திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-12)

0

விஜயகுமார்

சுவிட்சர்லாந்தில் குருவாயூர் சீஸா?

ஒண்ணுமே புரியவில்லையே! அது குருவாயூர் இல்லை க்ருயரே சீஸ் – க்ருயறேஸ் என்ற நகரில் உள்ள பசுக்கள், அங்கே விளையும் அருமையான புல் மற்றும் விசேஷச் செடிகளின் வாசத்துடன் வழங்கும் பாலில் பிரத்யேகமாகத் தயாராகும் சீஸ் அது.

அது செய்யப்படும் ஃபாக்டரி காணச் செல்வோமா? இல்லை, நெஸ்ட்லே சாக்லட் ஃபாக்டரி போவோமா? சாக்லேட் Vs சீஸ்! கஷ்டமான கேள்வி, எதை விடுப்பது? முடிவில் சரியான தேர்வு செய்தேன் – இரண்டுக்குமே போகலாமே!

நம்மை போலப் படிப்பில் அவுட்-ஸ்டாண்டிங் மாணவனாக இருந்தவர்களுக்கு டெல்லி எருமை கண்டிப்பாகப் பரிச்சயமான விலங்காக இருக்கும் – இவைதான் நம்ம ஊரில் நிறையப் பால் கொடுக்கும் – நம்மை வளர்ப்பதை விட நைனா நாலு டெல்லி (அது என்ன நாலு கணக்கு என்று இன்னும் புரியவில்லை) வளர்த்திருக்கலாம் என்று அடிக்கடி சொல்வார். அவை இல்லாத நம்ம ஊரு மாடுகளின் நிலைமையோ – காய்ந்த வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என்று எப்போதுமே எலும்பும் தோலுமாக இருக்கும் அவை முன் திடீரென நான்முகன் தோன்றி – எண்ணிய வரத்தைக் கேள் என்றால் – அடுத்த பிறவியில் கண்டிப்பாக சுவிட்சர்லாந்த் பசுவாகப் பிறக்க வேண்டும் என்றுதான் கேட்க வேண்டும்.

நாடே அப்படி ஒரு செழுமை – பரந்த புல்வெளி – நடு நடுவே மஞ்சள் பூக்கள் – அது எப்படித்தான் இந்த ஊரில் மட்டும் புல் இப்படி வளர்கிறதோ – இந்த நாட்டு மக்களும் அதன் மேலே நடந்து அழித்து விடாமல் இருக்கிறார்களோ! நம்ம ஊரில் கிரிக்கெட் மைதானத்துக்கே புல்லைத் தனியாக நாத்து நட்டு, வளர்த்து பெயர்த்து நட வேண்டும்! அப்படியே அரிதாக பூங்காவில் சிறு இடத்தில் புல் வளர்த்தால் அடுத்த நாளே அதன் மேலே நடை பாதை ஒன்றைத் தானாக நம்மவர்கள் செய்து விடுவார்களே. இப்படிப்பட்ட பசுமையான செழுமையில் வளரும் பசுக்கள் – பார்ப்பதற்கே என்ன அழகு.

சிறு வயதில் மாதவரம் பால் பண்ணைக்குப் பள்ளியில் எஜுகேஷனல் டூர் போன நினைவு – பிறகு ஒரு இரண்டு வாரத்துக்குப் பால் சம்பந்தமான எதையுமே நெருங்க முடியவில்லை. சுத்தம் என்பது என்ன என்று இந்த சுவிட்சர்லாந்த் சீஸ் பாக்டரியில்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கும். எங்கும் இயந்திர மயம். எல்லாமே கண்ணாடி அறைகள் – பார்வையாளர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய அறையில் பெரிய பெரிய செப்பு பாத்திரங்களில் பால் கொதிக்க (அடுத்த அறை அவர்கள் தொழில் ரகசியம்!), பிறகு இன்னொரு அறையில் பெரிய பிட்சா போன்ற சீஸ் கட்டிகளை லைப்ரரியில் புத்தகங்களை அடுக்குவது போல ஒரு ரோபோ அடுக்கிக் கொண்டு இருந்தது. இன்னொன்று அவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தோசையைத் திருப்பிப் போடுவது போல திருப்பிப் போட்டது. பின்னர் ஐந்து அல்லது பத்து மாதங்கள் அவை வயசுக்கு வர வேண்டும்… பின்னர் சீஸ் ரெடி! விலைப் பட்டியலை பார்த்தவுடன்தான் வயிறு சற்றுப் புரட்டியது.

அடுத்து சாக்லட். அருமையான சூழலில் அருகில் வரும்போதே மூக்கு வாசம் பிடித்தது. உள்ளே மிகவும் அழகாக ஒரு சின்ன இனிப்பு பார் -தயாரிக்க எங்கிருந்தெல்லாம் மூலப் பொருட்களை வரவழைக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. பால், கோக்கோ, சீனி, பல்வேறு நட்ஸ், காய்ந்த கிரேப்!! ஒவ்வொன்றும் ஒரு நாட்டில் இருந்து. வெளியில் வரும்போது முகம் தானாக மலர்ந்தது! சாம்பிள் – டெஸ்ட் பண்ணுங்க என்று தட்டுத் தட்டாக வித விதமாக வெளியில் வந்தது.

ஆஹா மாயா பஜார் ரங்கா ராவ் மாதிரி ஒரு பிடி பிடிக்கலாம் என்று அருகில் செல்லும் போது, நம்மைப் பார்த்து விட்டு உஷார் ஆன அந்த அம்மணி, எவ்வளவு வேண்டும் என்றாலும் இங்கேயே சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள் – வெளியில் எடுத்துச் செல்ல கூடாது. அடுத்த அறை இதற்காகவே சூடாக இருக்கும் – சட்டைப் பை, பாண்ட் பாக்கெட்டில் போட்டுச் சென்றால் உருகி விடும் என்றாள். ஆஹா, நம்ம மைண்ட் வாய்ஸ் எப்படி அவளுக்குக் கேட்டுது என்று யோசிக்கும்போது – அது சரி, ஷாருக்கானும் கஜோலும் இங்கு வந்து சென்ற பிறகு பாதி இந்திக்கார டூர் இங்கேதானாம். போதாக்குறைக்கு நம்ம இளைய தளபதி வேற இங்கேதான் முட்டி மூவ் போடுவேன் என்கிறார் !

இப்படியே போனால் நாடு திரும்பினால் அங்கே என்ன பார்த்தேன் என்று சொல்லாமல் அங்கே என்ன சாப்பிட்டேன் என்று மட்டுமே சொல்ல முடியும்! அதுவும் அன்பே வா படம் பார்த்தது முதல் படிப்பாளி நண்பர்கள் அனைவரும் (அதாவது அமெரிக்கா வாசிகள்), நல்ல செட்டில் ஆன அமெரிக்கப் படிப்பாளிகளை மணந்த பள்ளித் தோழிகளும் பனிப்பாறையில் விளையாடும் படங்களைக் காட்டிக் காட்டி – சரி சரி, பழங்கதை எதற்கு – எப்படியும் ஆல்ப்ஸ் மலை பார்க்க வேண்டும், அங்கே பனிக்கட்டியைக் கையில் எடுத்து உருண்டை செய்து எறிந்து விளையாடி – குறிப்பாக அதனைப் படம் பிடித்து முகநூலில் போட வேண்டும் என்றே உயரிய நோக்கத்துடன் புறப்பட்டேன்.

சுவிட்சர்லாந்தில் எங்கிருந்து பார்த்தாலும் அல்ப்ஸ் மலை தெரியும் – ஆனால் அதை நோக்கிப் பயணம் செய்யும்போது அதன் அழகு கூடிக்கொண்டே போனது. லாடர்ப்ரனன் (Lauterbrunnen) என்ற ஊர் செல்ல வேண்டும் – ஊரா அது – இந்திர லோகம் சந்திர லோகம் என்பதெல்லாம் இதுதான். பெரிய மலை, மலையின் மேலே பனிக்கட்டிகள், அவை உருக, அருவி, நீர்வீழ்ச்சிகள், அவை அடியில் சேர்ந்து ஒரு பெரிய ஏரி!! ஆங்காங்கே மரத்தால் ஆன அழகிய வீடுகள், வண்ண வண்ணப் பூக்கள். இப்படி இயற்கை எழில் கொஞ்சம் கூடக் குறையாமல் எப்படித்தான் மெயின்டைன் செய்கிறார்களோ. அடிவாரத்தில் இருந்து ஒரு ரயில் பிடித்துப் பாதி தூரம் சென்றோம், அங்கே இருந்து வின்ச் பயணம் – முடிவில் செல்ல வேண்டிய இடம், அது மிகவும் சுவாரசியம் மிகுந்த இடம் – ஜேமஸ் பாண்ட் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சீன் கான்னரி தான் – எனினும் அவர் இந்த அடையாளம் எனக்குப் போதும் என்று விலகியதும் ஒரே ஒரு படத்துக்கு மட்டும் அந்த வேடத்தைப் பூண்ட ஜார்ஜ் லசென்பி நடித்த ஆன் ஹெர் மஜெஸ்டிஸ் சர்வீஸ் என்ற படத்தில் மிகவும் பிரபலமான இடம் – படத்தில் வில்லனின் கோட்டையாக முடிவுக் காட்சிகள் அனைத்தும் இந்த இடத்தில்தான் படம் பிடிக்கப்பட்டது. (Schilthorn ) சில்த்ரோன் – பத்தாயிரம் அடி உயரத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளிப் பனிமலைகள் சூழ இந்த இடத்தில ஒரு ஓட்டல் உள்ளது. விஞ்சை விட்டு வெளியில் வரும்போதே ஒரு த்ரில் – வெளியே எங்கும் வெள்ளைப் பனி ….உள்ளே கொஞ்சம் பசி.

பையில் கட்டிக் கொண்டு வந்த உப்புமா இருந்தது. ஆஹா அல்ப்ஸ் மலை உச்சியில் உப்புமா – ஹோட்டலுக்கு சென்று இருப்பதிலேயே விலை குறைந்த (அதுக்கே வாய் ஒரு பெரிய ஆஆ போட்டது ) பிரெஞ்சு ஃப்ரை ஆர்டர் பண்ணிவிட்டு ஓரத்தில் உட்காரும் முன்னரே – அந்த அம்மணி – ‘நோ பிக்னிக்’ என்று அழகாகச் சொன்னாள். முதலில் புரியவில்லை – பின்னர் முதுகில் தொங்கும் பையைக் காட்டி மீண்டும் ‘ நோ பிக்னிக்’ என்றபோது தான் புரிந்தது. அடடே, நாம் கடையை இன்னும் திறக்கவே இல்லையே அதற்குள்ளே – நம்ம ஆளுங்க எங்கு சென்றாலும் தங்கள் சுவடுகளை நன்றாகவே விட்டுச் செல்கின்றார்கள்!

 

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *