தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-5)

0

முகில் தினகரன்

வீடு திரும்பும் போது தரகர் பாதி வழியிலேயே கழன்று விட, பஸ்ஸில் தனித்து வந்தான் சுந்தர்.

ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவனின் பார்வை வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவுகள் வேறு எங்கோ பறந்து கொண்டிருந்தன. ‘எப்படிச் சமாளிக்கப் போகிறேன்?.. எப்படிச் சமாளிக்கப் போகிறேன்?”

ஒரு பஸ் நிறுத்தத்தில் வண்டி நிற்க, பல பேர் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பஸ் மீண்டும் கிளம்பும் போதுதான் சுந்தரின் கண்களில் அந்த போர்டு பட்டது.

‘இப்ராஹிம் மொபைல் சர்வீஸ்”

‘பளிச்‘சென்று அவன் மூளைக்குள் ஒரு மின்னலடித்தது.

‘இப்ராஹிம்!…. இப்ராஹிம்!” அந்தப் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

‘ஏன் அப்படிச் செய்தால்தான் என்ன?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன், ‘கரெக்ட்.. அதுதான் இப்போதைக்கு ஒரே வழி!… செஞ்சிட வேண்டியதுதான்!… ஆனா.. அதுக்குத் தங்கச்சியும்.. அம்மாவும் சம்மதிக்க மாட்டாங்களே!”

குழப்பமானான்.

‘ஏன்?… எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்?… சொல்லாமலே செஞ்சிட்டா என்ன?… பின்னாடி எப்பவாது தெரிய வரும் போது எதையாவது சொல்லிச் சமாளிச்சிட வேண்டியதுதான்!”

முடிவே செய்து விட்டவனை, வேறொரு குழப்பம் வந்து அரித்தது. ‘ஆமாம்.. இத்தனை பணம் திடீர்ன்னு எங்கிருந்து கெடைச்சதுன்னு அம்மா குடைவாங்களே!”

‘ப்ச்.. அது பரவாயில்லை.. கோயமுத்தூர்ல ஒரு சேட்டு கிட்ட வட்டிக்கு வாங்கினேன்னு சொல்லிடலாம்”

பஸ்ஸிலிருந்து இறங்கும் போது, அந்தக் காரியத்தை செய்து விடும் உறுதி அவனுக்குள் ஏற்பட்டிருந்தது. மறுநாளே அந்த இப்ராஹிமை நேரில் சென்று சந்தித்து இது பற்றிப் பேச வேண்டும்!..எனத் தீர்மானித்தவனாய் வீட்டை நோக்கி நடை போட்டான்.

அடுத்த நாள் காலை ஏழரை மணிக்கே அந்த இப்ராஹிமைத் தேடி அவன் குடியிருக்கும் ஏரியாவிற்குள் நுழைந்தான் சுந்தர்.

அந்தச் சிறிய தெருவில் மக்கள் நடமாட்டம் சற்றுக் குறைவாகவேயிருந்தது. வரிசையாக ஒவ்வொரு வீட்டையும் உற்றுப் பார்த்தவாறே நடந்தான் சுந்தர். ‘இந்தத் தெருதானே சொன்னாங்க.. ஆனா அவங்க சொன்ன அடையாளத்தோட இங்க ஒரு வீடுமே இல்லையே!”

திரும்பத் திரும்ப ஒரே தெருவில் நான்கு முறை நடந்தவன், ஓய்ந்து போய் தெரு முனையிலிருந்த இஸ்திரிக்காரனிடம் கேட்டான்.

‘இப்ராஹிம் பாய் வீடு.. .?”

‘மொதல்லியே கேட்க வேண்டியதுதானே தம்பி.. நானும் பார்த்திட்டேயிருக்கேன்.. சும்மா போறீங்க.. வர்றீங்க.. ஆனா பக்கத்துல வந்து கேட்க மாட்டேங்குறீங்களே!”

‘ஹி.. ஹி!” வழிந்தான் சுந்தர்

‘அதோ.. அந்த மூணாவது வீடுதான் இப்ராஹிம் பாய் வீடு!” கை நீட்டிக் காட்டினான்.

‘ரொம்ப நன்றிங்க!” சொல்லி விட்டு நடந்தவனை, ‘தம்பி.. சூதானமாப் போங்க தம்பி.. அங்க.. கன்னுக்குட்டி சைசுல ஒரு நாய் இருக்கு!…புடிச்சா ரெண்டு கிலோ கறி எடுத்துடும்!” எச்சரித்தான் அந்த இஸ்திரிக்காரன்.

‘நாய்கள் ஜாக்கிரதை” என்ற நாமகரணத்தோடு நின்ற அந்த கேட்டின் கொக்கியை நீக்கிக் கொண்டு தயக்கமாய் உள்ளே நடந்தான் சுந்தர்.

‘பொள்.. பொள்”

கர்ண கடூரமாய் ஒலித்த நாய்க் குரைப்பில் புல்லரித்துப் போய் நின்றவன், மெல்லத் திரும்பிப் பார்த்தான். நல்லவேளையாக அது கட்டப்பட்டிருக்க, ‘அப்பாடா.. தப்பிச்சேன்.. இல்லேன்னா.. ரெண்டு கிலோ கறிதான்.. தொப்புள் ஊசிதான்!”

‘யாரது..?” கேட்டபடியே வந்த அந்த மனிதன் வெற்றுடம்புடன் இருந்தான், வயது சுமார் முப்பத்தியொன்பது.. நாப்பது இருக்கும், அகண்ட முகம், அடர்த்தியான புருவம், தடித்த உதடுகள், மார்பெங்கும் ரோமக் காடு.

‘வந்து.. நான்.. இப்ராஹிம் பாயைப் பார்க்கணும்!”

‘ம்ம்..சொல்லுங்க.. நான்தான் இப்ராஹிம்”

திருச்செங்கோடு பகுதியில் நொடிந்து போன தறித் தொழலாளிகள் அனைவருக்கும் அந்த இப்ராஹிமை நன்றாகவே தெரியும். உண்ணும் உணவுக்கே வழயில்லாது.. குழந்தை குட்டிகளுடன் தற்கொலைக்குப் போன பல குடும்பங்களை அவன் காப்பாற்றியிருக்கிறான்.

பதிலுக்கு அவன் வாங்கிக் கொள்வது அவர்களின் ‘கிட்னி”யை மட்டுமே!

ஆம்!…அவன் ஒரு கிட்னி புரோக்கர்.

பெங்களுரிலிருக்கும் சில பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு இங்கிருந்து கிட்னிகளைச் சேகரித்து அனுப்பி, கமிஷன் பெறும் ஏஜண்ட்.

பத்திரிக்கைகளும்.. இதர மீடியாக்களும் இச்செய்தியை நாடெங்கும் பரப்பி நாறடித்த போதும், சிறிதும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் தன் ராஜபாட்டையில் அவன் பீடு நடை போட்டுக் கொண்டிருப்பதற்கு அரசியல் செல்வாக்கும் ஒரு காரணம்.

லஞ்சம் அவனது கேடயம்.. கரன்ஸி அவனது கை வாள்.

‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” தயக்கமாய்ச் சொன்ன சுந்தரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தான் அந்த இப்ராஹிம்.

முகத்தில் மூன்று நாள் தாடி, கண்களில் மிரட்சி, நடையில் தளர்வு, என்கிற நிலையிலிருந்த சுந்தரைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான் அவன், இளம் சிறுநீரகம் ஒன்று சந்தைக்கு வந்திருக்கின்றது என்பதை. உள் மனம் பெரிய கமிஷன் தொகையைக் கணக்குப் போட்டது.

 (தொடரும்)

படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_8910755_young-fashionable-stylish-man-with-a-short-beard-posing.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *