இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ………………… (15)

0

சக்தி சக்திதாசன்

முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அன்பானவர்களே !

இதுவரை இங்கிலாந்து கோடை காலத்தில் நான் காணாத அளவிற்கு முழுநாடுமே தொடர்மழையினால் நனைந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னர், மாரிக்கால மழையின் அளவு போதாத காரணத்தினால் தோட்டங்களுக்கு குழாய் மூலம் நீர்பாய்ச்சத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தடை அமுலுக்கு வந்த நாள் தொடக்கம் இன்று வரை இங்கிலாந்து தேசமே கண்டிராத வகையில் தொடர் மழை பெய்தமையால் அத்தடை இப்போது விலக்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு சூழலில் தான், இங்கிலாந்து அரசில் இணைந்து கூட்டாட்சி நடத்தும் கட்சிகளுக்கிடையில் உள்ள பேதம் வெடித்து அரசாங்கமே கவிழ்ந்து விடுமோ எனும் நிலை தோன்றியது.

அது எப்படி ? என்ற எண்ணம் எழுவது இயற்கையே !

இங்கிலாந்து அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பாராளுமன்றம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு இயங்குவது.

ஆனால் மற்றொரு அங்கமாக “பிரபுக்கள் சபை” (House of Lords) எனும் சபையும் இயங்கி வருகிறது.

இதன் பூர்வீகத்தைப் பார்த்தோமானால், முன்னைய காலத்தில் நிலத்துவ பிரபுக்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் இச்சபையில் அங்கம் வகித்தார்கள். பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படப் போகும் பிரேரணைகள் அவை சட்டமாக்கப்படுவதற்கு முன்னால் இச்சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அரசியல் கட்சியைச் சாராதவர்கள், பொதுவான கண்ணோட்டத்தோடு உருவாக்கப்படும் சட்டங்களின் அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் ஆராய்வார்கள். அதன் பின்பு அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டி வரின் அதைத் திரும்பப் பாராளுமன்றத்திடம் கையளிப்பார்கள்.

என்ன இது ? செல்வந்தர்கள் எனும் ஒரே காரணத்திற்காக இச்சபையில் இடம்பெறுபவர்கள் பின் சந்ததி சந்ததியால இதில் அங்கம் வகிப்பது எந்த வகையில் இரு ஜனநாயக நடவடிக்கையாகும் ? எனும் கேள்வி மக்கள் மத்தியிலிருந்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து எழுப்பப்பட்டது.

அதன் எதிரொலியாக இச்சபையின் ஒரு சாரார் பழைய முறைப்படியும், மிகுதிப்பேர்கள் அவர்களது சமூக, சமுதாய நன்னடைத்தைகளினால் அவர்கள் சார்ந்துள்ள அன்றி அவர்களை ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகளின் சிபாரிசுகளின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்களென்று விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு தற்போது அதுவே நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் கடந்த பொதுத் தேர்தலின் போது அனைத்துக் கட்சிகளும் இச்சபையில் அங்கத்துவம் பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் இன்னமும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என பிரசாரம் செய்தன.  இக்கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்தது, இன்றைய அரசாங்கத்தில் கூட்டாட்சி நட்த்தும் கட்சிகளில் ஒன்றான லிபரல் டெமகிரட்ஸ் ஆகும்.

இவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை ஓர் முக்கிய கொள்கையாக வைத்துப் பிரசாரம் செய்தார்கள்.

தேர்தல் முடிவுகளின் பின்னர், கூட்டாட்சி அமைக்கும் பேச்சுவார்த்தைகளின் போது பிரபுக்கள் சபையின் தேர்வு முறையை மாற்றியமைப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென கன்சர்வேடிவ் கட்சியிடம் ஒரு நிபந்தனை விதித்து அவர்களும் அதை ஏற்றுக் கொண்ட பின்னரே அவர்களுடன் இணைந்து லிபரல் டெமகிரட்ஸ் கூட்டாட்சிக்கு இசைந்தது.

இப்போது அந்த நிபந்தனைக்கு வந்ததடா சோதனை ! ஆம் இப்பிரபுக்கள் சபையின் தெரிவு முறையை மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பிற்கு விடும் கட்டத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் ஏறத்தாழ 100 பாராளுமன்ற அங்கத்தினர்கள் தாம் இந்த சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்களிக்கப் போவதாக பயமுறுத்தத் தொடங்கினார்கள்.

ஆட்டம் காணத்தொடங்கியது இங்கிலாந்தின் கூட்டரசாங்கம். என்ன இது , இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகித்து நாட்டின் நன்மைக்காக எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் எனும் வகையில் எத்தனையோ விடயங்கள் எமது கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தும் கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம் எனும் காரணத்தினால் எத்தனையோ விடயங்களில் நாம் விட்டுக் கொடுக்கவில்லையா ? என்று வாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் லிபரல் டெமகிரட்ஸ்.

விட்டார்களா ? கன்சர்வேடிவ் கட்சியினர். அதென்ன நீங்கள் மட்டும் தானா விட்டுக் கொடுத்தீர்கள் ….. நாமும் கூட நாம் கொண்டிருந்த கொள்கைகளுக்குப் புறம்பாக உங்களது தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லையா?  என்று பதில் வாதம் செய்யத் தொடங்கினார்கள்.

ஒரே இழுபறி ….. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்த லேபர் கட்சிக்கோ ஒரே குஷி போங்கள் ……

இவ்வாக்கெடுப்பு நடைபெற்று அரசாங்கத் தரப்பினர் தோல்வி கண்டார்கள் என்றால் கூட்டரசாங்கத்தின் பாடு கூத்தரசாங்கமாகி விடும் எனும் நிலை.

பிரதமர் பார்த்தார் தப்பிக்க ஒரே வழிதான் இருந்தது . இவ்வாக்கெடுப்பை அக்டோபர் மாதம் மட்டும் ஒத்தி வைக்கிறேன் என்று சொல்லி விட்டார்.

இப்போது நடந்தாலென்ன ….. அக்டோபர் மாதத்தில் நடந்தாலென்ன இதென்ன காயா பழமாவதற்கு என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

இல்லை … இல்லை . அக்டோபர் மாதத்திற்கிடையில் இச்சட்டமூலம் நடைமுறையாக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகளை தனது கட்சியினருக்கு எடுத்துக்கூறி அவர்களின் மனதை மாற்றி விடலாம் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பு.

அரசியலில் மூன்று மாதங்கள் என்ன ? மூன்று நாட்களிலும் பல மாற்றங்கள் நிகழலாம் என்கிறார்கள் மூத்த அரசியல்வாதிகள்.

சரி நாமும் தான் பார்ப்போமே ….. மூன்று மாதத்தில் பிரதமருக்கு காயா ? பழமா ? என்று

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

லண்டன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *