இராமகிரி என வழங்கும் காரிக்கரை ஓர் தேவார(வைப்பு)த்தலம்

நூ.த.லோகசுந்தரம்
       
 
                        *இராமகிரி* என வழங்கும் **காரிக்கரை** ஓர் *தேவார(வைப்பு)த்தலம்*                                                     
 

1350 ஆண்டுகளுக்கு முன் அப்பரடிகள்ஞானசம்பந்தர்சுந்தரர் எனும் அருட்பெரியோரால் தோற்றுவிக்கப் பட்டதும், வரலாற்றாளரால் *இறைவழிபாட்டியக்கம்*என குறிக்கப்படுவதும், தமிழக சமுதாய மறுமலர்ச்சியின் கருவியாக விளங்கியதும் அப்பெருந்தகைகள் இயற்றி அருளிய இசைத் தமிழ் பாடல்களே ஆகும். அவை 10-11 நூற்றாண்டுகளில் சீர்மையுடன் தொகுக்ககப்பட்டு ‘தேவாரம்’ (தே=இறைமை, வாரம்=இசை அமைந்த பாடல்) என்னும் பெயருடன் புதிய பண்ணடைவுகளுடன் ஏற்றம் பெற்றுத் திகழ்வதை நாம் நன்கே அறிவோம். அத்தொன்மை தாங்கும் பாடல்களில் காட்டப் பெற்ற இறைவழிபாட்டுக் கருத்துக்கள், குறிக்கப்பெறும் பேறுபெற்ற வழிபாட்டுத் தலங்கள் பின் வந்தோரால் நேர்த்தியுடன் பேணப்பட்டு அவ்வியக்க மையமாகவே இன்றுவரை தொடர்ந்து திகழ்ந்து வருகின்றன.

அவ்வகைப் பாடல்கள் யாப்பினில் பொதுவாக பத்து பத்து (பதிகம்)என இசைத்தமிழ் பாடல்கள் வழி ஓர் தலத்தினை போற்றும் குறுநூலாக வைக்கப்பட்டுள்ளமைக் காணலாம். தொகுக்கப்பட்டு பண் அடைவு பெறும் காலகட்டத்தில் கிடைத்தவை எட்டாயிரம்+ (8274) ஆகும். இவைகளில் குறிக்கப்பட்ட பழமை வாய்ந்த தலங்கள் 275. இவைகளுக்கு குறைந்தது ஓர் பதிகமாவது கிடைத்துள்ளது. ஓர் தலம் தனக்கு என முழு பதிகம் கிடைக்காமல் ஆனால் அக்காலத்தே வழிபாட்டினில் இருந்துள்ள நூற்றுக்கணக்கான கோயில்கள் சிவனுறையும் தலமாக மற்ற தலப்பாடல்கள் ஊடே குறிக்கவும் பட்டுள்ளன. தம் பெயரிலேயே பதிகம் பெற்றவை ‘பாடல் பெற்றவை’ எனவும் பதிகம் ஏதும் கிடைக்காது குறிக்கப்படும் பேறு மட்டும் பெற்றவை ‘வைப்புத்தலம்’ எனவும் விளிப்பது சைவமரபு. இவ்வேறு பாடின்றி இருவகையும் ஒன்றாகவே கருதப்பட்டு மங்கலத் தலங்கள் (108) எனக்கொள்வது வைணவ திவ்யப் பிரபந்த மரபு. 

சென்னை மாநகரிலிருந்து நாகலாபுரம் வழி திருப்பதிக்கும் காளத்திக்கும் செல்லும் பெருஞ்சாலை வழியிலேயே தமிழக வடஎல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மேற்கு 15 கிமீ தொலைவினில், தற்கால ஆந்திர மாநிலத்தில் உள்ள ‘நகரி-புத்தூர்’ மலைத் தொடர்களின் கீழ்பால் அமைந்துள்ள, கிழக்கு முக சோமஸ்கந்த மூர்த்தம் போன்று காணும் 2500 அடிவரை உயரும் 3 சிகரங்கள் கொண்ட மலையின் தெற்கு அடிவாரத்தே அமைந்த ஓர் சிற்றூர் இராமகிரி‘ ஆகும். பெயருக்கேற்ப மிகவும் இரம்மியமாக செந்நெல்லும் கரும்பும் விளையும் வயல்கள் சூழ்ந்த புலத்தில் தொல்லியல் துறையினரால் பழமைக்காக பாதுகாக்கப்பட்ட ஓர் வரலாற்றுச் சின்னமாக அறிவித்த விளம்பரம் காட்ட, *வாலீசுவரர் * கோயில் எனும் பெயர் தாங்கும் கோயிலைத்தான் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தன் இடையாற்றுத் தொகை பதிகத்தில் பல்வேறு சிவனுறை தலங்களை தொகுத்துப் பாடுங்கால் 

                 கடங்கள்  ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்
                 விடங்களூர் திருவெண்ணி அண்ணாமலை வெய்ய
                 படங்கள் ஊர்கின்ற பாம்(பு) அரையான் பரஞ்சோதி
                 இடம்கொள்  ஊர் எய்தமான் இடையாறு இடைமருதே  7.31.3 

எனக்குறித்துப் போற்றியுள்ளார். அப்பெருந்தகையின் காலத்திற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக சூரிய வெப்பத்தினாலும் பனியினாலும் மழையினாலும் காற்றினாலும் அரிப்புண்டு உடைந்து சிதைந்த மலைக்குன்றுகளின் பாறைகள் சிறிய சிறிய பரலாக அவற்றின் காலடியில் வீழ்ந்து அவை மேலும் மேலும் ஓடும் மழை நீரால் ஊர்ந்து  கடமாக நகர்ந்து நிற்கும் (“கடங்கள் ஊர்”) பூகோள இயல்பையே தன் பாடல்களில் ஆவணப்படுத்தியள்ளார். இன்று அவ்வூர் அப்பாடல் படியே ஓர் குன்றுத் தொடரின் காலடி அருகே குன்றின் அடிவாரத்திலும் மலையிலிருந்து பெருகும் நீரோட்டம் மேற்கே பிச்சாத்தூர் அணைக்குப்பின் கலந்து தென் முகமாகத் திரும்பும் ஆரணிஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. 

சேக்கிழார் பெருந்தகை தன் திருத்தொணடர் புராணத்தில் திருநாவுக்கரசு நாயனாரின் வடநாடு நோக்கிய வழிபாட்டு செலவு பற்றி விளக்குங்கால் திருவாலங்காடு வணங்கிய பின் காளத்திமலை நோக்கிச் செல்ல வழியில் உள்ள திருக்காரிக்கரை பணிந்து போற்றினார் என்பார். 

           திருஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச்சிறப்பின்
           ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்குதமிழ்ப்
          பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியும்
          மருஆர்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார் 1612 

          பல்பதியும் நெடும்கிரியும் படர்வனமும் சென்(று)அடைவார்
         செல்கதி முன்அளிப்பார்தம் **திருக்காரிக்கரை** பணிந்து
         தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின் உம்பர்குழாம்
         மல்கு திருக்காளத்தி மாமலை வந்து எய்தினார்   1613 

மேலும், திருஞானசம்பந்தரின் தொண்டைநாட்டு வழிபாட்டு செலவு பற்றி பேசுங்கால், அருட்செல்வர் கண்ணப்ப நாயனாரை நினைந்து காளத்திமலை நோக்கி வழிபாடு செய்ய செல்லுங்கால்

                     ……….  ……….  ……….  ……….  

                பிஞ்ஞகர் வெண்பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள்
                 பணிந்து அணைவார் பெருகும் அன்பால்
                 காளத்தி மலை முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர்
                ஆட்டும் முதல்வேடர் கண்ணப்ப நாயனாரை
                உன்னி ஒளிர்காளத்தி மலை வணங்க உற்ற பெரு
                வேட்கைஉடன் உவந்து சென்றார்    2911 

              மிக்கபெரும் காதலுடன் தொண்டர் சூழ
                    மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
               தொக்க பெருவன் புலக்கான் அடைந்து
                      போகிச் சூலகபாலக் கரத்துச் சுடரும் மேனி
             முக்கண் முதல்தலைவன் இடம்ஆகி
                     முகில் நெருங்கும் **காரிகரை** முன்னர் சென்று
               புக்(கு)இறைஞ்சி போற்(றி)இசைத்து அப்பதியில் வைகிப்
                   பூதியரோ(டு)உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்   2912 

             இறைவர் **திருக்காரிகரை** இறைஞ்சி அப்பால்
                       எண்இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்
               நிறைஅருவி நிரைபலவாய் மணியும்பொன்னும்
                          நிறைதுவலை புடைசிதறி நிகழ்பலவாகி ……….  2913 

நீண்டு உயர்ந்த நகரி-புத்தூர்மலைத் தொடர்களின் முன் உள்ள ஒரு சிறு குன்றின் அடியில் நீர் நிறைந்து வழியும் எழில்மிகு வெண்தாமரைகள் பூக்கும் குளங்களுடன் கற்பணியினால் அமைந்த கருவறையும் ,*மரகதாம்பிகை* திருமுன்னும், பழமை சாற்றும் வேலைப்பாடுகள் அற்று உருண்ட வடிவின தூண்கள் தாங்கி நாற்புறமும் சூழும் அகன்ற சுற்று மண்டபங்கள் உடைய கோயிலாக இன்றைய காரிக்கரை தேவாரத்தலம் காண்கின்றது. சிறிதே தொடங்கப்பட்ட நிலையில் காணும் திறந்த வெளிச்சுற்று கோபுரம் சில நூற்றாண்டு முன் பணி தொடங்கி நின்றுபோன நிலையிலும் திருக்குளத்திற்கு வடமேற்காக சிதைந்த கற்பணிகள் ஊடேகலந்த சிலநூற்றாண்டு பழமையான வழிபாடற்ற சிறு கோயிலும் உள்ளன. உள்நுழை வாயில் மண்டப மேல்முகப்பினில் 12 ஜோதிர் லிங்கம் மற்றும் பஞ்ச பூதத்தலங்களை காட்டுவனவாகவும் தலப்பெருமான் *வாலீசுவரர்* என்பதால் இராமாயண வாலி தன் வாலால் திருமேனியை சுற்றும் கோலம் என்பன சுதையில் ஆன பெருங்கூடு/திருவாசி போன்ற அமைப்புடன் கட்டிய வரிசையும் உள்ளன. 

இந்நாள் தமிழகத்தில் பல கோயில்களில் காணும் மூலமூர்த்தியை விட பரிவார மூர்த்திகளின் சுற்றுக் கோயில்கள் மக்களால் பெரிதும் பேற்றப் பெற்று வருவதைப்போல் இங்கும் *பைரவர்* கோயில் பிரபல்யமான வழிபாட்டினில் இருக்கின்றது. 

குன்றின் மேல் 260 படிகள் உயரத்தில் முருகப் பெருமானுக்கு ஓர் சிறு புதுக் கோயிலும் உள்ளது. 

புகைப்படக் கொத்து மேற்குறித்தவற்றை எல்லாம் சீராகவே விளக்கும் என அமைகின்றேன். 

வழியில் உள்ள சுருட்டபள்ளியையும் வழிபட்டதால் அதன் படங்களையும் உடன் வைக்கின்றேன். 

இது ஓர் பழமையான தேவார வைப்புத்தலம் என மக்கள் அறிந்து வழிபட விளம்பரம் செய்யப்பட வேண்டும். சென்னை பெருநகருக்கு அருகுள்ளதாலும் ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள சுருட்டபள்ளி சிவத்தலத்தையும், மக்களுக்கு நன்கு அறிமுகமான ஆகாயக்கோனை அருவிபிச்சாட்டூர் அணை முதலிய எழில்மிகு இயற்கை காட்சிகள் காணவும் இணைத்து விடுமுறைநாள் சுற்றுலா திட்டமாக அமைய ஆவன செய்யப்படுங்கால் இத்தலம்  பெருமையும் சீர்மையும் சேர்ந்து மிளிரும். 

நகரி-புத்தூர் பகுதி அருகேயே பறவைவழி ஒரு சில கிமீ தொலைவில் அமைந்த ‘புண்ணியம்’, ‘நெதியம்’, ‘காளிங்கம்‘ என மேலும் சில தேவார வைப்புத்தலப் பெயருடைய திருவூர்களை அடுத்த கோயில் வழிபாட்டு சுற்றுலாவில் தேடிக்காண இருக்கின்றேன்.

                            ><><><><><><><><><><><><><><><><><><><><
பி.கு *வாலீசுவரம்*
தமிழகத்தில் உள்ள *வாலீசுவரம்* என்னும் விளிப்பெயர் தாங்கும் கோயில்களில் இராமாயண வாலி வழிபட்டதாகவே தல புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. இக்கருத்து இராமயணத்திற்கு மக்களுடன் இணைந்த நீங்காத தொடர்பினை பயன் கொள்ள எழுந்த மாற்றாகும். ஆனால் வாலி எனும் சொல் பலராமனைக் குறிக்கும். வால்=வெள்ளை சிலப்பதிகாரத்தில் வெள்ளைக்கும் (பலராமருக்கும்) அயிராவதத்திற்கும் கோட்டம் இருந்தது குறிக்கப்பட்டுள்ளது. திருமால் சிவபெருமானை  வழிபாடு செய்பவன் எனக்காட்ட எழுந்ததே இராமேசுவரம், பரசுராமேசுவரம், கச்சபேசுவரம், முண்டீச்சரம் (முண்டி= பிச்சை ஏற்றுண்ணும் பார்ப்பனன்=வாமனன்) எனும் கோயில்கள் அதுபோன்று பலராமனால் வழிபடப்படுபவர் எனும் பொருளில் எழுந்தது வாலீசுவரம்.

சிவபெருமான் ஆமை ஓடு அணிந்தவன், கொக்கின் இறகும், பன்றியின் கொம்பும் பூண்பவன் என்பதெல்லாம் திருமால் அவதாரங்களை காட்டு பவையே. சரபமூர்த்தமும் நரசிங்க அவதாரத்திற்காக எழுந்ததே. 

கீழேயுள்ள படங்கள் 29.07.12 (கட்டுரையாளரின் பிறந்த நட்க்ஷத்திர நாள்) அன்று நேரடி வழிபாட்டில் எடுத்தவை.

 

Leave a Reply

Your email address will not be published.