பிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை இரண்டாம் (இறுதிப்) பகுதி

நேரடி வருணனை: புதுவை எழில்

ஞாயிற்றுக் கிழமை 08.07.2012

மறு நாள் காலை …

வழக்கம் போல் விடிந்தது; வழக்கம் போல் மக்கள் தாமதமாகவே வந்தனர் –

தமிழர்களுக்குப் பிடித்த மதம் தாமதம்தான் என்று கண்ணதாசன் கூறியதை நிரூபிப்பது போல.
வழக்கம் போல் விழா தாமதமாகவே தொடங்கியது, வழக்கம் போல் கடவுள் வாழ்த்து, பரத நாட்டியம்… போன்ற சடங்குகள் முடிந்தன..

அதன் பின், முதல் அமர்வு: தலைப்பு: ‘புது எழுத்து’. தலைமை கலை விமரிசகர் உயர்திரு இந்திரன் அவர்கள். அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

இந்திரன் ‘புது எழுத்து ‘அதாவது இக்கால இலக்கியங்கள் பற்றிய தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பின், இந்திரன், பேச்சாளர்களை ஒவ்வொருவராக அழைத்துப் பேச வைத்தார். சவூதி அரேபியாவில் இருந்து வந்திருந்த கவிஞர் அப்துல் சத்தார் ‘வளைகுடா நாட்டில் புலம்பெயர் மக்கள்’ என்ற தலைப்பில் அருமையாகப் பேசினார். அங்கே உள்ள அமைப்புகள் தமிழர்களுக்கு உதவும் வகைகளை விளக்கினார். தமிழுக்கே சிறப்பான ழகரம் உட்படத் தமிழை மிக அழகாக அவர் ஒலித்ததை அனைவரும் இரசித்தனர்.

தில்லிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பாலசுப்பிரமணியன் இந்தி மொழி பெயர்ப்பு பற்றி விரிவாகப் பேசினார். பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், பிரஞ்சுப் பொறி இயல் அறிஞர் லாமைரேஸ் புதுச்சேரியில் பணியாற்றிய போது தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகளை எடுத்துரைத்தார். உயர்திரு வாசுதேவன் இங்கு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருபவர். பிரஞ்சு மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைத் தக்க எடுத்துக் காட்டுகளோடு விளக்கினார். சென்னை அரிமா உறுப்பினர் உயர்திரு சதாசிவம் மாணிக்கம் தம் உரையில் அருமையான கருத்துகள் பலவற்றை வெளிப்படுதினார். தமிழன் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பலவற்றை அவர் அடுக்கிய போது மக்கள் வியந்தனர். பரி நகரில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ‘INALCO’ என்னும் அமைப்பில் பணியாற்றும் பேராசிரியர் தலிஞ்சன் முருகையன் பிரான்சில் தமிழ்க் கல்வி பற்றிய தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இந்த அமர்வுக்கு முன்னிலை வகித்தவர் உயர்திரு அசோகன்.

அடுத்த அமர்வு, புலம் பெயர் இலக்கியங்கள் பற்றியது. திரான்சி நகரவை உறுப்பினர் உயர்திரு அலன் ஆனந்தன் அவர்கள் தலைமை. இவர் தலைமை உரையைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களுள் மூத்தவரும் மார்க்சிய சிந்தனையாளரும் சின்னப்பப்பாரதி அறக்கட்டளை நிறுவனருமான உயர்திரு சின்னப்பப் பாரதி அவர்கள் தம் நாவல்களைப் பற்றியும் இலக்கிய அனுபவங்களைத் தொகுத்தும் பேசியதை மக்கள் மிகவும் ரசித்துக் கேட்டனர். இவர் புதினங்கள் பல்வேறு இந்திய வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார் பிரஞ்சுக்காரர் உயர்திரு Massé Pierre. இவர் இங்குள்ள ‘Politbureau’ வின் சிறப்பு அதிகாரி. உயர்திரு சின்னப்பப் பாரதி அவர்கள் எழுதிய ‘சங்கம்’ என்ற நாவல் பிரஞ்சு மொழியில் ‘Réveil’ (விழிப்பு) என்னும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை மொழி பெயர்த்தவர் அருட்சகோதரி பெயாற்றிஸ் (Sœur Béatrice) என்னும் கிறித்துவத் துறவி. வயது முதிர்ந்தவர். தாழ்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் அவல நிலை பற்றிப் பேசும் நாவல் இது. இந்த நூலின் சிறப்புகளை உயர்திரு Massé Pierre பிரஞ்சில் புகழ்ந்து உரைக்கப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார். அதன் பிறகு இந்த நூல் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, புலம்பெயர் இலக்கியங்கள் பற்றித் திருவாளர்கள் சீவக்குமரன் (டென்மார்க்), இராம உதயன் (இங்கிலாந்து), V.T இளங்கோவன் (பிரான்சு) உரை ஆற்றினர். பிறகு ‘கவிச் சோலை’ நடைபெற்றது. பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் முது பெருங்கவிஞர் ‘கவிச் சித்தர்’ கண கபிலனார் அவர்கள் தலைமை. அண்மையில் இந்தியாவில் இருந்து திரும்பி வந்த இவர் தம் தலைமைக் கவிதையைச் சிறு நூலாக அச்சிட்டுக் கொண்டு வந்திருந்தார். அதை அனைவரும் பெற்று மகிழ்ந்தனர். “பண்டைய இலக்கியச் சிறப்புகளை நெஞ்சில் வைத்துப் புதிய இலக்கியங்களைப் பதிவு செய்ய முனைய வேண்டும்” – இதுவே, இவர் தலைமைக் கவிதையின் அடிநாதம். இக்கவிச் சோலையில் பங்குகொண்ட மலேசியக் கவிஞர் உயர்திரு பீர் முகமது தம் புதுக் கவிதைகள் சிலவற்றைத் தம் நூலில் இருந்து படித்துக் காட்டிக் கைதட்டல் பெற்றார். மலேசியக் கவிஞரான உயர்திரு காரைக்கிழார் நல்ல மரபுக் கவிதையில் விருந்து படைத்தார்.

சுமார் ஒரு மணி அளவில் பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த உணவு, மாலை, இரவுச் சிற்றுண்டிகளை வழங்கியவர் உயர்திரு இலங்கைவேந்தன் பாண்டுரங்கன். இவர் வோரேயால் தமிழ்க் கலாசார மன்றத்தின் தலைவர். இந்த மாநாட்டுக்குப் பல விதங்களில் உழைத்தவர்.

முதல் நாள் அன்று மருத்துவர் செம்மல் மணவை முஸ்தபா அவர்களின் புத்துரையைக் கேட்ட மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டாம் நாளும் அவர் உரை தொடர்ந்தது. மதிய உணவு முடிந்ததும், ‘slide projector’ உதவியுடன் அவர் தம் உரையைத் தொடர்ந்தார். தம் முயற்சியில் இளைஞர்களை ஈடுபடுத்த உழைத்து வருவதை அவர் கூறியதும் மக்கள் கைதட்டி வரவேற்றனர்.

பிறகு புதுக் கவிதைகள் அரங்கேறின. இந்த அமர்வுக்குப் பேராசிரியர் தேவகுமாரன் (தமிழ் இயக்கன்) தலைமை தாங்கினார். இவர் இம்மாநாட்டின் செயலர் என்பது குறிப்பிடத் தக்கது. ‘மேத்தா புதுக் கவிதையின் தாத்தா’ என்ற தலைப்பில் ஈழத்துக் குயில், கவிதாயினி லினோதினி சண்முகநாதன் புதுக் கவிதை படைத்தார். ‘இலக்கியத்தில் புதுக் கவிதை’ என்ற தலைப்பில் மரபுக் கவிதைச் சந்தங்களோடு புதுக் கவிதை படித்தவர் கவிஞர் பாமல்லன். மரபுக் கவிதையை ஆர்வமுடன் கற்று வருபவர். ‘Lyon’ என்ற வெகு தொலைவில் உள்ள நகரில் இருந்து வந்தவர். தம் தொகுப்பு உரையில், புதுக் கவிதையின் கூறுகளைக் கவிப்பேரரசு வைரமுத்துவின் திரைக் கவிதை ஒன்றை வைத்து விளக்கிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, இக் கூறுகள் சங்க இலக்கியத்திலேயே உள்ளன என்பதைக் குறுந்தொகைப் பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டி விளக்கினார்.

இறுதி நிகழ்ச்சியாகக் ‘கணித் தமிழ்’ அமர்வு நடைபெற்றது. CNRS என்னும் பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் பிரஞ்சு அறிஞர் ழான் லூக் செவ்வியார் (Jean-Luc CHEVILLARD) தலைமை தாங்கினார். ஓலைச் சுவடிகளில் இருந்த நூல்கள் புத்தகத்தில் ஏறித் தற்போது கணியில் பதியப்படுவது வரை பிரஞ்சு மொழியில் இவர் விளக்கினார். இவர் உரையில் குறிப்பிட்ட முக்கியக் கருத்தைத் தொகுப்பாளர் மொழி பெயர்த்து மக்களுக்கு உணர்த்தினார்; “உங்கள் வீட்டில் பழைய புத்தகங்கள் இருந்தால் அவற்றைப் பத்திரப்படுத்தி வையுங்கள்; அவை பழைய பதிப்பாக இருந்தாலும் சரிதான். ஏனெனில் இப்போது வெளி வரும் புதிய பதிப்புகளில் பிழைகள் மண்டிக் கிடக்கின்றன” பிரஞ்சு அறிஞர் வலியுறுத்திச் சொன்ன கருத்து இது.. இந்த அறிஞர், தமிழ் ஆர்வலர். புதுச்சேரியில் பணியாற்றிய போது, அங்கே பிரஞ்சுக் கல்லூரியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியை திருமதி மதனகலியாணி அவர்களிடம் முறையாகத் தமிழ் படித்தவர்.

இவரை அடுத்துக் ‘கணினிக் காலத்தில் கன்னித் தமிழ்’ என்னும் தலைப்பில் பேச வந்தார் திருமதி லூசியா லெபோ. கணினித் தொழில் நுட்பத்துக்கு ஏற்பக் கன்னித் தமிழ் வளைந்து கொடுப்பதையும் வளர்ந்து வருவதையும் சிறப்பாக விளக்கிய அவர், இங்குள்ள பெண்கள் கணினி அறிவு பெற வேண்டும், அதில் தமிழ் புழங்குவதையும் அறிய வேண்டும் என வலியுறுத்தினார். பாரதியார் கூறியபடி எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வம் கொண்டு வந்து சேர்த்தல் மட்டும் போதாது, கணினி அறிவைப் பயன்படுத்தித் தமிழின் நலன்களை எல்லாம் பிற நாட்டாரிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று முழங்கினார். திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு இருக்கும் உயர்திரு புண்ணியமூர்த்தி அவர்கள் புதுமையான கருத்து ஒன்றை வெளியிட்டார்கள். எகிப்து நாகரிகத்துக்குப் பிரமிடுகள், சீன நாகரிகத்துக்குச் சீனப் பெருஞ் சுவர் போலத் தமிழகம், தமிழுக்கெனத் தனி அடையாளம் தேவைப் படுகிறது. அதனைப் படைக்க முயலுவோம் என்று இவர் முன் வைத்த புதுமை கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. முன்னிலை வகித்த உயர்திரு ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ அமெரிக்காவில் இருந்து வந்தவர். தமிழுலகம், தமிழுலக அறக் கட்டளை… முதலியவற்றை நிறுவியவர்களுள் ஒருவர். ‘Utamam’ என்னும் அமைப்பின் உறுப்பினர்; தமிழகத்தை ஆளும் உயர் அதிகாரிகள் பலருக்கும் ஆலோசகராகச் செயல்படுபவர். கணினித் தமிழ் பற்றிய பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார் இவர்.

இப்படியாக நல்ல பல கருத்துகள் வெளிப்பட இந்த மாநாடு வாய்ப்பு அளித்தது.

மாநாட்டின் முத்தாய்ப்பாக நான்கு முனைத் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அவை :
1. ஆப்பிரிக்க மொழிகளுக்குச் செய்தது போல், UNESCO நிறுவனம், தமிழர் வரலாற்றைச் சரியான, முறையான, சீரான முறையில் வடித்துத் தர வேண்டும்; இதற்கு ஆவனவற்றை முத்தமிழ் மன்றம், இலக்கியத் தேடல் பிற தமிழ் அமைப்புகள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.
2. இங்குள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தில் முன்பு இருந்து மறைந்த தமிழ்த் துறையை மீதும் உயிர்ப்பித்து இயங்கச் செய்யத் தமிழக, புதுச்சேரி, பிரஞ்சு அரசுகளைத் தூண்ட ஆவன செய்தல்.
3. இங்குள்ள தமிழ் அமைப்புகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் கூட்டமைப்பு (FEDERATION) ஒன்றை அமைத்துச் செயல்படுதல்.
4 இங்குள்ள தமிழர்கள் பயன்பாட்டுகெனத் தனிக் கட்டடம் தேவை. இதற்கு ஆவன செய்யத் தமிழக, புதுச்சேரி, பிரஞ்சு அரசுகளை நாடல்.

இதன் பின், இந்த மாநாட்டுக்காகச் சிறப்பாக உழைத்த திருவாளர்கள் அன்பழகன் (பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை), ஆல்பர்ட் அறிவழகன் (பிரான்சு வள்ளலார் மன்றம்), இலங்கை வேந்தன் பாண்டுரங்கன் (வோரேயால் தமிழ் கலாசார மன்றம்), ரவி பாலா (மாநாட்டுப் பொருளாளர்), பாலா (வருத்தமில்லா வாலிபர் சங்கம்)…முதலியோரை மேடை ஏற்றினார் அமைப்பாளர் கோவிந்தசாமி செயராமன். இவர்களுக்கும் பலவேறு விதங்களில் பேருதவி புரிந்த திருமிகு நேரு அவர்களுக்கும் அமைப்பாளர் நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் முனைவர் மு.வ அவர்களின் உரை அடங்கிய திருக்குறள் புத்தகம் கைப்பையில் வைத்து வழங்கப்பட்டது. இப்பையின் உபயம்: புதுச்சேரி புஷ்பா ஜுவெல்லரி நிறுவனத்தார்.

இறுதியாகப் பாவேந்தரின் ‘சங்கே முழங்கு’ பாடலுக்குச் செல்விகள் சாரா கோதண்டம், ழுலியா கோதண்டம், தீபிகா மித்திரன், உத்தண்டி… அழகாக ஆடினர். ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே ‘ என்ற வரியை வலியுறுத்தி நிகழ்ச்சித் தொகுப்பை நிறைவு செய்தார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. இரு நாள்களாகத் தமக்கே உரிய எடுப்பான குரலில் அடுக்கு மொழியில் நகையும் சுவையுமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்த பாங்கினை அனைவருமே போற்றிப் பாராட்டினர்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “பிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை இரண்டாம் (இறுதிப்) பகுதி

 1. ஆர்வத்துடன் படித்தேன். மனம் மகிழ்ந்தது. இரட்டை மகிழ்ச்சி, என் நண்பர் அறிஞர் ழான் லூக் செவ்வியார் (Jean-Luc CHEVILLARD) அவர்களையும் கண்டு. சமீபத்தில் அவர் சென்னையில் நிகழ்த்திய உரை ஒன்றுக்கு அமோக வரவேற்பு.. அதை சேர்க்கவும்.

  இன்னம்பூரான்

 2. பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய ஐயா அவர்களுக்கு
  அன்பு வணக்கம்
  பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி.
  தாங்கள் உரைத்த பாராட்டுக்கு
  எளியேனின் உளங்கனிந்த நன்றிகள்.

  நனி நன்றியன்
  பெஞ்சமின்

 3. பேரா.பெஞ்சமின், தொடர்ந்த தமிழ்ப்பணிகளில் உங்களைக் காணுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

 4. ஓர் ஈழப் பார்வையாளர் – ஓர் உலகத் தமிழ் மகாநாடு

  முதன்முதலாக…
  உலகத் தமிழ் வரலாற்றில்…
  வருகின்ற சனிக்கிழமை…
  என கலைஞர் தொலைக்காட்சியில் கீழ்ஸ்தாயியில் ஆரம்பித்து மேல்ஸ்தாயியில் குரல் உயர்ந்து செல்லும் பொழுது சோபாவின் பின்னால் இருந்து நான் முன்னால் வருவதும், பின்பு அடுத்த வசனமாக விஜய் நடித்த வேலாயுதம் திரைப்பபடம் என்னும் பொழுது மீண்டும் சோபாவின் பின்னால் செல்வதும் அடிக்கடி நடப்பதுண்டு. இதே நிகழ்வை அண்மைக் காலங்களில் உலகத் தமிழ் மாகாநாடுகள் என்னும் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது நான் நினைப்பதுண்டு.
  இந்த மாதம் பாரிஸில் 7ம் 8ம் திகதி நடைபெற்ற உலக இலக்கியத் தமிழ் விழாக்கு மலேசியா, இந்தியா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும்; ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்;து கொண்ட பேராளர்களில் ஒருவனாக நானும் கலந்து கொண்டேன். குறிப்பாக மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இருவர், இந்தியாவில் இருந்து மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற இருவர், மூத்த எழுத்தாளர் சின்னப்பபாரதி, போலந்தில் இருந்து இரு தமிழ்ப் பேராசிரியர்கள் என அனைவரும் தமிழிற்காக தங்கள் சொந்த பணத்தில் விமானச்சீட்டு எடுத்து வந்திருந்தார்கள்.
  9.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த விழாவுக்கு நான் 9.15 மணிக்கு மண்டபத்துக்கு சென்ற பொழுது நிகழ்ச்சி அமைப்பாளர்களில் நால்வர் மட்டும் நின்றிருந்தனர். ”எத்தனை மணிக்கு சார் ஆரம்பம்” என்று கேட்ட பொழுது…”, ”10 மணிக்கு ஆட்கள் வந்த பின்பு தொடங்குவோம்” எனப் பதில் வந்தது.
  பின்பு மீண்டும் ஒரு தடவை அழைப்பிதழைப் பார்த்தேன். அதில் 9.30 மணியளவில் என்றிருந்தது.
  அப்பொழுது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ”காலையில் சந்திப்போம் என ஒரு தோட்டக்காரனுக்கு சொன்னால் அது நிலம் வெளிக்கும் அதிகாலையாக இருக்கும். அதனை கந்தோர் வேலைக்;கு செல்லும் ஒருவனுக்கு சொன்னால் அது காலை 8 மணியாக இருக்கும். அது போலத்தான் பாரீஸ் இலக்கிய அமைப்பின் கலாச்சாரம் என நான் கோப்பியை மெசினில் வேண்டிக் கொண்டு மற்றவர்களின் வரவுக்காக அமர்ந்திருந்தேன். 10…10½…11…என தொடர்ந்து இறுதியாக 11.30க்கு சுமார் 20 பேரார்களுடனும் 40 பார்வையாளர்களுடன் உலகத் தமிழ் இலக்கிய விழா ஆரம்பித்தது.
  நோர்வேயில் இருந்து வந்த திருமதி. வாசுகி ஜெயபாலனின் இனிய இறைவணக்கம் கிற்றார் இசையுடனும் இரு நடனத்துனும் இணைந்து மகிழ்வாக அமைய விழா ஆரம்பித்தது.
  வழமையான அல்லது அளவுக்கு அதிகமான புகழுரைகள், நிகழ்ச்சி தொகுப்பாளரின் நீ…ண்…ட…அறிமுகங்கள்… சில தரம் குறைந்த இரண்டாம் தர ஜோக்குகள், மேலாக அதிக பொன்னாடைகளுடன் விழா இரண்டு மணியளவில் மதிய இடைவேளையை அடைந்தது.
  அதுவரை விழாவில் பேசப்பட்ட ஒரே பொருள் அதிகமாக மக்கள் வரவில்லையே என்பதுதான். அப்பொழுது ஒரேயொரு விடயம் என் கவனத்தில் பட்டது. சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர் வசிக்கின்ற பாரீஸ் நகரில் இருந்து இருவர் மட்டும் வந்திருந்தனர். அதில் ஒருவர் எனக்கு பாரீஸில் பாதைகாட்ட வந்தவர். அங்கிருந்த மற்ற இலங்கைத் தமிழர்கள் மொத்தம் 5பேர் – என்போல் நிகழ்ச்சியில் கட்டுரை வாசிக்கவோ அல்லது புதுக்கவிதை வாசிக்க வந்தவர்கள்.
  இந்த உலகத் தமிழ் இலக்கிய விழாவுக்கு நான் அறிந்தவரை எந்த பகிஸ்கரிப்புகளோ எதிர்ப்புக் கையெழுத்து வேட்டை ஏதும் இல்லை. அதிக தமிழர்கள் கூடும் லாச்சப்பல் கடைகளில் இது பற்றி எந்த விளம்பர அறிப்புகளும் இருந்திருக்கவில்லை.
  அடுத்த நாள் நிகழ்ச்சியும் ஒரு மணிநேரம் பிந்தி தொடங்கியது – முதல்நாள் வந்த கூட்டத்தில் அரைப்பங்குடன்.
  அதிக பேரார்களுக்கு தாம் எந்த தினத்தில் எந்த நேரத்தில் பேசப்;போகின்;றோம் எனத் தெரியாமல் நின்றிருந்தனர். இந்த விடயத்தில் இலங்கை, சிங்கப்பூரில் நடைபெற்ற மகாநாடுககளின் பொழுது தயார்செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி நிரல்களையும் அவை பின்பற்றப்பட்ட வகைகளையும் பாராட்ட வேண்டும்.
  அடுத்த நாள் நிகழ்விலும் நடனம், புதுக்விதைகள் அவற்றிற்கான நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளரின் விளக்கவுரை மேலும் தனது இலக்கிய அனுபவம் சில என போய்க் கொண்டு இருந்தது.
  நிச்சயம் இரண்டு நாட்களிலும் தரமான சுமார் பத்துக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பதையும் திரு. சின்னப்பாரதியின் சங்கம்; நாவல் பிரான்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதனை ஒரு பிரான்சு எழுத்தாளர் நல்ல விதமாக விமர்சித்ததையும் இங்கு கட்டாயம் குறிப்பிடவேண்டும். ஆனால் அதனைக் கேட்பவர்கள்தான் மிக மிகக் குறைவு என்பது வேதனை.
  இவ்வாறு உலகத்தமில் மகாநாடு என்ற அறிவித்தல்களுடன் நடைபெற்றுக் கொண்டு போகுமாயின் ஓநாய் வருகிறது ஓநாய் வருகின்றது என்ற கதைபோல அடுத்த அடுத்த மகாநாடுகளில் இதற்கும் குறைவான மக்களே வருவார்கள் என்ற எனது ஆதங்கத்தை எனது கட்டுரை வாசிக்க முன்பாக மேடையில் சொல்லியிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களை விட அனைவரும் பாராட்டினார்கள்.
  ஒரு விழாவிற்கு சென்று வந்த பின்பு Highlight ஆக சில விடயங்கள் இருப்பது போல மனதுள் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகள் இருக்கும். அது போல கீழ்வருவனவும் சில:
  1.ஏன் உலகத் தமிழர் மகாநாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருக்கவில்லை?
  2. எதற்காக அடிக்கடி புகைப்படமோ அன்றில் வீடியோவோ எடுக்க வேண்டாம் என ஒலிபரப்பிக் கொண்டு இருந்தார்கள்?
  3. ஒரு விழாமலரோ அல்லது விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்போ இல்லாது கூடிக்கலையும் இதுபோன்ற இந்த விழாக்களின் மொத்தப் பயன்பாடு என்ன?
  மேலாக ஆங்காங்கே கேட்ட கொசுறுச் செய்திகள்:
  1. ”நாங்கள் இங்கு வர முதல் எங்கள் நாட்டில் பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் போட்டோ எல்லாம் பிடித்து வழி அனுப்பி வைத்தார்கள். ஆகவே வேறு ஏதாவது கூட்டத்தில் எடுத்த பெருந்தொகையான மக்களின் படங்களையும் இந்த விழாவுடன் இணைத்து விடுங்கள்.”

  2. ”உங்க புதுக்கவிதை சுப்பர் சார்! ர்p. ஆர். ராஜேந்திரர் கவிதை வாசித்தது போல இருந்தது”

  3. ”ஏன் சார் யாரும் யாரையும் பார்த்து புன்னகைக்கின்றார்கள் இல்லை. வாருங்கள் என்பதையும் வந்தமைக்கு நன்றி என்பதையும் மேடையில் மட்டும் சொல்லுகிறார்கள். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் நேரில் யாரையும் பார்த்து புன்னகைக்கின்றார்கள் இல்லை.”

  இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சியை தரம் தாழ்த்தி எழுதுவது இந்தக் கட்டுரையின் நோக்கமும் இல்லை. ஆனால் இனிவரும் காலங்களில் உலக தமிழ் அல்லது சர்வதேச தமிழ் என்ற அடைமொமிகளுடன் இவ்வாறு நிகழ்ச்சிகளை நடாத்தாமல்; இருப்தே தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டாகும்.

  அன்புடன்
  வி. ஜீவகுமாரன்
  – நினைவு நல்லது வேண்டும் –

 5. மிக்க நன்றி நண்பர் இளங்கோவன் அவர்களே!
  அன்புடன்

 6. திரு சீவக்குமரன் அவர்களுக்கு
  தங்கள் கருத்துகளுக்கும்
  அறிவுரைகளுக்கும் நன்றிகள்.

  அன்புடன்
  பெஞ்சமின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *