இலக்கியம்கவிதைகள்

இரவு

வருணன்

இரவு

01.
காலத்தச்சன் விரல்களுக்கிடையில்
பற்றிய தூரிகையில்
ஒரு அடர்கனவின்
நிழல் தொட்டு
வரைய ஆரம்பித்த
அந்தியின் படம்
இரவானது.

02.
ஒவ்வொரு கணமும்
ஒரு வாழ்க்கை
ஒவ்வொரு கனவும்
ஒரு விதை
ஒவ்வொரு இரவும்
ஒரு கவிதை.

03.
ஒரு இரவினைப் புரிதல்
அத்துணை எளிதானது.
யாருடைய உதவியை நாடவோ,
எப்புத்தகத்தையும் துணைக்கு
வருமாறு கோர வேண்டிய
அவசியங்கள் இல்லை..
ஒரு நங்கையைக் காட்டிலும்
இரவினைப் புரிதல் எளிதானது.
விரவும் இருட்டில் ஏதும் செய்யாது
ஏதும் நினையாது
சும்மா இருப்பதே போதுமானது.
இருளும் நீங்களும் ஒன்றெனக் கலக்கும்
தருணம் தொட்டு மெல்ல
தன்னைப் புரிய வைக்கும் இரவு.
ஆனால் மகா எளிமையைப்
புரிவதுதான் எத்துணை கடினம்!
சும்மா இருப்பதும் தான்.

04.

சிந்தனை வடிந்த
இரவொன்றில்
காற்றில் படபடக்கிறது
வயிறு நிறைந்த காகிதமொன்று
மூடிய எழுதுகோலுக்கும்,
கவிழ்க்கப்பட்ட மூக்குக் கண்ணாடிக்கும்
அடியினில்…

எரிந்து கொண்டேயிருக்கிறது
மேசை விளக்கு
படுக்கையில் நான்
அணைந்த பிறகும்.

05
உனக்கும் எனக்குமிடையேயான
விழி வழி தொடர்பில்
நகரும் பகல்
வார்த்தைகளால் பரிமாறிட முடியாததாய்
மௌனத்தில் கரைகின்றது அன்பு
மொழிகள் மரித்த மௌனத்தின் மேட்டில்
வெளிச்சத்தை அடைகாத்து
இருள் போர்த்தி உறங்க ஆரம்பிக்கிறது
நம் இரவு.

படத்துக்கு நன்றி

http://photo.accuweather.com/photogallery/details/photo/63965/The+night+sky+looks+like+art+1

 

                  

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க