மலர் சபா

புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

மண்டபத்தில் பலி இடம் – பகுதி 1

தமிழகத்து மருங்கில்
சேரரும் பாண்டியரும்
தம் ஆணைக்கு அடங்கிய நிலையில்,
மேற்கும் தெற்குமாகிய இருதிசைகளிலும்
தம்மை எதிர்த்தே போர்புரியும் மன்னர்
எவருமில்லாத காரணத்தால்
போர்த்தினவும் செருக்கும் நிறைந்தவன்
கரிகால் சோழன்.

அவன் தானும்
புண்ணிய திசையெனப் பெரியவர் போற்றிடும்
வடக்கு திசையது சென்று
அங்கேயாவது பகை பெற வேண்டி
போர்புரிய ஆசைகொண்டே
வாளுடன் குடையும் முரசும்
முன்னே சென்றிட
‘எம் வலிமிக்க தோள்கள்
வடதிசையிலாவது பகைவரைப் பெறுக”
என்று தெய்வத்திடம் வழிபட்டேதான்
ஒரு நன்னாள் அதனில் புறப்பட்டனன்.

அங்கே நின்றிட்ட இமயமலை
அவனைத் தடுத்தேதான் நின்றிட்டது.
“குறைந்திடாத என் ஊக்கமதனுக்குத்
தடை விதித்திட்டதே இம்மலை”
எனச் சினந்தனன் கரிகாலன்.

இமையாத கண்கொண்ட தேவர் வாழும்
அவ்விமயமதன் உச்சி தன்னில்
பொறித்து வைத்தனன்
தம் புலிச்சின்னம் அதை.

இமயத்துக்கு அப்பாலும் சென்றிட எண்ணியவன்
எண்ணமதைக் கைவிட்டே
சோழநாடு திரும்பினன்.

(கரிகாலன் சாத்தன் எனும் தெய்வம் தனக்குத் தந்த செண்டு என்னும் படைக்கலத்தால் இமயத்தை அடித்துத் திரித்து அதனையே புலி போலப் பொருத்தினான் என்றொரு வழக்குண்டு.)

திரும்பிய வழியில் திறைகள் பலதந்து
அயல்மன்னர் பகைமன்னர் நட்புமன்னர்
பலரும் மகிழ்ந்தனர்.

கடலை அரணாக உடைய
பகையும் நட்பும் இல்லா அயல்மன்னன்
வச்சிரநாட்டு வேந்தன் தந்தது
முத்துப்பந்தல்;
வாட்போர் வல்லவன்
மகதநாட்டு மன்னன்
போர் புரிந்து தோற்றுத் தந்தது
பட்டி மண்டபம்.
மனம் உவந்த நல் நண்பனாகிய
அவந்தி நாட்டு வேந்தன் தந்தது
அழகிய மிகவும் உயர்ந்த
வேலைப்பாடுகளுடனான
தோரண வாயில்.

பொன்னாலும் மணியாலும்
புனையப்பட்டுப் பொலிந்தன
இப்பரிசில்கள் மூன்றும்.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 89 – 90
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram11.html

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 91 – 105
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram12.html

படத்துக்கு நன்றி:
http://commons.wikimedia.org/wiki/File:Karikala_Cholan.JPG

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *