காதலின் கையெழுத்து!

பாகம் பிரியாள்
கனவின் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த பொழுது,
காற்றின் கையெழுத்தைப் பூவின் இதழ்களிலும்,
அலைஅலையாய் கலைந்து கிடக்கும் நெல்லின் தலையிலும் பார்த்தேன்.  
ஏ(எ)ன் காதலைப்பற்றி கனவொன்றும் இல்லை ? என்று
ஓர் ஏக்கம் மனதின் ஓரமதில்  எட்டிப்பார்த்தது உண்மைதான். .
 
 இந்த ஏக்கத்தை எப்படியோ உணர்ந்து கொண்டதால்,
இன்று ஏனோ என் காதல் காற்றைப்போல்
இறுமாப்புடனும், பரபரப்புடனும் நடந்து கொண்டது.
எல்லைகளின்றி அங்கும் இங்கும் சென்றதோடு நிற்கவில்லை
யாரும் அறியாமல் பதுக்கி வைத்த ஆசைகளையெல்லாம்
அம்பலப்படுத்திவிட்டுத்தான் செல்வேன் என்று அடம் பிடித்து
ஒற்றைக்காலில் நின்றது. கெஞ்சிக் கூத்தாடியபோதும் அது  
எதற்கும் மசியாமல் படுக்கையறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டது.
காதலையும், அது தந்த கண்ணிர்க் கறைகளையும், ஒளித்து வைத்திருந்த
கட்டம் போட்ட தலையணை உள்ளே அல்லவா இருக்கிறது?    
முதலில் சிறிது நேரம் அமைதி. பிறகோ சரசரவென்று சத்தம் பல .
நெடு நேரம் ஆனதால் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்கும் அளவிற்கு
நீண்ட அமைதி என்னை கட்டிப்போட்டு வைத்திருந்தது.
விசுக்கென்று கதவு திறந்ததும் உள்ளே பாய்ந்த என்னை
வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது ஓர் காட்சி!
விருப்பமதை எப்படிச் சொல்வேன் என்று குழம்பிய குப்பலிலிருந்து,  
விசிறி வாழை போல், என் நினைவுகளை அழகாய் பரப்பி வைத்திருந்த
காதல், போகிற போக்கில், எங்கள் இருவருக்கும் மட்டுமே புரிகிறாற் போல்,
கையெழுத்து ஒன்றையும் போட்டு விட்டுச் சென்றிருந்தது!   
 
படத்துக்கு நன்றி

http://carriefellfineart.com/carrie-fell-gallery/shop-carrie-fell-gallery/signature-of-love/

Leave a Reply

Your email address will not be published.