வல்லமையாளர்!
திவாகர்
தமிழன்னை அவ்வப்போது ஒரு சிலரை மட்டும் மிகச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாளோ என்று ஒவ்வொரு சமயம் எனக்குத் தோன்றும். தாய்க்கு செல்லப்பிள்ளை என்று சொல்வார்கள். அந்தச் செல்லப்பிள்ளைக்கு தாயின் கவனிப்பு தன்னை அறியாமலே சற்று கூடுதலாகக் கிடைக்கும். எல்லோர் வாயாலும் பேசப்படும் தமிழ், எல்லோராலும் எழுதப்படும் தமிழ் இந்தக் குறிப்பிட்ட சில செல்லப்பிள்ளைகள் கையாளும்போது மட்டும் இப்படி திகட்டாமல் இனிக்கிறதே.. என்ன காரணம் என்று யோசிப்பதால் இப்படியெல்லாம் தோன்றுகின்றதோ என்னவோ.
இந்த ஒரு சிலரில் கூட கொஞ்சம் வடிகட்டிப் பார்ப்பது உண்டு. (மனம் எப்போதும் எதையாவது இப்படித்தான் வேறுபாடாக சிந்தித்துக்கொண்டே இருக்கும்.) அப்படி வடிகட்டிப்பார்க்கையில் ஒரு சிலர் இன்னும் நம் மனதை இந்த தீந்தமிழால் ஆக்கிரமிப்பதை நாமே உணர்வோம். அந்த ஆக்கிரமிப்பு பலவகை பாதிப்புகளை நம்மில் ஏற்படுத்தும். அந்தத் தமிழைப் படித்துவிட்டு சிலசமயம் கள் குடித்தவர் போல மயங்கித் திரிவோம். நான் சொல்வது ஏதும் மிகையல்ல.. அப்படிப்பட்ட ஆக்கிரமிப்பைக் கொடுப்பதுதான் கோதை ஆண்டாளின் தமிழ்.
கோதை ஆண்டாளை நாம் தெய்வீகமாகவேப் பார்த்துப் பழகிவிட்டோமென்றாலும், அந்தப் பார்வையை சற்று வேறுபடுத்தி அவள் தமிழில் மட்டும் கவனம் செலுத்தினோமென்றால் அந்த ஆச்சரியம் அபரிமிதமாகத்தான் இருக்கும். இப்படி ஒரு தமிழா.. இப்படியும் தமிழையும் எழுதலாமா, அட இப்படியே தமிழை எழுதிக்கொண்டிருந்தால் உலகிலுள்ள அத்தனை பிற மொழிகளும் வெகு சீக்கிரம் மறைந்து எல்லோரும் தமிழ் ஒன்றேயே பேசுவார்களே எனும் மயக்கத்தைத் தரும் பாங்கு கோதைத் தமிழில் நிச்சயம் கிடைக்கும். அவள் எழுதியது என்னவோ 173 பாடல்கள்தான். ஆனால் எளிய தமிழில் இனிய தமிழில் நாவில் தேனாய் இனிக்க செவியில் கீதமாய் பாய ‘கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்று சாதாரணமாகவா இந்தக் கவியரசர் சொன்னார் என்ற கேள்வி எழும் அல்லவா.
ஆண்டாள் பாடல் தேனாய் இனிக்கிறது என்ற ஒன்று மட்டுமல்ல, அவளின் ஒவ்வொரு பாடலின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு புதிய பொருளைக் கொடுக்கக்கூடிய திறன உள்ளதை எல்லோருமே அறிவர். இன்னொரு முக்கிய செய்தியும் தரவேண்டும், ஆண்டாள் பாடல் படித்தால் ஏற்படும் இனிமை ஒருபக்கம் என்றால் அவள் பாடலைப் பற்றியோ, அவளைப் பற்றியோ எழுதும்போது அந்த எழுத்தைப் படிக்கும்போதே ஏற்படும் இனிமை இருக்கிறதே.. ஆஹா.. அற்புதம் என்று நமக்குள் நாமே சொல்லத் தோன்றும்..
அந்த அனுபவத்தை இந்த வாரம் நமக்குத் தந்திருப்பவர் திரு தமிழ்த்தேனீ அவர்கள். பொதுவாக தேனியிடம் இருந்து எப்போதுமே இனிமைதான் கிடைக்கும் என்பது இயல்பு. ஆனால் அந்த இயல்பையும் மீறிய ஒரு தனிச் சிறப்பு இங்கு இருப்பதைக் காணலாம். அந்த சிறப்புக்குக் காரணம் நான் ஏற்கனவே சொன்னதைப் போல இது ஆண்டாளைப் பற்றியது என்பதால்தான் என்று சொல்லவும் வேண்டுமோ
ஆழ்வாரே அறியாமல்
அரங்கனைப் பிடித்தாள்
மாலை பிடித்தாள்,
திரு மாலை பிடித்தாள்
திருமாலைப் பிடித்தாள்.
திருவரங்கன் தாள் பிடித்தாள்
அரங்கனே அறியாமல்
அரங்கனையே பிடித்தாள்
உள்ளிருந்தே அவள்
உலகையே பிடித்தாள்
கள்ளிருக்கும் மலர்ச்சோலை
பெரியாழ்வார் நந்தவனம்
உள்ளிருக்கும் துளசி மாலை
பெரியாழ்வார் தோளினிலே
பெண்மானாய் வளர்ந்தாள்
உரியவனாய் வந்தரங்கன்
அந்தரங்கம் புகுந்தாள்
மாலையென்ன காலையென்ன
முழுவதுமாய்ப் பிடித்தாள்
காலையிலும் மாலையிலும்
கணப் பொழுதும் நீங்காத
கள்ளியவள் ஆண்டாள்
கண்சிமிட்ட நேரமில்லை
கண் கொள்ளா காட்சிதனை
கண்டுவிட்ட ஒரு கணத்தில்
ஆண்டவனைப் பிடித்தாள்
இமைப்பொழுதும் நீங்காத
இணையுடனே சேர்ந்தாள்
அத்துடன் இந்த எளிய தமிழ் இனிப்பைக் கூட்டுகிறது. ஆண்டாளைப் பாடித் தமிழை சிறப்பித்த திரு தமிழ்த்தேனி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பாக அறிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் தமிழ்ச் சேவை மேலும் தொடரவேண்டும். தேனியாருக்கு எனது வாழ்த்துகள்!
‘செல்லப்பிள்ளை’ தமிழ்த்தேனீ ஶ்ரீவில்லிப்புத்தூர் மைந்தன். அவர் கோதாப்பிராட்டியின் செல்லப்பிள்ளை. அருமையான நண்பர். அவரையும், திவாகரையும் வாழ்த்துவதில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
‘திருப்பாவை’ என்கிற பேரின்ப வெள்ளத்திலே திளைத்து, மூழ்கி முத்தெடுத்த பாகவதோத்தமர்கள் பலர். மோஷ விரோதிகளான சகல பாபங்களையும் தீர்க்கும் ‘திருப்பாவை யநுசந்தானத்தை’ தினமும் அனுஷ்ட்டிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்தேனீ அவர்களின் தமிழ்த்தொண்டு மேன்மேலும் வளர ராஜ கோலத்தில் வீற்றிருக்கும் ரங்கமன்னார் சுவாமியைப் பிரார்த்திக் கொள்ளுகிறேன்.
‘தந்தை’ சொல்லை மந்திரமாகக் கொண்டு,
தன்னை ஈன்றெடுத்து எழுத்தாளனாக்கிய ‘அன்னை’யின் அறிவுரையை ஏற்று,
பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில்,
கோதைதமிழால் நம்மையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கிற ‘ஆண்டாளைப்’ பாடிப் பரிசு பெற்ற ‘திருவாளர் கிருஷ்ணமாச்சாரி’ என்கிற ‘தமிழ்த்தேனீ’ அவர்களுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.