நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்: தொடர்-14

0

பெருவை பார்த்தசாரதி

கடந்த பதின்மூன்று கட்டுரைகளிலும், தொடர்ந்து நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற பலரைப் படிப்படியாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தொடங்கி, நூல்கள், நூலகங்கள், நூலகர் இவர்களின் முக்கியத்துவத்தை பற்றி எழுதும்போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மேல்நாட்டு அறிஞர்களை விட, நம் நாட்டு அறிஞர்களையே அனேக இடங்களில் மேற்கோளாகக் காண்பித்து இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இலக்கியங்களிலும், நன்னெறி நூல்களில் வரும் தமிழ்ப் பாடல்களையும் சம்பவத்திற்குப் பொருந்துமாறு மேற்கோள் காட்டியிருப்பேன்.

நல்வாழ்க்கைக்கான வழிமுறைகள், தமிழ் இலக்கியங்களில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அவை பெரும்பாலும், பாடல் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. நாலடியார், நான்மணிக்கடிகை, நீதிவெண்பா, மூதுரை, திரிகடுகம், நன்னெறி, உலகநீதி, குறுந்தொகை போன்ற இலக்கியங்களுக்கெல்லாம் எண்ணற்ற எழுத்தாளர்கள் பலர் உரைநூல்களும், விளக்கங்களும் எழுதியுள்ளனர். இவற்றில், உதாரணமாகத் திருக்குறளுக்கு விளக்கவுரை தந்த எழுத்தாளர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். இதை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, இந்த இதழில் நண்பர்களைப் பற்றிய பல்வேறு சிந்தனைகளையும், முடிவில் “நண்பர்கள் இல்லையேல் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை” என்பதை பல்வேறு உவமைகளோடும், அனுபவ ரீதியாகவும் அறியலாம்.

பலருக்கு இளமைப் பருவத்தில், நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும் அல்லது கிடைக்காமலும் இருந்திருக்கலாம். நம்முடைய பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்து, கல்லூரி, அலுவலகம், பிரயாணம், அண்டை வீடுகளில் குடியிருப்பவர்கள், இப்படிப் பலர் நமக்கு நண்பர்கள் ஆகிறார்கள். நம்முடன் பழகுபவர்கள் அனைவருமே நமக்கு நெருங்கிய நண்பர்களாக அமைந்து விடுவதில்லை. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே நமது கவனத்தைக் கவருகின்றனர். முக்கியமாக, நமது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் ஒரு சிலரது நட்பையே நாம் பெரும்பாலும் விரும்புகிறோம் என்பது உண்மை. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி, நண்பர்களுடன் நாம் எப்படிப் பழக வேண்டும் என்ற நட்பு பற்றிய எண்ணங்களை, இது வரை எழுதாத எழுத்தாளர்கள் இல்லையென்றே சொல்லலாம். ‘அர்த்தமுள்ள இந்து மதத்தில்’ கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நண்பர்களுக்காக ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார்.

இன்றய உலகில் எல்லோராலும், “நண்பர்கள் தினம்” (Friendship Day) என்று கொண்டாடப்படுவது நாகரீகமாகக் கருதப்படுகிறது. அன்று நமக்கு நட்பு பற்றிய எண்ணற்ற குறுந்தகவல்கள் (SMS) நம்முடைய அலைபேசிக்கு வந்து கொண்டே இருக்கும். இது தவிர, மின் அஞ்சல் மூலமாகவும் நட்பு பற்றிய செய்திகள், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களின் பொன்மொழிகள் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொண்டு நண்பர்கள் தினத்தன்று கொண்டாடுகிறோம். இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, இக்கட்டுரைக்கு ஏற்ப, நண்பர்களின் வழிகாட்டுதலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் விஷயங்களை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள முயற்சி செய்வோம்.

நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை நண்பராக்கிக் கொள்வது பற்றிய செய்திகளே பரவலாக எல்லா நூல்களிலும் இடம் பெற்றிருக்கும். இந்த இதழில், நமக்கு இருக்கும் நண்பர்களின் நடத்தையை வைத்து அவர்களை எவ்வாறு நாம் அனுசரித்துப் போகிறோம் என்ற அனுபவ வார்த்தைகளை மட்டுமே இங்கே கூற விரும்புகிறேன். நாம் ஒரு துன்ப நிலையில் இருக்கும் போது, ஒரு நண்பன் நமக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதற்குப் பல மேற்கோள்களை அள்ளி அடுக்காமல், நடந்த ஒரு சில உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து நிகழ்ந்ததைக் கூறினால், தலைப்புக்குப் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

என்னுடைய நெருங்கிய நண்பர். இவர் ஒரு வித்தியாசமான நண்பர். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் உள்ளவர். தன்னைப் பற்றிய கருத்துகளை, பிற நண்பர்களிடம் கேட்டு, தவறுகளைத் திருத்திக்கொள்ளும் மனோபாவம் உள்ளவர். துரதிஷ்டவசமாக, இவருடைய வாழ்க்கையில், ஒரு ஜோதிடர் இவரது ஜாதகத்தைத் தவறாகக் (20 வயது இருக்கும்போது) கணித்து, நீங்கள் வாகனம் ஓட்டினால், மரணம் சம்பவிக்கும் என்று சொல்லி விட்டார், அதே பயத்தில் பயத்தில் அவரும் இனி வாகனம் ஓட்டக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார். அதே ஜாதகத்தைத் திரும்பவும் வேறு தேர்ந்த ஜோதிடரிமும் அவர் காண்பித்து உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பவில்லை. பிறகு தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் அறிவுறுத்தலின் பயனாக, 40 ஆவது வயதில், தைரியமாக வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்டு, இப்போது தனது வாகனத்தை தானே ஓட்டிச்செல்வதோடு மட்டுமல்லாமல், பிறரைத் தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டும் செல்கிறார்.

ஒரு மருத்துமனைக்கு அவசரமாகச் செல்வதாக இருந்தால்கூட, தன்னிடம் வாகனம் இருந்தும், ஆட்டோவை நம்பியும், பிறரது உதவியை நாடியிருந்த அவருக்கு அறிவுரை சொல்லி, தக்க சமயத்தில் நல்வழி காட்டிய பெருமை அவரது நண்பரைச் சேரும். அவருடைய பயத்தைப் போக்கி, அவருக்குப் பக்கபலமாக உறுதுணையாக நின்றவர் அவரது அருமை நண்பர். ஆபத்துக் காலத்திலும், சிந்தனை தெளிவில்லாத நேரத்திலும் நல்ல அறிவுரைகளை எடுத்துச் சொல்லி, அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்த அருமை நண்பரை அவரது வாழ்நாளில் என்றுமே உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்.

இப்படிச் சிலர் உண்மை நிலையறியாது, பிறர் கூறும் தவறான தகவல்களை நம்பி, வாழ்க்கையில் மோசம் போவதை நினைத்துப் பார்க்கும் போது, ஒரு திரையிசைப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பிவிடாதே”

இது போன்ற அருமையான பாடல் வரிகளை, மக்களின் மடமைகளைக் களைகின்ற வகையில் அன்றே, பட்டுக்கோட்டையார், மக்களின் செவிகளுக்கு விட்டுச் சென்றுள்ளார்.

ஒருவரை நாம் நண்பனாகத் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று வைத்துக்கொண்டால், அவருடன் பழகிய பின் அவரை எக்காலத்திலும் பிரியக்கூடாது என்கின்றன நன்னூல்கள். நன்றாக நட்புக் கொண்டிருந்த இருவர், ஒருவரை ஒருவர் பிரிகின்ற நிலை வந்து, பின்பு சேரும்போது அந்த நட்பிற்கு அவ்வளவு வலுவிருக்காது. ஆக நட்பில் விரிசல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நண்பனை ஆராய்ந்தறிந்து அவனோடு நட்புக்கொள்ளும் போது அது அவனது வாழ்வின் கடைசி அத்தியாயம் வரை அந்த நட்பு தொடர்ந்தால் அதுவே நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு சின்ன உதாரணத்தோடு இத்தகைய நட்பை அறிவோம்.

எண்பது (80) வயதான, எனது நண்பனின் தந்தை, தனது எண்பதாவது வயதைக் கொண்டாடும் போது, உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து விருந்து கொடுக்கிறார். அங்கே உறவினர்களை விட அவரது நண்பர்களை அதிக அளவில் காண முடிந்தது. நண்பர்கள் அனைவரும் தன்னுடைய சக குடும்பத்தோடு வந்திருந்து, வெகுமதி அளித்து, அவரிடம் ஆசி வழங்கிச் சென்றதை நினைக்கும் போது அவருக்கு இருந்த நண்பர்களின் பலத்தை அந்த விழாவிலே காண முடிந்தது. பொருட்செலவை கருத்தில் கொள்ளாது, எங்கிருந்தோ தொலைதூரத்தில் இருந்து நண்பர்கள் அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சகஸ்ரதாரியிடம் ஆசி பெற்றுச் சென்றதை நல்ல நட்பிற்கு அடையாளமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

உங்களுக்கு, எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள்?…….. என்று உங்கள் நண்பரில் யாரையாவது ஒருவரைக் கேட்டுப் பாருங்கள், உடனடியாக “எனக்கு நூற்றி இருபது (120) நண்பர்கள் இருக்கிறார்கள்!….” என்று சொல்வார்கள். அவர்களது பெயர்கள், முகவரி, தொலைபேசி எண் முதல் எல்லாவற்றையும் அவரால் கூறமுடியும். ஏனென்றால், தற்போது மின் அஞ்சல், தொலைபேசி மூலம், நமது நண்பர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டிருக்கிறோம். எண்ணற்ற நண்பர்களை நாம் பெற்றிருந்தாலும், இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதியங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்களின் குணாதிசயத்தையும் நடத்தையையும் வைத்து அவர்கள் நல்லவர்களா, தீயவர்களா என்பதை அனுபவப் பூர்வமாக உணரவும் நம்மால் முடிகிறது.

“உண்மையான நண்பர்கள்” எத்துணை நபர் நமக்கு இருக்கிறார்கள் என்பதை இப்பொழுது எளிதாக அறிந்து கொள்ள முடியும். அலுவலகத்தில் பணி புரிபவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் போது, அன்றைய தினம், எத்துணை நண்பர்கள் நம்மை வாழ்த்துகிறார்கள், அதில் எத்துணை நண்பர்கள் நம்முடைய பிரிவு உபசார விழாவிற்கு (Retirement Party) வருகை புரிந்தார்கள் என்பதை வைத்து நாம் எவ்வாறு நண்பர்களுடன் பழகி வந்தோம் என்பதைத் துல்லியமாக ஊகிக்க முடியும். ‘பிறந்த நாள்’ மற்றும் ‘திருமணநாள்’ போன்றவற்றை இன்று எல்லோரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மின் அசலிலும், முகநூலிலும் இந்தத் தகவல்கள் முன்பே பதிவு செய்யப்பட்டு நமக்குக் குறிப்பிட்ட அந்த நாளை ஞாபகப்படுத்துகிறது. அன்றைக்கு நமக்கு இருக்கும் அத்துணை நண்பர்களும் நம்மை வாழ்த்துகிறார்களா?…. மாறாக ஒரு சில நண்பர்களே இந்த விஷயத்தில் அக்கறை காட்டுகிறார்கள். அன்றைய தினம் அத்துணை நண்பர்களும் வாழ்த்தி விட்டால், கொண்டாடப்படுகிற அந்தத் ‘திருநாளுக்கு’ அதை விட வேறு பரிசளிப்போ, வெகுமதியோ தேவையில்லை என்பதே என் கருத்து. நூற்றுக்கும் அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள்!……. என்று சொல்லிக் கொள்வதில் பெருமை ஒன்றும் இல்லை, நமது தூய நட்பை, நமக்கு இருக்கும் நண்பர்கள் அனைவரும் புரிந்து கொண்டார்களா?…….உண்மை நண்பர்கள் அதில் எத்துணை பேர்? என்பதையெல்லாம் சோதிக்க இரு ஒரு சிறந்த உபாயம் என்று சொல்லலாம்.

ஒரு சில பொதுவான கருத்துக்களையும் இங்கே காண்போம். ஒரு பொது இடத்தில் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் எல்லோருமே நண்பர்களா என்பது நமக்குத் தெரியாத பட்சத்தில், அவர்களது நட்பைப் பற்றி, மேலோட்டமாக சிந்தித்து நாம் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, மேலெழுந்த வாரியாக அவர்கள் ‘நண்பர்கள் அல்ல’ என்ற முடிவுக்கு வருவதும், அவர்கள் இருவரும் சுமூகமாகப் பழகுவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் ‘நெருங்கிய நண்பர்கள்’ என்று நினைப்பதும் தவறான ஒன்றுதான். இத்தகைய எண்ணங்கள், பார்க்கின்ற ஒருவரின் கண்ணோட்டத்தைப் பொருத்தே அமைகிறது என்பதையும், அது தவறானது என்பதையும் புரிந்து கொள்ள முயலுவோம்.

அன்றாடம் அதிகாலையில் அலுவலகம் செல்லும் போது, கே.கே. நகர் பிரதான சாலையில், பலர் காலை நடைப்பயிற்சி செல்வதைப் பார்த்திருக்கிறேன். அதில் எனது நண்பர் ஒருவரும், அவரோடு இன்னொருவரும் தவறாமல் வருவார். இவர் நடை பயிலும் போது கூட வரும் மற்றோருவருடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டே நடந்து கொண்டிருப்பதைப் பார்ப்பேன். அவர்கள் அந்த இளங்காலையில், நடை பயிலுகிறார்களா?…. அல்லது சண்டை போடுவதற்காக நடக்கிறார்களா?…என்று நினைக்கத் தோன்றும். அவர் ஒரு தொழில் அதிபர். தொழில் விஷயமாகப் பங்குதாரருடன் வாக்குவாதம் செய்கிறார் என்றே பல சமயம் நினைத்ததுண்டு. ஒரு நாள் அதிகாலை, அந்த நண்பர்கள் இருவரும் ஒன்றாக மிகவும் சந்தோஷமாக இளநீர் அருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்ட நான், அன்றொரு நாள் அவர்கள் சண்டையிட்ட விஷயத்தைப் பற்றி அவர்களிடமே கேட்டேன். உங்கள் இருவருக்கும் சில சமயம் சண்டை, சில சமயம் குதூகலம் இது எப்படி சாத்தியம் என்று கேட்டேன். அதற்கு அவர் தந்த பதில்……. அன்று நடந்த சம்பவம் வாக்குவாதம் அல்ல என்றும், உலக விஷயங்களை அப்படி அலசிக் கொண்டிருந்ததை நான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். அவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்றும், மனது ஒன்று பட்டால் என்றுமே பிரிவில்லை என்பதையும் வெளிப்படுத்தினார். பிறரைப் பற்றிய மேலெழுந்த வாரியாக எழும் எண்ணங்களை வைத்து, ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பதை உணரமுடிகிறது.

இந்த வருடம் பிளஸ்2 (Plus 2) தேர்வுகளுக்கான முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை வரும். எந்தக் கல்லூரியில் சேருவது என்பது. மாணவர்களின் பெற்றோர்கள் நன்றாகப் படித்திருந்தாலும், தனது பிள்ளைகளுக்கு எது படித்தால் நல்லது என்பதை முடிவெடுக்க முடியாமல் திணருவதும் உண்டு. இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் ஒருவரது ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். இந்த நேரத்தில் நண்பர்கள் பலர் உதவிகரமாக இருப்பதை நாம் உணர முடியும். சில சமயம் கல்லூரிகளுக்குச் சிபாரிசு, உங்களுடைய பிள்ளைகளுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் இருக்கிறது, எந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்பன போன்ற விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதில் பெற்றோரைவிட அவரது நண்பர்கள் எடுத்துச் சொன்னால் மாணவர்கள் கண்டிப்பாகச் செவி சாய்ப்பார்கள். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

தனது பிள்ளைகளின் மதிப்பெண்களைச் சொல்வதிலும் எந்தக் கல்லூரியில் என்ன துறையைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதையும் கூட, மற்ற நண்பர்களிடம் சொல்லுவதில் ரகசியம் காக்கின்ற சில நண்பர்களையும் உங்கள் அனுபவத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தங்களுடைய பிள்ளைகள் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெறாமல் பெற்றோர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களது நண்பர்கள் சிலர் ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல்’ பேசுவார்கள்……….

என்னப்பா?…..உன்னோட பெண் மெடிசின்தான் படிப்பான்னு சொன்ன, இப்ப ஆர்ட்ஸ் காலேஜுல கூட இடம் கிடைக்காது போலிருக்கு?…..

கஷ்டப்பட்டு, ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தபிறகு, “நான் அப்பவே சொன்னேன் கேட்கல, ஒண்ணுக்கும் உருப்படாத சப்ஜக்ட் எடுத்துட்டியே, இதப் படிச்சா எங்கேயும் வேல கிடைக்காது’, ‘கட்டின பணமெல்லாம் வேஸ்டாச்சே’…..என்று அபத்தமாகப் பேசும் நண்பர்களும் உண்டு.

குறைந்த மதிப்பெண்களை எடுத்த ஒரு மாணவனிடம், அதிக மதிப்பெண் பெற்ற மற்ற மாணவர்களை ஒப்பிடுவதும் பெற்றோர்கள் செய்கின்ற தவறுகளில் ஒன்று. அந்த நேரத்தில் உண்மையான நண்பர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் நன்று.

எதிர்மறைப் பேச்சுகளால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை, மாறாக அது உண்மையான நட்புக்குக் களங்கத்தையே உண்டாக்கும். ஒரு துன்பம் என்று வரும்போது, அதை மேலும், மேலும் பெரிது படுத்தாமல் தம்மால் ஆன உதவியைச் செய்வதால் மட்டுமே நட்பை வலுவாக்க முடியும்.

ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலும் ஒரு குறிக்கோள் இருக்கிறது. அந்தக் குறிக்கோளை அடைய விதிப்படி சில இன்னல்களைச் அவர் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஏதோ இந்த உலகில் பிறந்து விட்டோம், எப்படியோ இந்த நரக வாழ்க்கையைக் கழித்தாக வேண்டும் என்ற சலிப்பு சிலரைத் தனிமையில் கொண்டு சென்று வாட்டி வதைக்கின்றது. அவருடைய வேதனையை வெளிப்படுத்த இடம் தெரியாது வாழ்நாள் முழுவதும் தனக்குத்தானே புலம்பிக்கொண்டே இருப்பார்கள். நண்பர்களைச் சந்திக்கத் திறாணியில்லாமல், சுய சிந்தனை மழுங்கிய நிலையில், ஆபத்துக் காலத்தில் யாரிடத்திலும் ஆலோசனை கேட்காமல் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவரிடம் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?…..என்று கேட்டால், “ஏதோ இருக்கிறேன்” என்ற விரக்தியான பதிலே வெளிப்படும். சற்று ஆராய்ந்து பார்த்தோமானால், இவர்களைச் சுற்றி நண்பர்கள் வட்டம் இருக்காது. இவர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைந்திருந்தால், இது போன்ற சலிப்பான எண்ணங்கள் எழ வாய்ப்பு இருக்காது. எண்ணங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலே மனம் விசாலமாகி விடும். பறவைகள் பலவிதம் என்பது போல், நண்பர்களும் பலவிதம் என்பதை அடுத்த இதழில் காண்போம்.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *