நான் அறிந்த சிலம்பு – 32

மலர் சபா

புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப்பலி கொடுத்தல்

மருவூர்ப்பாக்கத்தின் வீரமிகு மறவரும்
பட்டினப்பாக்கத்தின் படைக்கல வீரரும்
பெரிய பலிபீடமதன் முன்சென்று
“வீரமிக்க எம் மன்னர் தமக்கு
உற்ற துன்பம் ஒழித்திடுக”
என் வேண்டியே நின்றனர்.

“பூதத்துக்குத் தம்மைப்
பலிதானம் புரிந்தவர்
வலிமையின் எல்லையாக விளங்குவர்”
எனச் சூளுரைத்தனர்.

கல்வீசும் கவண்வீரர் சிலரும்
கருந்தோல் கவசம் அணிந்து
வேல்தாங்கிய வீரர் பலரும்
குழுமி நின்றனர் ஆங்கே.
ஆரவாரத்துடன் போர்க்களமதில்
வெற்றிகள் பல கண்ட அவர்
தத்தம் தோள்களைத் தட்டியே
ஆர்ப்பரித்து நின்றனர்.

கண்டவர் அஞ்சும் வண்ணம்
நுனி சிவந்த
சுடுகொள்ளி நிகர்த்த பார்வையுடன்,
“வெற்றி வேந்தன்
வெற்றியென்றும் கொள்க”
என்றே முழங்கித்
தமது கருந்தலையைத்
தம் கைகளாலேயே
நன்மை பொருந்த
வெட்டித்தான் வைத்தனர்
பலிபீடம்தன்னில்.

உயிர்ப்பலி கொண்ட அவ்வேளை
இடிமுழக்கமென ஒலித்தது
நாளங்காடிப் பூதத்தின் குரலது
நாற்றிசை மருங்கிலும்.

பலிபீடத்தில் வெட்டி வைக்கப்பட்ட
தலையற்ற உடல்கள்
வாயினால் உரைக்க இயலாமையால்
தம் தோளில் பூண்டிருந்த
மயிர்கள் நீக்கப்படாத முரசதை அறைந்து
“பலி தந்திட்டோம்; ஏற்றிடுக”
என்றே முழங்கிய ஆரவார ஒலிகளுடன்
முரசின் ஒலியும் சேர்ந்தே ஒலித்தது.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 88
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram11.html

படத்துக்கு நன்றி: http://www.pudhuvisai.com/2011/05/1000.html

Leave a Reply

Your email address will not be published.