நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சுந்தரம் சில விஷயங்களை வீட்டில் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அவன் அலுவலகத்தில் வேலை நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. வேலை எவ்வளவு அதிகமிருந்தாலும் சுந்தரத்தால் சமாளிக்க முடியும். அது அல்ல பிரச்சனை. அவன் கீழ் வேலை செய்யும் வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடனைக் கண்டமேனிக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப் பட்டவர்களில் ஒருவர் கூட மாதத் தவணை ஒழுங்காகச் செலுத்தவில்லை. இதையெல்லாம் மேனேஜர் கவனத்துக்குக் கொண்டு செல்லுமுன் வேறு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல ஆடிட்டிங் வேறு வந்து கொண்டிருக்கிறது. அதில் எப்படியும் இவர்கள் எல்லாரும் மாட்டுவார்கள். அப்போது தன் பெயரும் சேர்ந்து அடிபடக் கூடாதேயென்பதுதான் சுந்தரத்தின் பயம். இப்படி சுந்தரம் யோசித்துக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தான் மேனேஜர் வந்தார்.

“என்ன? சுந்தரம் ரொம்ப டீப்பா வேலை செய்யறீங்க போலிருக்கு?”

“ஆமா! சார்! சாரி! அப்டியெல்லாம் இல்ல சார்! நீங்க கேட்ட ஃபைல் தானே சார் நானே எடுத்துட்டு வந்து தரேன் சார்!”

“சுந்தரம்! தெரியுமில்ல ஆடிட்டிங் வருது. இது இயர்லி ஆடிட்டிங். டெல்லியிலருந்து ஆட்கள் வராங்க. ஒவ்வொண்ணையும் துருவித்துருவிப் பாப்பாங்க. ஏதாவது தப்பு இருந்துது நாம குளோஸ் அவ்வளவுதான். தெரியுமில்ல? எங்கே உங்க அசிஸ்டண்ட்ஸ் வேலுமணியும்,கணேசனும்? எப்போ வந்தாலும் அவங்களைச் சீட்டுல காணறதேயில்ல?

“இப்பத்தான் டீ சாப்பிடப் போயிருக்காங்க சார்!”

“சுந்தரம்! நீங்க என்ன தான் மறச்சாலும் சில விஷயங்கள் வெளியில வந்து தான் ஆகணும்.”

“என்ன சார் சொல்றீங்க?”

“இல்ல! நீங்க வேலையே செய்யாத உங்க அசிஸ்டண்ட்சுக்கு சாதகமாப் பேசறீங்களே அதச் சொன்னேன். எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது சுந்தரம்”

“அப்டியெல்லாம் இல்ல சார்! அவங்க நெஜமாவே இப்போத்தான் டீ சாப்பிடப் போனாங்க!”

“எனக்குத் தெரியாம எதையாவது மறச்சு வெக்கறீங்களா சுந்தரம்?”

“என்ன சார்? இப்டிச் சொல்றீங்க? உங்களுக்குச் சொல்லாம எதையாவது இந்த ஆபீசுல மறைக்க முடியுமா?

“நீங்க லோன் பிராசசிங் செக்க்ஷன்லதானே இருக்கீங்க? அது சம்பந்தமான ஃபைல்ஸ் எல்லாம் கிளீனா இருக்கா?”

“அதுதான் சார் இப்போப் பாத்துக்கிட்டு இருக்கேன். நான் நடுவுல லீவுல போயிருந்த போது ஏகப்பட்ட குளறுபடி நடந்திருக்கு. சில பார்ட்டிங்களுக்கு சரியான பேப்பர்ஸ் இல்லாம கடன் கொடுக்கப் பட்டிருக்கு. இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கற ஃபைல்ல இருக்கற எல்லாமே வில்லங்கமான பார்ட்டிங்க தான். சிலர் இ.எம்.ஐ சரியாக் கட்டல்ல! சிலர் குடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு! அதனால் நம்ம கலக்க்ஷன் ரேட் பாதிக்கப் படுது சார்”

“இதப் பத்திப் பேசத்தான் நான் இப்போ வந்தேன். உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ! நம்ம விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ரொம்பத் திறமையானவங்க. அவங்க மூலமா நம்ம பேங்குல முறைகேடு நடக்கறதா எனக்குத் தகவல் வந்தது. நீங்க தானே லோன் இன் சார்ஜ். அதான் உங்களைக் கேக்கலாம்னு வந்தேன்.”

“சார்! என்னையா சந்தேகப் படறீங்க? “

“சேச்சே! என்ன சுந்தரம்! நான் போய் உங்களை சந்தேகப் படுவேனா? உங்களுக்கு இது சம்பந்தமா ஏதாவது தெரியுமான்னுதான் கேட்டேன்?”

“அதத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன் சார்!”

“நீங்க சொன்ன வில்லங்க பார்ட்டிங்களுக்கு லோன் சாங்க்ஷன் பண்ணிக் கையெழுத்துப் போட்டது யாரு?”

“சில கேசஸ்க்கு வேலுமணி போட்டுருக்காரு. இன்னும் சில கேசஸ்க்கு கணேசன் போட்டுருக்காரு சார்.”

“இவ்ளோ தெரிஞ்சும் நீங்க ஏன் இந்த விஷயத்தை என் கவனத்துக்குக் கொண்டு வரல்ல? நீங்க ஏன் அவங்களைக் காப்பாத்த முயற்சி செய்யறீங்க?”

“அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல சார்! பாவம் அவங்க பிள்ளைக் குட்டிக் காரங்க! நானே அவங்க கிட்ட சொல்லிப் பாக்கலாம்னு நெனச்சேன் அதான்”

“இதப் பாருங்க சுந்தரம்! இந்த விஷயம் ஹெட் ஆபீஸ் வரைக்கும் அரசல் புரசலாப் பரவியிருக்கு. நாளைக்கே ஆடிட்டிங்ல பிரச்சனைன்னு வந்தா மேலிடம் உங்களைத்தான் கேள்வி கேக்கும். அவ்வளவு ஏன் நானே உங்களைத்தான் கேப்பேன்.”

“என்ன சார்! என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? இருவது வருஷ சர்வீஸ் சார். என் பேர்ல ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது, என்னையே பயமுறுத்தறீங்களே”

“பயமுறுத்ததல சுந்தரம். நிலமையை எடுத்துச் சொன்னேன். மத்தவங்களைக் காப்பாத்தப் போயி நீங்க வம்புல மாட்டிக்காதீங்க அவ்வளவுதான் சொல்வேன். நீங்க ஏன் சார் எல்லாருக்கும் இரக்கப்படறீங்க? இப்போவாவது உண்மையைச் சொல்லுங்க !”

“அதாவது சார்! வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக்கிட்டுச் சில தகுதியில்லாதவங்களுக்கு லோன் குடுத்துருக்காங்களோன்னு எனக்குச் சந்தேகம். இது வெறும் சந்தேகம்தான் சார் எங்கிட்ட புரூஃப் எதுவும் இல்ல!”

“எனக்கும் இந்தத் தகவல் கெடச்சது. சரி. இந்த ஃபைலை இன்னிக்குள்ள பாத்து முடிங்க. எனக்கு ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணிக் குடுங்க. லேட் நைட் ஆனாலும் பரவாயில்ல! இருந்து முடிச்சிக் குடுத்துட்டுப் போயிடுங்க! நானும் இருக்கேன். என்ன சரிதானா?”

“கண்டிப்பா சார்” என்று சொன்னவனின் தோளைத் தட்டி விட்டுச் சென்றார் மேனேஜர். அதைத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் வேலுமணியும், கணேசனும். அவர்களுக்கு ஆத்திரமான ஆத்திரம், பொறாமை வேறு. சுந்தரத்திடம் இவ்வளவு நெருக்கமாகப் பழகும் மேனேஜர் தங்களைக் கண்டு கொள்ளக் கூட மாட்டேன்னென்கிறாரே என்ற வருத்தம் அவர்களுக்கு.

“என்ன சார்? ரொம்ப ஐஸ் வெக்கறாப் போலத் தெரியுதே? அப்டி நீங்க என்ன செஞ்சுட்டீங்கன்னு அவரு உங்க தோளைத் தட்டிக் குடுத்துட்டுப் போறாரு?”

“என்ன கணேசா! இது தெரியாதா உனக்கு? இப்போல்லாம் யாரும் வேலை செஞ்சு நல்ல பேரு வாங்கறதில்ல! போட்டுக் குடுத்துத்தான் நல்ல பேரு வாங்கறாங்க!”

“சீ! இதெல்லாம் ஒரு பொழப்பு!”

“இதப் பாருங்க வேலுமணி! அனாவசியமாப் பேசாதீங்க! நான் ஏன் உங்களைப் போட்டுக் குடுக்கணும்? “

“நாங்க போட்டுக் குடுக்கறதுன்னுதானே சொன்னோம். எங்களைன்னு சொன்னோமா? அப்ப நீங்களே ஒத்துக்கறீங்களா? எங்களைப் போட்டுக் குடுத்ததை?”

“எனக்கு யாரையும் போட்டுக் குடுக்கணும்கற அவசியம் இல்ல. உங்களப் பத்தி நான் சொல்லாமலே மேனஜருக்குத் தெரிஞ்சிருக்கு. இப்போ ஆடிட்டிங்க வேற வரப் போகுது. அதுல நீங்க மாட்டுனீங்க! நேரே விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் கேக்கற கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லணும். என் கூட இத்தனை வருஷம் வேலை செஞ்சவங்கங்கற உரிமையில இதை உங்க கிட்ட சொல்றேன். தயவு செய்து உண்மையை நீங்களே ஒப்புக்கிட்டுச் சரண்டர் ஆகிடுங்க! “

“நாங்க என்ன தீவிரவாதிகளா? உண்மையை ஒத்துக்கிட்டுச் சரண்டர் ஆக? நாங்க அப்டி ஒண்ணும் பெரிய தப்புப் பண்ணல்ல! ஒவ்வொருத்தன் ஒரு லட்சம் கோடி அடிக்கிறான். அவுங்களையெல்லாம் விட்டுவீங்க. நாங்க சில லட்சங்கள் அடிச்சா எங்களைப் பிடிச்சுப்பீங்க”

“ஏன் வேலுமணி நீ ஏன் சுந்தரம் சாரை நம்ம எதிரியாவே பாக்கறே? நம்ம கூட அவர் கூட்டுச் சேரட்டும் அப்புறம் பாரு அவர் நெலமய”

“அட! ஆமாம்! அதை நான் யோசிக்கவேயில்லையே ஏன் சார்? நீங்க எங்க கூட சேர்ந்துடலாம் இல்ல? அப்டிச் செஞ்சா மாசம் சுளையா நாப்பதாயிரம் எக்ஸ்டிரா வருமானம் வரும். இப்படி பழய பைக்குல ஆபீசுக்கு வர வேண்டாம். பொண்டாட்டிக்கு தங்க நகை நெறயப் பண்ணிப் போடலாம். மகனைச் சொந்தச் செலவுலயே அமெரிக்கா அனுப்பலாம் என்ன சொல்றீங்க?”

“ஆமா சார்! அது மட்டுமில்ல! நம்ம மூணு பேர்ல நீங்கதான் ரொம்பப் புத்திசாலி. நீங்க நெனச்சா இந்த ஆதாரத்தை எல்லாம் இல்லாமப் பண்ணிடலாம். அதுக்கும் ஒரு தொகை உங்களுக்குத் தனியாக் குடுத்திடுறோம்! என்ன சொல்றீங்க? எங்க கூட சேர்றீங்களா?”

கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்குக் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. “என்ன நெனச்சுக்கிட்டு இருக்காங்க இந்தப் பயலுங்க” என்று நினைத்தவன் கோபத்தை அடக்க முடியாமல் கேட்டே விட்டான்.

“நீங்க ரெண்டு பேரும் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? நான்லாம் ஒழுங்கான குடும்பத்துல பொறந்து வளந்தவன். இந்த மாதிரி வேலை பாக்குர எடத்துக்குத் துரோகம் எல்லாம் என்னால செய்ய முடியாது. நீங்க பரதேசிப் பசங்க! உங்களுக்கு நீதி நேர்மை நாணயம்னா என்னன்னே தெரியாது. இன்னும் பயங்கரமான கெட்ட வார்த்தையில திட்டறதுக்குள்ள இங்கருந்து போயிடுங்க! என் வாயில வார்த்தை வந்துதுன்னா அப்புறம் நிறுத்த முடியாது”

சத்தம் கேட்டு மேனேஜர் வந்தார். அவருக்கு தான் அசிங்கமாக சண்டை போடுவது தெரிய வேண்டாம் என்பதற்காக அவர்களோடு சிரித்துப் பேசுவது போல் நடித்தான் சுந்தரம். அதைப் பார்த்து விட்டு அவரும் ஒரு ஆச்சரியப் பார்வையை சுந்தரத்தின் மேல் வீசி விட்டு மற்றவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய் விட்டார்.அந்தச் செய்கை சுந்தரத்தின் மனத்தை ஏனோ குத்தியது. “ஒருவேள நம்மளும் இவங்க கூட கூட்டு சேந்துட்டோம்னு நெனச்சிப்பாரோ” என்ற பயம் வந்தது.

மேனேஜர் போனதும் வேலுமணி மீண்டும் ஆரம்பித்தான். அவனைத் தடுத்து நிறுத்திய சுந்தரம்,

“இதப்பாரு வேலுமணி நான் உங்க கூட சேரணும்னு கனவுல கூட நினைக்காதே! அதே மாதிரி நீங்க பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க! நீங்க கண்டிப்பா ஒரு நாள் மாட்டத்தான் போறீங்க! இதுக்கு மேல உங்க கூடப் பேச எனக்கு ஒண்ணுமில்ல” என்று சொல்லி விட்டு டீ குடித்து விட்டுக் கொஞ்சம் காலாற நடந்து விட்டு வரலாம் என்று எழுந்தான் சுந்தரம்.

அவன் போனதும் வேலுமணியும்,கணேசனும் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.

“டேய்!மணி அந்தாள் சொல்லிட்டுப் போறதக் கேட்டியா? நாம தப்ப முடியாதாம்ல?”

“நீ ஏன் கவலப்படற கணேசா? இந்த மாதிரி எத்தனை என்குவாரி கமிஷன் நான் பாத்திருப்பேன்? இதெல்லாம் தூசி! ஆனா இந்த சுந்தரத்துக்குத்தான் ஒரு வழி பண்ணனும்ட!”

“ஆமாடா! தான் தான் என்னவோ பெரிய காந்தி மாதிரி பேசிட்டுப் போறான். நம்மளயும் போட்டுக் குடுத்து மாட்ட வெச்சுருக்கான் அவனச் சும்மா விடக் கூடாது.

“நான் நெனச்சதையேதான் நீயும் சொல்ற! இரு அவனை ஒரு வழி பண்ணுவோம். எங்கிட்ட ஏகப்பட்ட ஐடியா இருக்கு! அவந்தான் ஒழுக்கம்னு நெனச்சுக்கிட்டு இருக்காருல்ல மேனேஜர் அதை முதல்ல மாத்தறேன்.”

“என்ன செய்யப் போற?”

“இப்ப பாத்தீல்ல? நம்ம கூட சுந்தரம் பேசிக்கிட்டு இருந்ததைப் பாத்ததும் அவர் முகம் எப்டி மாறுச்சி? அதையே வெச்சுத்தான் அடிக்கணும்.”

“புரியல்லியே?”

“உன் மரமண்டைக்கு என்னதான் புரியும்? மேனேஜர் சாதாரணமா போகும் போது வரும்போதெல்லாம் அவரு கண்ல படறா மாதிரி நாம சுந்தரத்தோடப் பேசணும். இத மொதல்ல செய்வோம் அப்புறமா பெரிய யோசனை ஒண்ணு வெச்சுருக்கேன்”

“நீ தான் கெட்டிக்காரனாச்சே! உன் கூட சேர்ந்த நாள்லருந்துதானே எனக்கு வசதியே வந்தது. எம்பொண்டாட்டிக்கு, பொண்ணுக்கு நகை வாங்கிக் குடுக்க முடியுது! நல்ல வண்டி வாங்க முடிஞ்சது, நாலு காசு வட்டிக்கு வெளியில குடுக்க முடியுது! உன்னை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்”

“அப்ப சரி வா! ரொம்ப வேலை பாத்துட்டோம் ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்!”

அவர்கள் போன பின் சுந்தரம் வந்தான். மேனேஜர் லேட்டாக வீட்டுக்குப் போனால் போதும் என்று சொல்லியிருந்ததால் அதைக் கல்யாணியிடம் சொல்லி விடலாம் என்று ஃபோனை எடுத்துச் சுற்றினான். வழக்கம் போல எங்கேஜ்டு. “சே! இவ யார் கூட பேசிட்டிருக்காளோ? எப்பப்பாரு ஃபோன்தான். நான் ஒண்ணும் சொல்லப் போறது இல்ல! அவளாப் புரிஞ்சாப் புரிஞ்சிக்கட்டும்” என்று நினைத்து வேலையில் ஆழ்ந்தான்.

அவன் அன்று வேலை முடித்துக் கிளம்பும் போது மணி பத்து. வண்டி வேறு தகராறு செய்ய மெக்கானிக்கிடம் வண்டியைச் சரி செய்து கொண்டு வீடு திரும்ப பதினொன்றாகி விட்டது. கதவைத் திறந்த கல்யாணி

“என்னங்க? இவ்ளோ லேட்? எனக்கு ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கலாம்ல?”

“ஆமா! ஃபோன் பண்ணிட்டாலும்? எப்பப்பாரு எங்கேஜ்டாவே வெச்சுருக்க? இதுல என்னத்தை ஃபோன் பண்ண?”

“நான் நெனச்சேன்! நீங்க ஒரு வேளை ஏதாவது கல்யாண ரிசப்ஷனுக்குப் போயிட்டு வர்றீங்க அதனால ஃபுல்லாச் சாப்பிட்டுத்தான் வருவீங்கன்னு நெனச்சேன். இருந்தாலும் இருக்கட்டுமேன்னு சப்பாத்தி 4 வெச்சுருக்கேன். என்ன சாப்பிடறீங்களா?”

“ஏதோ இருக்கறதைப் போடு”

“ஏங்க! நான் சொன்ன விஷயத்தை மறந்துட்டீங்க பாத்தீங்களா?”

“என்ன சொன்னே?”

“இன்னிக்கு சீக்கிரம் வாங்க! என் சித்தப்பா மகனுக்குப் பொறந்த கொழந்தையைப் பாக்கப் போகணும். அப்டியே ஜான்சான்ஸ் கிஃப்ட் செட் வாங்கிட்டு வாங்கன்னேன். மறந்துட்டீங்களா?”

“ஏண்டி ஆபீசுல இருக்கற டென்ஷன்ல எத்தனைதான் ஒரு மனுஷன் ஞாபகம் வெச்சிப்பான்? எல்லாம் நாளைக்கு நீயே வாங்கிக் குடுத்துட்டுப் பாத்துட்டு வா போதும்.”

“என்னங்க இப்டிப் பேசறீங்க? நாம் ரெண்டு பேரும் சேந்து போறதாதானே பேசினோம்”

“தயவு செஞ்சு சொன்னாப் புரிஞ்சிக்கம்மா! ஆடிட்டிங்வேற வருது. ஏகப்பட்ட குளறுபடி வேற என்னால சீக்கிரம்லாம் வர முடியாது. நீயே போம்மா ப்ளீஸ்”

“ஒங்களுக்கு எங்க ஒறவுகாரங்க வீட்டுக்கு வரதுக்குதான் முடியாது பிசி, குளறுபடி அப்டி இப்டீம்பீங்க. இதே உங்க உறவுக் காரங்களா இருக்கட்டும் ஓடிப் போயி முத ஆளா நிப்பீங்க”

“சரி அப்டியே வெச்சுக்கோ! இப்போ சோத்தைப் போடு! பசிக்குது!”

“ஏன் சாப்பாட்டுக்கு மட்டும் இங்க வரணும்? அதுவும் உங்க ஒறவுக்காரங்க வீட்டுக்கே போக வேண்டியது தானே! “

“என்னடி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க? இப்போ நான் ஒரு வேளை சோத்துக்கு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு முன்னால கையேந்தி நிக்கணும் அதானேடி உனக்கு வேணும்? ஆபீசுலர்ந்து டயர்டா வந்த மனுஷனை என்ன பாடு படுத்துற”

“எல்லாம் நான் செய்யறதையே சொல்லுங்க! நீங்க செய்யறது உங்களுக்குத் தெரியாது. கடசியில நீங்க ரொம்ப நல்லவரு! நாந்தான் சண்டக்காரி அப்டித்தானே”

“நீ என்ன வேணா நெனச்சுக்க. உன் கூட சண்டை போடற சக்தி எங்கிட்ட இல்ல! எனக்கு உன் சப்பாத்தியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். நீ வாயை மூடிக்கிட்டு என்னைத் தூங்க விட்டாப் போதும்” என்றவன் லுங்கியுடன் பெட்ரூமை நோக்கிச் சென்றான்.

கல்யாணிக்கு அழுகையாக வந்தது. “நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த மனுஷன் இந்தக் குதி குதிக்கறாரு? சாப்பிடாமக் கூடப் போறாரு. இருக்கட்டும் போ! காலயில பாத்துக்கலாம்” என்று நினைத்து அவளும் தூங்கப் போய் விட்டாள்.

ஆனால் அவள் நினைத்தது போல இல்லாமல் மறு நாள் சுந்தரம் மிகவும் மௌனமாக இருந்தான். அவன் மனம் முழுவதும் ஆபீஸ் பிரச்சனையே ஓடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு கல்யாணியோடு சண்டை போட்டதைக் கூட அவன் மறந்து விட்டான். ஆனால் கல்யாணியால் அதைத் தவிர எதையும் நினைக்க முடியவில்லை.

சுந்தரம் கிளம்பி ஆபீஸ் போன பிறகு கூட வெகு நேரம் அதையே நினைத்துக் கொண்டு கவலைப்பட்டபடி உட்கார்ந்திருந்தாள் கல்யாணி.

 

படத்திற்கு நன்றி: http://sandymacgillivray.wordpress.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *