ராஜ விளையாட்டு – ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் – தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்

மதுமிதா

 

‘ஜீவிதம் ஒக நாடக ரங்கம்

லோகமே சதரங்கம்’ 

“வாழ்க்கை ஒரு நாடக அரங்கம்

பூலோகமே ஒரு சதுரங்கம்”  

எனும் பாடல் அளிக்கும் சிந்தை விரிவான விசாலமான உயரத்தைத் தொடுகிறது. 

சதுரங்க ஆட்டத்திற்கு மிக அருமையான ஒரு குணாம்சம் உண்டு. அது ஒருவருடைய மூளைச் சக்தியை வலுப்படுத்தி மூளையின் வேலைத் திறனை வளப்படுத்துகிறது. வேலை மிகுதியால் மூளை களைப்படைந்தாலும்  அதன் சக்தியும், திறனும், இயக்கவிசையும் உண்மையில் மேம்பாடடைகிறது.

சதுரங்க ஆட்டம் குறித்து கவிதை, கதை, நாவல், சினிமா என பல படைப்புகள் பல்வேறு காலங்களிலும் வெளி வந்துகொண்டே இருக்கின்றன.

எழுத்தாளர் முன்ஷி ப்ரேம்சந்த்  ’சதரஞ்ச் கே கிலாடி’  என்னும் கதையை ஹிந்தியில் எழுதினார். இயக்குநர் சத்யஜித் ரே 1977 ஆம் ஆண்டில் இதே பெயரில் சினிமாவாக எடுத்தார்.

’சதரஞ்ச் கே கிலாடி’ சிறுகதை சதுரங்கம் விளையாடுபவர்களைப் பற்றியது. மிர்ஸா சாஜித் அலி, மிர் ரௌசான் அலி இருவரும் தங்களுடைய கடமைகளைச் சரியாகச் செய்யாமல் தீவிரமாக சதுரங்கம் விளையாடுபவர்கள். அவர்களுடைய ஆட்டத்தின் மீதான மோகம் எல்லைமீறிச் சென்றுவிடுகிறது. ’அவாத்’ ஐ ஆட்சி புரியும் ’வாஜித் அலி ஷா’ வை பிரிட்டிஷார் பிடித்துச் செல்லும்போதும் அவர்கள் தங்களுடைய ராஜாவைக் காப்பாற்ற முனையவில்லை. தொடர்ந்து சதுரங்கப்பலகையில் ஆட்டத்தில் உள்ள தங்கள் ராஜாவைக் காக்க பெருமுயற்சி செய்துகொண்டிருப்பார்கள். கதையின் முடிவில் ஆட்டத்தில் ஒரு காயை நகர்த்தும்போது, வாக்குவாதம் முற்றி, சண்டை மூண்டு, வாட்களை வீசிக்கொண்டு, இருவருமே இறந்துபோவார்கள்.

சதுரங்கப்பயிற்சி ஒரு மனிதனின் தனிமையைப் போக்கி, செயல்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கையில் உந்துதல் அளிப்பதையும், ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க் தனது  ‘Royal Game’  என்னும் ஜெர்மானிய குறுநாவலில் கச்சிதமாகக் குறிப்பிடுகிறார். ’ராஜ விளையாட்டு’ என்னும் தலைப்பில் லதா ராமகிருஷ்ணன் அதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். புதுப்புனல் வெளியீடாக ’ராஜ விளையாட்டு’ 2012 இல் வெளிவந்துள்ளது.

’ராஜ விளையாட்டு’ குறுநாவல், செஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற செஸ் சேம்பியனான கதாபாத்திரம் ஜ்ஸெண்ட்டோவிக் -க்கும், டாக்டர்  B  என்னும்  இன்னொருவருக்கும் இடையே நடக்கும் செஸ் போட்டியின் வழியாக பல செய்திகளைச் சொல்லிச் செல்கிறது.

நியூயார்க்கிலிருந்து அயர்ஸுக்கு நள்ளிரவில் புறப்படவிருக்கும் கப்பலில் ஆரம்பிக்கிறது கதை. கதைசொல்லியின் பார்வையில் முழுக்கதையும் சொல்லப்படுகிறது. கதைசொல்லியின் நண்பர் அந்தக் கப்பலில் பயணிக்க இருக்கும் உலக சாம்பியன் ஜ்ஸெண்ட்டோவிக் குறித்து சொல்கிறார். அமெரிக்கா முழுமையும், கிழக்கு கடற்கரை முதல் மேற்கு பகுதிவரை அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்ற அவர், புதிய வெற்றிக்காக அர்ஜெண்டீனாவுக்கு பயணம் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் இவருக்கு ஆர்வம் மேலோங்குகிறது. முதலிலேயே இந்த செஸ் சேம்பியனை அறிந்திருந்தார். அந்த செஸ் சேம்பியனின் இதர துறைகளில் உள்ள அறியாமை அனைவருக்கும் தெரிந்ததாய் இருக்கிறது. இந்தக் குறைபாட்டை அந்தச் சேம்பியனும் அறிந்திருக்கிறான்.

மிகவும் ஏழையான தெற்கு யூகோஸ்லேவிய மனிதனின் மகனாகப் பிறந்த ஜ்ஸெண்ட்டோவிக் தனது தந்தையின் மரணத்துக்குப்பிறகு பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த அவனை மதகுரு தன் பாதுகாப்பில் வைத்து படிக்க வைக்க பெரும்பாடுபட்டார். எதுவுமே அவனுக்கு பிடிபடவில்லை. தரப்பட்ட வேலையை எந்த வேலையாக இருந்தாலும், தண்ணீர் கொண்டுவருவது, விறகு வெட்டுவது, வயலில் வேலை செய்தல், சமையலில் வேலை செய்தல் என அனைத்து வேலைகளையும் செய்தான். ஆனால், எந்த ஒரு படிப்பும் ஏறவில்லை. தானாக எதையும் தேடுவதில்லை. தானாக எதையும் கற்பதில்லை. வெற்றுப்பார்வையுடன் அமர்ந்திருப்பான்.

மதகுருவும், காவல் அதிகாரி ஒருவரும் செஸ் விளையாடும்போது வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருப்பான். இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும்போது மதகுரு அவசரமாக ஒரு நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது இவன் செஸ் பலகையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக காவல் அதிகாரி செஸ் விளையாட அவனுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து விளையாடுகிறாயா என்ற போது அவன் சம்மதித்து காய் நகர்த்துகிறான். விளையாட்டில் இவனின் திறமையைக் கண்ட அதிகாரி மதகுருவிடம் தெரிவிக்க அவன் அவரிடமும் விளையாடி வெற்றி பெறுகிறான். மதகுரு மகிழ்ந்து அவனை முடிதிருத்தி, நல்லுடை அணியச் செய்து நகரின் இன்னொரு விளையாடுமிடத்துக்கு அழைத்துச் செல்ல அங்கே வெல்கிறான். தொடர்ந்த எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று கடைசியில் உலக சாம்பியன் ஆகிறான். எனினும் வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது என்பதைப் பலரும் அறிந்திருந்தனர்.

கப்பலில் இவன் பயணம் செய்கிறான் என்றதும் கதைசொல்லிக்கு அவனிடம் பேசுவதில் ஆர்வம். ஆனால், தன்னுடைய அறியாமை குறித்து அறிந்து வைத்திருக்கும் செஸ் சேம்பியன் விளையாடுவதும், விளையாட்டில் கிடைக்கும் பணமும் இவற்றில் மட்டுமே கவனமாக இருப்பவன் ஆதலால் பேசவே இல்லை.

சகபயணி மாக் கானர் செஸ் விளையாட விரும்புகிறான். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில், செஸ் சேம்பியனுக்கு குறைந்த பட்சமாய் 250 டாலர்கள் கொடுத்து விளையாட சம்மதிக்க வைக்கிறான்.

இப்போது ஒரு பக்கம் உலக செஸ் சேம்பியன். இன்னொரு பக்கம் கப்பலின் உறுப்பினர்கள் பலரும் இருந்து ஆட நிச்சயிக்கப்பட்டது. செஸ் சேம்பியன் சில அடி தூரத்தில் இருப்பான். இந்தப் பக்கம் இவர்கள் கலந்தாலோசித்து காய் நகர்த்திய பின் வந்து தனது காயை நகர்த்திவிட்டு சென்று விடுவான். அனைவரும் கலந்து பேசி காய் நகர்த்தினாலும் வெற்றி செஸ் சேம்பியன் பக்கமே இருந்தது.

அப்படி இருக்க ஒரு காய் நகர்த்தலின் போது , ‘கடவுளே வேண்டாம். காய் நகர்த்தாதீர்கள்’ என ஒரு குரல் கேட்கிறது. அனைவரும் அங்கே ஆர்வமாய் பார்க்க நாற்பது நாற்பத்தைந்து வயதுடைய ஒரு மனிதன்,’ இப்போது ராணியை நகர்த்தினால் உடனே எதிராளி பிஷப்பை QB 8க்கு நகர்த்தி ராணியை வெட்டிவிடுவார். அவருடைய அந்தக் காயை நீங்கள் நைட்டைக் கொண்டு வீழ்த்திவிடலாம். ஆனால், அவர் படைவீரரை 7க்கு நகர்த்தி உங்களுடைய யானையை அச்சுறுத்துவார். உங்களுடைய ‘நைட்’ டைக்கொண்டு நீங்கள் அவருடைய ராஜாவுக்கு ‘செக்’ வைத்தாலும் கூட நீங்கள் பத்தில் ஒன்பது காய்நகர்த்தல்களில் தோல்வியைத் தழுவப்போவது உறுதியாகி விடும்’ என்று சொன்னவுடன் மாக் கானர் அவர் சொன்னபடி காயை நகர்த்த ஆரம்பித்தான். டிராவாக முடியும் என்று அவர் சொல்ல அவர் சொல்லியபடியே காயை நகர்த்த விளையாட்டு டிரா வாகிறது. மறுநாளும் விளையாடுவது என முடிவாகிறது. செஸ் சேம்பியனுக்கு புதியவனால் தான் எதிர் அணியினர் வெற்றிபெற்றனர் என்று மறுநாளும் விளையாட சம்மதம் தெரிவிக்கிறான்.

டாக்டர் B யிடம், கதைசொல்லி வியன்னா குறித்து பேசும்போது  அவரும் இயல்பாய் பேச ஆரம்பிக்கிறார். விளையாட சம்மதம் வேண்டியதும் ‘என்னை முழுமையாக நம்ப வேண்டாம், நான் விளையாடி 25 வருடங்களுக்கு மேலாகின்றன. வேண்டுமானால் ஒருமுறை விளையாடுகிறேன்’ என்கிறார். பேச்சு இயல்பாய் தொடரும்போது, டாக்டர் B தன்னைப்பற்றி குறிப்பிடுகிறார்.

நாங்கள் பெரிய அரச குலத்தவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதை மட்டுமே செய்து வந்தோம். குறிப்பாக, அவர்களுடைய எஸ்டேட்டுகளை நிர்வகித்துவந்தோம். ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலருடைய நிதிநிலவரங்களை, கணக்கு வழக்குகளை நிர்வகித்துவரும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அரசவை மற்றும் திருச்சபையுடனான எங்கள் தொடர்பு இரண்டு தலைமுறைகளாகத் தொடர்ந்து வருவது.

‘ஹிட்லர் ஜெர்மன் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது, திருச்சபையின் சொத்துடமைகளின் மீதும், அரச குடும்பங்களின் சொத்துடமைகளின் மீதும் அதிரடி சோதனைகள் நடத்த ஆரம்பித்தனர். அரசகுலத்தினரின் அசையும் சொத்துக்களையாவது, ஹிட்லரின் ஆட்சி பறிமுதல் செய்துவிடாமல் பாதுகாப்பதற்கான பேச்சு வார்த்தைகளும், பரிவர்த்தனைகளும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து எங்களின் வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. எனக்கும் எனது தந்தைக்கும் அரச குடும்பம் தொடர்பான சில குறிப்பிட்ட ரகசியமான அரசியல் விஷயங்கள் தெரிந்திருந்தது.’ என்கிறார்.

ஹிட்லர் வியன்னாவை தன் கையிலெடுப்பதற்கு ஒருநாள் முன்பாக டாக்டர் B கைது செய்யப்படுகிறார். அவர்களுக்குத் தேவை நிரூபணங்கள். இவரை வதைமுகாமில் அடைக்கவில்லை என்பதைத் தவிர்த்து, ஒரு தனி அறையில் அடைக்கின்றனர். ஒரு கதவு, ஒரு ஜன்னல், ஒரு படுக்கை, ஒரு மேஜை, ஒரு கைகழுவும் தொட்டி. இது தவிர வேறு எதுவும் கிடையாது அந்த அறையில். மனதை தனிமைப்படுத்தி சித்திரவதை செய்து உண்மையை வெளிக்கொணரும் உத்தியைச் செய்தனர். மனரீதியாக சித்திரவதைக்கு ஆளாகும் மனிதனின் தப்பிக்கும் வேட்கை, வாழ அவன் எடுத்துக்கொள்ளும் உத்தி சிறப்பாக இந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

டாக்டர் B யின் கவனிக்கும் திறன் அதீதமாக அதிகரிக்கிறது. வாழவேண்டுமெனும் வேட்கையில் அவர் அனைத்தையும் புலன்களின் வழி நிலை நிறுத்தி மனனம் செய்துகொள்கிறார். அப்போது இந்த அறையிலிருந்து விசாரணைக்காக காத்திருக்கும் அறையில் தொங்கவைக்கப்பட்டிருந்த காவலர் ஒருவரின் மேலங்கியின் சட்டைப்பையில் சற்றே தூக்கலாய் புடைத்து இருப்பதைப் பார்த்து அது ஒரு புத்தகமாக இருக்க வேண்டுமெனும் முடிவுக்கு வருகிறார். அதை பிறர் அறியாமல் அந்தப் புத்தகத்தைத் தன் உடையில் மாற்றிக்கொண்டு விசாரணையில் பதில் அளித்து அறைக்கு வந்தவுடன் அவர் அடையும் ஆசுவாசம் வார்த்தைகளுக்கடங்காதது.

புத்தகத்தைப் பிரித்துப்பார்க்கையில் அது சதுரங்க கையேடு 150 சேம்பியன்ஷிப் செஸ் விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் புத்தகம் என்பது தெரிகிறது. பெரிதும் ஏமாற்றம் அடைந்தாலும், அதை மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கிறார். படுக்கை விரிப்பை சீராக மடித்து 64 கட்டங்களை வைத்துக்கொண்டு, மேலும் ரொட்டித்துணுக்குகளை காய்களாக்கி அதன் மேல் வைத்து ஆட்டமாட ஆரம்பிக்கிறார். அந்த பயிற்சியே இப்போது விளையாட துணை நின்றது.

அவருக்கு தான் ஒரு உலக செஸ் சேம்பியனுடன் விளையாடினோம் என்பதே வியப்புக்குரியதாய் இருந்தது. கடைசியில் இருவரும் விளையாடும் காட்சியும் இவரின் பரபரப்பில் இவர் தன்னை இழப்பது, பிற துறைகளில் திறமையே இல்லாத உலக செஸ் சேம்பியன் இவரை நிதானமாக விளையாடி வெல்வதும் முடிவாகிறது.

ஜ்ஸெண்ட்டோவிக் , டாக்டர் B இருவருக்கும் இடையே நடைபெறும் செஸ் விளையாட்டினை நேரில் காண்பது போன்ற மனோபாவத்துடன், கொந்தளிக்கும் உணர்வுப்பிரவாகம், செஸ் விளையாடும் அதே உணர்வின் வெளிப்பாட்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இடையில் வியன்னா, ஹிட்லரின் ஆட்சி வரும்போது வரை முகாம், மற்றும் உண்மையை வெளிக்கொணர நிகழும் விசாரணை நிகழ்ந்த சில காட்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

Royal Game ராஜ விளையாட்டு ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க் – கின் வாழ்க்கையின் கடைசி நான்கு மாதங்களில் எழுதப்பட்டது. இவரின்  குறுநாவல்கள் சுயசரிதத்தன்மை கொண்டவை என்ற் பரவலான அனுமானம் அவருக்கு எரிச்சலூட்டும். ஆனால், அவரின் எழுத்துகளில் அவை தென்படுவதைக் காணவியலும். நாஜிகளின் நான்கு ‘கெஸ்டபோவைக் கடந்து, காயப்பட்டாலும், தொடர்ந்து வாழும் துணிச்சலைத் தேடிப்பெறும் பாத்திரம், ஓடிவிடவோ, விரக்தியில் அமிழ்ந்துவிடவோ செய்யாத மனிதன், தன்னுடைய எழுத்தில் தன் குற்றவுணர்வையும் சோகத்தையும் நீக்கிக்கொள்ளும் எழுத்தாளர்களுக்கேயுரிய முயற்சியாகத்தான் தெரிகிறது.

கற்பனை செஸ் விளையாட்டில் கதாநாயகன் கண்டடையும் பாதுகாப்பும், சரணாலயமும், எப்பொழுதெல்லாம் குடும்ப அல்லது அரசியல் நிலவரங்கள் தன்னை மிக அச்சுறுத்துகின்றனவோ நெருக்குகின்றனவோ, அப்போதெல்லாம் கற்பனையில் (அல்லது இலக்கிய படைப்பில்) நிவாரணம் தேடிக்கொள்ளும் ஜ்ஸ்வேக்கின் மனப்போக்கை பிரதிபலிக்கிறது எனலாம்.

“இரவு பகல் என்ற சதுரங்க மேடையில் 

வலுவிழந்த மனிதர்களை

காய்களாக வைத்து 

ஆடுகின்றான் அவன்

இங்கும் அங்கும் இழுக்கின்றான்

ஒவ்வொன்றாய் வெட்டித் தள்ளி

திரும்பப் பெட்டியில் போடுகின்றான்”

என்று உமர்கய்யாம் கூறுவதும் இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “ராஜ விளையாட்டு – ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் – தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்

 1. நல்ல தகவற்களஞ்சியம். ஸ்டீஃபன், இந்த நூலை எழுதி முடித்து, தன்னுடைய அமெரிக்க பதிப்பாளருக்கு அனுப்பிவிட்டு ஒரு சில நாட்களில்  தற்கொலை செய்து கொண்டார் என்பது எத்துனை வருடங்கள் கடந்தாலும் வருத்தம் தரும் செய்தி அல்லவா? மேலும் இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் ன் நண்பர் என்பது கூடுதல் தகவல்.

 2. என்ன கொடுமை!!! “Stefan Zweig” என்னும் ஆத்திரிய ஆசிரியரின் பெயரைப் படிக்கவே முடியாதவாறு: “ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் ” !! அது எப்படீங்க
  ஜ்ஸ்வேய்க் என்பதைப் படிப்பீங்க!!!??? இவருடைய முதல் பெயர் ஸ்ட்டெஃபான் ஸ்டீபன் அன்று! தமிழில் ஒலிக்கும் படியாக இசுட்டெஃபான் அல்லது இசுட்டெபான் என்று எழுதாவிட்டாலும் போகட்டும், ஸ்டெபான் என்றாவது எழுதி இருக்க வேண்டாமா? அதைவிடக் கொடுமை, அவருடைய “கடைசி”ப் பெயரைத் துப்புரவாகப் படிக்கவே முடியவில்லை.!! உரோமன் எழுத்தில் உள்ளதைப் பார்த்த பின்னால்தான் தெரிந்தது, அடடா இது Zweig ஆச்சே என்று. இவருடையப் பெயரை, தமிழின் விதிகளை தாறுமாறாக மீறி எழுதினாலும் கூட, அது ட்ஸ்வைக் என்று இருக்கவேண்டும். தமிழில் இப்படியான மெய்யொலிக்கூட்டங்கள் (குறிப்பாக ஜ்ஸ்வேய்க் அல்லது ட்ஸ்வைக் ) வரும்படி எழுதுவது அறவே முறையல்ல!! இட்சுவைகு என்று கூட எழுதலாம். தமிழில் ஒலிக்கும்படியாக இருக்க வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்!! ஏன் இப்படி ஒரு தமிழை மதியாமைத்தனம்.? இப்படி ஒன்று வல்லமையில் வெளியானதைக் கண்டு வருந்துகின்றேன்!!! ஆசிரியர் குழுவுக்கு என் வருத்ததைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 3. Zweig என்னும் பெயரை இத்துசுவைகு என்று தமிழில் இயல்பாக ஒலிக்கும்படி எழுதலாம். இத்துசுவைகு ஒரு முறை என்ன சொன்னாராம் என்றால்,
  ஒவ்வொரு அலையும் எவ்வளவுதான் உயர்ந்தாலும், விசையுடனே எழுந்தாலும் கடைசியாக தன்னிலை குலைந்து விழும்
  (“Every wave, regardless of how high and forceful it crests, must eventually collapse within itself”)
  இத்துசுவைகுக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது, இத்துசுவைகு நாட்ஃசி செருமனியை எதிர்த்தார் அது இது என்றெல்லாம் கூறும்பொழுது படிப்பதற்கு எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும். இத்துசுவைகு என்றால் தவறல்ல. மணி, கண்ணன் என்னும் பெயர்களை ஆங்கிலேயர்கள் மேனி, கேனன் என்றெல்லாம் கூறவில்லையா, அவையே அவர்களின் மொழியினூடே பயன்படுத்தும் பொழுது இயல்பாக இருப்பவை. தமிழர்களில் சிலர் மட்டுமே இப்படி முற்றிலும் பொருந்தாத மூச்சுத்திணரும், நாக்குழறும் ஜ்ஸ்வைக் எல்லாம் எழுதுகின்றார்கள். எளிமையான நல்ல தமிழைப் போற்ற வேண்டுகின்றேன்.
  வெறுமனே குறை சொல்லாமல் வளர்முகமான மாற்று முறை பரிந்துரைத்தல் நலம் என்று மீண்டும் இடுகின்றேன். நன்றி.

 4. ”Zweig என்னும் பெயரை இத்துசுவைகு என்று தமிழில் இயல்பாக…”

  இது ‘இயல்பாக’ என்பதெல்லாம் புருடா. Zweig என்பது ஜெர்மனில் ட்ஸ்வைக் என உச்சரிக்கப்படுகிறது. தமிழில் ‘இயல்பாக’ என எழுதிவிட்டு அதை ஆங்கிலத்தில் விளக்குவது , அது தமிழ் இயல்பு இல்லை என காட்டுகிறது.

  செ..இரா.செ. தமிழில் எப்படி ஒலிப்பது என மற்றவர்களுக்கு உபதேசம் கொடுப்பதுதான் கொடுமை

  விஜயராகவன்

 5. ஜெர்மனில் Z என்பது ட்ஸ் என உச்சரிக்கபப்டுகிறது. ஆங்கில Z க்கு தமிழில் நேராக எழுத்தாக்கம் செய்யமுடியாது. ஸ் என்பதுதான் அருகில் இருப்பது. அதனால் நாம் ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் என்பதை ஸ்டீபன் ஸ்வேய்க் என எழுதினால் சரிதான். விஜயராகவன்

 6. வ.கொ.வி கூறுவது வேடிக்கையாக உள்ளது 🙂 Zweig என்பது தமிழ்ச்சொலா? 🙂

  தமிழில் இத்துசுவைகு என்று கூறினால் அது தமிழில் இயல்பாய் ஒலிக்ககூடியது. (ஒலிக்கக்கூடிய வடிவு)
  தமிழில் மெய்யெழுத்தில் ஒரு சொல்லை, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் தொடங்கக்கூடாது, வெறும் “க்” ஐச் சொல்லிப்பாருங்கள் இக்கு என்றுதான் சொல்லமுடியும் ( அல்லது இக்+உயிரொலி).
  வல்லின ஒற்றுகள் கடைசி எழுத்தாக வரலாகாது என்னும் அடிப்படை விதிகளை உணராமல் பேசுவதாகும். கேக், தாக், பாப் என்று சொல்லிப்பாருங்கள் கடைசி எழுத்தின் ஒலி வெளியே வரவே வராது!! க் ச்,ட்,த்,ப், ற் ஆகிய எழுத்துகளில் முடிந்தால் அதற்கு அடுத்ததாக ஓரு சிறு உயிரொலியாவது வந்தால்தான் அந்த மெய்யெழுத்தின் ஒலி வெளிப்படும், நிறைவு பெறும். தமிழில் குற்றியலுகரம் என்பது அழகார்ந்த அறிவியல் மொழியியல் நுணுக்கம். கேக்கு என்றால் அது கேக்குஉ என்று நீட்டுவதற்காக அன்று. “க்” என்று முடிப்பதற்குத் துணை செய்யும் குறுகியதாகிய ஓர் உகர ஒலி அவ்வளவுதான் (ஆங்கிலத்திலும் மொழியியலிலும் இந்தக் குறுகிய உயிரொலியை shva என்கிறார்கள் . இதனை ə என்று குறிக்கின்றார்கள். (ஆங்கில e ஐ தலைகீழ எழுதிக் காட்டுகிறார்கள்). எனவே ஸ்வேய்க் என்று” க்”-கில் முடியவே இயலாது. மேலும் இடாய்ச்சு மொழியில் (செருமன் மொழியில்) -ei- என்று வந்தால் ஐ என்றும் -ie- என்று வந்தால் ஈ என்றும் ஒலிக்கும். எனவே -வைக்கு என்றுதான் முடியவேண்டும். இடாய்ச்சு மொழியில் z என்பது ts என்று ஒலிக்கும். , அந்த டகரமும் தமிழ் டகரமும் முற்றிலும் வேறு வேறானவை . ஆங்கில-இடாய்ச்சு மொழியில் வழங்கும் t என்பது தமிழ் தகரத்திற்கு ஒரு சிறிது நெருக்கமானது. எனவேதான் இத்துசுவைக்கு (டகரம் விரும்பினால் இட்டுசுவைக்கு) என்று சொல்லவேண்டியிருக்கலாம் – இதனை இத்துசுவைகு என்று கூறுவதற்குப் வேறு பல காரணங்கள் உள்ளன.

 7. முனைவர் செல்வா அவர்களின் விரிவான விளக்கம் நன்று. தமிழ் இலக்கண விதிகளின்படி, நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆயினும் இன்று பிற மொழிச் சொற்களை, கூடிய வரை அதே ஒலியுடன் எழுத முயலும் நடைமுறை, வெகுவாக உள்ளது. தமிழுக்கு ஏற்ற ஒலிவடிவங்களைப் பின்பற்றும் வழக்கம் அருகி வருகிறது.  

  பாடப் புத்தகங்களிலும் இதே நிலைதான். நைட்ரிக் / சிட்ரிக் / ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஆர்ட்டிக் / அண்டார்டிக் கடல்… என்றுதான் ஆசிரியர்களே எழுதுகின்றனர். அரசு ஆவணங்களிலும் கோப்புகளிலும் இவ்வாறே எழுதுகின்றனர். ஊடகங்களும் இதையே பின்பற்றுகின்றன. 

  மேலும், பெயர்ச் சொற்களை மூல ஒலியின்படி எழுதாமல், தமிழுக்கு ஏற்ப மாற்றி எழுதுவதன் மூலம் வாசிப்போர் புரிந்துகொள்வதிலும் மீண்டும் பிறரிடம் எடுத்துரைப்பதிலும் குழப்பங்கள் விளையக்கூடும். ஷேக்ஸ்பிரியர் என்பதைச் செகப்பிரியர் என எழுதினால், இருவரும் வெவ்வேறு நபர்கள் என எண்ணிவிடக் கூடும். மேலும், சட்டப்பூர்வமான ஆவணங்களில் உரிமைச் சிக்கல் ஏற்படவும் கூடும். 

  இலக்குவன், விபீடணன், அனுமன்… என்றெல்லாம் கம்பர் எழுதியது, பல நூற்றாண்டுகள் முன்பு. மேலும் அவை இலக்கிய வழக்கில் மட்டுமே. இன்று ஊடகங்களில் நாம் மக்களின் பழகு தமிழை எழுதி வருகிறோம். 

  தமிழ் ஒலிக்கு ஏற்பத் திருத்தத் தொடங்கினால், எழுத்தில் மட்டுமின்றி, உச்சரிப்பிலும் திருத்த வேண்டியிருக்கும். இன்றைய உலகமயச் சுழலில், உலகம் முழுவதும் உள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களைத் தமிழ் ஒலியமைதியுடன் பேசவும் எழுதவும் தூண்ட இயலுமா? அவர்கள் அனைவரின் புரிதல் நிலையை ஒரே நேரத்தில் மேம்படுத்திவிட இயலுமா? மொழியின் முதன்மைப் பயன், தகவல் பரிமாற்றம் எனில், அதற்கு ஊறு இல்லாமல் இந்தப் பெருஞ்செயலை நிறைவேற்ற இயலுமா? 

  இவை அனைத்துக்கும் உங்கள் பதில் ஆமெனில், இந்த முயற்சியைக் கல்வித் துறையிலிருந்து தான் முதலில் தொடங்க வேண்டும். அங்கே கற்பிப்பது / கடைப்பிடிப்பது ஒன்றாகவும் வெளியே தாங்களும் அறிஞர்கள் சிலரும் வலியுறுத்தும் நெறி வேறாகவும் இருக்கக் கூடாது. திருத்தங்களை வேரிலிருந்தே தொடங்க வேண்டும்; கிளைகளிலிருந்து அல்ல. 

  ஆயினும். இங்கே இன்னொன்றையும் சொல்ல விழைகிறேன். வல்லமையில் கருத்துச் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஒருவர் தமது கருத்தைத் தாம் விரும்பும் மொழியில், நடையில் எடுத்து வைக்கலாம். அது, கூடுமான வரை தமிழில் இருக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோளே.

  தங்களின் உழைப்பையும் நேரத்தையும் அடுத்தவரின் படைப்பைத் திருத்துவதில் செலவிடுவதை விட, தங்கள் சொந்தப் படைப்புகளை இயற்றுவதில் செலவிடலாமே. அவற்றின் வாயிலாக, விரும்புவோர் தங்கள் நடையைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். தங்கள் செந்தமிழ் ஆக்கங்களை வெளியிட, வல்லமை காத்திருக்கிறது.

 8. அன்னா கரீனா, அன்னா கரீனெனா. அன்னா கரீனைனா என அவரின் பெயரை பலவிதமாக உச்சரிப்பார்கள். உச்சரிக்கிறார்கள்.  எப்படி உச்சரித்தாலும் அவரின் பாத்திரம் அந்த நாவலில் சிறப்பாக இருக்கும். மாற்றி உச்சரித்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் எது சரியான உச்சரிப்பு எனத் தெரியாமல் இருக்கும்போது படைப்பாளியின் படைப்புக்கு முக்கியம் கொடுக்க நேர்கிறது.

  ஆஸ்திரேலியா என பல்லாண்டுகளாக எழுதுகிறோம். உச்சரிக்கிறோம். அந்த உச்சரிப்பு தவறு என்று துளசி தளம் துள்சி கோபால் குறிப்பிடுவார். 

  சரி செய்யப்பார்க்கலாமே தவிர குறைகூறிக்கொண்டே இருப்பதில் பயனில்லை,. நன்றி அண்ணாகண்ணன்

 9. அகமொழிகள் முதலான நல்ல படைப்புகளை த் தரும் அண்ணா கண்ணன் அவர்களே! நீங்கள் தடம் புரள்வது ஏன்? பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள் கூறுவது முற்றிலும் சரிதானே. வே ண்டுமென்றே தமிழைக் குறை சொல்பவர்களிடம் அப்பணியை விட்டுவிட்டுத் தமிழுக்கு ஆக்கமான படைப்புகளைத் தாருங்கள் எனச் சொல்ல வேண்டிய நீங்கள் பேராசிரியரின் களை எடுக்கும பணியைக் குறை கூறுவது முறைதானா? களை மண்டும் பொழுது உரமிடுவதாலோ மேலும பயிரிடுவதாலோ பயன் உண்டா? நீரினும் நன்றதன் காப்பு என்பதுபோல் காப்புப்பணியை ப் புரியும் பேராசிரியருக்குப் பாராட்டுகள். குறிப்பிட்ட சொல்லை ச் சப்பானியத்தில் இசுபெய்கு என்றும் உருசியனில் சுபெய்கு என்றும் சொல்கின்றனர். இரண்டில் ஒன்றைத் தமிழில் பின்பற்றுவது தமிழ் மரபிற்கு ஏற்றதே! மொழிக்கொலை புரிவோரே அருள்கூர்ந்து நன்னெறிக்கண் வாருங்கள்! தமிழ் நெறி போற்றுங்கள்.!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 10. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே, திருத்தங்களை வேரிலிருந்தே தொடங்க வேண்டும்; கிளைகளிலிருந்து அல்ல என்ற என் கூற்றினைக் கவனத்தில் கொள்ளுங்கள். கல்வி நிலையங்களில் கற்பிப்பது / கடைப்பிடிப்பது ஒன்றாகவும் வெளியே தாங்களும் அறிஞர்கள் சிலரும் வலியுறுத்தும் நெறி வேறாகவும் இருக்கக் கூடாது. எனவே இத்தகைய திருத்தங்களைக் கல்வி நிலையங்களிலிருந்து தொடங்குவது நலம் பயக்கும் என்பதே என் கருத்து.

  செல்வா அவர்கள், இவ்வாறு தவறு கண்ட இடங்களில் திருத்தத் தொடங்கினால், அதற்கு எல்லை ஏதும் இல்லை. உண்மையில் இணையம் முழுதும் உள்ள தமிழ் ஆக்கங்களில் தவறுகளின் எண்ணிக்கை, அளவில்லாதது. அவற்றைத் திருத்தப் புகுந்தால், செல்வாவின் 24 மணி நேரமும் போதாது. அவரைப் போன்று பற்பலரும் முயன்றாலும் கூட, இந்தப் பணி முடிவுறாது. நொடிதோறும் புதிய புதிய ஆக்கங்கள் வெளிவரும் இணையத்தில், பெருவெள்ளத்தினை கைமணல் இட்டுத் தடுப்பது போன்று ஆகும். அவருடைய நேரம் எந்த வகையிலும் வீணாகக் கூடாது என்ற அக்கறையினாலேயே இதனை உரைத்தேன்.

  செல்வா, தமது நேரத்தைச் சொந்தப் படைப்புகளில் செலவிட்டால், அவற்றைத் தொகுப்பதும் பராமரிப்பதும் எளிதாகும். அத்தகைய படைப்புகளைப் பார்த்துத் தங்கள் நடையைத் திருத்த விரும்புவோர் திருத்தட்டும் என்றே கூறியிருக்கிறேன். 

  சமூகம் தழுவிய அளவில் பெரிய மாற்றங்களை விரும்புவோர், கூர்மையாகத் திட்டமிட்டே தங்கள் ஆற்றலைச் செலவிட வேண்டும். உலகு தழுவிய தமிழ் – தமிழர் நலம் நாடும் வல்லமை, தமிழறிஞர்களின் முயற்சிகளுக்கு என்றும் துணை நிற்கும்.

 11. அண்ணா கண்ணன், நீங்கள் முன்பு மறுமொழி இட்ட பின் நான் மேற்கொண்டு இது பற்றி இந்த இழையில் எதுவும் எழுத வேண்டாம் என்றே இருந்தேன்.

  //திருத்தங்களை வேரிலிருந்தே தொடங்க வேண்டும்; கிளைகளிலிருந்து அல்ல என்ற என் கூற்றினைக் கவனத்தில் கொள்ளுங்கள்.//

  என்று கூறும் உங்கள் கூற்று சரியானதே,, ஆனாலும் நீங்களும் ஒன்றையும் எண்ணிப்பார்க்க வேன்டுகின்றேன். வேரும் மண்ணும் சரியானதாகவே இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள் , ஒளியும் காற்றும் இல்லாமல் இல்லாமல் இருந்தால் 2000 ஆண்டுகளுக்கும் மேலும் வாழும், 300 அடி வளரும் சீக்கோயா (sequoia) (ஒரு வகைச் சே மரம், செம்மரம்) மரமும்கூட வளராது! செத்தொழியும்! கிளைகளில் இருந்து விதைகளும் முளைக்கும் அவை வேரும் விடும்.. வேரின் முகன்மையைக் குறை சொல்லவில்லை. எல்லாமும் தேவைதான். நல்ல விதைகளும் நிறைய உள்ளன!!

  நான் இணையத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றேன். இணையத்தைப் பற்றி நன்கு அறிவேன்.
  //பெருவெள்ளத்தினை கைமணல் இட்டுத் தடுப்பது போன்று ஆகும். //
  என்னும் உங்கள் கூற்றை ஒரு கோணத்தில் மறுக்கின்றேன். நான் தவறு கண்ட இடங்களில் எல்லாம் சென்று திருத்துபவன் அல்லன். நம்பிக்கை உடைய சில இடங்களில் கூறுதலைக் கடமையாகச் செய்கின்றேன் (வல்லமையில் நம்பிக்கை வைத்தது என் தவறாக இருக்கலாம் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம் !!).
  சிலர் திருந்தினாலும் அது பரவவும் கூடுமே!! கெடுதிகள் மட்டுமதான் பரவுமா?
  நல்லதும் பரவலாமே!

  தமிழ் இதழ்கள் சில நூறு இருக்கலாம், ஆயிரமும் இருக்கலாம். அவற்றில் தவறான கொள்கைகளை முன்னிறுத்துவோர் சில நூறு பேர் இருக்கலாம் வலைப்பதிவு செய்வோர் 10-15 ஆயிரம் இருக்கலாம். நூலாசிரியர்கள் அதே அளவில் இருக்கலாம். எத்தனையோ பேர் சரியாகவும்தான் எழுதுகின்றார்கள்.
  எல்லோரும் பொய் சொல்வதை நிறுத்தட்டும் நான் நிறுத்துகின்றேன். எல்லோரும் ஊழல் செய்வதை நிறுத்தட்டும் நான் நிறுத்துகின்றேன் என்று சொல்லலாமா? கண்முன் நடக்கும் கொலையை நிறுத்த முன்வராமல் கொலைகள் நடக்கும்தான் உலகில் கொலைகளே நடக்காதா என்ன? எல்லா கொலைகலையும் நீங்கள் நிறுத்திவிடமுடியுமா என்றெல்லாம் பேசத்தொடங்கினால் எப்படி அண்ணா கண்ணன்? ஆம் பாட நூல்களைத் திருத்த வேண்டும்தான், ஆனால் சரியாக நாம் எழுதுவதில் என்ன தடை, முடை?

  //சமூகம் தழுவிய அளவில் பெரிய மாற்றங்களை விரும்புவோர், கூர்மையாகத் திட்டமிட்டே தங்கள் ஆற்றலைச் செலவிட வேண்டும்//
  நன்று சொன்னீர்கள்! அதற்கு துணை செய்யலாமே? வல்லமை இதழில் சரியான முறைகளைப் பின் பற்றலாமே? சமூகம் தழுவிய மாற்றங்கள் என்பது ஏதோ மேலிருந்து நிகழ்வது அல்ல. இன்று அடைந்திருக்கும் தமிழ்க்கொலைகள் (உரோமன் எழுத்தையும் சேர்த்து எழுதுவது போன்றவை), சீர்ழிப்புகள், சீர்குலைவுகள் சிறுகச் சிறுக நிகழ்ந்து பரவுவது, அறியாதவர்களும், சில வலிந்து கெடுப்போர்களும் சேர்ந்து செய்வதாலேயே பெரும்பாலும் நடக்கின்றன.. ஏதோ அரசு ஆணையிட்டு செய்யப்பட்டதல்ல. படித்தவர்கள், நெறிகாக்கவேண்டியவர்கள், பொறுப்பானவர்கள் தாங்கள் ஒழுக்கத்துடன் செய்யத் தவறியதும் தொடர்ந்து பிழைகளை மேலும் மேலும் செய்துகொண்டே இருப்பதாலும்தான் இக்கொடுமைகள் பல்கிப்பெருகின்றன. ஒரே நாளிலோ, ஒரு சிலராலோ மட்டும் மாற்றம் ஏற்படாதுதான். ஆனால் நல்லதை நினைத்து படித்தவர்களும் பொறுப்பானவர்களும் சிறிதேனும் ஒழுக்கம் காக்க முனைந்தால் சிறுகச் சிறுக நன்னிலை அடைய வாய்ப்புகள் கூடுமே! கிணற்றில், ஆற்றில் தூர் எடுப்பது போல, பானையில் அடியில் சேர்ந்திருக்கும் அழுக்கைத் துடைப்பது போலச் செய்யலாம்னே! ஊழலை ஒழிக்க வேண்டாம், குறைந்தது இணையம், வலை என்றெல்லாம் நல்ல தமிழிலும் எழுதவும் கூட வேண்டாம், இன்டர்நெட்டு என்றாவது எழுதலாமே! ஏன் ஒலிக்க முடியாத இன்டர்நெட்? நோட்டு என்று Note ஐச் சொல்வதில்லையா? எல்லோரும் தப்பாக எழுதுகின்றார்கள் என்றால் வல்லமை இதழாவது சரியாக எழுதலாமே (எல்லோரும் தப்பாக எழுதுவதில்லை!! உலகத் தமிழர்கள் பல்லோரும் பழிக்கும் சில ஊடகங்கள் எழுதுகின்றன, ஆம்!). படித்தவர்கள் பொறுப்பானவர்கள் நல்லதை முன்னிறுத்துவார்கள் என்ற நோக்கிலேயே என் கருத்துகளைப் பதிவு செய்கின்றேன்.
  (இந்த இழையில் இதனைத் தொடர வேண்டும் என்பது என் நோக்கம் அன்று. மேலும் கூற நிறையவே இருந்தாலும்)

 12. வேற்றுமொழிப் பெயர்களைத் துல்லியமாக எழுதுகிறோம் என்று துல்லியமும் கெட்டு, தமிழ் ஒலிப்புமுறை ஒழுங்கும் கெடுமாறு ஏன் எழுத வேண்டும். புறப்பெயர்களைப் பற்றி அறிய வேண்டும். எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழி இயல்புக்கேற்ப ஒலிபெயர்த்துதான் எழுதுகிறார்கள். 

  சப்பான் (நிப்பான், நிஃகான்) நாட்டுப்பெயர் வெவ்வேறு மொழிகளில் எப்படி எழுதப்பட்டது என விக்கிப்பீடியாவில் பாருங்கள்.

  The English word for Japan (native name Nippon) came to the West via early trade routes. The earlyMandarin or possibly Wu Chinese (吳語) word for Japan was recorded by Marco Polo as Cipangu. In modern Shanghainese, a Wu dialect, the pronunciation of characters 日本 ‘Japan’ is Zeppen [zəʔpən]. The old Malay word for Japan, Jepang, was borrowed from Chinese Jih’pen’kuo (日本国)in one or other of its coastal dialect forms, probably Fukienese or Ningpo,[16] and this Malay word was encountered by Portuguese traders in Malacca in the 16th century. Portuguese traders were the first to bring the word to Europe.[17] It was first recorded in English in a 1565 letter, spelled Giapan.[18]

  மக்கள் வழக்கிலும்கூட மொழி உள்ளொருமையின் காரணமாக ஒலிபெயர்கிறது. தமிழ் மட்டுமே அறிந்தவர்களை உற்று கவனியுங்கள். அவர்கள் scan என்பதைக் கான் என்கிறார்கள். Coffee-ஐக் காப்பி என்கிறார்கள். பீங்கான், அலமாரி போன்று நிலைபெற்ற சொற்கள் போத்துகீச ஒலியமைப்பிலா வழங்குகின்றன?

  மூலமொழி அமைப்புக்கேற்ப எழுதவேண்டும் என்றால் நாளை தெற்கு ஆப்பிரிக்க மொழிச் சொற்களுக்காகத் தமிழில் சொடுக்கொலி எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்பீர்களோ?

  அண்ணா கண்ணன் மீது நான் வைத்திருந்த மதிப்பு குன்றி வருகிறது. 🙁

 13. வேற்றுமொழிப் பெயர்களைத் துல்லியமாக எழுதுகிறோம் என்று துல்லியமும் கெட்டு, தமிழ் ஒலிப்புமுறை ஒழுங்கும் கெடுமாறு ஏன் எழுத வேண்டும். புறப்பெயர்களைப் பற்றி அறிய வேண்டும். எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழி இயல்புக்கேற்ப ஒலிபெயர்த்துதான் எழுதுகிறார்கள். 

  சப்பான் (நிப்பான், நிஃகான்) நாட்டுப்பெயர் வெவ்வேறு மொழிகளில் எப்படி எழுதப்பட்டது என விக்கிப்பீடியாவில் பாருங்கள்.
  The English word for Japan (native name Nippon) came to the West via early trade routes. The earlyMandarin or possibly Wu Chinese (吳語) word for Japan was recorded by Marco Polo as Cipangu. In modern Shanghainese, a Wu dialect, the pronunciation of characters 日本 ‘Japan’ is Zeppen [zəʔpən]. The old Malay word for Japan, Jepang, was borrowed from Chinese Jih’pen’kuo (日本国)in one or other of its coastal dialect forms, probably Fukienese or Ningpo,[16] and this Malay word was encountered by Portuguese traders in Malacca in the 16th century. Portuguese traders were the first to bring the word to Europe.[17] It was first recorded in English in a 1565 letter, spelled Giapan.[18]

  மக்கள் வழக்கிலும்கூட மொழி உள்ளொருமையின் காரணமாக ஒலிபெயர்கிறது. தமிழ் மட்டுமே அறிந்தவர்களை உற்று கவனியுங்கள். அவர்கள் scan என்பதைக் கான் என்கிறார்கள். Coffee-ஐக் காப்பி என்கிறார்கள். பீங்கான், அலமாரி போன்று நிலைபெற்ற சொற்கள் போத்துகீச ஒலியமைப்பிலா வழங்குகின்றன?

  மூலமொழி அமைப்புக்கேற்ப எழுதவேண்டும் என்றால் நாளை தெற்கு ஆப்பிரிக்க மொழிச் சொற்களுக்காகத் தமிழில் சொடுக்கொலி எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்பீர்களோ?

 14. இராகமும் தாளமும் தெரியாமல் கச்சேரி வைக்கலாம்! ஒரு சிலர் கைக்கொட்டியும் சிரிக்கலாம்! ஆனால்,

  “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாம்,
  கண்ணோட்ட மில்லாத கண்”

  என்று வள்ளுவம் கூறுவதைக் காண்க.

Leave a Reply

Your email address will not be published.