Featuredஇலக்கியம்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (14)

சக்தி சக்திதாசன்

முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அன்பினியவர்களே !

“நட்பு” எனும் பதம் வெறும் உதட்டிலிருந்து பிறக்கும் சொல் அல்ல. உள்ளத்தின் ஆத்மார்த்தமான உணர்வு. பரஸ்பரம் ஏற்படும் புரிந்துணர்வின் ஆழத்தைக் குறிக்கும் சொல். எப்போதும், எதையும் தப்பாகப் புரிந்து கொள்ளாத ஒரு தூய அன்பு.

என்ன இது ? நட்பைப் பற்றி ஒரு பெரிய விளக்கம் தருகின்றானே என்று எண்ணாதீர்கள். நான் இங்கே நட்பைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு .

நான் ஈழத்திலே எனது பதின்ம வயதுகளின் இறுதியில், கல்லூரி வாழ்க்கையில் கண்டெடுத்த நட்புகளே என் நெஞ்சில் இன்றும் இனிமையாகக் கீதம் இசைத்துக் கொண்டிருக்கின்றன.

அப்போது என்னைப் பற்றிக் கொண்ட நட்பு இன்றும் என் மனதில் ஆழமாய்ப் பரவி நிற்பதை நான் நன்கு உணர்கிறேன். பதினெட்டு வயதின் முடிவிலிருந்து பத்தொன்பது வயதினுள் காலடி எடுத்து வைத்த அதே வேளையில்தான் நான் ஈழத்தை விட்டு இங்கிலாந்து நாட்டிலும் கால் பதித்தேன்.

அப்போது நான் அங்கே ஈழத்தில் விட்டு வந்தது என் உதிரத்து உறவுகளை மட்டுமல்ல, என் உயிருக்குரான நட்புகளையும் தான்.

என்னைச் சுமந்து வந்த விமானம் எனது உடலின் பாரத்தை மட்டுமல்ல நான் விட்டுப்பிரிந்த என் நட்புகளின் எண்ணங்கள் கொடுத்த சோகமெனும் வேதனையின் கனத்தையும் சேர்ந்தே சுமந்து வந்தது.

அப்படி என்னுடன் கலந்து பழகிய உயிர் நண்பர்களில் இருவர் நான் இங்கிலாந்தில் நிலையாகக் கால் பதித்த பின்னால் அவர்களும் இங்கிலாந்துக்கு வந்து தமது வாழ்க்கையை இங்கே நிலைப்படுத்திக் கொண்டார்கள்.

புலம்பெயர் வாழ்க்கையின் நியதிப்படி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் வெவ்வேறு மூலைகளில் நாம் வசித்தாலும் ஓரே நாட்டில் ஒரு தொலைபேசித் தொலைவில் தான் வாழ்கிறோம் எனும் எண்ணம் என் நெஞ்சத்தில் வெறுமையின் வேகத்தைத் தணிக்கிறது என்றே சொல்வேன்.

தர்மபுரம் மஹா வித்யாலய மாணவன்

சில வேளைகளில், சில உணர்வுகள் உள்ளத்தைத் தாக்கும் கணங்களில் கைவிரல்கள் தானாக அந்தக் குறிப்பிட்ட நண்பர்களின் தொலைபேசி எண்களையே சுழற்றுகின்றன.

மனதில் தோன்றும் சிறிய காயங்களுக்கு அவர்களுடன் பேசும் அந்தக் குறுகிய கணங்கள் ஏதோ ஒரு வகையில் களிம்பு தடவுகின்றன.

அந்த இனிய நண்பர்கள் முதன் முதலாக லண்டனில் என்னைச் சந்திக்க வரும் போது கொண்டு வந்த பரிசு என்ன தெரியுமா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் எனக்குப் பிடித்த பாடல்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ கசட் தான்.

அதுவும் அவர்களே தெரிவு செய்து எனக்காக பதிவு செய்திருந்தார்கள். இதனை எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா? வருடங்கள் எவ்வளவு கடந்தாலும் நண்பர்களின் நெஞ்சத்தை உண்மையில் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதனை எடுத்துக் காட்டவே.

சரி இப்போ எதற்காக இதுவெல்லாம் ? கேள்வி புரிகிறது . விடயத்திற்கு வருகிறேன்.

அந்நண்பர்களில் ஒருவனோடு சில வாரங்களுக்கு முன்னால் பேசும் போது ” வருகிற 30ம் திகதி வட இலண்டனில் ஒரு கலைநிகழ்ச்சி நடைபெறப் போகிறது. அது நிச்சயம் உனக்குப் பிடிக்கும். வருகிறாயா?” என்று கேட்டான்.

“ என்ன நிகழ்ச்சி ?” எனும் என் கேள்விக்கு , “பசுமை நிறைந்த நினைவுகள் ” என்று அவனிடமிருந்து பதில் வந்தது.

லண்டனில் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. மிகவும் பிரம்மாண்டமாக தென்னிந்திய நட்சத்திரங்களோ அன்றிப் பாடகர்களோ கலந்து கொண்டு சிறப்புறச் செய்வார்கள்.

பசுமை நிறைந்த நினைவுகளே!

ஆனால் அந்நிகழ்ச்சிகளில் எனக்குப் பொதுவாகவே ஒரு மனக்குறையுண்டு. அதாவது பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அநேகமாக புதுப்பாடல்கள் தான் அங்கே இசைப்பதுண்டு. அவற்றுடன் இரண்டறக் கலப்பதற்கு என்னால் முடிவதில்லை.

தயவுசெய்து படிப்பவர்கள் பிழையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. புதுப்பாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறவில்லை. ஆனால் எனது மனம் பழைய பாடல்களில் லயிப்பதைப் போல புதுப்பாடல்களில் லயிப்பதில்லை.

இதன் முக்கிய காரணம் காலமாற்றம் என்பதை நான் உணர்கிறேன்.

இங்கேதான் எனது நண்பன் குறிப்பிட்ட ” பசுமை நிறைந்த நினைவுகள் ” மாறுபட்டு நின்றது. ஆமாம் இந்நிகழ்வில் 60,70,80 களில் ஒலித்த இனிமையான பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் என்பதுவே இந்நிகழ்வின் தனித்தன்மையாகும்.

நான் இலண்டனுக்கு புலம் பெயர்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த பலர் இத்தகைய ஒரு நிகழ்வினை கண்டு களிப்பதற்காக, கேட்டு ரசிப்பதற்காக காத்திருந்திருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்விற்குச் சென்ற பின்னால் தான் அறிந்தேன்.

இந்நிகழ்வின் தன்மை மட்டுமல்ல, இந்நிகழ்வை அவர்கள் நடத்துவதற்கான காரணம் கூட என் மனதை மகிழப் பண்ணியது.

என் நண்பன் சார்ந்திருந்த “மனித நேயம்” எனும் அமைப்பு ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அங்கே தாம் செய்யும் பல மனித நேய நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியைச் சேகரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இவ்வமைப்பு எந்தவிதமான அரசியல் நோக்கமுமற்றது. இங்கிலாந்திலும், இலங்கையிலும் அந்நாட்டு அரசாங்கங்களினால் அங்கீகரிக்கப்பட்ட புனர்வாழ்வு அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பல சந்தர்ப்பங்களில் இவ்வாறாக புனரமைப்பு அமைப்புக்கள் நடத்தும் நிகழ்வுகளினால் சேகரிக்கப்பட்ட நிதியில் பெருந்தொகை நிர்வாகச் செலவுகளுக்கே பயன்பட்டுவிடப்படுவதைத் தவிர்க்கக் முடியாது .

அதற்காகவே இவ்வமைப்பான “மனித நேயத்தைச்” சார்ந்தவர்கள் மிகவும் அதிகக் கட்டணத்துடனான பெரிய மண்டபங்களில் தம் நிகழ்வை நடத்தாமல் மிகவும் குறைந்த கட்டணச் செலவில் கணிசமான நுழைவுக் கட்டணமே அறிவித்து, உள்ளூர்க் கலைஞர்களின் உதவியுடன் நிகழ்வை நடத்தி சேரும் நிதியில் பெரும்பங்கை ஈழத்து மனித நேய நடவடிக்கைகளிலேயே செலவிடுகிறார்கள்.

“சுதந்திரப் பறவைகள்” (Free Birds) எனும் இசைக்குழுவின் பிரதான பாடகராக கஜன் எனும் தம்பி தனது இயக்கத்தில் இந்நிகழ்வை மனித நேயத்தினருக்காக தொகுத்தளித்தார்.

பாடகர் "கஜன்"

ஏறத்தாழ 40 முத்தான பாடல்கள் இந்நிகழ்வில் இடம்பெற்றன. அனைத்தும் பசுமை நிறைந்த நினைவுகளை நெஞ்சத்தில் மீண்டும் கொண்டு வந்து கேட்போரை சிலமணி நேரம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

“சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா ” எனும் பாடல் அட்ப்பாடலுக்குரிய இனிமையான சங்கீத ஆலாபனத்துடன் அற்புதக் குரலில் ஒலித்தது. அநேகரின் வேண்டுகோளுக்கிணக்க இப்பாடல் மீண்டும், இரண்டாவது தடவையாக பாடப்பட்டது.

டி.எம்.எஸ் ன் இனிய குரலில் தம்பி கஜன் “நான் மலரோடு தனியாக ” எனும் பாடலைப் பாடியபோது கரகோஷத்தினால் அச்சிறிய ஹால் அதிர்ந்தது…

நீண்ட நாட்களுக்குப் பின்னர் என்னுடன் லண்டன் காலேஜில் பயின்ற பல நண்பர்களைக் கண்டேன். பலரால் என்னை அடையாளம் காணமுடியாமல் போனது எனக்கு வியப்பாக இருந்தது.

கல்லூரி நாட்களின் இனிய நினைவுகள். குடும்பப் பொறுப்புகள் இன்றி வரவின்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த காலங்கள். கன்னிப் பெண்களின் பின்னே எம்மையும் ஹீரோக்களாக எண்ணிக் களிப்புடன் அலைந்து திரிந்த காலங்கள். அந்தப் பொழுதுகள் இதயத்தில் ஏதோ இனம் தெரியா இன்ப கீதத்தை இசைமீட்டிக் கொண்டிருந்தன என்பதை இத்தகைய பசுமை நிறைந்த பாடல்கள் மீண்டும் நெஞ்சத்து முன்றலில் நர்த்தனமாடிடச் செய்தன.

காதினில் இசைத்திடும் கீதம் கடந்த காலத்தின் இனிமைகளை காற்றலைகளோடு சேர்த்து எமக்குப் பரிசாகக் கொடுத்தது. அனைவருடைய மனங்களிலும் இனிமையான கணங்கள். புதைந்து போன மகிழ்ச்சி ஒரு மூலையில் பெட்டகத்தினுள் வைத்து பூட்டப்பட்டது போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதைத் திறப்பதற்கு தகுந்த சாவி கிடைத்தால் அவைகளை மீண்டும் ஒருமுறை மீட்டிப்பார்த்து மகிழ்ந்திடச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தைத்தான் அந்த இனிய பொன்னந்தி மாலைப் பொழுது எமக்களித்தது.

எம்மை மகிழ்விப்பது மட்டுமல்லாமல் எனது தாய்மண்ணின் மைந்தர்களின் கண்னீரைத் துடைப்பதற்கு அம்மாலையின் மகிழ்வு உதவியது எனும் எண்ணும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

இந்நிகழ்வை நடத்திய மனிதநேயம் அமைப்பு ஈழத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவற்றின் முழு விபரங்களையும் பினவரும் இணையதள முகவரியில் காணலாம். 

http://www.manithaneyam.org/index.htm 

ஒரு நல்ல நிகழ்வை ஒரு நல்ல நோக்கத்திற்காக பார்த்து ரசித்தோம் எனும் மகிழ்வு மனதை நிறைக்க, மிகவும் நியாய விலையில் பல நிறுவனங்களின் ஆதரவுடன் அளிக்கப்பட்ட உணவு பசியைப் போக்க, ஒரு அழகிய சனிக்கிழமை இரவை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

மீண்டும் அடுத்த மடலில்.

அன்புடன்

சக்தி சக்திதாசன்

லண்டன்

படங்கள் : நன்றி  ” மனித நேயம் ”  இணையத்தளம்

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க