திருமணமும் பள்ளிச் சேர்க்கையும்

 

வெங்கட் ஸ்ரீனிவாசன் 

சமீபத்தில் மதுரையருகே ஓர் அரசுப் பள்ளியில் இரண்டு மாணவிகளைப் பதினோராம் வகுப்பில் சேர்க்க அப்பள்ளியின் முதல்வர் மறுத்துள்ளார். காரணம் அவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பது தான். 

பள்ளியின் முதல்வர், திருமணமான பெண்களைப் பள்ளியில் சேர்த்தால் அவர்களுடன் வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளை அது பாதிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார். 

மேலோட்டமாகப் பார்த்தால், திருமண வயதுக்கு வரும் முன்னரே சட்ட்த்திற்குப் புறம்பாக திருமணம் செய்வது தவறு; அதனால் தவறு செய்த அவர்களைப் பள்ளியில் சேர்த்தால் மற்றவர்களையும் (அதே போல்) தவறு செய்யத் தூண்டும் என்பதால் அந்தப் பள்ளி முதல்வரின் இச்செய்கையைச் சரியானதாக நினைக்கத் தூண்டும். போதாக் குறைக்கு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும், குழந்தைத் திருமணம் செய்த் பெண்களுக்கு பள்ளிகள் தடை விதித்தால் அது அதைச் செய்ய விழையும் பெற்றோரை யோசிக்க வைக்கும் என்று ஆதரவு தெரிவித்துள்ளன. 

ஆனால், உண்மையில் நிலைமை இவ்வாறு இல்லை…. 

குழந்தைத் திருமணம் செய்யும் பெற்றோர் பெரும்பாலும் அவர்களின் படிப்பைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை என்பது தான் உண்மை. கூறப்போனால் அவர்களுக்குக் குழந்தையைப் பற்றியதை விட தங்களின் சுமையை (அவர்களைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் சுமைதான்) அல்லது கடமையைச் செய்ய வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்கிறது. குழந்தைகள் மிகச் சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க நேரிடுகிறதே என்பதைக் கூட எண்ணாதவர்கள் அவர்களின் எதிர்காலத்தையோ அதிலும் அவர்களின் கல்வியைப் பற்றி அதிகம் கவலைப் படுவார்கள் என்று சொல்வதற்கில்லை. 

சில சமயங்களில் மேற்கூறிய சிறுமிகளின் பெற்றோர் போல ஒரு சிலர் திருமணம் ஆன பின்பும் அவர்களின் எதிர்காலத்தை பற்றியச் சிந்தனையுடன் குறைந்த பட்சம் அவர்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முயலும் போது அதையும் முளையிலேயே கிள்ளிவிட்டால் என்ன சொல்வது? 

மேலும், குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு எதிரானது; அதனால் அச்சிறுமியர் குற்றமிழைத்தவர்; எனவே, அவர்களைச் சேர்க்கக் கூடாது என்ற வாதத்திலும் வலுவில்லை. ஏனென்றால், அவர்கள் குழந்தைகள் அவர்களின் விருப்பமோ விருப்பமின்மையோ அவர்களின் பெற்றோரிடம் எடுபடப் போவதில்லை. இத்திருமணங்கள் பெரும்பாலும் அவர்கள் மேல் திணிக்கப்பட்டுத்தான் இருக்கும். இந்நிலையில் குற்றவாளிகள் என்று கூற வேண்டுமானால் அது அவர்களின் பெற்றோரைத் தான் கூற வேண்டியிருக்கும். இக்குழந்தைகளோ பாதிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களுக்குக் கல்வியும் மறுக்கப்படுவது நியாயமில்லை. 

திருமணம் ஆன குழந்தைகளுடன் சேர்ந்துப் படிப்பதால் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படும் என்ற வாதத்திலும் சாரம் இல்லை. ஏனென்றால், பெரும்பாலானத் திருமணங்கள் பெற்றோரால் தான் தீர்மானிக்கப் படுகின்றன. உடன் பயிலும் மாணவர்களின் குடும்பச் சூழல் பெரும்பாலும் யாரையும் பாதிப்பதில்லை என்பது தான் உண்மை. 

பெண்கள் அமைப்புகள் ஒன்றைச் சிந்திக்க மறந்துவிட்டன. பெரும்பாலும் இது போன்ற கல்விக் கூடங்களில் சேர்ப்பது மறுக்கப்படுவது பெண்களுக்கு மட்டுமே இருக்கும். காரணம், பெரும்பாலும் அவர்களின் திருமணச் சின்னங்கள் வெளியில் தெரிவது தான். ஆண்களுக்கு இது போன்ற சின்னங்கள் எதுவும் இல்லாத்தால் அவர்களுக்குத் திருமணம் நடந்திருந்தாலும் வெளியில் தெரியாமல் அவர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவதுதான் நடக்கும். 

நல்ல வேளையாக மாநில முக்கிய கல்வி அதிகாரி திரு. நாகராஜ முருகன் அவர்களின் தலையீட்டால், சென்ற வாரம் அந்தப் பள்ளி முதல்வர் இரண்டு சிறுமியரையும் பள்ளியில் சேர்க்கச் சம்மதித்துள்ளார் என்பது தான் இதில் ஆறுதல் தரும் விஷயம். 

 

2 thoughts on “திருமணமும் பள்ளிச் சேர்க்கையும்

  1. பெண் கல்வியை வலியுறுத்திய பாரதியின் ஆத்மா அந்த முக்கிய கல்வி அதிகாரி திரு.நாகராஜ முருகன் அவர்களை விண்ணிலிருந்து நிச்சயம் வாழ்த்தும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க