பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 22
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
விஜயராகவன் எழுப்பிய கேள்வி:
க்ரியாவின் தற்கால அகராதியில் சொற்களின் வழக்கு பற்றிக் குறிப்பு உள்ளது. சில சொற்கள் ‘அருகி வரும்’, சில சொற்கள் ‘பெருகி வரும்’ எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இது ஆர்பிட்ரரியாகவும் சப்ஜெக்டிவ் ஆகவும் உள்ளது. இதற்கு புறவய மதிப்பீட்டைப் பிரயோகித்தார்களா? அப்படியானால், அது என்ன? ‘அருகி வரும்’ என்று கூறும் சொற்கள், இன்றும் கூட பலரால் உபயோகிக்கப்படுகின்றன.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
தற்காலத் தமிழில் பழையன கழிந்து புதியன வருவதை, க்ரியா அகராதி, சொற்களுக்குத் தந்துள்ள அருகி வருவன, பெருகி வருவன என்னும் அடையாளக் குறியீடுகள் காட்டுகின்றன. இந்த அகராதி 1956ஆம் ஆண்டிலிருந்து எழுதப்பட்ட பல பொருள் துறைகளிலிருந்து எடுத்த 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் துணைகொண்டு தயாரிக்கப்பட்டது. வழக்குக் குறியீடுகள் இன்றைய தமிழின் வழக்கு நிலவரத்தைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் குறியீடுகளின் பொருளை அகராதியின் முன்னுரையில் வழக்கு நிலை என்ற பத்தியில் பார்க்கலாம்.
க்ரியா அகராதியின் திருத்திய பதிப்பில் 21,000 சொற்கள் இருக்கின்றன. இவற்றின் வடிவம், இலக்கண வகை, பொருள், வழக்கு நிலை எல்லாம் மேலே சொன்ன சொல்வங்கியிலிருந்து முடிவு செய்யப்பட்டவை. அகராதியில் உள்ள சொற்களில் வழக்கு அருகிவரும் சொற்கள் கிட்டத்தட்ட ஆயிரம்; வழக்கு பெருகிவரும் சொற்கள் சுமார் இருநூறு. அருகிவரும் சொற்கள், வழக்கிலிருந்து போய்விட்ட சொற்கள் அல்ல. அவை இன்னும் உபயோகத்தில் இருக்கும். குறிப்பிட்ட துறையில் இருக்கலாம்; குறிப்பிட்ட வயதினர், தொழில் செய்பவர்கள் பயன்படுத்தலாம். அவை அளவில் குறைவாக வழங்கப்படுகின்றன என்பதையே வழக்குக் குறியீடுகள் சுட்டுகின்றன.
சொல்வங்கியில் உள்ள தரவைக் காலவாரியாகப் பார்க்கும்போது காலப்போக்கில் ஒரு சொல்லின் வரவு எண்ணிக்கை குறைந்து வந்தால், அது அருகிவரும் சொல் எனப்படும்; கூடிவந்தால், பெருகிவரும் சொல் எனப்படும். இது புறவய அலகு. முடிவுக்கு வரத் தடுமாற்றம் உள்ள இடங்களில் அகராதிக் குழுவினர் தங்களுடைய தமிழ் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் முடிவு செய்வார்கள். இது அகவய முடிவு.
அகராதியில் தரப்பட்டுள்ள சொல் வழக்குக் குறியீடுகள் பற்றித் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மொழி பற்றிய பார்வை, வாசகர்களிடையே வேறுபடும். மேலும், அகராதி, மொழியின் போக்குகளின் பதிவே; புதிய போக்கில் பழமை ஓரளவு தொடரும். க்ரியாவின் அகராதி தற்காலத் தமிழ்த் தரவின் அடிப்படையில், கணினியின் உதவியோடு தயாரிக்கப்பட்டது. சொல்லின் வழக்கு நிலை அடையாளக் குறியீடுகளும் சொல் பற்றிய வேறு செய்திகளும் மனத்திற்குத் தோன்றியபடி தரப்படவில்லை. யாருடைய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் தரப்படவில்லை.
ஒரு பொருளோ, பழக்கமோ மறைந்துவிட்டால், அதற்குரிய சொல் இன்று தன் பொருளிலோ மரபுப் பொருளிலோ (idiomatic meaning) வழங்கினால் அந்தச் சொல் அகராதியில் இடம் பெறும். பரவலாக வழங்கினால் அருகிவரும் சொல் ஆகாது. (எ-டு) அணா, தேவதாசி, வீசை. அருகிவரும் சொற்களில் பெரும்பான்மையானவை, சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கிய சொற்கள் (எ-டு) அகாரணமாக, வந்தனம்.
பெருகிவரும் சொற்களில், மதிப்பை உயர்த்தும் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான சொற்களும், சமஸ்கிருதச் சொற்களின் மாற்றுச் சொற்களும் இருக்கின்றன. (எ-டு) அமரர் ஊர்தி (சவப்பெட்டி), பதின்பருவம் (teen age), இழப்பீடு (நஷ்டஈடு).
மாற்றப்படும் பழைய சொற்களில் சமஸ்கிருதச் சொல் மட்டுமல்லாமல், தமிழும் சமஸ்கிருதமும் கலந்த சொற்களும் உண்டு. (எ-டு) ஆசிரியர் உரை (தலையங்கம்), உருவ பொம்மை (கொடும்பாவி)
அகராதியில் ஒரு சொல்லின் பழைய பொருள் அருகிப் புதிய பொருள் பெருகும் பதிவுகளும் உண்டு. தமிழ்மொழி வரலாற்றில் சொல் வளர்ச்சி போல், சொல்லின் பொருள் வளர்ச்சியும் முக்கியமானது. இதைப் பற்றிய ஆராய்ச்சி குறைவாகவே இருக்கிறது. பள்ளிப் பாடப் புத்தகத்தில் நாற்றம் என்ற சொல்லின் பொருள் நல்ல வாசனை என்ற பொருளிலிருந்து இன்று கெட்ட வாசனை என்ற பொருளாக மாறியிருப்பது சொல்லப்படும். ஆனால் சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கும் பொருள் வளர்ச்சி பற்றித் தெரிய வேண்டியது நிறைய இருக்கிறது.
ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன்.
தொண்டு என்ற சொல்லின் பழைய பொருள், கடவுள் காரியம், ஆண்டைக்குச் செய்யும் வேலை என்ற இரண்டு மட்டுமே. இந்தச் சொல்லின் இக்காலப் பொருள் அதன் நிலப் பிரபுத்துவப் பொருளிலிருந்து விலகி, பொதுநலச் சேவை என்னும் மதச் சார்பற்ற பொருளைப் பெற்றிருக்கிறது.
சொல்லும் பொருளும் அருகியும் பெருகியும் வருவது, தமிழ், காலத்துக்குத் தக்க மாறிக்கொள்ளும் நெகிழ்ச்சியுடைய மொழி என்பதைக் காட்டுகிறது,
படம்: அண்ணாகண்ணன்
=====================================
(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)