில் அம்மாவுக்கு எதுவும் ஆகவில்லையென்று மனம் ஆறுதல் பட்டாலும் வயிற்றில் குழந்தையோடு அம்மாவிடம் சென்று நின்றால் அம்மா ஏற்றுக்கொள்வாளா? ஆறு மாதத்திற்கு முன்பு அம்மாவிடம் சொல்லாமல் கொள்ளாமல் அனந்தகிருஷ்ணனோடு இந்த ஊரை விட்டே ஓடிப்போனதும் அம்மாவுக்கு விபத்து என்று கேள்விப்பட்டு ஊருக்கு திரும்பிய இடத்தில் நடந்த நிகழ்வுகளை நினைக்க நினைக்க சொர்ணாவுக்கு அழுகை வந்து முட்டியது.

தனது எதிர்காலம் குறித்த கவலைகளோடு பஸ்சில் ஏறி அமர்ந்தாள். பொறியில் சிக்கிய எலி போல அனந்தகிருஷ்ணன் அவன் அப்பாவிடம் மாட்டிக்கொண்டான், அவனது கன்னத்தில் விழுந்த அடி அவளது கன்னத்தில் விழுந்த அடியைப்போல அவளுக்கு வலித்தது.

பஸ்சை விட்டு இறங்கியபோது சூரியன் மறைந்து எங்கும் இருள் படர்ந்திருந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது குடிசையை நோக்கி நடந்தாள்.

“அம்மா’’ என்று பெருங்குரலெடுத்து அழைத்தாள். அவளது குரல் குடிசையைத் தாண்டி போய் விழுந்தது. குடிசைக்கு வெளியே எட்டிப்பார்த்த அவளது தாய் தங்கம்மை, வாயும் வயிறுமாக வந்து நின்ற தனது மகள் சொர்ணாவைப்பார்த்ததும் சர்வ நாடிகளும் அதிர, வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்தபடி நின்றாள்.

தங்கம்மைக்கு பேச்சு வர மறுத்து அழுகை பற்றிக்கொண்டது, தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அனந்தகிருஷ்ணனோடு ஓடிப்போனவள் இன்று திரும்பிவந்து நிற்கும்போது அவளை அரவணைப்பதா துரத்துவதா என்று தெரியாமல் தடுமாறினாள். பெற்ற பாசம் அவளை எப்படி துரத்தும்? மகளின் கைகளைப்பற்றி குடிசைக்கு அழைத்துச்சென்றாள். இரவு அழுகையினூடே நகர்ந்தது.

மறுநாள் காலை குற்றவாளிக்கூண்டில் நிற்கும் ஒரு கைதியைப்போல குட்டன் ஆசான் வீட்டின் முன்பு தலை குனிந்தபடி நின்றாள் தங்கம்மை.

“தங்கம்மை நடந்தது நடந்து போச்சு, என் மகன் உன் பொண்ண கூட்டிகிட்டு இந்த ஊர விட்டு ஓடிப்போயி இன்னைக்கு உன் மக வயித்துல ஒரு குழந்தை வளர்றதுக்கு காரண மாயிட்டான். என் மகன் உன் மக கழுத்துல தாலி கட்டல, பதிவுத்திருமணம் பண்ணல, அதனால விவாகரத்துக்கு அவசியமில்ல, இருந்தாலும் ஐம்பதாயிரம் பணம் தர்றேன், வாங்கிட்டு போ, உன் பொண்ணு என் மகன மறந்திடணும்!’’ விறைப்பாய் சொன்ன குட்டன் ஆசானை தலை நிமிர்ந்து கூட பார்க்க திராணியின்றி தங்கம்மாவின் தலை தாழ்ந்திருந்தது.

“என்ன பதிலையே காணோம்?’’

“நீங்க சொன்னா சரியிங்க ஆசான்!’’

தங்கம்மாவின் கைகளில் ஐம்பதாயிரம் பணத்தை திணித்துவிட்டு அறைக்குள் நடந்தார் குட்டன் ஆசான். தனது மகளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஐம்பதாயிரம் பணத்தை ஈடாகப் பெற்றுக் கொண்டு கண்ணீர் சிந்தியபடி வெளியேறினாள் தங்கம்மை.

குடிசையில் அம்மாவின் வரவுக்கு காத்திருந்தாள் சொர்ணா. குட்டன் ஆசானிடம் வாங்கிய பணத்தை அவளிடம் நீட்டியபோது பணத்தை வாங்க மறுத்து வெறித்தாள்.

அனந்தகிருஷ்ணனின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதற்கு கூலி இந்த ஐம்பதாயிரம் பணம் என்ற போது தனது சமூகத்தின் மீது வெறுப்பு வந்தது சொர்ணாவுக்கு. இனிமேல் அனந்தகிருஷ்ணன் தன்னுடையவன் அல்ல என்ற உணர்வு எழுந்தபோது கண்ணீர் அவள் கட்டுப் பாட்டில் இல்லாமல் வெளியேறிக்கொண்டிருந்தது.

அவனோடு வாழ்ந்த நாட்கள், அவன் உயிரை வளர்த்த நாட்கள், எல்லாவற்றையும் அடியோடு மறந்து விட வேண்டுமா? தனது விதியை நொந்தபடி தனக்கு கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் கட்டச்சொன்னபோது தங்கம்மையின் முகம் மலர்ந்தது.

நாட்கள் நகர்ந்திருந்தன. சொர்ணா ஒரு பெண் குழந்தையெ பெற்றெடுத்தாள். ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு ஆட்டோ பிடித்து வந்து இறங்கியவர்கள் முன்னால் பிரம்மை பிடித்தவன் போல் நின்றிருந்தான் அனந்தகிருஷ்ணன்.

அனந்தகிருஷ்ணனுக்கு அவசர அவசரமாக அவன் சாதியில் பெண் பார்த்து திருமணத்திற்கு நாளும் குறித்தார்கள். ஆனால் சொர்ணாவுடன் ஓடிப்போன விஷயமறிந்த மணப்பெண்ணுக்கு அவனை பிடிக்காமல் போகவே, திருமணம் தடைபட்டுப்போனது, அன்றிலிருந்து ஒரு குடிகாரனாக மாறி எப்பொழுதும் குடியும் கூத்தியாளுமாக அலைந்தான்.

சொர்ணா அவனை பார்த்ததும் பார்க்காததுபோல் தனது குடிசை நோக்கி நடந்தாள்.

“சொர்ணா, என்கூட பேசமாட்டியா? என் குழந்தைய எனக்கு காட்டமாட்டியா?’’

“தம்பி, வீணா பிரச்சனைய உண்டு பண்ணாத, உனக்கும் என் பொண்ணுக்கும் எந்த ஒட்டும் இல்ல, உறவும் இல்ல, பணத்த குடுத்து கணக்க சரி பண்ணியாச்சு, மறுபடியும் எதுக்கு அவகிட்ட பேச்சு வேண்டி கிடக்கு!’’ தனக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அனந்தகிருஷ்ணனைப் பார்த்து சொன்னாள் தங்கம்மை. அனந்தகிருஷ்னன் அதற்கு மேல் நடக்க பிடிக்காமல் திரும்பி மதுக்கடைக்கு நடந்தான்.

அன்று மாலை குட்டன் ஆசான் சொர்ணாவின் குடிசைக்கு வந்தார். தங்கம்மை பழைய பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை தனது முந்தானையால் துடைத்து அதில் குட்டன் ஆசானை அமரச் சொன்னாள்.

“சொர்ணா, உன்ன என் மகன்கிட்டயிருந்து பிரிச்சு அவனுக்கு வேற ஒரு பொண்ண கட்டி வைக்கலாமுன்னு நினச்சேன், அது நடக்கல, இப்போ என் மகன் குடிச்சு குடிச்சு உடம்பையும் கெடுத்துகிட்டு உன்னையே நினச்சுகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கான், அவன இப்பிடியே விட்டா குடலு வெந்து செத்து போயிடுவான், பேசாம அவன நீயே கல்யாணம் பண்ணிக்க, நீங்க ரெண்டு பேரும் பதிவுத்திருமணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருங்க!..’’ தனது கம்பீரம், கெளரவம், மானம், மரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தன் தவறை உணர்ந்தவராய் கேட்டார் குட்டன் ஆசான்.

சொர்ணா ஒரு கணம் அதிர்ந்து பின்பு சுதாகரித்துக்கொண்டாள். இவ்வளவு பெரிய மனிதர் தன் குடிசை தேடி வந்து அனந்தகிருஷ்ணனை திருமணம் செய்துகொள் என்று சொல்லும் பொழுதே அவரது பெருந்தன்மை தெரிந்தது, இருந்தாலும் மனசு மறுதலிக்கவே செய்தது.

“ஆசானே, இப்போ நீங்க மனசு மாறி வந்து எங்கள கல்யாணம் பண்ணச்சொல்றீங்க, உங்க மகன் இப்போ பழைய அனந்தகிருஷ்ணன் இல்ல, குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்து வெச்சிருக்கிற ஒரு நோயாளி, உங்க மகன கட்டிகிட்டு சுமங்கலிங்கற பட்டத்தோட கொஞ்ச நாள் வாழ்றதவிட நிரந்தரமா நான் தனிமரமாவே வாழ்ந்துட்டு போறேன்.’’ சவுக்கடியாய் வந்து விழுந்த அவளது வார்த்தைகளில் தலை குனிந்தார் குட்டன் ஆசான். இருவரையும் பிரித்த தவறுக்கு பலிகடா தனது மகன் என்பதை உணர்ந்தபோது கூனிக் குறுகினார்.

குட்டன் ஆசானின் கம்பீரமும், மிரட்டும் மீசையும், அதட்டும் பார்வையும் தலைகுனிந்திருந்தன. மனதில் பாரமேற குடிசையை விட்டு தலைகுனிந்தபடி வெளியேறினார் குட்டன் ஆசான்.

ஓவியத்துக்கு நன்றி:

http://4.bp.blogspot.com/_kcgurSgSUkY/TQbf7plQeSI/AAAAAAAADRE/j5stIc-Iq-M/s1600/DSC06089.JPG

1 thought on “தலைகுனிவு

  1. சரியான முடிவுதான் எடுத்திருக்காங்க சொர்ணா.. தேவையெனில் சேர்த்துக்கொள்ள உயிரில்லா ஜடமா பெண்?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க