மதத் துவேஷத்தை இத்தனை தூரம் வளர விடலாமா?
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
தங்கள் மதங்களைப் பற்றித் தீவிரமாக இருந்தவர்கள் தங்கள் மதங்களின் மேலிருந்த பற்றுதலைக் காட்டியதுமல்லாமல் மற்ற மதங்களையும் எப்படித் தூஷித்தார்கள் என்று எழுதிய மை உலரும் முன்பு, மதத்தின் பேரால் சில கொலைகள் நடந்திருப்பதும் இன்னும் சில கலவரங்கள் வெடிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதையும் இன்றையப் பத்திரிகைச் செய்தி மூலம் அறிய முடிந்தது.
அந்தக் காலத்தில் – பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் – என் மதம் பெரிது, உன் மதத்தில் எந்தச் சாரமும் இல்லை என்று மதத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். சைவ சமய நாயன்மார்கள், புத்த மதத்தையும் ஜைன மதத்தையும் தாறுமாறாகத் தாக்கியிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் உலகில் பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்ட புத்த மதமும் ஜைன மதமும் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தையும் விட எவ்வளவோ மேல் என்பேன். சிவனை நேரில் பார்த்தவர்கள் போல் சைவ சமயத்தவர் அவரை வர்ணிப்பதும் விஷ்ணுவை நேரில் பார்த்தவர்கள் போல் வைணவ சமயத்தவர் விஷ்ணுவை வர்ணிப்பதும், தங்கள் தங்கள் கடவுள்கள் மூலம்தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்று சாதிப்பதும் எவ்வளவு மடமை.
அதன் பிறகு இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ குருமார்கள், இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே சொர்க்கத்தை அடைவார்கள் என்று பாமர மக்களைப் பயமுறுத்தி இருக்கிறார்கள். தாங்களாகச் சிந்திக்கத் தெரியாத பாமர மக்களும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினால் தங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பி அந்த வலையில் விழுந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்த மதத் தலைவர்கள் செய்த பிரச்சாரம், எந்த அளவிற்கு மனிதர்களிடத்தில் துவேஷத்தை வளர்த்துக் கலவரங்களை ஏற்படுத்தின என்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
ஆனால் இப்போது உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது வேகமாகப் பரவக் கூடிய சாத்தியம் இருப்பதால், அதன் விளைவுகளும் வேகமாக நடக்கின்றன. 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி – நியுயார்க் நகரின் வணிகக் கோபுரங்களைத் தீவிரவாதிகள் தாக்கிய நினைவு நாளையொட்டி – கிறிஸ்தவ போதகர் ஒருவர் தன்னுடைய தேவாலயத்தில் முஸ்லீம்களின் புனித நூலான குரானை எரிக்கத் திட்டமிட்டிருந்தார். அதன் பின் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைவரான பெட்ரியஸ் உள்பட பலரின் எச்சரிக்கைக்குப் பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டதாகத் தெரிந்தது. அல்லது அப்படி எல்லோரும் நினைத்திருந்தோம். ஆனால் அவர் குரானை எரிக்கத் தருணம் பார்த்த்திருந்தார் என்பது இப்போது தெரிகிறது.
2011 மார்ச் மாதம் 20ஆம் தேதி இவர் தன்னுடைய தேவாலயத்தில் ஒரு போலி விசாரணை நடத்தி, பலரிடம் குரானை எரிக்கலாமா என்று அவர்கள் அபிப்பிராயம் கேட்டு, குரானை எரிப்பது என்று முடிவு செய்து, அதை எரித்திருக்கிறார். இத்தனை நாட்கள் வெளியில் வராமல் இருந்த இந்தச் செய்தி, இப்போது எப்படியோ வெளியில் வந்து, ஆஃப்கானியர்கள் சிலர் ஆத்திரமடைந்து, அமெரிக்கர்கள் யாரையாவது தாக்க வேண்டும் என்று வெறிபிடித்து ஓடியதில், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அவர்கள் கண்ணில் பட்டு, அங்கு நுழைந்து பன்னிரண்டு பேரைக் கொன்றிருக்கிறார்கள். எப்போதும் போல் இங்கும் இதற்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகள் இவர்களுடைய ஆத்திரத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்.
தான் செய்த தவறு எத்தனை பெரிய ஆபத்தில் முடிந்திருக்கிறது என்பதைச் சிறுதும் உணராத கிறிஸ்தவ மத போதகர், தன்னுடைய தவறை உணராதது மட்டுமல்ல, “இஸ்லாம் மதத்தில் அமைதிக்கே இடமில்லை. தீவிரவாதிகள் செய்த வன்முறைச் செயல்களுக்கு அதைப் பொறுப்பாக்க வேண்டும்” என்று கொக்கரித்திருக்கிறார். எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவைதான், அதைப் பின்பற்றுபவர்கள்தான் அதை வன்முறை மதமாக மாற்றக்கூடும் என்பதை இந்த மத போதகருக்கு யார் எடுத்துச் சொல்வார்கள்?
ஆஃப்கானிஸ்தானின் ஐ.நா. மையத்தில் நடந்த வன்முறைச் செயல்கள் பற்றிக் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி ஒபாமா, கிறிஸ்தவ மத போதகர் செய்தது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. உள்நாட்டில் அவருக்கு இப்போது செல்வாக்கு குறைந்திருக்கும் நேரத்தில் இந்த போதகரைக் கண்டித்து தன்னுடைய பெயரை இன்னும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்துவிட்டார் போலும். ஆஃப்கானிஸ்தானில் உள்ள மூன்று இஸ்லாம் மத குருமார்களும் அவருடைய ஆதரவாளர்களும் இந்தக் கிறிஸ்தவ மத போதகரைத் தண்டிக்க வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை எப்படி அமெரிக்கா சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
உலக முழுவதிலும் மதங்களுக்கு இடையே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றை இன்னும் அதிகப்படுத்துவது மாதிரி மத போதகர் ஒருவரே இப்படி இன்னொரு மதத்தின் புனித நூலை எரிக்கலாமா? இது எவ்வளவு பெரிய அறியாமை? கிறிஸ்தவ மதம் மட்டும்தான் ஒரே மதம், அதைப் பின்பற்றுபவர்கள் மட்டும்தான் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்று இவர் சொல்லட்டும். அந்தச் சொர்க்கத்திற்கு இவர் போகட்டும். இவருடைய போதனைகளைக் கேட்பவர்கள் எல்லோரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும். ஆனால் உலகில் மதங்கள் சம்பந்தமாகப் பதற்றம் நிலவும் நிலையில், இன்னொரு மதத்தின் புனித நூலை எரித்து மக்களின் மத்தியில் இன்னும் பயத்தை ஏற்படுத்தலாமா? இவர் போன்றவர்கள் மத நல்லிணக்கத்திற்காக அல்லவா பாடுபட வேண்டும்? இவர் போன்றவர்களைப் பதவியில் இருந்து விலக்குவதோடல்லாமல் தண்டிக்கவும் வேண்டும்.
==================================================
படங்களுக்கு நன்றி: http://www.usatoday.com, http://www.bbc.co.uk
முனைவர், ஒருவர் ஒரு புஸ்தகத்தை எரித்ததைக் கண்டனம் செய்து, மதத்தால் பல அப்பாவிகளைக் கொலை செய்ததைப் பற்றிய மௌனம் சரியில்லை. முனைவர் கணிப்பில் அப்பாவிகளைக் கொலை செய்வது, புஸ்தகததை எரிப்பத்தை விட மிகச் சிறிய குற்றம் எனத் தோன்றுகிறது. முனைவரின் தராசில் மனித உயிர், புஸ்தகத்தின் முக்கியத்தை விடக் குறைவாக உள்ளது.
விஜயராகவன்
மதம் என்பது அன்பின் வாயிலாக மனித நேயத்தை
வளர்த்து மனிதனைப் புனிதனாக்கும் கருவி. அன்பையும்
மனிதநேயத்தையும் புறந்தள்ளிவிட்டு மதத்தை
வளர்ப்பதால் ஒரு புண்ணியமும் இல்லை. அப்படிச்
செயல்படும் மத போதகர்களால் சொர்க்கத்திற்கு
யாரையும் கூட்டிச் செல்ல முடியாது. மாறாக,
இந்தப் பூமியையே நரகமாக்கிவிடுவார்கள் என்பதே
உண்மை.
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.