செழியன்


குருவிகளும்
குயில்களும்-கிளிகளும்
ஏனைய  பறவைகளும்
எங்களிடம்  வந்து  இளைப்பாறி
கூடி-குலவி ….கூடு கட்டி
குடும்பம் நடத்தி மகிழ்கிறது .
காய்களும் -கனிகளும் கண்டு
களிக்கிறது….உண்டும் .
வாடகை  கேட்பதில்லை .
நாங்கள் மரங்கள் ……….மனிதர்கள் அல்ல .
தென்றல்
எங்களை உரசியோ-ஊடுருவியோ
உண்டாக்கும்  கிளுகிளுப்பில்
மயங்கி அசைகிறோம் .
எங்களின் அசைவில்
உங்களை  மறந்து  மகிழ்கிறீர்கள் .
கட்டணம்  கேட்பதில்லை .
நாங்கள்  மரங்கள் ……..மனிதர்கள் அல்ல.
பல  வருடங்களுக்கு  முன்னர்
தளிராக  இருந்த  என்னை
தண்ணீர் விட்டு  வளர்த்தீர்கள்
சில வருடங்களாக
தண்ணீர்  விடுவதில்லை ….மரமாக  வளர்ந்து விட்டதால்
கண்ணீர்  விடுவதில்லை  அதற்காக.
நாங்கள்   மரங்கள் ……..மனிதர்கள்  அல்ல
காம்பவுண்டு  சுவர்
கடந்து என் கிளை  சென்றதால்
பறித்து விட்டார்கள் பழங்களை
எல்லை  நான்  தாண்டியதால்
தொல்லை  வந்தது  எனக்கு .
வெட்டிச்  சாய்த்து  விட்டார்கள் கிளையை .
தட்டிக்கேட்க  முடிய வில்லை .
நாங்கள்  மரங்கள் …….நீங்கள் மனிதர்கள் .
பருவத்தில்
காய்கள்  கொடுத்தேன் -கனிகள்  கொடுத்தேன்
நிழல்  கொடுத்தேன்
நல்ல  காற்றும்  கொடுத்தேன் ……நீங்கள்
சுவாசித்து  விட்ட  காற்றை
சுத்தப் படுத்தியும்  கொடுத்தேன் .
மகிழ்வித்து …..மகிழ்ந்தேன் .
ஊதியம்  கேட்க  வில்லை
நாங்கள்  மரங்கள் …….நீங்கள்  மனிதர்கள் .
இலையுதிர்  காலத்தில்
இலைகளை  உதிர்த்தேன் இயற்கையின்படி
குப்பையாய்  கொட்டுகிறது ……கூட்டமுடியவில்லை
வயதாகியும்  போய்விட்டது …போதுமென
வெட்டிவிடவும்   முடிவு செய்தீர்கள்
புகார் செய்ய  வில்லை போலீசில் .
நாங்கள்  மரங்கள் ….மனிதர்கள்  அல்ல .
முதுமை  அடைந்து விட்டால் ……….பெற்றோரையே
முதியோர்  இல்லத்தில்  விடுபவர்கள்தானே….
நீங்கள்  மனிதர்கள் .
உயிரோடு  இருந்தவரை
உபயோகமாகவே  இருந்தேன்  உங்களுக்கு .
வெட்டிப் போட்டாலும்
விறகாகி  விடுகிறேன் .
விறகாகி  எரியும் போது கூட
யாரும்  மூக்கை  பிடிப்பதில்லை .
நாங்கள்  மரங்கள் .
ஆனால் …..
உங்கள்  உடலை
எரிக்க
எங்களை  வைக்கிறார்கள்  விறகாக
உங்களோடு  எரியும்போது
மூக்கைப்  பிடித்துக்  கொள்கிறீகள் ….
நீங்கள் ………மனிதர்கள் .
உயிர்  நீர்  அளித்த  பூமிக்கு
உரமாக   எங்கள்  இலைகளை  உதிர்த்தோம் .
உறவாடினோம்  இருவரும் இணைந்து …..வேரால்
இன்று ….
வேரோடு  என்னை  வெட்டி சாய்த்து
வேறு —வேறு  ஆக்கிவிட்டீர்கள்  எங்களை .
நியாயம்  கேட்க முடியாது .
நாங்கள்  மரங்கள் .
நீங்கள்  மனிதர்கள் .

படத்துக்கு நன்றி

http://www.toonpool.com/cartoons/a%20big%20tree_124345
 

2 thoughts on “நாங்கள்

  1. பசுமைப் புரட்சிக்கு நாமாவளி இசைக்கின்றது தங்கள் கவிதை.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க