பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 23

5

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

E.Annamalai

விஜயராகவன் எழுப்பிய கேள்வி:

“பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு” என்னும் உங்கள் கருத்தைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழ் நெடுங்கணக்கில் முப்பது எழுத்துகள் என்று தொல்காப்பியம் வரையறுத்தது. புள்ளியால் வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படும் மூன்று சார்பெழுத்துகளை (குற்றியலுகரம், குற்றியலுகரம், ஆய்தம்) இணைப்பு போல் நெடுங்கணக்கில் சேர்க்கிறது. அடிப்படை நெடுங்கணக்கு அகரத்தில் துவங்கி, னகரத்தில் முடிகிறது. ற, ன என்னும் இரு எழுத்துகளையும் முறையே வல்லெழுத்தோடும் மெல்லெழுத்தோடும் வைக்காமல் நெடுங்கணக்கின் இறுதியில் வைத்ததற்குக் காரணம் அசோகன் பிராமி எழுத்து முறையில் இல்லாத இந்த இரண்டு மெய்யெழுத்துகளுக்கும் தமிழின் தேவைக்காகப் புதிய வரிவடிவம் அமைத்துக்கொண்டதாக இருக்கலாம். ஆனால் ழகரத்தை இந்த எழுத்துகளோடு வரிசைப்படுத்தி ளகரத்துக்குப் பின்னால் வைக்காததற்கு விளக்கம் இல்லை.

நமக்குக் கிடைத்துள்ள பிராமித் தமிழ்க் கல்வெட்டுகள் காட்டுவது போல, தொல்காப்பியர் காலத்தில் கல்வெட்டுகளில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்து தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டிருக்கலாம். தொல்காப்பியர் இலக்கியத்தில் தமிழ்ச் சொற்களைத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத எழுத்துகளைக் கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை என்றார். பிராகிருதத்திலிருந்து தமிழ் கடன்வாங்கிய சொற்களுக்கும் இது பொருந்தும். தமிழ் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதை விட, தமிழ் எப்படி இருந்தது என்று விளக்குவதே தொல்காப்பியம் என்பது என் கருத்து. தமிழ் நெடுங்கணக்கிலிருந்து விலகாமல் தமிழ்ப் புலவர்கள் செய்யுள் எழுதினார்கள்; ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் எழுதினார்கள். பதினேழாம் நூற்றண்டில் அருணகிரிநாதர் இந்த வழக்கத்திலிருந்து விலகினார். இதன்பின் இலக்கியத்தில் கடன்வாங்கிய சில தமிழ்ச் சொற்களை நெடுங்கணக்கு எழுத்துகளோடு கிரந்த எழுத்துகளைச் சேர்த்து எழுதும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஐந்து கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கின் கடைசியில் சேர்த்து நெடுங்கணக்கை விரித்தது அச்சு வந்த, அந்நியர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த காலனிய காலத்தில் நடந்தது என்று நினைக்கிறேன்.

நெடுங்கணக்கிலிருந்து விலகி, வேறு எழுத்துகளைச் சேர்த்துத் தமிழை எழுதும் வழக்கத்தை அரசர்களும் நிலக் கிழார்களும், மற்றவர்களும்  ஆவணம் எழுதத் துவங்கிய காலத்திலிருந்தே தங்கள் ஆவணங்களில் கையாண்டிருக்கிறார்கள். இந்த ஆவணங்களில் பிராகிருதச் சொற்களையும், பின்னால் சமஸ்கிருதச் சொற்களையும், தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதையும் பார்க்கலாம்; அதே நேரத்தில் நெடுங்கணக்கில் இல்லாத பிராமி எழுத்துகளையும், பின்னால் கிரந்த எழுத்துகளையும், கொண்டு எழுதுவதையும் பார்க்கலாம். புலவர்களைத் தவிர்த்து, அரசர் உட்பட மற்றவர்களிடம்  இந்த இரட்டை வழக்கம் காலந்தோறும் தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆவணங்களிலும் துவக்க காலத்திலிருந்தே இந்த இரட்டை வழக்கம் இருக்கிறது.  கல்வெட்டுகள், செப்பேடுகள் மட்டுமல்லாமல் பானைச் சில்லுகளிலும், நாணயங்களிலும், இலச்சினைகளிலும் இரட்டை வழக்கம் இருக்கிறது. தொல்காப்பியர் விவரிக்கும் இலக்கியத் தமிழ் இவர்கள் எழுதும் ஆவணத் தமிழ் அல்ல.

தமிழ்ப் பேச்சிலும் இரட்டை வழக்கம் இருந்திருக்கும், இன்று இருப்பதைப் போல. சாதி / ஜாதி, நட்டம் / நஷ்டம் என்பது போல் இரண்டு சொல் வடிவங்களும், ஜோதி, கஷ்டம் என்பது போல் நெடுங்கணக்கிலிருந்து விலகிய சொல் வடிவங்களும் பேச்சு வழக்கில் இருந்திருக்கும். இத்தகைய பேச்சு வழக்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெற உந்துதலாக இருந்திருக்கலாம்.

இலக்கியம் தாண்டிய வழக்கு மரபும் தமிழ் மரபுதானே. தற்காலத் தமிழின் பேச்சு வழக்கில் பொருளை வேறுபடுத்தும் சில புதிய ஒலிகள் வழங்குகின்றன. இவை பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது மட்டுமல்ல; கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் மட்டுமல்ல; தமிழுக்கே உரிய சொற்களிலும் வழங்குகின்றன. இவை சொல்லின் முதலில் வரும் ஒலிப்புடைய வல்லெழுத்துகள் (voiced stops). /g, k/ என்ற ஒலிகள் குரு, குருவி என்ற சொற்களிலும், /j, c/ என்ற ஒலிகள் ஜிப்பா, சிப்பம் என்ற சொற்களிலும், /d, t/ என்ற ஒலிகள் தேசம், தேர் என்ற சொற்களிலும், /b, p/ என்ற ஒலிகள் போகம், போக என்ற சொற்களிலும் ஒரே இடத்தில் வந்து, சொற்களின் பொருளை வைத்தே சரியான உச்சரிப்பை அறியும்படி செய்கின்றன. ஒலி வேறுபாட்டிலிருந்து பொருள் வேறுபாடு பெறுவதே மொழிகளின் இயல்பான விதி; பொருள் வேறுபாட்டிலிருந்து ஒலி வேறுபாட்டைப் பெறுவது விதிக்கு விலக்கு.

மேலே காட்டிய சொல் முதல் வல்லெழுத்தில் ஒலி வேறுபாடுள்ள சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பது ஒரு வாதம். இது சொல் வரலாற்றின்படி உண்மையாக இருந்தாலும், இன்றைய நடை-முறையில் பெரும்பான்மையான தமிழர்களால் இந்தச் சொற்கள் பேசப்படுகின்றன. இவர்கள் தாங்கள் வேறொரு மொழி தெரிந்து அதிலிருந்து எடுத்துக் கையாள்வதில்லை. தங்கள் தாயிடமிருந்து, தங்கள் தெருவிலிருந்து இந்தச் சொற்களைப் பெற்றுப் பேசுகிறார்கள். இவற்றின் எண்ணிக்கை, பெரும்பாலும் ஆங்கிலத்தின் வழி, கூடிவருகிறது. வேறு வழியிலும் தலித் போன்ற சொற்கள் அன்றாட வழக்கில் வந்திருக்கின்றன. மேலே காட்டிய ஒலி வேறுபாடு கடனாகப் பெறாத சில தமிழ்ச் சொற்களிலும் இருக்கிறது. தோசை, பூரி முதலியவை சில எடுத்துக்காட்டுகள்.

இத்தகைய சொற்களைத் தமிழிலிருந்தே நீக்கிவிடலாம் என்பது மற்றொரு வாதம். எழுத்தைக் கட்டுப்படுத்தும் அளவுகூட பேச்சைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும், அறிவியல் தமிழ் வளர, வளர, கலைச்சொல் படைப்பில் மொழிபெயர்ப்பு ஒரு வழிதான் என்னும் உண்மையை ஒப்புக்கொண்டால், கலைச்சொற்களில்  ஒலிப்புடை வல்லெழுத்துகள் மிகும். எதிர்கால ஒட்டத்தில் வெற்றி பெற எந்தக் கட்டும் தமிழுக்குத் தடையாக இருக்கக் கூடாது.
சொல் முதலில் ஒலிப்புடைய வல்லெழுத்துகளுக்குத் தனி வரிவடிவம் இருந்தால் தமிழ் உச்சரிப்புக்குச் சொல்லின் முதல் இடத்தில் விதிவிலக்கு தர வேண்டியதில்லை. விதிவிலக்கு இல்லாமல் தமிழின் ஒலி அமைப்பின் எளிமை தொடரும். எளிமை என்பது ஒலிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல; ஒலிகளால் அமைந்த சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு குழப்பம் இல்லாமல் இருப்பதும் ஆகும்.

உச்சரிப்பில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் வரிவடிவம் தேவை இல்லை. ஒரு எழுத்து வரும் இடத்தை வைத்து அதன் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகளை அறிய முடியுமென்றால் அதுவே திறம்பட அமைந்த நெடுங்கணக்கு. மெல்லெழுத்துக்குப் பின் வரும் வல்லெழுத்து ஒலிப்புடையது ஆவதால் ஒரு வரிசை வல்லெழுத்தே போதும் என்ற புரிதலின் அடிப்படையில் அமைந்த தமிழ் நெடுங்கணக்கு சிக்கனமானது. இந்த இடத்தில் வரும் வல்லெழுத்துகளுக்கு உச்சரிப்பு வேறாக இருந்தாலும் தனி வரிவடிவம் தேவை இல்லை.

மேலே காட்டிய ஜிப்பா போன்ற சில சொற்களில் சொல்லின் இடையில் வரும் பகரமும் ஒலிப்புடைய வல்லெழுத்தாக உச்சரிக்கப்படுகிறது. இந்த உச்சரிப்பு கடன்வாங்கிய ஒரு சில சொற்களிலேயே இருப்பதால் ஒலிப்புடைய வல்லெழுத்தின் வரிவடிவத்தைப் பயன்படுத்தாமலும் விடலாம். பகரத்தின் உரசொலியாகிய /f/ கடன்வாங்கிய சொற்களில் மட்டும் இருக்கிறது. இதைப் போன்றதே ஜகரத்தின் உரசொலியாகிய /z/; ஆனால் பேச்சு வழக்கில் இந்த ஒலியை உச்சரிப்பது குறைவு. ஜெராக்ஸ், ஜிப் (zip) போன்ற சொற்களில் முதல் எழுத்து /j/ என்றே ஆங்கிலம் தெரியாதவர்களால் ஒலிக்கப்படுகிறது. இவற்றுக்குத் தனி எழுத்து வேண்டுமா என்பது வாதத்திற்கு உரியது.

உயிர்களில் /ae/  என்னும் புதிய உயிரொலி கடன் சொற்களிலேயே ஆங்கிலம் படித்தவர்களால் மட்டும் உச்சரிக்கப்படுகிறது; இது தமிழ் உயிரெழுத்துகள் /ஆ/ அல்லது /ஏ/-யால் எழுதப்படுகிறது. எடுத்துக்காட்டு: பாங்க் / பேங்க். பாங்கு ‘இயல்பு’: பாங்க் ‘வங்கி’ என்று எழுதும்போது ஒரே எழுத்து (ஆ) ஒரே இடத்தில் பொருள் வேறுபடுத்தும் இரண்டு ஒலிகளை (aa, ae) குறிக்கிறது. ஆனால் /ae/ என்ற ஒலி பெரும்பான்மையோர் உச்சரிப்பில் இல்லாததால் இதற்கு ஒரு வரிவடிவம் நெடுங்கணக்கில் சேர்க்கும் தேவை இல்லை. மேலும், இந்த ஒலியுடைய சொல் தமிழாக்கம் பெறும்போது /ஆ/ என்ற எழுத்தையே கொள்கிறது (எ-டு: டாங்கி). இன்னொரு புதிய உயிரொலியைத் தமிழ் வினைச்சொற்களில் காணலாம். சொல்லிவிட்டான் என்ற வினை இரண்டு பொருளில் வருகிறது: ‘நிச்சயமாகச் சொன்னான், செய்தி அனுப்பினான்’. பேச்சில் இந்த வினை முதல் பொருளில் சொல்லீட்டான் என்றும், இரண்டாவது பொருளில் சொல்யூட்டான் என்றும் உச்சரிக்கப்படுகிறது. இங்கு இரண்டு வேறு உயிர்கள் பொருள் வேறுபட்டைத் தருகின்றன. ஆனாலும், பேச்சுத் தமிழை எழுதும்போது சொல்லிட்டான், சொல்லிவிட்டான் என்று எழுதிப் பொருள் வேறுபாட்டைக் காட்டலாம்.

மேலே சொன்னவற்றால் பேச்சுத் தமிழில் வரும் புதிய ஒலிகள் எல்லாமே புது எழுத்து பெறாது என்பது புலனாகும். புது எழுத்து பெற, பொருள் வேறுபாடு, பெரும்பான்மை உச்சரிப்பு, எழுத மாற்று வழி இல்லாமை என்று சில வலுவான காரணங்கள் இருக்க வேண்டும், இயல்பாக ஆங்கிலம் பேசாத தமிழர் வாயில் வழங்கும் புதிய ஒலிகளுக்கு வரிவடிவம் தருவதற்கு.

மேலே காட்டிய புதிய ஒலிகள் உள்ள சொற்கள் தமிழ்த் தெருக்களிலும் ஜனரஞ்சக இதழ்களிலும் இயல்பாகப் புழங்குகின்றன. மேட்டுக்குடி இலக்கியத்தில், கட்டுரைகளில் வருவது மட்டுமே தமிழ் என்று தமிழைச் சுருக்க முடியாது, அல்லவா? இன்று புனைகதைகளில் பேச்சுத் தமிழை எழுதுவது நிலைபெற்றுவிட்டது. இதற்குத் தமிழ் நெடுங்கணக்கு துணைபோக வேண்டும், அல்லவா?

உலகில் எந்த மொழியும் தன் நெடுங்கணக்கில் மாற்றம் செய்ததில்லை என்பது இன்னொரு வாதம். ஒரு மொழி தன் எழுத்துமுறையையே மாற்றிக்கொண்டதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. நெடுங்கணக்கில் மாறுதல் செய்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் குறைவு. நெடுங்கணக்கு சில எழுத்துகளை விட்டுவிட்டதற்குத் தமிழிலேயே சான்று உள்ளது. தொல்காப்பியம் இணைப்பாகச் சேர்த்த மூன்று சார்பெழுத்துகளில் இரண்டு இன்று தமிழ் நெடுங்கணக்கில் இல்லை; ஆய்தம் ஒன்று மட்டுமே இருக்கிறது. கிரந்த எழுத்துகளில் க்ஷகரத்தை இன்று அதன் ஒலியோடு இன்று உச்சரிப்பதில்லை. சொல்லின் முதலில் சகரமாகவும் (எ-கா சத்திரியன்), சொல்லின் நடுவில் –ச்ச்- என்றும் (எ-கா பரிச்சை) பேச்சில் உச்சரிக்கப்படுகிறது. இந்த எழுத்தை நெடுங்கணக்கிலிருந்து எடுத்துவிடுவதால் உச்சரிப்புப் பிரச்சனையோ பொருள் பிரச்சனையோ வராது. இருப்பினும், எழுத்துக் குறைப்புக்குத் தீவிர எதிர்ப்பு இருந்திருக்கிறது. பெரியார் விடச் சொன்ன ஐகார, ஔகாரத்தைத் தமிழர்கள் ஏற்கவில்லை. ராஜாஜி உயிரேறிய ஙகர, ஞகரத்தை விட்டு எழுதிய பாடநூலைத் தமிழர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

நெடுங்கணக்கில் எழுத்துக் கூட்டலுக்குத் தமிழில் ஐந்து கிரந்த எழுத்துகளைச் சேர்த்தது ஒரு சான்று. வேறு மொழிகளிலும் சான்று இருக்கிறது. கிரேக்கத்திலிருந்து கடன் வாங்கிய சொற்களால் ஆங்கில நெடுங்கணக்கில் /k, z/ என்னும் இரண்டு எழுத்துகள் இடம் பெற்றன. ஒரு மொழியின் இயற்சொற்களில் பேச்சில் ஏற்பட்ட உச்சரிப்பு மாற்றத்தால் அதன் நெடுங்கணக்கில் மாற்றம் ஏற்பட்டதற்கு இரண்டு மொழிகளிலிருந்து உதாரணங்கள் தருகிறேன். இந்த மாற்றம் கூடுதல் குறிகளை (diacritic marks) உள்ள எழுத்தின் மீது ஏற்றிப் புதிய வரிவடிவை உருவாக்கியது. ஜெர்மன் மொழியில் தாய் என்ற பொருளுடைய mutter என்ற சொல்லின் பன்மை வடிவம் muttere. இந்தச் சொல்லின் கடைசி /e/ உச்சரிக்கப்படாமல் முதல் /u/-வின் உச்சரிப்பை மாற்றியது. புதிய உச்சரிப்பைக் குறிக்க /u/-வின் மீது இரண்டு புள்ளியிட்டு ஒரு புதிய வரிவடிவம் (umlaut) நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. இது போன்றே பிரஞ்சு மொழியில் தயார் என்ற பொருளுடைய prest என்ற சொல்லில் /s/ உச்சரிக்கப்படாமல் மறைந்து முந்திய உயிரின் உச்சரிப்பு மாறியபோது /e/-யின்மீது கூரைக்குறி (circumflex) இட்டு ஒரு புதிய வரிவடிவம் நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. இது போன்றே மேல்குறியிட்ட வேறு உயிரெழுத்துகளும் சேர்ந்தன.

பேச்சுத் தமிழில் ஆங்கிலம் அறியாத பெரும்பான்மையோரின் உச்சரிப்பில் உள்ள, பொருள் வேறுபாடு காட்டும் புதிய ஒலிகளுக்கு வரிவடிவங்களை நெடுங்கணக்கின் திறன் கருதிச் சேர்க்கும் தேவையைப் பற்றி, பேச்சுத் தமிழின் செல்வாக்கு எழுத்துத் தமிழில் அதிகமாகி வரும் இந்தக் காலத்தில், தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும். புதிய வரிவடிவங்களை உருவாக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ரோமன், கிரந்தம் போன்ற பிற எழுத்து- முறைகளிலிருந்து கடன் வாங்குவது ஒரு முறை. மொழியின் எழுத்து ஒரு கலாச்சார அடையாளமும் கூட என்பதால் இந்த வழியைப் பலர் ஒப்புவதில்லை.

தமிழ் எழுத்துகளிலேயே மாற்றம் செய்வது இன்னொரு வழி. மாற்றம் செய்ய உள்ள எழுத்துகளில் குறிகளைச் சேர்ப்பது, மேலே காட்டியது போல், மற்ற மொழிகள் கையாண்ட வழி. உரசொலியைக் குறிக்க /ஃப/ என்று எழுதுவதை நீட்டித்து, /ஃஜ/ என்னும் எழுத்தை /z/ என்னும் ஒலியைக் குறிக்கப் பயன்படுத்தலாம், இந்த ஒலியைத் தமிழர்கள் தங்கள் வழக்கில் உச்சரித்தால். /க, ச/ என்னும் வல்லொலிகளுக்கு இணையான உரசொலிகளைக் குறிக்க /ஹ,ஸ/ என்னும் எழுத்துகள் இருக்கின்றன. /த, ட/-வுக்குத் தமிழர் பேச்சில் உரசொலி உச்சரிப்பு இல்லை. இந்தக் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, ஒலிப்புடைய வல்லொலியை (voiced stops) குறிக்க, வல்லெழுத்துக்கு முன் இரண்டு புள்ளியிட்டுக் காட்டலாம். /க, த, ப/ முறையே /:க, :த, :ப/ என்று வடிவம் பெறும். /ச/-வுக்கு /ஜ/ இருக்கிறது; /ட/, டமாரம் போல், பல சொற்களின் முதலில் ஒலிப்புடனேயே உச்சரிக்கப்படுகிறது.

தமிழ்ப் பெண் கன்னியாக வீட்டிற்குள் அடைந்து கிடக்காமல், உலகம் சுற்றும் பெண்ணாக வலம்வருவதற்குத் துணை செய்யச் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தமிழ்ச் சமூகம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழின் பழைய வடிவங்களைக் காப்பதை விட, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தமிழின் எதிர்காலத்தைக் காப்பது முக்கியமானது.

படம்: அண்ணாகண்ணன்

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 23

  1. புலமைக் களஞ்சியமாய், குன்றின் விளக்காய், பக்கச் சார்பற்று, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மொழியியல் விளக்கங்களை, விளங்குமாறு தருகின்ற பேரா. அண்ணாமலையார்,

    அன்னாரைத் தூண்டி அவர் அறிவைப் பகிர்விக்கும் கவிஞர் அண்ணா கண்ணன், இருவருக்கும் என்றென்றும் நன்றி உடையோம்.

  2. பேரா. அண்ணாமலை

    உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

    ” /ஃஜ/ என்னும் எழுத்தை /z/ என்னும் ஒலியைக் குறிக்கப் பயன்படுத்தலாம்” என்ற கருத்து ஏற்ப்புடையதாக இருக்கின்றது.

    “ஒலிப்புடைய வல்லொலியை (voiced stops) குறிக்க, வல்லெழுத்துக்கு முன் இரண்டு புள்ளியிட்டுக் காட்டலாம். /க, த, ப/ முறையே /:க, :த, :ப/ என்று வடிவம் பெறும். /ச/-வுக்கு /ஜ/ இருக்கிறது; /ட/, டமாரம் போல், பல சொற்களின் முதலில் ஒலிப்புடனேயே உச்சரிக்கப்படுகிறது.”

    ஒலிப்புடைய வல்லொலியை (voiced stops) குறிக்க, க, த, ட, ப ஆகிய எழுத்துக்களுக்கு முன் குறிகளைப் போடுவதைவிட, கிரந்தத்திலிருந்து நேரடியாகவே எடுத்துக் கொண்டுவிடலாம்.

    தற்போது ஒரு பதத்தில் எங்கிருந்தாலும் க, த, ட, ப எழுத்துகள் ஒலிப்பில் பெரும் குழப்பத்தை கொடுகின்றன. உதாரணமாக , ஒரு சினிமா போஸ்டரை பாருங்கள்

    https://www.vallamai.com/?p=1994

    கிரந்தம் தமிழர்களால், தமிழ்நாட்டில் செய்யப்படது, தமிழ் எழுத்துகளே கிரந்தத்திலிருந்து வந்தவை என பல எழுத்து வல்லுனர்கள் கூறுகின்ரனர். அதை “கடன் வாங்கல்” என சொல்ல முடியாது. அதனால் தேவைக்கேற்றவாறு, கிரந்த எழுத்துகளை தமிழ் உள்வாங்கலாம். சரித்திரப் போக்க்கில் அப்படித்தான் நடந்து வந்துள்ளது.

    வன்பாக்கம் விஜயராகவன்

  3. பேராசிரியர் அண்ணாமலையும் வல்லமையும் இணைந்து, தமிழ் மக்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் ஏற்புமை கொடுப்பதாக உள்ளது.

    அண்ணாமலையின் உள்நோக்கங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவை அல்ல.

    செய்யும் தவறுகளுக்கு ஏற்புமை கொடுப்பதை புரட்சிகரமான புதிய மாற்றம் என்று எடுத்துக் கொள்வதும், அதனை வலியுறுத்தி அறிஞராகக் காட்டிக் கொள்வதும் அறியாமை.

    பேராசிரியர் அண்ணாமலையும் நண்பர் அண்ணாகண்ணனும்
    தமிழ்ப்பணி செய்வதாக எண்ணி தமிழ்க் குலைப்பாளர்களுக்குத் துணை போகிற பாங்கினை அண்ணாமலையின் தொடர்க் கட்டுரைகள் மூலம் காண முடிகிறது.

    பொறுப்பற்ற தமிழ் மொழியுலகத்தின் பொறுப்பற்ற தமிழாசிரியர்கள்
    வரிசையில் உறுதியான இடத்தினை அண்ணாமலை பெற்றுவிடுவாரோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

    தமிழ் மொழி என்றால் அதை எப்படி வெட்டுவது சிதைப்பது வேறு எந்த எழுத்தை எப்படிக் கொண்டு வந்து சேர்ப்பது என்பது மாய, அடிமை மனத்தின் அடையாளங்கள்.

    இவர் அறிஞர்தானே. பிற மொழிகள் அறியாமலா இருப்பார்? பிற மொழிகளை இப்படிச் சிதைப்பதனைப் பேசுவாரா? அதற்கு எந்தத் தமிழ் அறிஞருக்கும் துணிவு வராது. ஆனால் தமிழ் மொழியைக் கூறு போடுவதற்கு மட்டும் வாய் இனிக்க இனிக்கப் பேசுவார்கள்.

    வல்லமையில் வரும் அண்ணாமலையின் தொடர்க் கட்டுரைகள் பலவும் பிழைக் களஞ்சியம்.

    நாக.இளங்கோவன்

  4. இளங்கோவன் அவர்களின் அச்சம், ஆதங்கம் யாவும் பழமைக்கும் பழமையாய், புதுமைக்குப் புதுமையாய், தமிழ் தமிழாய் இருக்கவேண்டும் என்பதே.

    30 முதல் எழுத்துகள், 247 வரிவடிவங்கள், அவை தமிழுக்குப் போதும், தமிழ் மொழிக்குப் புதிதாக வரிவடிவங்கள் தேவையில்லை என்ற மையச் செய்தியே கட்டுரை முழுவதும் இழையோடுகிறது. இறுதிப் பந்தியை முன்னுள்ள பந்திகள் முழுதாக மழுங்கடிக்கின்றன.

    தொல்காப்பியர் இலக்கியத்தில் தமிழ்ச் சொற்களைத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத எழுத்துகளைக் கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை என்றார் என்ற வரி,

    தமிழ் நெடுங்கணக்கிலிருந்து விலகாமல் தமிழ்ப் புலவர்கள் செய்யுள் எழுதினார்கள்; ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் எழுதினார்கள் என்ற வரி,

    ஒலி வேறுபாட்டிலிருந்து பொருள் வேறுபாடு பெறுவதே மொழிகளின் இயல்பான விதி; பொருள் வேறுபாட்டிலிருந்து ஒலி வேறுபாட்டைப் பெறுவது விதிக்கு விலக்கு என்ற வரி,

    விதிவிலக்கு இல்லாமல் தமிழின் ஒலி அமைப்பின் எளிமை தொடரும். எளிமை என்பது ஒலிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல; ஒலிகளால் அமைந்த சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு குழப்பம் இல்லாமல் இருப்பதும் ஆகும். என்ற வரி,

    உச்சரிப்பில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் வரிவடிவம் தேவை இல்லை. ஒரு எழுத்து வரும் இடத்தை வைத்து அதன் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகளை அறிய முடியுமென்றால் அதுவே திறம்பட அமைந்த நெடுங்கணக்கு. என்ற வரி

    ஆனால் /ae/ என்ற ஒலி பெரும்பான்மையோர் உச்சரிப்பில் இல்லாததால் இதற்கு ஒரு வரிவடிவம் நெடுங்கணக்கில் சேர்க்கும் தேவை இல்லை.என்ற வரி

    எழுத்துக் குறைப்புக்குத் தீவிர எதிர்ப்பு இருந்திருக்கிறது. பெரியார் விடச் சொன்ன ஐகார, ஔகாரத்தைத் தமிழர்கள் ஏற்கவில்லை. ராஜாஜி உயிரேறிய ஙகர, ஞகரத்தை விட்டு எழுதிய பாடநூலைத் தமிழர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. என்ற வரிகள்

    மொழியின் எழுத்து ஒரு கலாச்சார அடையாளமும் கூட என்பதால் இந்த வழியைப் பலர் ஒப்புவதில்லை. என்ற வரி

    ஆகிய இந்த வரிகளைப் படிப்போர், படித்துப் புலமையுடன் நோக்குவோர்,

    தமிழின் பழைய வடிவங்களைக் காப்பதை விட, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தமிழின் எதிர்காலத்தைக் காப்பது முக்கியமானது. என்ற வரி கூறும்

    இறுதி வாதத்தைப் பேராசிரியரே மழுங்கடித்து விடுகிறார் என்பதைத் தெளிவர்.

  5. திரு.இளங்கோவன் `தமிழ் மக்கள் தவறு செய்கின்றனர்` என மொட்டையாக எழுதுவது, மக்கள் தமிழை அடைய முடியாத, தெரிய முடியாத அளவுகோல்களால் எடை போடுவதாகக் காட்டுகிறது.

    To impose impossible demands on ordinary speech shows a prejudice.

    தமிழ் மக்கள் சரியாகத்தான் பேசுகின்றனர், அதற்கு எழுத்துகள்தான் (இலக்கணமும் கூட) வளரவேண்டும். எதிர்மறையாக எதிர்பார்ப்பது, தமிழை கட்டிப்போடுவதாகும்.

    வன்பாக்கம் விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.