நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – பகுதி 1

6

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)

nanjil_nadanஇடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 78. நேரம், பிற்பகல் 2 மணி. வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. வீட்டின் கொல்லைப்புறம் பெருக்கிச் சுத்தம் செய்யப்படுகிறது. வாடகைக்குத் தருவித்த நீலநிற பிளாஸ்டிக் நாற்றகாலிகள் அணி அணியாக அமர்த்தப்படுகின்றன. இதனுடைய நீல நிறத்தின் பிரதிபலிப்புதான் ஆகாயமாக இருக்குமோ? ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் இரண்டு, அவற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு இயல்பு மீறி வளர்ந்து நிற்கும் மாமரம் ஒன்று, செந்நிற வாதம் பழங்களுடன் பசிய இலைகளுடன் கூடிய வாதம் மரம் ஒன்று, குறைந்த இலைகளுடன் கூடிய அரிநெல்லி மரம் ஒன்று, சிறிதும் பெரிதுமான மூன்று வாழை மரங்கள் ஆகிய இவற்றுடன் கேணி ஒன்று – ஆகியவை அவ்வீட்டின் கொல்லைப் புறத்தின் அழகு அம்சங்கள் ஆகும்.

கிணற்றடியின் சிமெண்ட் தளத்திலும் பாய்கள் விரிக்கப்பட்டன. அனைவரையும் “வாருங்களேன், வந்து அமருங்களேன்” என அழைக்கும் விதமாக இருக்கின்றது. இனி வீட்டு முகப்பிற்குச் செல்வோம். போர்டிகோவின் மேல் தளத்திலிருந்து கேணி என எழுதப்பட்ட வட்ட வடிவ முறம் ஒன்று தொங்கவிடப்படுகிறது. வாசல் கிரில் கதவிலும், பின்வாசல் கதவிலும் ஞாநியின் ‘பாரதி’ போஸ்டர் மாட்டியவுடன் வீட்டிற்கே ஒரு தனிக் களை வந்துவிடுகிறது.
nanjil_nadan
இருவர், பால், சர்க்கரை பிஸ்கட், பேப்பர் டம்ளர், டீத்தூள் வாங்கி வர விரைகின்றனர். வேறு இருவர் குடிப்பதற்கான தண்ணீர் வைப்பதற்கு ஏற்பாடு செய்கின்றனர். இவையனைத்து செயல்களுமே இவ்வீட்டில் கடந்த பதினைந்து மாதங்களாக ஒவ்வொரு இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையும் நடக்கும் குதுகலமான நிகழ்வுகளாகும். இவ்வேலைகள் ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் தானாக வந்து செய்யும் வேலைகள் ஆகும். அன்று காலையில் பரீக்ஷா நாடக ரிகர்சல் இருந்தால், மதிய உணவோடு வேலைகள் தொடரும். ஞாநியின் தோழி பத்மா இவற்றை ஒருங்கிணைத்து உதவுவார்கள்.

ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். இது மூத்த பத்திரிகையாளரும், பரீக்ஷா நாடக இயக்குநருமான ஞாநியின் வீடுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணியிலிருந்து இடம் பெயர்ந்து இவ்விடம் வந்தவுடன், இவ்வீட்டு கிணற்றடி அவருக்கு மிகவும் உற்சாகத்தை அளித்திருக்கின்றது. இங்கு இலக்கிய அமைப்பு வைத்து நடத்தலாமே என்ற எண்ணம் உதித்ததும், அருகே வசிக்கும் சிறந்த எழுத்தாளரும், சின்னத்திரை மற்றும் திரைப்பட வசன எழுத்தாளருமான கலைமாமணி பாஸ்கர் சக்தியுடன் கலந்து ஆலோசித்ததில், கேணி என்ற இவ்வமைப்பு பிறந்தது. இதில் இயல், இசை, நாடகம் ஆகிய துறையிலிருந்து சிறந்த இலக்கிய படைப்பாளிகளை அழைத்து, வாசகர்களுடன் பகிர்தலுடன், கருத்து பரிமாற்றமும் நடத்தலாம் என்று திட்டம்.

முதன்மை எழுத்தாளராக திரு.எஸ். இராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டார். கூட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்கியது. மூன்று மணியிலிருந்து வீட்டு வாசலில் இரு சக்கர வாகனங்கள் கூடிவிட்டன. மாலை 6.30 மணி வரை நேரம் போவது தெரியாது திரு.எஸ்.ரா. அவர்கள் கூட்டத்தை மெய்மறக்கச் செய்துவிட்டார். இருள் பரவியதும், வீட்டிற்குள் வந்தும் பகிர்தல் தொடங்கியது. முதல் கூட்டமே மிகவும் உற்சாகமாக அமைந்தது. திரு. ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக பரிந்துரைக்கப்படும் எழுத்தாளர் திரு.எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள்தான் என்பது யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

nanjil_nadanஅவருக்கு அடுத்தபடியாக திரு. பிரபஞ்சன், திரு. கி. ராஜநாராயணன், திரு. அசோகமித்திரன், திரு. ஜெயமோகன் என அழைத்த வரிசையில் திரு. நாஞ்சில் நாடன் அவர்களை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தீதும் நன்றும் என்னும் அவருடைய கட்டுரைத் தொடரை விகடனில் பார்த்திருக்கிறேன். முழுமையாகப் படித்ததில்லை. கேணியில் நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பணி டீ தயாரித்து அனைவருக்கும் அளிப்பது. எனவே நண்பர்களின் உதவியோடு அப்பணியை முடித்துக்கொண்டு கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். வேலை நிமித்தம் வட இந்தியா சென்று அங்கு அவர் எத்துணை முனைப்பாக கம்ப இராமாயணம் கற்றுக்கொண்டார் என்பதை அவர் பகிர்ந்துகொண்டிருந்தார்.

1974இல் பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் கம்ப இராமாயண வகுப்பு தொடங்கியபோது, 19 மாணாக்கர் இருந்தார்கள். ஆசிரியர் இன்று அமரரான ரா. பத்மநாபன் அவர்கள். காரைக்குடி அழகப்பாச் செட்டியார் பொறியியல் கல்லூரி நிர்வாக மேலாளராக ஓய்வு பெற்றவர். வாரம் 3 நாள்கள் வகுப்பு. மும்பைப் பகுதியில் அரசு பொதுமருத்துவமனைக்கு எதிரே அமைந்திருந்தது பம்பாய் தமிழ்ச் சங்கம். திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 முதல் 8 வரை.

நான் அப்போது பம்பாய் சென்ட்ரல் ரயில்வே ஹார்பர் பிராஞ்சு இரயில் பாதையின் மேற்பகுதியில் ஓடிய ரே ரோடு, அட்லஸ் மில்ஸ் காம்பவுண்டில் தொழிற்சாலை ஒன்றில் ஸ்டோர்ஸ் கிளார்க் வேலை. ஐந்தே காலுக்கு வேலை முடிந்து, பசிக்கும் வயிற்றுடன் ஹார்பர் பிராஞ்சு ரே ரோடு ஸ்டேஷனில் ரயில் பிடித்து, கிங் சர்கிள் ஸ்டேஷனில் இறங்கி, சயான் நெடுஞ்சாலையில் நடக்க வேண்டும். அப்போது எனக்கு மாதம் 210 ரூபாய் சம்பளம். வீட்டிற்குக் கண்டிப்பாக 25 ரூபாய் அனுப்பிப் போக மிச்சத்தில், ரூம் வாடகை, ரயில் சீசன் டிக்கெட், உணவு, சோப்பு, எண்ணெய், பற்பசை, முகச் சவரப் பொருட்கள், செருப்பு, பூட்ஸ், உடைகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, வாரந்திரி.. கையில் நாலணா இருந்தால் இரண்டு வடா பாவ் வாங்கித் தின்று தமிழ்ச் சங்கத்தில் போய்த் தண்ணீர் குடிப்பேன்.
nanjil_nadan
பத்தொன்பது மாணவரில் நான் இளையவன். 27 வயது. மிகவும் மூத்தவர் ஓய்வு பெற்ற கப்பல் கம்பெனி அதிகாரி 72 வயது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வகுப்புத் தேய்ந்து 14, 9, 5 என்று 3 ஆகி அதுவும் நீர்த்து, ஒன்றென நான் மட்டும் நின்றேன். ரா. பத்மநாபன் குடியிருந்த கைலாஷ் பவன் ஹவுஸிங் சொசைட்டி, கிங் சர்க்கிளில் இருந்து மூன்றாவது கட்டடம். எதற்கு இரண்டு பேருமே நடக்க வேண்டும் என்ற ஆசிரியர் வீடே வகுப்பிடம் ஆயிற்று.

இப்படியாக 4 ஆண்டுகள் கம்பன் வகுப்பு நடைபெற்றது. இடைச்செருகல் அல்லது கௌரவமான மொழியில் மிகைப் பாடல்கள் உட்பட அனைத்துப் பாடங்களும் கற்றேன். பாகம் 11, ஆறு காண்டங்கள், கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்கள் 10,357. மிகைப் பாடல்கள் 1293 மொத்தம் 11,661 பாடல்கள்.

நான் திறந்த வாய் மூடாது கேட்டுக்கொண்டிருந்தேன். பிரமிப்பால் அசைவற்று இருந்தேன். ஆட்டோவில் இங்கே வந்து போவதே நான் என்னவோ பெரிய செயல் செய்வதாக இறுமாந்திருந்தேன். இவ்வளவு முனைப்பாக இடையறாது நான்காண்டுகள் என்பது எவ்வாறு சாத்தியமாயிற்று? எவ்வளவு திண்ணிய எண்ணம் இருந்திருந்தால் அவர் இதைச் சாதித்திருப்பார். இந்தப் பிரமிப்பிலிருந்து மீள, பல நாள்களாகிவிட்டன. மனத்திற்குள் அவரது திட சித்தத்திற்குத் தலை வணங்கினேன். இந்தப் பிரமிப்போடுதான் நாஞ்சில் நாடன் அவர்கள் எனக்கு அறிமுகமானார்.

கேணி வளாகத்தில் அந்தந்த எழுத்தாளர்களின் நூல்களை விற்கவும் ஏற்பாடு உள்ளது. எனவே இவரது நூல்களை வாங்கினேன். இங்கு வரும் அனைத்துப் படைப்பாளிகளும் எளிமையாகவும் இனிமையாகவும் இணக்கமாகவும் உரையாடுவதில் பகிர்தலில் ஒரு இயல்பு வந்துவிடுகிறது. இதில் நாஞ்சில் நாடனும் விதிவிலக்கல்ல.

வாழ்க்கைக் குறிப்பு

கன்னியாகுமரி மாnanjil_nadanவட்டத்தில் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் பிரதேசத்தின் வீரநாராயண மங்கலம் என்னும் கிராமத்தில் கணபதியாபிள்ளை & சரஸ்வதி அம்மாள் தம்பதியாரின் மூத்த மகனாக, சுப்ரமணியம் எனும் பெயரோடு இந்தியா சுதந்திரமடைந்த மாதத்தின் இறுதி நாளில் பிறந்தார். (31.12.1947) கணிதத்தில் M.Sc. பட்டம் பெற்ற இவர், பம்பாயில் W.H. Brady & Co. Ltd எனும் நிறுவனத்தில் 1973 முதல் பணிபுரிந்து வந்தார். 1989ஆம் ஆண்டிற்குப் பின் கோவைக் கிளைக்கு மாற்றப்பட்டு, கிளை மேலாளராக செயல்பட்டு வருகிறார். தொழில் நிமித்தம் இந்தியாவில் பெரும்பாலான நிலையங்களில் பயணம் செய்தவர்.

கணிதப் பட்டதாரியான சந்தியா அவர்களை 1979இல் மணம்புரிந்து கொண்டார். கோவையில் மருத்துவராகப் பணிபுரியும் சங்கீதாவும், தற்போது வெளிநாட்டில் இருக்கும் எந்திரவியல் பொறியாளரான கணேஷும் இவர்களின் அரும் புதல்வர்கள் ஆவார்கள். இவருடைய முதல் நாவல் ‘‘தலைகீழ் விகிதங்கள்’’. 1977இல் வெளிந்த இந்நாவல், ‘சொல்ல மறந்த கதை’ என்னும் திரைப்படமாக உருவானது. 1979இல் ‘என்பிலதனை வெய்யில் போல காயுமே’, 1981இல் ‘மாமிசப் படைப்பு’, 1986இல் ‘மிதவை’, 1993இல் ‘சதுரங்கக் குதிரை’, 1998இல் ‘எட்டுத் திக்கும் மதயானை’ ஆக மொத்தம் இவர் 6 நாவல்களை எழுதியுள்ளார்.

என்பிலதனை வெய்யில் போல் காயுமே

nanjil_nadanமுதன்முதலில் ‘என்பிலதனை வெய்யில் போல் காயுமே’ என்றும் நாவலிலிருந்துதான், நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்புகளை அறியத் தொடங்கினேன். நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு அதிகமாக இருந்ததால் மிகவும் தடுமாறினேன். கொஞ்சம் அலுப்பாக இருந்தது. கதையை அகராதி வைத்துப் படிக்க வேண்டிய தேவை வருமோ என்று சலிப்பு இருந்தது. நல்லவேளை அப்படியொன்றும் நிகழவில்லை.

அவரது மொழி எனக்கும் பழகிவிட்டது. இப்பொழுது குட்டுவம், கடவம், படிப்புரை, வெப்ராளம், விளம்புதல், அடியந்திரம் என்னும் சொற்களுக்கு பழகிப் போய்விட்டேன். இப்போது இட்டிலியைப் பார்த்தால் எனக்கு குட்டுவம் என்றுதான் தோன்றுகிறது. இக்கதை, பெற்றோரை இழந்து, தாத்தா பாட்டியிடம் வளரும் சுடலையாண்டியைப் பற்றிய கதை. அவனது பெற்றோரின் நினைவு நாள் சடங்கு செய்வதிலிருந்துதான் கதை தொடங்குகிறது.

அவன் பள்ளிக்கும் கல்லூரிக்கும் நடையாய் நடந்து பயின்றதையும், அதற்குத் தாத்தா படும் சிரமங்களையும் விவரிக்கின்றது. பேரனுக்கு வேலை கிடைத்தால் சரியாகி விடும் என்கின்ற எண்ணத்தில் தாத்தா தன் நிலம், வீட்டில் கொஞ்சம் இடம் என்று விற்றுப் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். சுடலையாண்டியும் படித்து முடிந்ததும் வேலைக்கு முயன்றுகொண்டிருந்தான். காலம் தாழ்ந்ததேயொழிய வேலை கிடைப்பது அரிதாயிற்று. தாத்தாவுக்கு உதவியாய்க் கூலி வேலைக்கும் சென்றான். கூலி வேலை அகப்படாத போழ்து, மலையேறி சர்க்கரை வள்ளிக் கிழங்கு வாங்கி வந்து, கிராமங்களில் விற்பான். தாத்தாவிற்கு ஒரு நாள் இவனுடைய தாய்மாமா நாகர்கோவிலில் இருப்பது நினைவில் வரவே, சுடலையை அவரைப் பார்க்க அனுப்புகின்றான்.

சுடலையும் மாமன் வீட்டு வாசலில் நிற்கின்றான். மாமி வருகிறாள். இவன் யாரென வினவுகிறாள். சுடலையும் தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அந்த அம்மாவும் அய்யாவை அழைக்கிறாள். அவர் வெளியே வந்து இவனைப் பார்க்கிறார். அந்த முகத்தில் தன் தாயின் முகச் சாயல் சிறிதேனும் இருக்கின்றதா என நோக்குகிறான் சுடலையாண்டி. அவர் அந்த அம்மாளிடம் ஒரு பத்து ரூபாயை அவனிடம் தரச் சொன்னார். இப்படித்தான் கதை முடிந்தது. நம் நெஞ்சில் உறவு என்னும் நெடுங்கதவம் அடித்துச் சாத்தப்பட்ட உணர்வு.

மிதவை

nanjil_nadanகஷ்டப்பட்டு பி.ஏ. படித்து முடித்துவிட்ட பட்டதாரி சண்முகம். குறுங்குளத்தில் ஒரு சம்சாரியின் மகன். இரண்டு ஏக்கர் பட்டா நிலமும், இரண்டு பால் மாடுகளும் இரண்டிரண்டு வயது வித்தியாசத்தில் ஏழு பிள்ளைகளும், இவனது குடும்பம். மூத்த தலைமகன். படிக்கும் போது இருந்த கவனிப்பு, படித்து முடித்தபின் வேலையில்லாத போழ்து நீர்த்துப் போதல் நன்கு காட்டப்படுகிறது. வேலை கிடைத்து விடும் என்று பெரியப்பாவை நம்பியதில் இரண்டு வருடம் போகவே, குறுங்குளத்திற்கு வந்த ஐயரின் பரிந்துரையில் சண்முகம் வேலை தேடி பம்பாய் பயணப்படுகிறான்.

தாதரில் சுந்தரண்ணா காத்திருந்து இவனை நேவி நகருக்கு அழைத்துச் சென்றார். வழி நடுவே வரும் கட்டடங்களையும் இடங்களையும் சொல்லிக்கொண்டே வந்தார். பின் ஐயர் கூறுமிடங்களுக்குச் சென்று பார்த்ததில் உடனே நடந்து விடவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் அன்று மீண்டும் ஐயரைப் பார்க்கச் சண்முகம் போனான். அன்று அவனுக்கு விடிவு காலம். டிக்மானி, வொர்க்கிங் மானேஜர், ஆர். எச். தாம்சன் அன்டு கம்மெனி லிமிடெட், என்கிற கடிதத்தைக் கொடுத்தார். நல்ல சாப்பாடும் போட்டு அனுப்பினார். சுந்தரண்ணா உடன்தான் நேவி நகரில் தங்கி இருந்தான். அங்கு அனுமதியில்லாமல் தங்கியிருப்பவர்களைத் திடீரென்று இரவில் செக்கிங் வந்தனர். அதனின்று தப்பி, இரவில் சாலையில் நடந்த அனுபவங்கள் எல்லாம் கதையை மிகவும் வலுப்படுத்துகின்றன.

டாக்யார்டில் வேலைப் பார்க்கும் சுப்பையா மூலமாக பொங்கல் வீடுகளில் இடம் பார்த்தான். சண்முகம் குடிபெயர்ந்தான். சண்முகம் தானாகவே வலிய வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான். பம்பாயில் மாதுங்காவில் தமிழ் மன்றம் இருப்பதாகக் கேள்விபட்டு விடுமுறை நாள்களில் அங்கு செல்லத் தொடங்கினான். அங்கு உறுப்பினராக எண்ணிய போழ்து அங்கு முதலில் மறுத்த மானேஜர், பின் அரசியல்வாதி தோரணையில் வந்த கவிப்பித்தனின் அதிகாரப் பரிந்துரையில் உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டார்.

கம்பெனியில் ஆட்குறைப்பு செய்தார்கள். மற்றவர்களை கன்ஃபர்ம் பண்ணியபோது, தனக்கும் கன்ஃபர்மேஷன் கிடைக்கும் என்று நம்பினான் சண்முகம். ஆனால் கிடைக்கவில்லை. ஏமாந்ததன் எதிரொலி மேலும் தீவிரமாக வேலை செய்வதில் காட்டினான். பொழுதைச் சிரமமப்பட்டுத் தள்ளிக் கொண்டிருந்த ஒரு சனிக்கிழமை, அவனது ஊரைச்சேர்ந்த கிங்காங்கின் அண்ணன் கருப்பையா பிள்ளை சாரின் மருமகன் காமாட்சியைப் பார்த்தான். காமாட்சி, சண்முகத்தைத் தன்னுடன்  தன் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றான்.

காமாட்சியுடன் செண்பகம் உடன் தங்கியிருந்தாள். அவர்களே சமைத்துச் சாப்பிட்டார்கள். இன்னொருவர் தங்கலாம் என்பதால் சண்முகத்தைக் கேட்டனர். எனவே பொங்கல் வீட்டிலிருந்து சண்முகம் ஜாகை மாறினான். செம்பகம் அரிசி வியாபாரம் செய்பவன். அவன் தம்பி முத்து நாடார் கடையில் வேலை செய்பவன். அப்போது அரிசித் தட்டுப்பாடு இருந்தது. அதனால் மறைவாக அரிசியை ஏர் பேக்கிலும் ஹாண்ட் பேக்கிலும் எடுத்துச் சென்று விற்றுவிடுவான். பல சமயம் ரெய்டில் தப்பித்து விடுவான். ஒருமுறை வியாபாரத்திற்குச் சென்றபோது 20 நாள்களுக்கு மேலாக வரவில்லை. பின் ஆளே அடையாளம் தெரியாத வண்ணம் வந்தான். அந்த நாள்களில் சண்முகத்திற்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டது மன உளைச்சல், முத்துவிற்கு அம்மை போட்டுவிட்டது. செண்பகம் மீண்டும் அரிசி வியாபாரத்தைத் தொடங்கினான். சண்முகத்தின் வாட்ச் அதற்கு உதவியது.

கதை பேசுகிற நேரத்தில் பக்கத்து வீட்டு அன்னம்மை பால் வந்த காம ஈர்ப்பு பற்றியும் ஆசிரியர் சொல்கிறார்.

முதல் மழை பெய்த இரவு, காலடியில் ஒரு புசுபுசு நாய்க்குட்டி படுத்திருந்ததைக் கண்ட சண்முகத்திற்கு நான்காண்டுகள் முன்பு தான் சாகடித்த அந்த நாய்க்குட்டியின் நினைவு வந்தது. காமாட்சி, தம்பி கலியாணத்திற்குப் புறப்பட்டான். சண்முகம் தன் கூடுதல் சம்பளத்திற்காக டியூஷன் எடுத்தான். மாதம் 60 ரூபாய். ஏப்ரல் மாதம் தேர்வு முடிந்ததும் மொத்தமாக வாங்கிக்கொள்வதாக திட்டம். டியூஷன் தாண்டி பில்கள் தயாரிக்கவும், கடிதம் எழுதவும், கோதுமையை சக்கியில் கொடுத்து அரைக்கவும் கூறுவார்கள். சில சமயம் அரைக்கக் கூலி கொடுக்க மாட்டார்கள். சண்முகத்திற்கு கேட்கத் தயக்கம். ஊருக்கு போகும்போது 400 ரூபாயை கொடுத்தார். 20 ரூபாயைப் பிடித்துக்கொண்டு விட்டார். செண்பகம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தான். கம்பனியில் வேலை செய்யும் ரூபன், தீபாவளி பண்டிலிருந்து 200 ரூபாய் வாங்கித் தந்தார். மறுபடி பம்பாயில் கால்வைக்கும் போது, தான் 500 ரூபாய் கடனாளியாக இருப்போம் என்று தோன்றியது. இந்தக் கடன் தீர, ஓராண்டு ஆகலாம். கடன் வாங்குவதன்றி வேறென்ன மார்க்கம்?

தாதரை விட்டு மாதுங்கா வரை மெதுவாக நகர்ந்து, சயான் தாண்டியதும் வண்டி வேகம் எடுத்தது. இருக்கையில் வந்தமர்ந்து சமான்களைக் கடைசியாக ஒரு முறை சரிபார்த்து, தாராளமாகக் கால்களை நீட்டியதும் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் கர்வமும் தோன்றின.

நாஞ்சில் நாடன், சண்முகத்துடன் நம்மையும் பயணிக்க வைத்துவிடுகிறார். ஊர்விட்டு ஊர் வந்த பட்டதாரியுடன் வாழ்வின் நிஜங்களை, யதார்த்தமாய் அப்படியே பதிவு செய்கிறார். சாதாரண கவனிப்பு நான்கு விஷயங்கள் என்றால் இவர் அடுக்கடுக்காய் 40 விஷயங்களால் பதிவு செய்கிறார். இயல்பாகவும் பொருந்தி விடுகிறது. பம்பாய் நகரின் அமைப்பு நம்மில் பதிந்து விடுகிறது. இந்த விவரிப்பு, கதைக்கு ஊறு விளைவிக்காது, அந்த வடிவத்தைச் சிதைக்காது, இடர் ஏற்படுத்தாது, பொருத்தி வடிவமைப்பதில் நாஞ்சில் நாடனின் தனித்துவம் அமைந்திருக்கிறது. சண்முகத்துடன் நாமும் நேவி நகர் சென்றபோது கலவரப்படுகிறோம். இத்தனையையும் மிதவை என்னும் நாவலில் அமைக்கிறார் நாஞ்சில் நாடன். இதற்கு நகுலன் அவர்கள் மதிப்புரை அளித்திருக்கிறார்.

Midhavai is a well constructed work which has added to Nanjil Nadan’s artistic effectiveness they accent a felt experience. It may be Noticed that though he is not concerned with the complicity in the fictroncial form, the distinctive nature of modernity with his novel does not pay it its effectiveness. – Nakulan

எட்டுத் திக்கும் மதயானை

nanjil_nadanநாகர் கோவிலில் பி.காம் இறுதியாண்டு படிக்கும் மாணவன் பூலிங்கம். அவனுடன் படிக்கும் மாணவியரில் ஒருத்தி, செண்பகம். வெள்ளாளர் வீட்டுப் பெண் அவள். இவன், குயவர் இனத்தைச் சேர்ந்தவன். செண்பகத்துடன் பூலிங்கம் பேசினான் என்று யாரோ கூறப் போக, செண்பகத்தின் வீட்டு மக்கள் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் போது வழி மறித்து, டீக்கடையில் வைத்து அடித்துவிடுகின்றனர்.

செய்யாத தவறுக்கு தண்டனை, அவமானம், கோவம். அவர்கள் வீட்டு வைக்கோல் படப்பைத் தீயிட்டு விட்டு, ரயில் ஏறிவிடுகிறான். அதற்குப் பணம் கொடுத்து உதவுகிறாள் சுசீலா. போகும்போது ஒரு விஷயத்தையும் அவளிடம் சொல்கிறான். அவள் வயிற்றில் வளரும் கரு, அவனுடையது என்று. தீர்மானம் இல்லாத பயணம், ஆந்திராவில் தொடங்கியது. இரயிலில் ஐஸ்கிரீம் விற்கிறான். ரௌடிகளால் இடர்ப்பாடு. தற்காத்துக்கொள்ள நண்பன் கொடுத்த கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுகிறான். ஹூப்ளிக்கு தரை மார்க்கம். பழமண்டியில் வேலை. சேட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறான். விதி யாரை விட்டது?

அவன் கவனம் எல்லாம் 500 ரூபாய் இருந்தால் ஊருக்குப் போகலாம் என்றே இவனை நம்பி வீட்டை ஒப்படைத்த போது, 500 கிடைக்குமோ என்று வீட்டைச் சோதனையிடுகிறான். ஒன்றும் கிடைக்கவில்லை. மாட்டிக் கொள்கிறான். அவமானம் கோவாவிலிருந்து மது பாட்டில் கடத்தல். போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான். திம்மனின் சகோதரி கோமதி அறிமுகம். ஒரு இனிய சினேகிதம் மலருகின்றது. போலிஸின் உதவியால் போதை மருந்துக் கடத்தலில் ஈடுபடுகின்றான். பணம் புழங்குகிறது, ஊருக்கும் பணம் அனுப்புகிறான் பூலிங்கம். அம்மாவிற்கு சந்தோஷம். எங்கேயோ மகன் நல்லா இருக்கட்டும் என்கின்ற நிம்மதி. சுசீலாவிற்கும் இத்தகவல் போக, அவள் செண்பகத்திடம் கூறுகிறாள். அப்போது தன்னிடம் அவன் எதுவும் தவறாகப் பேசியதில்லை என்று கூறி, செண்பகம் வருத்தப்படுகிறாள். தொழில் நிமித்தம் பம்பாய் சென்று, திரும்பும் வழியில் சரக்கைப் பறிகொடுக்கிறான். சேட்டிடம் மாட்டிக்கொள்ள, அடித்துப் போட்டுவிடுகின்றனர். கோமதியிடம் சொல்லாமல் பம்பாய் செல்கிறான்.

மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென்கிழக்கில் சுக்கிரன், வடமேற்கில் வாயு, தென்மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன், எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ, அல்லது கிடந்து உழலவோ!
வான வெளியில் சுய ஈர்ப்பிலிருந்து சுழன்று, பிற ஈர்ப்புகளின் உட்புக மறுத்து, எந்த விதியின் இயக்கத்துக்கும் ஆட்பட மறுத்த கோளத்தின் சுழற்சி போல் ஆகிவிட்டது வாழ்க்கை….. பலருக்கும் மயில் போல் அழகான தோகைகள். ஆனால் பறந்து எங்கும் போக முடியாமல்… பூலிங்கத்துக்குத் தோகையும் இல்லை, துடுப்பும் இல்லை.. பூலிங்கம் முதலில் குண்டக்கல் ரயிலில் ஏறுகிறான். ஒரு சிறிய திருட்டு. பணத்தை மட்டும் எடுத்துவிட்டு பெட்டியைப் பூட்டிவிட்டான். இப்பணம் பம்பாய் போக உதவியது.

இதற்கிடையில் சுசீலா, உருண்டைச் சொம்பாய் ஒரு பெண் குழந்தையை பெற்றாள். சுப்புவின் உதவியால் அண்ணாச்சியிடம் பூலிங்கம் அறிமுகப்படுத்தப்பட்டான்.

பெரிய கான்வாஸ் பை. அதில் 5 லிட்டர் கேன். சுற்றிலும் மேலேயும் கேன் தெரியாமல் அடுக்கப்பட்ட முறுக்குப் பொட்டலங்கள். முறுக்கு என்றால் உளுந்து வறுத்துத் திரித்து, அரிசி மாவு இடித்து, அரித்துச் சேர்த்துப் பிசைந்து, கறுப்பு எள் தூவி, கையால் சுற்றித் தேங்காய் எண்ணெயில் சுட்டவையல்ல. மரவள்ளிக் கிழங்கு மாவில் செய்த அச்சு முறுக்கு. முதல் நாள் ‘பொருபொரு’ என்றிருக்கும். பிறகு ‘சவுக்கு சவுக்கு’ என்றிருக்கும்.

nanjil_nadanகோலி வாடாவில் மின்சார இரயில் பிடித்து, விடியில் இறங்கி, மகாத்மா காந்தி ரோட்டில் நடந்து, ஃப்ளோரா பவுண்டன் தாண்டி, காலா கோடா தாண்டி, ஜஹாங்கீர் ஆர்ட் காலரி தாண்டி, மியூஸியத்தின் மேற்கு நுழைவாயில் தாண்டியும் நான்கு சக்கர வண்டிகள் சில நின்றன. பழைய புத்தகங்கள், சிறுவருக்கான விளையாட்டுச் சாமான்கள், கீற்று மாங்காய் என அவற்றில் ஒன்றில் பெரிய சீனிச் சட்டியில் கடலை எண்ணெய் நுரைத்துக் காய்ந்துகொண்டிருந்தது.

உருளைக் கிழங்கு வடைக்கான மசாலா வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சதைத்த உருண்டை, அரிந்த மல்லித்தழை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்புப் பிசைந்து அரைத்த கடலை மாவு… எல்லாம் தயாராக இருந்தன. அடுக்கடுக்காய் 12 பாய்கள் கொண்ட தடுக்குகள் இருந்தன. இரண்டு ஜெர்கி கேன்கள் நிறையக் குடிநீர், கண்ணாடித் தம்ளர்கள், பிளாஸ்டிக் ஜக்கில் தண்ணீர்… சாராயம் முதல் வியாபாரம் என்னும் பாட்டாட்டா வடா…. பாவ் துணை வியாபாரம் என்று தோன்றியது..

இதுதான் நாஞ்சில் நாடன் விவரிக்கும் பாணி…

செண்பகத்தின் அப்பா பூலிங்கத்தை அடித்து, விஷயத்தைப் பெரிதாக்கியதில், செண்பகத்தின் திருமணம் அமையவில்லை. 20 தரத்திற்கும் மேல் வந்து போனதுதான் மிச்சம். எனவே பம்பாயில் நேவியில் கிளார்க் வேலை என வந்தவருக்குச் செண்பகத்தைத் திருமணம் செய்து, பம்பாய்க்கு அனுப்பினர்.
பம்பாயில் பூலிங்கத்தைச் சந்திப்போம் என்று செண்பகம் நினைக்கவில்லை. கணபதி பூஜையன்று பூலிங்கத்தைப் பார்த்தாள். நாள்கள் கடந்தன. பூலிங்கம் ஓய்வாக இருப்பதால், தமிழ் மன்றம் நூலகத்திற்கு வந்தான். யதேச்சையாக செண்பகம் வரவே சந்திப்பு நிகழ்ந்தது. வாழ்வில் ஒரு திருப்பத்திற்கு அடிபோட்டுவிட்டது விதி. அவள் தங்கும் இடம் போய், அவளைப் பார்த்தான். அவளின் கணவன் ஆண்மை இல்லாதவன் என்றும், சரியாவதற்கு வழியொன்றும் இல்லையென்றும் இன்னும் அவள் கன்னி கழியவில்லை என்றும் அறிந்தான். பின்பு லோண்டோ வரை ஒரு டிரிப் சுப்புவோடு சென்றான். அங்கு கோமதியைப் பார்த்தான். பூலிங்கத்திடம் ‘செண்பகத்தைத் திருமணம் செய்து கொள்’ என்று அவள் கூறினாள். மீண்டும் பம்பாய் வந்து செண்பகத்தைப் பார்க்கும்போது, செண்பகத்தை உள்ளே வைத்து, அவள் கணவன் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றது தெரிந்தது. பக்கத்து வீட்டு மராத்திப் பெண். அவளுக்கு ஏதாவது உதவி செய்யச் சொன்னாள். வேறு சாவி போட்டு திறந்து அவளோடு பேசினான். 15 நாட்கள் கழித்து, அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போனான்.

‘‘உண்மையில் பூலிங்கத்திற்கு சங்க நிதி பதும நிதி இரண்டும் கிடைத்தது போலிருந்தது. வாழ்வு திடீரென்று ஒரு பொருள் பூத்தது போல்.
கோமதிக்குப் பைத்தியம்தான் இப்படி எல்லாம் யோசிக்க என்று எண்ணினான். அடுத்தவன் மனைவியைக் கடத்திக்கொண்டு போன குற்றம் ஒன்றுதான் பாக்கி. பஞ்ச சீலங்கள் முழுதாகிப் போகும். வெயில் கண்ணைக் கூசும்படி அப்படி காய்த்தது. இரவு வண்டிக்குப் புறப்பட்டு போகலாம் என்று தோன்றியது. கதவை ஒரு பக்கமாகச் சாய்த்துவிட்டு கோமதி அம்மா வீட்டுக்குப் போனான். மனத்தில் ஏவல் செய்து விட்டதைப் போல் கோமதியின் சொற்கள் சுற்றிச் சுற்றி வந்தன.

இல்வாழ்க்கை என்பது உடலுறவு மட்டும்தானா என்று தோன்றியது. ஆனால் அது மட்டும் இல்லாவிட்டால் அது இல்வாழ்க்கையாகவும் இருக்க முடியாது போலிருக்கிறது. மகாத்மா காந்தி நடத்தியது, இராமகிருஷ்ணன் நடத்தியது அவை எல்லாம் இல்வாழ்க்கை என்று எப்படிக் கருத முடியும்? சாரைப் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து எட்டி இழுத்து, எலும்புச் சங்கிலியை இற்றுப் போட்டுவிட்டு, ஊர்ந்து போ என்று சொல்வதைப் போல ஒருவேளை நகராமல் இருந்த இடத்தில் சற்றும் தண்ணீரும் உணவும் கிடைக்குமானால் உயிர் வாழ்வது சாததியமாக இருக்கக்கூடும். ஆனால் அது உயிர்வாழ்தல் தானா?

அரசு கெடுபிடியின்போது அண்ணாச்சி எல்லோர்க்கும் ரகசிய தாக்கீது விட்டிருந்தார். அவரும் கூட ரகசியமாய் ஓய்வில் சென்னை ஆஸ்பத்திரியில் இருந்ததாகச் சொன்னார்கள். பெருமாளே பைந்நாகப் பாய் சுருட்டிக்கொண்டால் ஆழ்வார்கள், அடியார்கள், அடியார்க்கு அடியார்கள் போய் ஒளிந்துகொள்வது எங்கே?

ஆனால் வாழ்க்கை வேடிக்கை ஆனதல்ல. வினைகள் நிறைந்தது. நல்வினை, தீவினை, செயப்படுவினை, செயப்பாட்டுவினை..

இந்நாவலில் பம்பாய் வாழ்வு முறை, கிடைக்கும் உணவு, வரும் வருமானத்திற்குள் வாழ்க்கையைப் பொருத்திக் கொள்ளுதல், ஒருவருக்கொருவர் இயல்பாக உதவி செய்துகொள்ளும் பாங்கு அனைத்துமே ஒரு இயல்பில் தானாகச் சரிசெய்துகொண்டு நடந்துகொண்டிருக்கும் பாவனையில் எடுத்துச் சொல்கிறார்.

இந்நாவல், Against All odds என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

(பயணம் தொடரும்….

========================================================

படங்களுக்கு நன்றி: http://nanjilnadan.wordpress.com, http://tamilhindu.com

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – பகுதி 1

  1. a very good narrative. With the editor notes we also get a glimpse of the writings of nanjil’s writings.

  2. அன்பு சுபா…
    தங்களை நான் அப்படி அழைக்கலாமா? சும்மா கூடுதல் நெருக்கத்திற்காக.. நல்ல நடை.. கேணியைப் பார்க்காமல் இருந்திருந்தால் வருந்துவேன்.பார்த்ததால் கண்களில் கேணி நிறைவாக..

    நல்ல நடை. நாஞ்சில் நாடன் உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறார். அவர் புத்தகங்கள் அதிகமாகப் படித்ததில்லை. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டு விட்டீர்கள். என் ந்ண்பர் டாக்டர் இளங்கோவன் அவரின் விசிறி. அவர் கூறி அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி படிக்க வேண்டும்…..ஆவலைத்தூண்டி விட்டு விட்டீர்கள். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *