நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 2

3

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – பகுதி 1

Subashini_Thirumalai

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

அன்று அமாவாசை. சின்னதம்பியா பிள்ளையின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனவே பழைய கஞ்சியைக் குடிப்பதற்குப் பதில், தன் பெண் வீட்டிற்குப் போய் அமாவாசைச் சாப்பாடு சாப்பிடலாம் என்று கிளம்பினார். முதலில் பெரிய பெண் வீட்டிற்குப் போனபோது அப்பா சாப்பிட்டு வந்துவிட்டார் என்கிற தோரணையில் பேசினாள். இளைய பெண்வீட்டில் சாப்பிடலாம் என்றால், ‘‘அக்கா வீட்டிற்குப் போனேன் என்று இளைய மகளிடம் கூறும்போது, “உங்கிட்ட எத்தனை நாளப்பா சொல்றது, வந்தா நேரே இங்கே வான்னு. நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டு, அப்புறமா இங்கே வாறே’’

“அது சரியில்லேமா…. அம்மாச்சியாட்டா…. இன்னிக்கு….”

“அம்மாச்சியானா என்னா? நானுந்தான் குளிச்சு முழுகிட்டு உல வைச்சேன். உன் விரதத்திற்கு என் வீட்டில் சாப்பிட்டா என்ன பங்கம் வந்திடுமாம்! இனி இப்படி வா சொல்லு கேன்…”

அன்பில் விளைந்த கோபம், அவரை எட்டியது. அடுக்களையில் காய்ந்த தேங்காய் எண்ணெய் பப்படத்தைப் போட்டதில் உண்டான சொர்…… என்ற ஒலி.

கிழவருக்குத் தோன்றியது. இன்னும் சாப்பிடலைன்னு இவளிடம் சொன்னால் என்ன? என்ன இருந்தாலும் மகள்தானே! பெற்ற மகளிடமுமோ கௌரவம் பார்ப்பது?

செருப்பால அடி, மருமகன் வேற இருக்கான். அப்படியென்ன பசி? மரியாதை கெட்ட பசி? அப்படி வயத்தை நிறைச்சிக்காட்டித்தான் என்ன?

மனம், வாதமும் எதிர்வாதமும் செய்தது. கிழவருக்கு அப்போதுதான் படீரென்று புத்தியில் உரைத்தது. ‘சே! எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை!’

ஆமாம், ஐம்பதாண்டு பழக்கம். குளித்துவிட்டு திருநீறணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் துலங்கும் நீறுடன் அவர் வெளியே இறங்கிவிட்டால், பிள்ளைவாள் சாப்பிட்டாகிவிட்டது என்று பொருள். இது ஊர் மாத்திரமல்ல, அவருடைய உறவினர்களும் அறிந்ததொன்று. அதுதான் இன்று அவரைக் காலை வாரி விட்டுவிட்டது.

nanjil nadan“குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடும்மா”. விரத நாட்களில் சாப்பாடாகிவிட்டால், இரவு பலகாரம் வரை அவர் வெந்நீர்தான் சாப்பிடுவது, ‘சாப்பிட்டாகி விட்டது’ என்று நிச்சயமாக்கப்பட்டுவிட்ட பிறகு அதிலிருந்து நழுவ முடியுமா? வெந்நீரை வாங்கிக் குடித்துவிட்டு பேரனின் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு, “சரிம்மா, கீழத் தெருவில் ஒரு ஆளைப் பார்க்கணும், பாத்துட்டு வந்துடுறேன். நேரமானா அவரு வெளியே போயிடுவாரு” என்று சாக்குச் சொல்லி விட்டு, ஒன்றரை மணி வெய்யிலில் இறங்கினார்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகென்று முக்கால் மைல் நடந்து வீட்டினுள் நுழைந்து, அடுக்களைக்குள் புகுந்து, பானையிலிருந்த பழையதைப் பிழிந்து வைத்து விட்டு, ஊறுகாய் பரணியைத் தேடிய சின்னத்தம்பியா பிள்ளையை, போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவர் மனைவி விசித்திரமாகப் பார்த்தாள்.

இதுதான் இவரது முதல் குழந்தை. 1975ஆம் ஆண்டு பிறந்தது. ஜூலைத் திங்கள் தீபம் இதழ் உலகிற்குக் காட்டியது. அவ்வாண்டு இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்ற ஊட்டமுள்ள குழந்தை. இதன் பெயர் ‘விரதம்’.

சின்னத்தம்பியா பிள்ளை, அவ்வூரை வளைத்து ஓடும் ‘தேரேகால்’ பற்றியும், அவர் குளித்ததைப் பற்றியும் விளக்கமாக ஒரு பக்கத்திற்கு மேல் அடுத்தடுத்து விளக்குகிறார். அது அகண்ட காவேரி அல்ல என்றாலும், மணலை அரித்துக்கொண்டு சலசலவென ஓடும் என்பதிலிருந்து, ஆனி அல்லது புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழையில் நுங்கும் நுரையுமாகப் புரண்டோடும் புது வெள்ளத்தில் சிறுவர்கள் பாலத்திலிருந்து, புன்னை மரக்கிளையிலிருந்து ஊஞ்சலாடிக்கொண்டே பாய்ந்து விடுவார்கள் என்பது வரை அப்படியே விளக்கி எழுதியிருக்கிறார். கண்கள் பார்த்து,  மனத்தில் பதித்து வைத்ததை அப்படியே விவரிக்கும் பாணி முதல் கதையிலேயே வடிவெடுக்கிறது.

1977ஆம் ஆண்டு முடிவிற்குள் 15 படைப்புகள் வெளிவந்துவிட்டன. இவ்வாண்டு தீபம் டிசம்பர் இதழில் வெளியான ‘வாய் கசந்தது’ எனும் இவரது கதைக்கு இலக்கிய சிந்தனைப் பரிசு கிடைத்தது. தன் தந்தைக்காகத் தனயன் வயல் வேலையில் உதவி செய்ததைப் பற்றிய கதை இது.

“ஐயப்பன் படிக்கிற பையனானாலும் விவசாய வேலைகள் கொஞ்சம் கொஞ்சம் செய்வான். வயலுக்கு, அப்பாவுக்கு கஞ்சி கொண்டு போனால் ஏர் மெனக்கெடாமல் கை ஏர் பிடிப்பான். சால் அடிக்கும் முதல் ஏரோ, சால் பார்த்து “மூணேர்ச்சால்…பாதிக்குக் கிழக்கே நாலேர்ச்சால்…”என்று கணக்குச் சொல்லும் கழுத்து ஏரோ அல்லது “மேல மோடாங்கிலே ஒரு பொட்டு இருக்கு… நாலாஞ்சால்லே உழவில்லே…” என்று சொல்லும் பின் ஏரோ அடிக்க வராதே தவிர, இடையில் எந்த ஏரையும் திராணியாக அடிக்க முடியும்.

சனி, ஞாயிறு நாட்களில் அப்பா சூட்டடிக்கும் களத்துக்குச் சும்மாவாகவேணும் பார்க்கப் போனான் என்றால் வெண் பிணையலையாவது வாங்கி உற்சாகமாக, நாலு மடக்கு அடிப்பான். சூடடிக் களத்தில் எந்த வேலை ஆனாலும் செய்வான். பிணையடிக்க, கதிர் வாரிப் போட, வட்டம் உதற, படப்புக்கு வைக்கோல் எடுக்க, பொலி திரட்ட, பொலி வீச, பொலி சுமக்க என்று நேரம் கிடைக்கும் போது செய்வான்.

பொழுதுபோக்காக இதுவரை இது போன்ற வேலைகளைச் செய்திருக்கிறானே தவிர, முழு நேர வேலையாக ஐயப்பன் சூடடிக்கப் போனதில்லை.

ஐயப்பனுக்கு கால்கள் கடுத்தன. அதிகாலை இரண்டு மணியிலிருந்து மாடுகளுக்கு பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். மணி நாலரை இருக்கும். யாராவது வந்து பிணையலைப் பிடித்து நாலு மடக்கு அடிக்க மாட்டார்களா? கொஞ்சம் உட்கார்ந்து எழுந்தால் போதும். ஆனால் வாய்விட்டு எப்படிக் கேட்பது?… பிணையலடிப்பதுதான் சூடடியிலேயே கடுமையான வேலையோ? பிறகு ஏன் பிணையலடிக்கும் பையன்களுக்கு அரை ஆளங்கொத்து கொடுக்கிறார்கள்?

…..

அப்பம் அரையாளுக்கு அஞ்சேகால் படியும் ஒரு சொரங்கை நெல்லும் கிடைக்கும்… உத்தேசமா.. அஞ்சரைப் பிடின்னு வச்சிக்கிட்டாலும் ரெண்டே முக்காப் பக்கா … பக்காவுக்கு எம்பது பைசா அப்படியான ரெண்டு ரூவாயும் இருவது பைசாவும்….

இரவு ஒன்றரை மணிக்கு எழுந்தது ஐயப்பனின் நினைவுக்கு வந்தது.

இப்படி இக்கதை முடிகிறது. சிறுவனின் உழைப்பு, பயன் சிறியது. மனம் வலிக்கிறது. பதைபதைப்பு… அய்யோ என்கின்ற உணர்வைக் கொணருகிறார்… ஒரு வயலில் உள்ள இறுதி வேலைகள் அனைத்தையும் இக்கதையில் ஒவ்வொன்றாக விவரிக்கிறார். நாமே அக்களத்திலிருந்து காணுவது போல் யதார்த்தமாக காட்சியாக்கப்பட்டிருக்கின்றது.

நாஞ்சில் நாடன்

‘இடலாக்குடி இராசா’ என்றால் எல்லோர்க்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல், வாயால் புர்ர்ர்… என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. சிலருக்கு வண்ணாக்குடி கழுதையைக் கண்டது மாதிரி. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய பணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளில் சதைத்த செம்புண் சான்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.

இவ்வாறாகத்தான் இடலாக்குடி இராசைவைக் காட்சிப்படுத்துகிறார் தன் ‘இடலாக்குடி இராசா’ என்னும் கதையில் நாஞ்சிலார் அவர்கள்.

இந்தக் கடவுளின் குழந்தையின் உணர்வோடு தெரியாமல் அவ்வூர்ச் சிறுவர்கள் விளையாடிய விளையாட்டைப் பற்றி அமைகிறது இக்கதை.

“யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”

“பசிச்சா…? அது கொள்ளாண்டே..,!”

“அப்பம் இராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா… வண்டி விட்டிருக்கேன்…” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம். குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.

“அட.. இருப்பா… சொரணையிலே கூடுனவன்தான், ஏவுள்ள ராசாவுக்கு என்னமாங் குடு…”

“ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம்? சவம் இப்படி ஒரு பொறவி… கடவுளு படைச்சு விட்டுட்டான்…” சொல்லும் போதே அந்த ‘சித்திக்கு’ கண்ணீர் முட்டும்…

நீள நீளமான தலைவாழை இலைகள், ஏந்திய கைகளில் எவர்சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து இலையைத் துடைத்து… விளம்ப நின்ற ஐந்து பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்ப் பச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டு விட்டு விளம்பிச் சென்றான். பிரப்பிரம்மமாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.

நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு, எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு… கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து…

காது வைத்த செம்பு நில வாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோடுவையால் பார்த்து, இலையிலையாக வைத்துக்கொண்டு போனான் ஒருவன். தன் இலைத் தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான்.

“எண்ணேன்… ஏ எண்ணேன்… ராசாக்கும் போடாமாப் போறியே…”

பருப்புக்குப் பின்னால் நெய் வந்தது.

ராசாவின் முகத்தில் ஒரு பதைபதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்… ராசாக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா…”

இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப் போல… “சோ”வென்று சிரிப்பு. ஒரே சமயத்தில் போட்டித் தெறித்த அலையாய் பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காலி ஓசை…

ராசாவின் கண்களில்…

அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வருமுன்னால்… “அப்பம் நான் வண்டியை விட்டிடுரேன்…” சொற்கள் நனைந்து வந்தன.

திடீரென்று சிரிப்பு நின்றது.

‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா. யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

தீபம் ஏப்ரல் இதழில் 1978ஆம் ஆண்டு வெளிவந்த கதை இது. படித்தவுடன் “ஐயோ! போகாதேயேன்! வாடா! ப்ளீஸ்… சாப்பிட்டுப் போயேன்” எனக் கத்திக் கூப்பிடவேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கின்றது. அந்த வட்டார வழக்குச் சொல்லோடு அமைந்தது இன்னும் உயிர் கொடுக்கிறது சொற்களுக்கு.

மருமகள் மேல் உள்ள ஆங்காரம், அவளுடைய வாரிசையே அழிக்க வைக்கும் அளவிற்குச் செல்லும் மாமியாரின் ஆங்காரம், தந்தையின் ஏமாற்று வேலையைக் கவனிக்கும் தனயனுடைய மனசின் கிழிசல், என நாஞ்சில் நாடனின் கதைகள் வன்மையான உணர்வுகளை யதார்த்தமாகப் பதிவு செய்கின்றன.

“சற்று நீளமாக இருந்தாலும் காய்கறிக் குப்பைக் கூளங்கள் போடாத, கடலைமாவும் கஞ்சித் தண்ணியும் கலக்காக பூசணிக்காய் சாம்பார், இஞ்சி, பச்சை மிளகாய் வாசம் வீசும் தேங்காய் சட்னி, மசாலா ரோஸ்ட், ஆனியன் ரவா, நெய் மசாலா என்கிற ஜிகினா வேலையெல்லாம் இல்லாமல் காலையில் இட்லியும் ரசத்தில் ஊறிய பருப்பு வடையும், அவியல், துவரன், சாம்பார் ரசம், மோருடன் சோறு, சீசன் போல் நெல்லிக்காய், மாங்காய் அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய், சாயங்காலம் பருப்பு வடை, உளுந்த வடை, தேநீர், இரவு புளித்த மாத்தோசை, பொரி கடலை சட்னி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய்”

இவை கிடைக்குமிடம் நாஞ்சில் நாடனின் “சைவமும் சாரைப் பாம்பும்” கதையில் வரும், திருநெல்வேலி நாகர்கோயில் நெடுஞ்சாலையில் வள்ளியூர் தாண்டி, காவல் கிணறு தாண்டி, உயரம் உயரமான மூக்காக, அரக்கர்களின் அடில் வீச்சுகளைத் தாண்டி முப்பந்தரத்து இசக்கியம்மன் கோயில் தாண்டி, ஆரல்வாய்மொழிக் கோட்டை வாசல் ஓரம் சுப்பையா பிள்ளைவாள் காபி கிளப் ஆகும்.

இது நாஞ்சில் நாடன் அவர்களின் மொழிநடை வளத்தைப் பறைசாற்றி நிற்கின்றது. இவர் ‘பிராந்து’ என்னும் கதையில் ஆண்களின் ஆடை உடுத்தும் பாங்கினைப் பதிவு செய்கிறார்.

ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்குசீலம். வேலை நடக்கும் போது, வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும். துவர்த்து, பிற சமயங்களில் தோள் மீது கிடக்கும். ஒரு பக்கமாகவோ, இரண்டு பக்கங்களிலும் கண்ட மாலை போலவோ, கல்யாணம், சடங்கு, பால் காய்ச்சு, சீமந்தம் என்று போகும்போது வேட்டியும் துவர்த்தும் வெளுத்து மடித்ததாக இருக்குமே தவிர, வேறு விசேடமான ஆடை அணிகலன்கள் கிடையாது. கேடயம் போன்ற மோதிரங்கள், தவில் வித்வான் அணிவது போன்ற நீண்ட சங்கிலிகள், கடயங்கள் எதுவும் புகுந்திருக்கவில்லை. புகுந்திருந்தாலும்கூட சம்சாரி அதற்கெல்லாம் எங்கே போவான்? காதில் சிவப்புக்கல் அல்லது வெள்ளைக்கல் கடுக்கண்களை முதியோர் அணிந்திருந்தனர். பேனாக் கத்தி, வெற்றிலை என்று அவரவர் உபயோகம் கருதி, வேட்டியின் முந்தியில் இருந்தன. அவை அந்தப் பிரதேசத்தின் ஆடவர் அணிகலன்கள் என்று சொல்லலாம். தொளதொளத்த சட்டைகளை ஒரு சிலர் மட்டுமே தயங்கி அணிந்தனர். உத்தியோகம் பார்ப்பவர்க்கு வேறு வழியில்லை.

“சைவமும் சாரைப் பாம்பும்” கதையில் எளிமையாகத் தொடங்கும் இந்த சமரசம், “பிணத்தின் முன் அமர்ந்து தேவாரம்” கதையின் வழியாக வாழ்வின் நிர்பந்தங்களுடன் வசப்பட்டு விடுகிறது. இந்த நிர்பந்தம் எல்லை தாண்டும்போது ஏற்படுகிற மனச் சிதைவுதான் ‘சாலப் பரிந்து’ கதையில் அடைய நேர்கிற குரூரமான சமரசம். பெற்ற தாய் என்றாலும் கூட பயன் மதிப்பற்ற ஒரு சுமையாகக் கருத வைக்கிற நகர வாழ்வின் நெருக்கடிகள் அவளைக் கொலை செய்கிற அளவுக்கு மனிதனைச் சீர் குலைத்து விடுகிறது.

இந்தச் சீர்குலைவும் சமரசங்களும் மறு எல்லையில் பெருங் கருணையாகவும் சக மனிதனின் மீதான பரிவாகவும் ஒளியேற்கின்றன. இவ்வாறான கருணையும் பரிவுமே மலைப் பாதையில் சூடாகி நின்றுவிட்ட பேருந்து ஓட்டுநரின் உதவிக்காகக் குடி தண்ணீர் பாட்டில்கள் வேண்டி நிற்கிறது. காட்டுப் பாதையில் இருளில் சாலையை மெல்லக் கடக்கும் பாம்பு ஒன்றை “போ மகனே போ” என்று சொல்லி, காத்திருக்க வைக்கிறது.

அறம் சார்ந்த சீற்றமே சமூகக் கேடுகளுக்கு எதிரான நேர்மையான விமர்சனங்களையும் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி தன் தோட்டத்தின் வழியே சென்றடையும் இடம் இவ்வாறான கருணையும் பரிவும் ஊற்றெடுக்கும் சிகரத்தைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்” என்று எம்.பாலகிருஷ்ணன் ‘நாஞ்சில் நாடன்’ கதைகள்’ தொகுப்பில் பதிவு செய்கிறார்.

சூடிய பூ சூடற்க

சூடிய பூ சூடற்க1975ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை எழுதிய கதைகளைத் தொகுத்து, “நாஞ்சில் நாடன் கதைகள்” என்ற தலைப்பில், 80 கதைகள் கொண்ட தொகுப்பு ஒன்றும் வெளியானது “நியமத் தொழிலராய் நிறையும் ஞானத்து உத்தமர் உறங்கினார். யோகியர் இண்டிலர் என ஓய்வெடுத்து விட்டாரோ என்று எண்ணம் தலைப்படும்போது, 2007ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பதினைந்து கதைகள் கொண்ட நூலாக சூடிய பூ சூடற்க தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2009இல் வெளிவந்தது 2010ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் சாகித்ய அகாதமி விருது வழங்கப் போவதாக தெரிவித்தது. இதன் மூன்றாம் பதிப்பு, 2010ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் வெளிவந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் 3000 புத்தகம் விற்பனை ஆணை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் கதை, “கொங்குதேர் வாழ்க்கை”. இதில் லைன் வீடுகளைப் பற்றி விளக்கம் கொடுப்பதில் இவருக்கு இணை இவர்தான். லைன் வீடு எனில் முதலில் பத்துக்குப் பத்தில் ஒரு முறி. பத்துக்குப் பத்து எனும் போது இடைச் சுவர்களின் கனம் முக்காலடி வீதம் நீளவாக்கிலும் அகல வாக்கிலும் கழித்துக்கொள்ள வேண்டும். அதுவே வரவேற்பறை, ஹால், டைனிங், படுக்கை, பூஜை, விருந்தினர், ஓய்வு அறைகள். எப்பெயரிலும் அழைக்கலாம். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஏகன் தானே!

அடுத்தது பத்துக்கு ஏழில். வீட்டின் ஒரு மூலையில் சமையலறையும் இன்னொரு மூலையில் மோரி அல்லது அங்ஙணம். ஙப் போல் வளை. அதில் பாத்திரங்களைப் போட்டுக் கழுவலாம். சுவரில் தொங்கிய கண்ணாடி பார்த்து முகம் வழிக்கலாம். பல் தேய்த்து, வாய் கொப்பளித்து முகம் கழுவலாம். சாப்பிட்டுக் கை கழுவலாம். மீன் முள் தொண்டையில் நின்றால், காறித் காறித் துப்பலாம், இரவு நேரங்களில் ஒன்றுக்குப் போகலாம். உட்கார்ந்து துணி அலசலாம்.

சமையல் மேடைக்கும் அங்ஙணத்துக்கும் நடுவில் சிமண்ட் தொட்டி மூடியுடன் அல்லது செல்வாக்குடைய குடித்தனக்காரர் எனில் டிரம் பக்கத்தில் குடி தண்ணீர் நிறைந்த பித்தளை அல்லது செம்பு அல்லது கருக்காத இரும்பு அண்டாக்கள். பிளாஸ்டிக் குடங்கள், போகும் சின்ன வாளி. வெந்நீர் போட அலுமினியக் குண்டான். அடுப்புக்கு பக்கவாட்டில் சற்று உயரமாக ஒரு ஸ்டான்ட். அதில் தட்டு, கரண்டி, தம்ளர், கிண்ணம், சின்ன டப்பா, பாட்டில், சுவரோடு சேர்ந்து ஒரு செல்ஃப். அதில் கடுகு, உப்பு, குருமிளகு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, சீனி தேத்தூள், கோதுமை மாவு…

அடுப்புக்கு மேடைக்குக் கீழே வெங்காயம், உருளைக் கிழங்கு, பூண்டு கிடக்கும் கூடை, காய்கறிக் கூடை, அரிவாள் மணை, திருவலைக் குத்தி, முறம் எனும் சுளவு, பிரம்புக் கூடை, குக்கர், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், இட்லிக் குட்டுவம், உட்காரும் மணை.

முன்னறையில் ஒற்றைக் கட்டில், சிறிய மேசை, அதன் மேல் டி.வி. அல்லது டேப் அல்லது டிரான்ஸ்சிஸ்டர். கட்டிலின் கீழே சுருட்டிய படுக்கை, இடுப்பளவு அல்லது முக்கால் சைஸ் பீரோ.

‘‘கன்பத் சக்காராம் நாத்ரே, பைங்கன் வாடி சுடுகாட்டில் சாம்பலாகிக் காற்றில் பறந்து மண்ணோடு மண்ணாகி மக்கிப் போகலாம் என்று காத்திருந்த கட்டத்தில், பஞ்சம் என்பது தாண்ட முடியாத வாழ்கிணறாக வழிமாற்றுதல் கிடந்தது. எல்லோருக்கும்தான். எனில் எதற்காகத் தன் மகன் பாகோஜி கன்பத் நாத்ரே சாவென தனது உயிரையும் மனைவியின் மகள்களின் உயிரையும் உமிழ்ந்தான். பூச்சி மருந்து வாங்கமட்டும் அவனுக்கு எங்கிருந்து காசு கிடைத்தது என்று தெரியவில்லை. தன்னை மட்டும் ஏன் விட்டுப் போனான்? உடைந்து உடைந்து பெருகியது கிழவனுக்கு… தன்னிலிருந்து தன்னை விலக்கி, தன்னைச் சேர்த்துத் தன்னை மாய்த்து….

நாஞ்சில் நாடன்“யாம் உண்பேம்” என்னும் கதையில் வரும் நாத்ரேயர் புலம்பல்களை எந்தத் திசையினால் என்ன? திசையற்றவனுக்கு எல்லாம் சொந்தத் திசை. நாத்ரே ஊர்விட்டுப் போகிறான். அதலாபாத் இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரயில், காய்ந்த தையல் இலையில் பொதியப்பட்டிருந்த சோள ரொட்டிகள். காணமாகச் கொத்தமல்லித் தழையும் தழைப்பும் வதக்கிய வெங்காயம் வேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்கும் போட்டுப் புரட்டிய சப்ஜி, எண்ணெய் வதக்கிய நீண்ட காரணமாக பச்சை மிளகாய். சூடு, ருசி, சிவப்பு ஒரு அழகு என்பதாம் கொடுத்து வைத்தவர்களுக்கு பாபுராவுக்கு பசிக்கு ருசி வேண்டாம். நித்திரைக்குப் பாய் வேண்டாம். கால்துண்டு ரொட்டியும் கொஞ்சம் சப்ஜியும் இலையில் மீதம் இருந்தன. ஒரு துண்டு ரொட்டியை வாயில் போட போகும்போது,

“அமிகாணார்… அமிகாணார்”

எனக்குத் தா என்றல்ல “நான் தின்பேன்” என்றல்ல, நாம் உண்போம் என. தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் “யாம் ஊண்பேம்” என.

பிடுங்காத குறையாகக் கையிலிருந்து வாங்கிப் பொட்டலத்துடன் எதிர் இருக்கையில் உட்கார்ந்து கால்துண்டு ரொட்டியில் கால் துண்டை வாயில் போட்டு மெல்லானார் நாத்ரே. தன்னிடம் இருந்த தண்ணீர் போத்தலை அவரிடம் நீட்டினான் பாபுராவ். நாத்ரேயின் குரல், காதில் தகப்பன் சாமியின் உபதேசம் போல மிச்ச வாழ்க்கைக்கு மந்திரம் போல ஒலித்து கொண்டிருந்தது. “யாம் ஊண்பேம்”.

சிங் எனும் துணைப்பெயர் கொண்டவரெல்லாம் பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால் அவன் தன்னைக் நேப்பாளி என்பான். அவர்களுக்கும் சிங் என்று துணைப்பெயர் உண்டு. ஆனால் உண்மையில் தன்ராம் சிங், திபேத்துக்காரன். நேப்பாளி என்று சொன்னால் வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியச் சொல்கிறேன். நேப்பாளிகளுக்கு சற்று மேலான தோற்றப் பொலிவு உண்டு. தன்மையில் கூரான மறம் உண்டு. திபேத்துக்காரர்களும் வெள்ளை நிறம்தான், கண்கள் இடுக்கமானவைதான், முகத்திலும் உடலிலும் நிரப்பாக மயிர் வளர்வதில்லைதான். எனினும் நேப்பாளிக்கள் வேறு, திபேத்தியர்கள் வேறு.

கூர்க்கா வேலை செய்யும் யாரைக் கேட்டாலும் நேப்பாளி என்பார்கள். நேப்பாளிகளுக்கு அதில் சற்று மன வருத்தம்தான். ‘காஞ்சா’ என்று மாருதி கார் விளம்பரத்தில் வரும் சொல்லைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தன்ராம் சிங்கை துளைத்துக் கேட்டால், ‘திபேக்’ என்பான். அவனுக்கு ‘திபேத்’ என்று சொல்ல வராது. ஒரு வேளை அவனது பிராந்திய மொழிக் கொச்சையில் ‘திபேக்’ என்றால் ‘திபேத்’தோ என்னவோ!

இதுதான் தன்ராம் சிங் பற்றிய கதையில் நாஞ்சில் நாடன் தரும் கூர்க்கா பற்றிய தகவல் வரும். நாடுவிட்டு நாடு வந்து, பாதி வாழ்க்கைப் பயணத்தில், மீதி வாழ்க்கை கடிதத்தில் வாழ்பவர்கள்.

அவனுக்கு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. இருக்கத்தானே செய்யும்? பெண்ணும் இரண்டு பையன்களும், இரண்டாண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்குப் போய் வரும் அபாக்யவான் அவன்.

‘‘பதினைந்து, இருபது பேர் சேர்ந்துதான் பயணமாவார்கள். பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் வண்டி. இறங்கி வண்டிமாறி பாட்னா, பரூணி, மன்சி. மறுபடியும் வண்டி மாறி, மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் நான்கு மணி நேரமாகும். பிறகு மலைப்பாதையில் தலைச் சுமடாகவும் மட்டக் குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை. காலை எட்டு மணிக்கு மேல் பிற்பகல் நாலு மணிவரை மலைப் பயணம். மலைக் கிராமம் ஒன்றில் கிடை, ஆண்டாண்டு நடந்து பழகிய மலைத் தடம், பனிப்பொழிவு, பாறைகள், கொடுங்குளிர்… நமக்கு பொள்ளாச்சியில் இருந்து உடுமலைப் பேட்டை போக அலுப்பாக இருக்கிறது.

இரயிலிலும் முன்பதிவெல்லாம் பழக்கமில்லை. ஜெனரல் கோச்சில் சேர்த்தாற்போல தடுப்புகளில் இடம் பிடித்துக்கொள்வார்கள். பயணத்துக்கு சுட்டு எடுத்துப் போகும் ரொட்டி. அடுத்த ரயிலுக்குக் காத்திருக்கும்போது தேவைக்கு மறுபடியும் ரொட்டித் தட்டிக்கொள்வது. மலை ஏறும்போது இரவில் சுடும் ரொட்டிகள் பகலுக்கு.

வர்ண டிரங்குப் பெட்டிகளில் இரண்டு ஆண்டுகளாகச் சேகரித்த துணிமணிகள், வெள்ளி ஆபரணங்கள்… இந்திய நாணயம் அவர்கள் ஊரில் செல்லுபடி ஆகாது. என்றாலும் சின்னஞ்சிறு நகரங்களில் அதிகாரபூர்வமற்ற நாணயமாற்று செய்துகொள்வார்கள். பணம் அனுப்புவது, தபால்கள் அனுப்புவது எல்லாம் ஊருக்குப் போகும் குழுக்கள் மூலமாகத்தான்’’.

திடீரென்று கன்ராம்சிங் கூடவே கூர்க்கா உடையணிந்த பன்னிரண்டு வயதுப் சிறுவன் ஒருவரைக் கூட்டி வந்தான். பால்குடி மறந்தானோ, பள்ளிக்குப் போனானோ தெரிவில்லை. மகனாக இருக்கும் என்றால், ‘அமாரா ஜவாய் ஷாப்’ என்றான் கன்ராம்சிங், மகளுக்கு எப்போது திருமணம் செய்தாய் என்றேன். அந்த விடுமுறையில் போயிருந்தபோது என்றான்.

ஒருவேளை, புலம்பெயர்ந்து, கன்ராம்சிங் தென்னாட்டு தெருக்களில் இரவுகளில் கோல் தட்டி, விசில் ஊதித் திரிந்து கொண்டிருக்கக்கூடும். மாதத்தின் முதல் வாரத்தில், உங்கள் வீட்டின் முன்வந்து சிரித்தபடி நின்றால், அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே! என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறார் ஆசிரியர்.

பூமிநாதன் அரசு அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியன். அன்று அரசு விடுமுறை. கொடியேற்றும் நாள். காந்திப் படத்திற்கு சின்ன மாலை, கொடியில் வைத்துக் கட்ட உதிரிப் பூக்கள் வாங்க, பூக்கடையில் நின்றான். அக்கடை எதிரில் ஒரு தியாகியின் சிலை. அவர் எதிரே பெரியவர் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். தியாகிகளைப் பாடுகின்றாரோ? நாட்டுக்காகப் பாடுகின்றாரோ! உலக நலத்திற்கா? தனக்காகவா? பூமிநாதனுக்கு புரியவில்லை. ஆனால் அவர் கண்கள் கசிவதைக் காண்கின்றான். இன்னொரு மாலை என்று கேட்கின்றான்.

மாலையைத் தியாகி சிலைக்குப் போடுவாரா? கண்மூடிப் பாடிக்கொண்டிருக்கும் பெரியவர் கழுத்தில் சூட்டுவாரா என்பதைக் காண, சாலைச் சரியாக ஆர்வமாக இருந்தது.. சூடிய பூ சூடற்க.

‘பழிகரப்பு அங்கதம்’ என்னும் கதையில் பயணத்திற்காக மட்டும் பாடும் பாடல்களின் இறுதி மரணத்தின் கோரம் அங்கதமாய் மிளிர்கின்றது. உண்மையான பரிகசிப்பாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றது.

கான் சாகிப்

கான் சாகிப்இது, நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 17 கதைகள் கொண்டது. இத்துடன் இவருடைய கதைகளின் எண்ணிக்கை 112 ஆகும்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் காமாட்சிநாதன். மனைவி தனபாக்கியம் கூடமாட ஒத்துழைக்க மலையம்மை வந்து போனாள். அவளது கணவன் கருநாகம் தீண்டி இறந்தபின் தனபாக்கியம் தான் அவருக்கு ஆதரவு. தனபாக்கியம் காலம் முடிந்ததும், காமாட்சி நாதன் தனியாக இருக்கத் தொடங்கினான். மலையம்மையின் உதவியை நிராகரித்து விட்டார். பிள்ளைகளைப் படிக்கவை என்றார். நேத்தைக்குச் செய்ததை நாளைக்கும் செய்வேன். அந்தக் கவலை வேண்டாம் என்று அவளிடம் கூறிவிட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு மலையம்மையை ஏதேச்சையாய் பார்க்க நேரிட்டது. கூட்டத்தில் மலையம்மை நடந்து வந்தாள். அவனைக் கண்டு, தலைகுனிந்து ஒதுங்கி, இரண்டு பிள்ளைகளும் வந்தன. காமாட்சி நாதனுக்கு உயிரோடு இருக்கும்போதே யாரோ கொள்ளி வைத்தது போலிருந்தது.

அன்றே மலையம்மையையும் பிள்ளைகளையும் வரச் சொன்னார். காமாட்சிநாதன். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் மங்களகரமான 1183 ஆம் ஆண்டு… மலையம்மைக்கும் காமாட்சி நாதனுக்கும் தாழக்குடி ஜெயந்தீசர் & அழகம்மன் கோவிலில் திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பந்துமித்தரர்களும் ஊர் முதலடிகள் இருபது பேர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.

முதல் கதையான பின்பனிக்காலம் குறிப்பிடும் நின்ற சொல்லர் காமாட்சி நாதன். மீன் விற்கும் கோம்பையின் ரோஷம், எக்காலத்திற்கும் அந்த ஊருக்கே போகா அளவு தீவிரமாகப் பேசுகிறது ‘‘கோம்பை’’ என்னும் கதை.

நாஞ்சில் நாட்டுக் கல்யாண சமையல், ஐயமிட்டு உண் கதையில் பதிவாகியிருக்கின்றது.

ஒரு காலத்தில் ஒரு செம்பு அரிசி வைத்தால் கடுக்கரை, ஆரல்வாய் மொழிக்காரர்கள், செம்புக்கு எண்பது பேரும் தேரூர், சுசீந்திரம், தாழக்குடிக்காரர்கள் செம்புக்கு நூறு பேரும், நகரவாசிகள் அனைவருக்கும் குறும வயிற்றுவலி என்பதால் செம்புக்கு நூற்றிருபது பேரும் சாப்பிடுவார்கள். ஒரு செம்பு என்பது ஏழு மரக்கால் அரிசி. அதாவது இன்றைய கணக்கில் முப்பத்தைந்து கிலோ. இன்று யாரும் செம்புக் கணக்குப் பார்ப்பதில்லை. ஒரு செம்பு என்பது இருபத்தைந்து கிலோ கொண்ட டொப்பி புழுங்கலரிசிப் பை என்றாயிற்று. வைப்புக்காரன் தாழக்குடி சாத்தாங்குட்டிப் பிள்ளை சொன்னார். ஒரு பை அரிசி போட்டால் இருநூறு பேர் சாப்பிடுவார்கள் என்று, பத்துப் பை பொங்குவது என உறுதியாயிற்று. தேங்காய், காய்கறிகள், பழக்குலை, இலைக்கட்டு, வெஞ்சண சாமான்கள்…

அவியல், துவட்டல், எரிசேரி, பச்சடி, கிச்சடிகள், உப்பேரி, ஆனைக்கால் பப்படம், பருப்பு, சாம்பார், புளிசேரி, ஒலன், ரசம், சம்பாரம், கதலிப்பழம் அடக்கம் இருபத்தி ஒன்று கூட்டான்கள். சமையல் தனித் தேங்காய் எண்ணெயில். தேவைக்கு மட்டும் நெய்யும் நல்லெண்ணெயும். சிறுபயிற்றம் பருப்பு பிரதமன், சக்கைப்பழம், பருவகாலம் இல்லை என்பதால் ஏத்தன்பழம் பிரதமன், போளியுடன் பாலடைப் பிரதமன். வடக்கு மலையின் தாட்டு இலை. சம்மணம் போட்டு உட்கார்ந்தால் தொடை முட்டுக்கு முட்டு சரியாக இருக்கும். இன்று எந்தப் பந்தியிலும் பந்திப்பாய் விரித்த தரையில் அமர்ந்து எவரும் சாப்பிடுவதில்லை’’.

எண்ணல்களின் நீட்சியால் சிவஅணைஞ்சான், தன் மூச்சைக்கூட எண்ணும் அளவிற்குப் போய், பித்தனாய் ஆகிவிட்ட கதை ‘எண்ணப்படும்’! எண்ணல்களுக்கு இவ்வளவு தீவிர பாதிப்பு உண்டா என்று நமக்கே பிரமிப்பையும் திகைப்பையும் தருகிறது.

“யாவர் வீட்டு முற்றத்து நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம்
ஒன்று ஓடுகிறது கப்ருஸ்தானுக்கு.
– உருது கவிதை.

கான் சாகிப், இந்தியாவிலிருந்து தோல் இறக்குமதி செய்கிற ஐப்பான் நிறுவனம் ஒன்றுக்கு பம்பாய் முகவர். தீவிர உருதுக் கவிதை வாசகர். இவன் அடிக்கடிக் கூறும் ஒரு கவிதைதான் மேலே கூறிய கவிதை.

NANJIL NADANஆசிரியர் தன் சொந்த வாழ்வில் குறுக்கிட்டு, பாதித்து, கடந்தும் போன கான் பற்றி இவண் பேசுகிறார். இஃதோர் சிறுகதைப் புனைவா எனில் ஆம் ஆம் என்றும் இதுவோர் தன் வரலாற்றில் குறிப்பா எனில் ஆம் ஆம் என்றும் கூறலாம் என்கிறார் ஆசிரியர்.

கான் சாகிபின் அம்மா, அவருடைய அப்பாவுக்கு இரண்டாம் தாரம். ஆம்பூரிலும் இராணிப்பேட்டையிலும் சென்னையிலும் வர்த்தகம். நல்ல செல்வந்தர். எதிர்பாராது தகப்பன் மரணம். சொத்துகள் யாவும் முதல் தாரத்து மக்களுக்குப் போய்விட்டன. பி.காம். படித்திருந்த கான்சாகிப், தோல் மண்டிக்கு வேலைக்குப் போனார். ஆட்டுத் தோல் உப்பிட்டது, பதப்படுத்தியது எனத் தொழில் கற்றுக்கொண்டார். இது முன்கதைச் சுருக்கம். அவருக்கு இருபத்திரண்டு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டிருந்தது. ஆங்கிலம் போதிக்கும் மனைவியும் இரு மக்களும். எனக்கோ பம்பாய்க்கு பெண் தரத் துணியாத வெள்ளாளக் குடும்பங்கள் தப்பிக்கொண்டிருந்தனர்.

ரமலான் நோன்பு தினங்களில், இஃப்தார் நேரத்தில் கம்ஃபர்ட் ஓட்டலுக்குப் போவேன். தொழுகை முடிந்து எனக்காகக் காத்திருப்பார். தாராவில் இருந்து சைக்கிளில் நோன்புக் கஞ்சி வரும் இருவருக்கும் சேர்த்து. ஒருவேளை அந்த நோன்புக் கஞ்சிதான் இழுத்துக்கொண்டுபோய் நிறுத்திற்றோ? ஒன்றிரண்டு முறை நோன்பு தொடங்கும் ஸகரின் போதும் உடன் இருந்திருக்கிறேன்.

நோன்பு நாட்களில், இரவு முழுக்க, பம்பாயின் பிரதான பள்ளிவாசல்களைச் சுற்றிலும் கல்யாணக் கோலமாக இருக்கும். எத்தனை வகை, எத்தனை வாசம், எத்தனை நிறம், எத்தனை சுவை?

எனக்குக் காதுக்குள் பாடுவது போலிருக்கும், மதுரை சோமு. பம்பாய் சண்முகானந்த சபாவில் கேட்டது.

“ஓ ராம நீ நாமம் ஏமி ருசி?

ஏமி ருசிரா ராமா நீ எந்து ருசி”

பத்ராச்சல ராமதாசர் காசித்யம், பூர்வி கல்யாணி ராகம், இராமனின் சுவையை வியந்து, வியந்து பாடியது. ஆழ்வாரின் மனோபாவம் தான் – ‘உண்ணும் நீர், தின்னும் வெற்றிலை யாவும் நாராயணா எனும் நாமம்’. இரவு முழுக்க பார்த்தும் கேட்டும் வாசனை பிடித்தும் தின்றும் நடக்கையில் யாரோ மகான் ஒருவர் சொன்னது போல – இறைவன் ஏழைகளுக்கு ரொட்டி வடிவில் வருகிறான். பசித்தவனுக்கு உணவும் இறையனுபவம் தான். ஆனால் அதைப் பசித்தவன் மட்டுமேதான் பெறவும் இயலும்.

கான் சாகிப் கையில் காசிருந்தால் என் பைக்குள் என் கை போகாது. அவர் கையில் காசில்லை எனில் என் சீசன் டிக்கட் முதற்கொண்டு அடமானம் தான்.

அந்தக் காலத்தில் அலுவலகம் போகும்போது என் கையில் எப்போதும் ஒரு ரெக்சின் பை இருக்கும். பம்பாயில் தமிழ்ப் பார்ப்பனப் புரோகிதர் பலரும் வைத்திருந்தது போல. ரெக்சினுக்கு தீட்டுக் கிடையாதாம். விளையாட்டாகக் கான் சாகிப் அதைத் தூக்கி விசிறுவார். அதனுள் பெரும்பாலும் ஒரு புத்தகம், ஒரு பருவ இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், மதியம் சாப்பிட என ஏதும் கொண்டு போனால் அலுமினிய கன செவ்வக டப்பா.
ஒருநாள் ஓட்டல் அறைக்குப் போனபோது, தோளில் தொங்கப் போடும் விதத்தில், 14 x 10 அங்குல அளவில், தோற்பை ஒன்று எடுத்து முன்னால் எறிந்தார்.

“சுத்தமான பக்ரி கா சம்டா! எக்ஸ்போர்ட் குவாலிட்டி. தையல் கூலி மாத்திரம் நூற்றைம்பது கொடுத்தேன். பிக்காரி ஸாலா, இனி அந்த ரெக்சின் பையைக் கடாசு”.

என் தோளுக்கு அந்தப் பை வந்து, முப்பதாண்டுக்கும் மேலாயிற்று. எழுத்தாள, வாசக நண்பர்கள் கவனித்து இருக்கக் கூடும், என் தோளில் தொங்கியதை. தருமமிகு சென்னையில் வலப்பக்க விலாவில் நீளமாக பிளேடு போட்டான் ஒருவன். அண்ணன் அதைத் தைத்துக் கொடுத்தார். கோவை வந்த பிறகு ஒரு முறை மராமத்து செய்தேன். என்னுடன் அந்தத் தோற்பை, மராத்தியம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், சோனார் பங்களா, ஆந்திரம், கர்நாடகம், கோவா, தேனிருந்து மழை பொழியும் தீந்தமிழ் நாடு, கடவுளின் சொந்த தேசம் கேரளம், பாண்டிச்சேரி என பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்திருக்கிறது. சுக்காய்க் காய்ந்த முரல் கருவாடு, காஜூ ஃபென்னி, சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி வீடியோ கேசட் எனப் பலவும் சுமந்திருக்கிறது. கண்டக்கடர் பை என நண்பர்கள் பகடி செய்திருக்கிறார்கள்.

காலம் என்பது கறங்கு, காட்டு நடை, மழைப் புயல், கொடைக்கானல் காண செய்துவிட்டு சென்னை வந்தார். நான் கோவைக்குப் பெயர்ந்தேன். கடைசியாகக் கடைசி என்று தெரிந்திராமலேயே பெரியமேடு போனபோது அவரது குடும்பமும் இருந்தது. பி.காம். படிக்கிற மகன். பத்தாவதில் மகன். வாரம் இரண்டு டயாலிஸிஸ்”, ஒப்பில்லாமல் உணவு, குறைந்து குடிநீர் என்று போய்விட்டது மனது. கையறு நிலையில் இரு கைகளை நீட்டி குதாவிடம் வாழ்நாள் யாசித்து நின்ற ஜீவன்…

இருவருக்கும் கண்கள் கலங்கின. நாட்கள் எண்ணப்பட்டு விட்டனவா எனக் குடும்பத்தினருக்கும் உள்மனம் ஓங்கி ஒலித்தது. அவர் அடிக்கடி சொல்லும் கவிதை வரியொன்று – ‘யாவர் வீட்டு முற்றத்து நின்றும் கண்ணுக்குத் தெரியாத தடம் ஒன்று ஓடுகிறது கப்ரூஸ்தானுக்கு’.

வழக்கம் போல் தோள் தழுவி “குதா ஹாஃப்பீஸ்” சொல்லி விடை கொடுத்தார். இருவர் புறமுதுகிலும். சொட்டி நானைத்த சோகத் துளிகள். திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். புறப்படு வெள்ளை இளநீல ஒற்றைக் கோடுகள் போட்ட புதிய சங்கு மார்க் லுங்கி ஒன்று தந்தார்.

அதன் பிறகு கான் சாகிபை நான் பார்க்கவில்லை. உயிருடனோ, மையத்தாகவோ!

அந்தக் தோற்பைக்கும் முப்பத்திரண்டு வயது ஆகிறது. ஓரங்கள் வெளிறி, நைந்து, தையல் விட்டு, உள்ளே நட்டக் குத்தற போடுகிற பேனா ஒழுகிக் கீழே விழுந்து விடுகிற அளவு நான்கு மூலைகளிலும் ஓட்டைகளுடன்.

எல்லோரும் எறிந்து விடச் சொல்கிறார்கள். ஆனால் புறத்தோ, ஸ்தூலமாய் நான் சுமக்கும் கான் சாகிப் அது. போன வாரம், கோவை – ராஜவீதி அஞ்சு முக்கில், தோற்பைகள் பெட்டிகள் சீர்திருத்தும் கடையொன்றில் முன் நின்றிருந்தேன். தோள் பையைக் காட்டி, அதைப் பிரித்து வெட்டி, சின்னதாகவேனும் ஒரு பவுச் செய்து தரமுடியுமா எனக் கேட்டேன். அடுத்த வாரம் வரச்சொல்லி இருக்கிறான்’’.

ஆனந்த விகடன் தீபாவளி மலர், நவம்பர் 2010இல் வெளியானது இக்கதை. கான்சாகிபின் ஓவியம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோள் பையும் மிகவும் உயிரோவியமா£ய் உணர்வுக் காட்சியாய் கவர்ந்திழுக்கும்.

இயல்பாய் அமைந்த உறவு. யாரும் மெனக்கெட்டு ஒருவருக்காக காத்துக் கிடந்த உறவு இல்லை. தானாக வளர்ந்த உறவு. உன்னதமாய் வளர்ந்த உறவு. எதிர்பாப்பு இல்லா நட்பு.

நாஞ்சில் நாடனின் கதைகளில் ஒரு பகுதியாய், கும்பமுனிக் கதைகள் இருக்கின்றன. அவை அங்கதம் நிறைந்தது. அதன் கதாநாயகன் கும்பமுனி. உதவியாளன் நாஞ்சில் நாடன்தவசிப்பிள்ளை கண்ணுப்பிள்ளை இவருரின் உரையாடலில் எழுத்துலகத்தைப் பற்றிய கடும் விமர்சனம், சமுதாயத்தைப் பற்றிய எகத்தாளமும் நிறைந்திருக்கின்றனது. கிண்டலின் உச்சமாய் விளங்குகிறது. இவரைப் பற்றி ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.

‘‘சமூகம் எனும் பாற்கடலில் கரந்திருக்கும் படர்ந்திருக்கும் மிச்ச நஞ்சைத்தான் கலைஞன் அவனவன் பலத்துக்கும் பொறுமைக்கும் தக்க கடைந்து உண்டு கொண்டிருக்கிறான். அது மனித குலத்தை நஞ்சிலிருந்து காக்கும், மீட்கும் முயற்சி. சில போதுகளில் படைப்பில் துளிகள் கலந்து வந்துவிடுவது, அவனது கவனக் குறைவினால்தான். உங்களை வந்தடையும் அந்த விடத்தின் கசப்பைப் பிரித்தெடுத்து உமிழ்ந்து விடலாம், அல்லது உண்டு, படைப்பாளி கொள்ளும் பேரவலத்தின் சிறு பங்கைப் பாவிக்கவும் செய்யலாம்.

சில சமயம் தோன்றுகிறது, கண்டத்தில் சிக்கிக்கொள்ளும் கசப்பை விழுங்க ஒண்ணாமல் உமிழ்ந்து விடுகிறேன் என. அதற்காகவே தேர்ந்த கதாபாத்திரம் கும்பமுனி. கும்பமுனி என்பவர் நேற்றைய நான், இன்றைய நான், நாளைய நான். உங்களைக் குலுக்கிச் சிரிக்க வைக்கவோ, குதூகலப்படுத்தவோ, நானொரு நகைச்சுவை எழுத்தாளன் அல்லன்’’.

வேறு சில நண்பர்கள் சொன்னார்கள், சமீப காலமாய் எனது கதைகளில் கட்டுரைத் தன்மை வெளிப்படுகிறது என.

“கடல் ஞாலம் செய்தேனும் யானே என்றும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்றும்”

எனும் திருவாய்மொழி ஞாபகம் வருகிறது எனக்கு. எல்லாம் அறிந்து செய்கிற வேலைதான். கட்டுரைகளும் கதை போல வாசிக்கப் பெற வேண்டும் எனும் கொள்கை உடையவன் நான். மேலும் கதைக்கும் கட்டுரைக்குமான ஆளுயரத் தடுப்புச் சுவர் இற்றும் இடிபட்டும் சிதிலமாகியும் வருகிறது தற்சமயம். எனினும் வாசிப்பு அனுபவத்துக்கு அது ஊறாக இருக்கிறது எனில் பிழை பொறுக்க!

இவர், தன்னுடைய கும்பமுனிக் கதைகளைத் தனித் தொகுப்பாகவே வெளியிடலாம்.

“ஆத்மா – இது இவருடைய 113ஆவது கதை. ஆசிரியர் பாணியில் சொல்லப் போனால் இது ஒரு கணக்குக்கு எனது முதல் கதை எனலாம். ஆனந்த விகடனில் 23.2.2011 இதழில் வெளிவந்தது. மாருதியின் ஓவியம் அழகு சேர்க்கிறது. கதாநாயகனின் பெயருக்கே பெரிய வியாக்கியானம் கொடுக்கிறார். இதில் ‘பீதாம்பார் அவர் பெயர். பாண்டுரங்கத் நாத்ரே அவரது பெயர். நாத்ரே என்பது குலப்பெயர்’ என்று நீண்டு கொண்டு செல்கிறது. நாத்ரேக்குத் தனிக்குடித்தனம் இரு பிள்ளைகள் இருந்தும் இந்த நிலை. தனது 84ஆவது வயதில், ஒரு காலைப் பொழுதில் 6 மணியளவில் தண்ணீர் பருக எழுந்த போது கிர்ரென்று தலைச்சுற்றியது. அவருக்குப் புதிய அனுபவமாக இருந்தது. வியர்த்துக் கொட்டியது. மேலும் மேலும் எடையேற்றியது போல் இறுதி மார்வலித்தது. நாத்ரேக்கு நிலைமை புரியாமல் போயிற்று. கதவைத் திறந்து வைக்கலாம் என அடி எடுத்து வைக்கும்போது, சோபாவில் சரிந்து விடுகிறார். சொர்க்கம் அல்லது நரகம் நோக்கிய கடைசி காலடி.

இக்கதை அவரது தனிமை வாசம் பற்றியது. அவருக்குப் பிள்ளைகள் இருந்தும் இப்படித் தனியாய் வந்த கதை பற்றியது.

நாத்ரேயின் உடல்குளிர ஆரம்பித்தது. இனி அவரவர் அலுவலகம் தொழிற்கூடம், பள்ளி, கல்லூரி எனக் கரைய ஆரம்பித்து, காலைப் பொழுது, இன்றோ, நாளையோ கூடக் காலை மாமாவை, அண்ணாவைக் காணோமே என எவருக்கோ தோன்ற, கனத்த பிண நாற்றம் காற்றில் பரவ, மூன்று நாட்கள் ஆகலாம், இறந்து கிடந்த நாத்ரேயின் பிணம் அழுக ஆரம்பிக்கும், நாற்றம் வரும் திசை நோக்கி வருவது மூலம் உணர்ந்து போலீசுக்குச் சொல்லி, கதவை உடைக்கலாம். அவரது ஆத்மாவுக்கு அதன் பின் சாந்தியும் கிடைக்கலாம்.

நாஞ்சில் நாடனின் நாவல்கள், சிறுகதைகள் விஸ்தாரமாய்த்தான் தொடங்குகின்றன. அதனால் நுட்பமனத் தகவல்கள், அடுத்தடுத்து அடுக்கிக் செல்லும் பாங்கு, சூழலை கட்டமைக்கு வீதம், நாஞ்சிலின் மண் மணத்தையும் மொழியின் வளத்தையும் கூறிச் செல்லும் நேர்த்தி, யதார்த்தமாய், கொஞ்சம் கூட வார்த்தைகளை வீணாக்காது, பம்பாய் வாழ்க்கையையும், நாஞ்சில் நாட்டையும் பற்றிய விவரங்கள், வாழ்வின் வலிகள் மிகைப்படுத்தாது அப்படியே அள்ளி வைத்த வகை எனத் தன் படைப்புகளை அவருக்கென உள்ள பாணியில் எடுத்துச் செல்லுகிறார்.

“உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலகங்களும் ஊடாட, நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.

இல்லாமைக் கண்டு வருந்தியும், தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கடமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எண்ணி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்தபடியும் தொடர்கிறது. காட்சிகள் மாறுகின்றன. முகங்களும் மாறுகின்றன. நிலமும் நீள்விசும்பும் வேறாகி திரைகள் விழுந்தும் விரிந்தும் கதையாடல் நடந்தபடியே இருக்கிறது. அந்தக் குரல் மட்டும் தன் கதியால் நடுவாண்மை பிசகாது எவரும் அஞ்சாது, யாவற்றையும் உரசிப் பார்த்து, உள்ளதை உள்ளபடி சொல்கிறது. மெல்ல மெல்ல அந்தக் கதை சொல்லியின் குரலே காலத்தின் குரலாகவும் அறத்தின் குரலாகவும் ஒலிக்கத் தொடங்குகிறது.

என்கிறார் எம். பாலகிருஷ்ணன் (நாஞ்சில் நாடன் கதைகள் – மதிப்புரை)

(பயணம் தொடரும்….

==============================

படங்களுக்கு நன்றி: http://nanjilnadan.wordpress.com, http://bharathbharathi.blogspot.comhttp://azhiyasudargal.blogspot.com, http://tamilhindu.com

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 2

  1. தங்களது கவிதை, நாஞ்சிலின் இணையத்தளத்தில் வெளிவந்திருக்கிறது. நாஞ்சிலைக் குறித்த தங்களுடைய கட்டுரையைப் படித்துப் பிரமித்துப் போனேன். இத்தனை ஆர்வமாக ஒருவரது அனைத்துப் படைப்புகளையும் படித்து, அதற்கு விரிவாக மதிப்புரையும் எழுதுவதென்பது மிகவும் பாராட்டுக்குரியது.
    தங்களது கட்டுரையின் பகுதிகளைத் தேவையானால் நாஞ்சில் நாடன் எழுத்துகளுக்கு ஆங்காங்கே குறிப்புகளாகக் கொடுக்க அனுமதித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.