பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 25

1

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

E.Annamalai

அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:

அண்மையில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பா.சசிரேகா ஆகியோருடன் உரையாடுகையில் சென்னை என்பதை ஆங்கிலத்தில் CHENNAI என எழுதுவது தவறு என்றும் ‘ச்செ‘ என்ற ஒலி, தமிழில் மொழிமுதலில் வராது என்றும் குறிப்பிட்டனர். இதே திசையில் சிந்தித்தபோது, சேப்பாக்கம் என்பதை Chepauk என்றும் சித்தூர் என்பதை  Chittoor என்றும் எழுதுவது நினைவுக்கு வந்தது. ஆனால், செம்பனார்கோவில் என்பதை Sembanarkoil என எழுதுகிறோம். ச்செ எனத் தொடங்கும் ஆங்கில ஒலிபெயர்ப்புகள் சரியா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் வழங்கும்போது ரோமன் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் சில மரபுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, நெடிலை வேறுபடுத்திக் காட்டுவதில்லை; ழகரத்தை /zh/ என்ற எழுத்தால் எழுதுகிறோம். இது எழுத்துப் பெயர்ப்பு (transliteration) அல்ல. எழுத்துப் பெயர்ப்பில் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் பெயர்க்கப்படும்; இதைச் சரியாகச் செய்யக் கூடுதல் குறிகளும் (diacritic marks) தேவைப்படும். ஆட்களின் பெயரையும் ஊர்களின் பெயரையும் ஆங்கிலத்தில் எழுதுவது எழுத்துக் கூட்டு (spelling). இதில் தமிழ் எழுத்து மட்டுமல்லாமல், அதன் உச்சரிப்பும் கவனத்தில் கொள்ளப்படும். வடமொழிப் பெயராக இருந்தால், அந்த மொழியில் உள்ள உச்சரிப்புகூட சேர்த்துக்கொள்ளப்படலாம். சுப்பிரமணிய பாரதியை எழுத்துப் பெயர்ப்பில் – உதாரணமாக நூலக அட்டைகளில் – CuppiramaNiya Paarati என்று எழுதுவார்கள். ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும்போது Subramanya Bharati  என்று எழுதுவார்கள்.

தமிழர்களுடைய உச்சரிப்பு இல்லாமல், ஆங்கிலேயருடைய உச்சரிப்பைப் பின்பற்றி எழுதுவதையும் பார்க்கலாம். தமிழ் என்ற பெயரை Tamil என்று எழுதுவது ஒரு எடுத்துக்காட்டே.

சகரம் வல்லெழுத்து; அது வல்லொலி உடையது. தொல்காப்பியம் இதன் உச்சரிப்பை வல்லொலியாகத்தான் விவரிக்கிறது. சொல் முதலிலும் இதே உச்சரிப்புதான். ககரம் போலல்லாமல், சகர வல்லொலியில் உரசொலியும் சேர்ந்திருக்கும். இதற்கு இணையான ஆங்கில எழுத்து /ch/. இந்தத் தமிழ் எழுத்து, இக்காலத்தில் சொல்லின் முதலில் /s/ என்றும் உச்சரிக்கப்படுகிறது. மொழி வரலாற்றில் இந்த உரசொலி உச்சரிப்பு எப்போது துவங்கியது என்று கண்டறிய இருமொழிக் கல்வெட்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்.
]
உரசொலி ஒலிப்பு, பல சொற்களில் வல்லொலிக்கு மாற்றாக (variant) வருகிறது. சில சொற்களில் வல்லொலி மட்டுமாகவோ, உரசொலி மட்டுமாகவோ ஒலிப்பதையும் பார்க்கிறோம். சட்டி என்னும் சொல்லில் இரண்டு ஒலிகளும் மாற்றாகவும், சட்னி என்னும் சொல்லில் எப்போதும் வல்லொலியாகவும், சாம்பார் என்னும் சொல்லில் எப்போதும் உரசொலியாகவும் சகரம் ஒலிப்பதைக் காண்கிறோம்.

சந்தியில் இரட்டித்து வந்தால், சகரம் எப்போதும் வல்லொலியாகவே ஒலிக்கும். வீட்டுச் சாம்பாரில் இரட்டிக்கிறது; வெங்காய சாம்பாரில் இரட்டிக்கவில்லை. இரண்டிலும் உச்சரிப்பு வேறு. இதே போலத்தான் சங்கம் என்னும் சொல்லில் உரசொலியாக இருக்கும் சகரம், தமிழ்ச் சங்கம் என்னும் தொகையில் வல்லொலி ஆகிறது.

ஊர்களின் பெயர்களிலும் இப்படியே. சென்னை என்னும் பெயரை வல்லொலியோடு ஒலிக்கும்போது ஆங்கிலத்தில் /ch/ என்று எழுதப்படுகிறது. செம்பனார்கோயில் என்னும் பெயரை உரசொலியோடு ஒலிக்கும்போது ஆங்கிலத்தில் /s/ என்று எழுதப்படுகிறது. ஒரு ஊரின் பெயரை இரண்டு ஒலிகளோடு உச்சரிக்கும் வழக்கம் இருந்தால், எந்த ஆங்கில எழுத்தில் அந்தப் பெயர் எழுத ஆரம்பிக்கப்பட்டதோ அதே எழுத்தில் தொடர்ந்து எழுதப்படுகிறது.

படம்: அண்ணாகண்ணன்

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 25

  1. அண்ணாகண்ணனின் இந்தக் கேள்வி, ஒரு சுருக்கத்தில் தமிழ் எழுத்து / உச்சரிப்பைப் பற்றிய குழப்பங்களைக் காட்டுகிறது. ச எப்பவும் வல்லினம்தான். அதை ஸ என உச்சரிக்கக் கூடாது. ஆனால் 90% சமயங்கள் ச, ஸ என உச்சரிக்கப்படுகின்றது. உதாரணமாக, செல்வராஜன் என்ற பெயர், 95% Selvarajan என ஆகிறது. ஒரு பக்கம், தொல்காப்பியர் துதி இருக்க, மறுபக்கம் எளிதான தொல்காப்பியர் முறைகள் எப்பொழுதோ காற்றில் பறந்துவிட்டன. இதைச் சரி கட்ட, மக்கள் ஸென்னை, ஸெல்வராஜன் என ஸகரத்தைப் பயப்படாமல் உபயோகிக்க வேண்டும். ஆனால் தனித் தமிழ்த் தாக்கங்கள் தமிழை ஒழுங்காக எழுத முடியாமலும், பலுக்கமுடியாமலும் இரண்டும்கெட்டான் நிலையில் வைக்கின்றன.

    விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *