தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-6)
முகில் தினகரன்
சாதாரணமாகத் தன்னைச் சந்திக்க வரும் ஏழைத் தறித் தொழிலாளிகளைத் தன் பேச்சென்னும் வலையை வீசி, வசீகர வார்த்தைகளால் மயக்கி, அவர்களாகவே “அப்படின்னா நான் கூட என் கிட்னியைத் தானமாய்த் தருகிறேனே! எனக்கும் ஏதோ கொஞ்சம் பணம் வாங்கிக் கொடேன்!” என்று சொல்ல வைத்து விடுவான். அப்படிப்பட்டவன், வறுமையின் பிரதிநிதியாய் வந்து நிற்கும் சுந்தரை விட்டு விடுவானா?
“சொல்லு தம்பி! என்கிட்ட என்ன உதவி ஆகணும் உனக்கு? .சொல்லு! என்னால முடிஞ்சதைச் செய்யறேன்!. கஷ்டப்படுற சக மனுசனுக்கு உதவி செய்யறதுக்குத்தான்பா இந்த மனுசப் பிறப்பே!”
“அய்யா, ஆவணில தங்கச்சிக்கு கல்யாண தேதி குறிச்சிட்டேன்! தறிகளை வித்துப் பாதிச் செலவுக்கு ஏற்பாடும் பண்ணிட்டேன்! மீதிக்குத்தான் முழிச்சுட்டு நிக்கறேன்!”
அவன் அதிர்ந்தவனைப் போல் நடித்து, “என்னது தறிகளை வித்துட்டியா? என்ன தம்பி, என்ன காரியம் பண்ணிட்டே? உனக்குச் சோறு போடுற தறிகளை வித்துட்டு நாளைக்கு நீ எப்படிப்பா ஜீவனம் பண்ணப் போறே? உனக்கும் ஒரு கல்யாணம் காட்சின்னு ஆகி நீயும் பொண்டாட்டி குழந்தை குட்டிகளோட வாழ வேண்டாமா? அடடே மொதவே என்கிட்ட வந்திருக்கக் கூடாதா?”
“என்னைய விடுங்கய்யா. நான் என்னவோ பண்ணிக்கறேன் எப்படியோ வாழ்ந்துக்கறேன்! மொதல்ல தங்கச்சி கல்யாணம் முடியணும்!”
“நீ சொல்றதுதான் ரொம்பச் சரி தம்பி! அப்பா இருந்திருந்தா அவரே பண்ணியிருப்பார். அவர் இல்லாததினால பாவம்.அந்தச் சுமை உன் தலைக்கு வந்திட்டுது! ஹூம் உன் நிலைய நெனச்சா எனக்கே நெஞ்சு வலிக்குதப்பா!” தேன் குடம் குடமாய்க் கொட்டியது அவன் பேச்சில்.
“அதுக்குத்தாங்கய்யா உங்ககிட்ட வந்திருக்கேன்! என்னோட கிட்னிய எடுத்துக்கிட்டு.”
“அதுக்கென்ன? பண்ணிட்டாப் போச்சு! உயிரைக் குடுத்தாவது தங்கச்சி கல்யாணத்தை நடத்துவேன்கற மாதிரி நீ உன் கிட்னியைக் குடுத்து நடத்தறேன்கறே? தப்பில்ல தப்பில்ல! யாருக்காகச் செய்யறே? உன் கூடப் பொறந்தவளுக்குத்தானே செய்யறே?”
“அய்யா எனக்குள்ளார ஒரு பெருத்த சந்தேகம் இருந்துக்கிட்டேயிருக்கு! கேட்கலாமா?”
“தாராளமாக் கேட்கலாம்!”
“வந்து நான் இன்னமும் கல்யாணமாகாத ஆளு! நான் பாட்டுக்கு ஒரு வேகத்துல இப்ப இதைச் செய்யப் போக, நாளைக்கு இதுவே என்னோட மணவாழ்க்கைய அதாவது வந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா” நேரடியாகச் சொல்ல இயலாமல் சுந்தர் திக்கித் திணற,
“த பாரு தம்பி நீ என்ன கேட்க நினைக்கறேன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. நிச்சயமா நாளைக்கு இது உன்னோட தாம்பத்ய வாழ்க்கைய எந்த விதத்திலும் பாதிக்காது போதுமா? இதுக்கும் தாம்பத்ய வாழ்க்கைக்கும் சம்மந்தமேயில்லை! ஒரு உண்மை தெரியுமா தம்பி உனக்கு? ஒரு மனுசன் உயிர் வாழ ஒரு கிட்னியே போதும்!”
“தெரியும் நானும் கேள்விப் பட்டிருக்கேன்!”
“பிறகென்னப்பா.சந்தேகம்?” என்ற இப்ராஹிம் சில நிமிடங்கள் யோசித்து விட்டு, “தம்பி நீ பேசுறதைப் பார்க்கறப்போ உனக்கு என்னமோ முழுச் சம்மதமில்லை போலிருக்கு! வேண்டாம்பா அரை மனசோட செய்ய வேண்டாம்! விட்டுடு! என்ன உன்னைய மாதிரி இளவயசுக்காரங்களோட கிட்னின்னா.. நல்ல வெலை போகும்! கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை கூட கெடைக்கும்! உனக்கும் நல்ல உபயோகமா இருக்கும்னு பாத்தேன்! ” தன் பணத் தூண்டிலை அவன் வீச, அதில் சுந்தர் என்னும் மீன் எளிதாய்ச் சிக்கியது.
“அய்யா எனக்கு முழுச் சம்மதம்! எங்க வரணும்? எப்ப வரணும்! சொல்லுங்க ”டாண்”னு வந்துடறேன்!”
“தம்பி அதுக்கு பெங்களுரல்ல போவணும்! போனா வர நாலஞ்சு நாளாகும்! ஆனா வரும் போது சொளையா கைல லட்ச ரூபாயோட வரலாம்!”
“பெங்களுரா? அதுவும் நாலஞ்சு நாளா?.” தயங்கினான் சுந்தர்.
“என்னப்பா தயங்கறே?”
“இல்ல அம்மாகிட்டேயும் தங்கச்சிகிட்டேயும் என்ன சொல்லிட்டு வர்றதுன்னு யோசிக்கறேன்!”
“பணம் ஏற்பாடு பண்றதுக்காக வெளியூர் போறேன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே?” இவன் கிட்னியைக் கொண்டு போனால் தனக்கும் ஒரு பெரிய தொகை கமிஷனாகக் கிடைக்குமென்கிற ஆசையில் சுந்தரைத் தூண்டினான் அந்த கிட்னி ஏஜெண்ட்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி:http://www.stockphotopro.com/photo_of/view/AKPTNP/side_view_of_a