இந்த வாரம் வல்லமையாளர்

 

திவாகர்

    சென்ற வாரம் எழுத்தாளரான திரு இரவி வேணு, தான்  எழுதி வருகின்ற ராமாயணக் கதைக்கான ஒரு ‘டிரெய்லரை’ விடுதலை செய்தார். அதைக் காண நேர்ந்தது. அத்துடன் அவர் எழுதிய ‘ஐ-ராமா, ஏஜ் ஆஃப் சீர்ஸ்’ (முதல் பாகம்) எனும் பெயருள்ள ஆங்கில ராமாயணக் கதையையும் படிக்க நேர்ந்தது.

    இராமன் கதையை வால்மீகியைத் தொடர்ந்து பலர் பலவிதமாக எழுதியுள்ளார்கள். நான் இராஜாஜி அவர்கள் எழுதிய இராமாயணத்தை நிறைய தடவை படித்திருக்கிறேன். காரணம், அவர் கடைசி கால கட்டத்தில் அவர் கையால் பெற்ற புத்தகம் என்ற பெருமை அவ்வப்போது என்னை அந்த ராமாயணப் புத்தகத்தை முதலிலிருந்தே படிக்க வைக்கும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அப்போதுதான் படிக்க ஆரம்பிப்பது போல படிக்கும் உணர்வும் உண்டு.

    சில ராமாயணக் கதைகள் வால்மீகியையும் மீறும் தோற்றத்தை ஏற்படுத்தும். வால்மீகியில் இல்லாத சில சம்பவங்களும், கூட சேர்ந்து கொள்ளும். கமப ராமாயணமும், துளசி ராமாயணமும் சில சேர்க்கைகள் உண்டு என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் எழுதிய எல்லோரையுமே ஸ்ரீ ராமன் எனும் தெய்வீக புருஷனின் மகிமை அப்படியே ஆட்டுவிக்கும். மகா ஞானியான ராஜாஜி கதையை முடிக்குங்கால் இராமன் எனும் மகாமனிதனைப் பிரிய மனமில்லாமல் முடித்தார் என்பதையும் அங்கே குறிப்பிடுவார்.

    இராமனின் மகிமை அப்படி. ஒரு மனிதன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் பழக வேண்டும், எப்படி வாழ வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று மனித வாழ்வுக்கு ஒரு அடிப்படையாகத் திகழ்ந்தவன் ஸ்ரீஇராமன்..

    ராமச்சந்திரனையும் இலக்குவனையும் தாடகை வதம் செய்த கையோடு மிதிலாபுரி அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர். ஏனெனில் அங்கே இராமனுக்கு ஒரு முக்கிய நிகழ்வு நடக்கவேண்டியது இருக்கிறது. ஆனால் இதைப் பற்றி ஏதும் அறிவிக்காமல் இந்த சகோதரர்களை அழைத்துச் செல்கிறார் முனிவர். அதிலும் சிவதனுசுவை முறிக்க வேண்டும். எப்பேர்பட்ட சிவ தனுசு அது? 5000 பேர் அதை எடுத்து வருவார்கள். யாராவது ஒரு அரசர் முயற்சி செய்வார் தோற்றுத் தலைகுனிந்து வெளியேறுவார். அப்படிப்பட்ட சிவதனுசு இராமனுக்காக மறுபடி எடுத்து வரப்படுகிறது. அந்த சமயத்தில் விசுவாமித்திரர் அந்த பாலகன் ராமனைக் காண்பித்து ராமன் வில்லை முறிக்க அழைத்து வந்திருப்பதாகச் சொல்வார். உடனே ஜனகர் திகைத்து நிற்பார் (ஜனகர் சாதாரணப்பட்டவர் இல்லவே இல்லை. மிகப் பெரிய ஞானி) அப்படிப்பட்டவர் ராமனைப் பார்த்து, இவனா, இந்த மானிடனா சிவதனுசுவை முறிக்கப் போகிறார்? போகட்டும், இவர் முறித்தால் ராமனுக்கு தன் பெண் சீதையை மணமுடிப்பதாக நம்பகமில்லாமல் பதில் உரைக்கிறார். இராமன் உடனே அதை எடுக்க  குருவான விசுவ முனியை நோக்குகிறான். ‘முனிவரே தாங்கள் விருப்பப்படி இந்த வில்லினை முறிக்கிறேன்’ விசுவாமித்திரர் தலையசைப்பார். அடுத்த கணம் இராமன் வில்லை எடுத்ததும் தெரியாது, அதை நிமிர்த்தி, நாணை வளைத்து முறித்ததும் யாரும் பார்க்கமுடியாத வேகத்தில் அந்த தனுசுபங்கம் நிகழ்ந்து விடுகிறது.

    ஜனகருக்கு மறுபடியும் வியப்பு.  புளகாங்கிதம்..அவருடைய புளகாங்கிதம் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. ஆஹா, எனக்கு அருமையான மாப்பிள்ளையும், என் பெண்ணுக்குத் தகுந்த மணவாளனும் கிடைத்து விட்டான்.. ராமனே உனக்குதான் என் பெண்.. அவளை நீ கைபிடிக்கவேண்டும் என்கிறார். இப்போது ராமன் நிதானமாக அவரிடம் சொல்கிறான். நான் சத்திரிய தர்மத்தைத்தான் செய்தேனே தவிர உங்கள் பெண்ணை கைபிடிப்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. அது நீங்களாக சொன்னதுதானே.. என் திருமணம் என்பது என் தந்தையின் விருப்பமாக இருக்க வேண்டும். அதுதான் தர்மம். நானே என் எதிகால மனைவியை முடிவு செய்வதில் எனக்கு விருப்பம் கிடையாது.. என்கிறான்.

    (பிறகு தசரதனுக்கு செய்தி பறக்கிறது.. ஏனைய விவரங்கள் எல்லோரும் அறிந்ததுதான்)

    ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது என்னவென்றால் ராமன் எனும் உத்தம புருஷனின், மகா மனிதனின் தார்மீகத்தை.. அவன் குரு அழைத்துச் சென்று வில்லை முறிக்கச் சொல்கிறார். குருவின் வார்த்தை மீறக்கூடாது.. அதே சமயம் தந்தை என்பார் மட்டுமே தன் திருமணத்தைப் பற்றி முடிவு செய்ய உரிமை உள்ளவர் என்பதையும் கச்சிதமாக சொல்லிய பாங்கு.. மனிதன் ஒருவன் வில்லை முறிக்கமுடியுமா என்ற ஆனானப்பட்ட ஜனகரே கேட்டபோது, மனிதனால் முடியும் என்று சாதித்த வீரத்தனம்.. ராமன் மனிதகுலத்தின் தத்துவத்தை ம்னிதனுக்கு தானே சுயமாகக் காண்பிக்க அவதாரம் செய்ததை இந்த ராமாயணம் முச்சூடப் பார்த்துக் கொண்டே வரலாம்.

    இராமனைப் பற்றி யார் எழுதினாலும் அந்த மனித தர்மத்தை ராமன் எப்படியெல்லாம் நிலை நிறுத்தினான் என்பதைப் பாராட்டாமல் எழுதமுடியாது. அப்படித்தான் நண்பர் இரவி வேணு தன் ஆங்கிலக் கதையில்(I-Rama, Age of Seers, Book 1) ஆரம்பிக்கிறார். ஸ்ரீஇராமனே தன்  கதையை தானே சொல்வதாக ஆரம்பிக்கிறார். லக்ஷ்மணனும் ஆஞ்சநேயனும் அதை இராமன் வாய் மூலமாகக் கேட்பதாக கதையை நகர்த்தி செல்கிறார்.

    இராமனுடைய குணங்கள். மனிதனின் மேம்பாட்டை எப்படியெல்லாம் காக்க விரும்பினான், இத்தனை ஏன், அவன் அவதாரமே மனிதனை ஒரு சிறந்த நாகரீக உலகுக்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைவது பற்றி விவரிக்கிறார். சீதையும் கைகேயியும் இந்த கைங்கரியத்தில் ராமனுக்கு உதவுவதாக பாத்திரங்கள் மூலம் காண்பித்திருக்கிறார்.திரு ரவி வேணு இவர் சாதாரணமாக இந்தக் கதையை எழுதவில்லை. ஆழ்ந்த சிந்தனைகள் இந்தக் கதை மூலாம் ஆங்காங்கே தூவி நிற்பதைக் காணலாம். முதல் பாகம்தான் வந்துள்ளது. பாலகாண்டத்தில் முக்கியப் பகுதியை மட்டும்தான் இங்கே கையாண்டுள்ளார்.. இன்னும் வரும்.. மேலும் மேலும் ராமனின் புகழ் கூடும்.

    இதை நினைத்துப் பார்க்கவே மனசு சந்தோஷப் படுகிறது. ஒரு விஷயம், ரவி வேணு நம் வல்லமைக் குழுவில் ஓர் அங்கத்தினர். நம்மில் ஒருவர். இவர் புத்தகத்தை எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும். (www.i-rama.com என்கிற தளத்துக்குச் சென்றால் அதனைப் பற்றிய  விவரங்களும் கிடைக்கும், புத்தகத்தையும் பெறலாம்)

    இராமன் புகழ் விரும்பாதோர் யார். இராமன் கதை படிக்க விரும்பாதோர் யார். புதுமையான முறையில் அதே சமயம் பழைய மரபு சற்றும் மாறாமல் கதை எழுதுவது மிகச் சிரமமானது என்பது எழுத்தாளனாகிய எனக்கு நன்றாகவே தெரியும். திரு ரவி வேணுவை இந்த வாரம் வல்லமையாளராகத் தேர்வு செய்து அவரை வாழ்த்தி, அவர் புத்தகங்கள் எல்லோராலும் படிக்கப்பட்டுப் பரவ வேண்டும் என்பது எம் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற எல்லாம் வல்ல ஸ்ரீஇராமனையே வேண்டுவோமாக.

    கடைசி பாரா – சுதந்திர தின சிறப்பிதழ்தான் இந்த வார கடைசி பாராவின் சிறப்பு விருந்தினர். இந்த வாரம் நம் வல்லமையில் ஏகப்பட்ட புதுவரவுகள் – சுதந்திர தின சிறப்பிதழ் மூலமாக. அத்தனையும் முத்துக்கள். இந்த எழுத்துக்களையெல்லாம் பார்த்துப் படிப்பது மிகச் சந்தோஷமாக இருக்கிறது. வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் இனிப்பு என்றுதான் தெரியவில்லை. அப்படித்தெரிந்தோர் இருந்தால் அந்த இனிப்புப் பகுதியை எனக்குத் தனி மடலில் அனுப்பவும். அடுத்த வாரம் வெளியிடுகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வல்லமையாளர்!

  1. வல்லமை விருது பெற்ற எழுத்தாளர் இரவி வேணுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மதிப்பிற்குரிய திவாகர் அவர்களின் விளக்கவுரைக்கும் பாராட்டுக்கள். ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே – அதைச் செவி குளிரக் கேட்டிடுவோம், சொல்லுங்கள் ரவியே !… ஜெய் ஸ்ரீராம்……

  2. இரவி வேணுவுக்கு என் வாழ்த்துக்களும், மேன்மெலும் சிறப்புற இரு மொழியிலும் கருத்தாக்கம் அமைய ஆர்வமும். 
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *