சரவாக்கு மாநிலத் தமிழர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
வரலாற்றுக் குறிப்பு
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ சமயச் சின்னங்கள் குச்சிங்குவில் உள்ள சரவாக்கு அருங்காட்சியகத்தில் முன்பிருந்தன. பிள்ளையார் சிலை, நந்தியின் சிலை போன்றவை சரவாக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்பொருளாய்வாளருக்குக் கிடைத்தவை. தென்னிந்தியப் பயணிகள், அரசுகள் சரவாக்குக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வந்து சென்றதற்கான தொல் சான்றுகள் இவை.
எனினும் அண்மைய தமிழர் வரவுகள் 1860களில் தொடங்குகின்றன. இலங்கையில் தேயிலைத் தோட்ட முகாமையில் பட்டறிவுபெற்ற அண்டர்சன் என்பாரை, சரவாக்கு அரசர் புறூக்கு 1860களில் வரவழைத்தார். தேயிலைத் தோட்டங்களை அண்டர்சன் அமைத்தார்.
1860 தொடக்கம் தமிழர் இங்கு கப்பலில் வந்தனர். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கையின் மலைநாட்டில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் தொழிலாளர்களாக 2,000 தமிழர்களை ஆங்கிலேயர் குடியேற்றினர். கங்காணிகளாகக் கொச்சினில் இருந்து ஒரு சிலர் வந்தனர்
1912இல் இத்தேயிலைத் தோட்டங்களைப் பொருளாதார இழப்பின் காரணமாக மூடினர். அக்காலத்தில் 1000 தமிழர் நாடு திரும்பினர். 1965க்குப் பின்னர் தமிழர் குடியேற்றம் முற்றுப்பெற்றது.
மாநிலஅமைப்பு
125,000 சகிமீ. பரப்பளவு கொண்ட சரவாக்கு மாநிலத்தின் மக்கள் தொகை 25 இலட்சம். இவர்களுள் 5000 சரவாக்குத் தமிழர், 3000 மேற்கு மலேசியத் தமிழர் அடங்குவர்.
சரவாக்கு மாநிலத்திற்கு எவரும் புதிதாகக் குடிவரமுடியாது. மலேசியாவின் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் இங்கு வந்தால் 3 மாதங்களுக்குமேல் தங்கமுடியாது. பணிக்காக வருபவர்கள் 5 ஆண்டுகள் வரை தங்கலாம். அதற்குப்பின் மீண்டும் வெளியே போய் உள்நுழையலாம்.
வெளியார் எவரும் நிலம் வாங்க முடியாது, சரவாக்கு மாநிலத்தவரின் பங்களிப்பு இல்லாமல் தொழில் தொடங்கமுடியாது.
குச்சிங்கு நகரில் பெருமளவு எண்ணிக்கையிலும் சிபு, பிந்துலு, மீரி நகரங்களில் சிறு எண்ணிக்கையிலும் தமிழர் வாழ்கின்றனர். சரவாக்குத் தமிழர் மேற்கு மலேசியத் தமிழர் என இரு வகையினர். முன்னவர் 1860களில் வந்தோரின் வழிவந்தவர். பின்னவர் அரசுப் பணிக்காக வந்தோர்.
குச்சிங்குக் கோயில்கள்
சரவாக்கு மாநிலத்தின் தலைநகர் குச்சிங்கு. சரவாக்கு மாநிலத்திற்கு 1860களில் வந்தோர் அமைத்த முதலாவது கோயில் மதாங்கு மலைக் கோயில். 1897இல் 350 மீ. மலை உச்சியில் தேயிலைத் தோட்டத்தில் கட்டிய கோயில். 1912இல் தேயிலைத் தோட்டத்தை மூடினர்.
எனவே அங்கிருந்த காமாட்சி அம்மன் சிலையை மலையில் இருந்து கீழே கொணர்ந்து குச்சிங்கு நகரில் கோயிலமைத்து வழிபட்டனர்.
மலைக் கோயில், மாரியம்மன் கோயில், சீனிவாச காளியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்கள் உள.
தமிழரான சைவ சமயிகளிடையே அண்மைக் காலமாக இந்தியாவில் இருந்து வருகின்ற சமய அமைப்புகள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றன. சாய்பாபா, அரேகிருட்டிணா, பிரும்ம குமாரிகள் ஆகிய அமைப்புகள் நிலையங்கள் அமைத்துக் கூட்டு வழிபாடுகளை நடத்துகின்றன. சமூகத்தொண்டில் ஈடுபடுகின்றன.
சரவாக்குத் தமிழர், தம் முன்னோர் அமைத்த கோயில்களை முதன்மை வழிபாட்டிடமாகக் கொள்வர். மேற்கு மலேசியத் தமிழர் கூட்டுவழிபாட்டில் நாட்டம் கொள்வர்.
குச்சிங்குவில் உள்ள மூன்று கோயில்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படுவன. ஒரு கோயிலில் புறப்படும் தேர், மற்றக் கோயில்களுக்குச் சென்று மீளும். மதாங்கு மலைக் கோயில் தேர் பல கிமீ. தொலைவு கடந்து நகருக்குள் வலம் வரும்.
இத்தேர்த் திருவிழாக்காலங்களில் நகர மன்றம், காவல்துறை, மற்றும் மாநில அரசுத் துறைகள் கொடுக்கும் ஒத்துழைப்புச் சிறப்பாகும். தேரோடும் சாலைகளுக்கு வரும் வண்டிகளுக்கு மாற்றுச் சாலைகளைக் காட்டுவர்.
அம்மன் கோயில்களாதலால் நவராத்திரிக் காலங்களில் மக்கள் கூடுவர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அடியார் கூட்டம் பெருகி இருக்கும். இக்கோயில்கள் சரவாக்குத் தமிழரின் சமூகக் கூடங்கள். நூற்றாண்டுக்கு முன்பு தம்மோடு கொணர்ந்த கலைச் செல்வங்களுடன், அண்மைய திரை மற்றும் சின்னத்திரை தரும் உள்ளீடுகளும் சரவாக்குத் தமிழரின் நுண் கலை உணர்வுகளுக்கு வழித்தடங்களாகின்றன.
தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் மேற்கு மலேசியாவிலிருந்தும் சிவாச்சாரியார்கள், சிற்பிகள், கட்டடக் கலையாளர், நுண்கலையாளர், பணிபுரிவதாலும் பேச்சாளர் வந்து செல்வதாலும் பண்பாட்டுப் பின்னூட்டங்கள் சரவாக்குத் தமிழருக்குக் கிடைக்கின்றன.
குச்சிங்குத் தமிழர்
தமிழ்நாடு, சிங்கப்பூர் மற்றும் மேற்கு மலேசியத் தொலைக்காட்சிகள் சரவாக்குத் தமிழரின் தாய்மொழி வளர்ச்சிக்கும் அடையாளப் பேணலுக்கும் உதவுகின்றன. மேற்கு மலேசிய நாளிதள்களை வரவழைத்தவர்கள் போதுமான விற்பனையில்லாமல் கைவிட்டனர்.
சரவாக்கு மாநிலத்தின் கரையோர நகரங்கள் நான்கில், மலாய்க்காரர், சீனர், தமிழர் ஆகியோர் வாழ்ந்தாலும், உள்ளே காடுகள் சார்ந்த மலைப்பகுதிகளில் 27 மொழிகளைப் பேசும் ஆதிவாசிகள் வாழ்கின்றனர். மலாய் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தன இந்த மொழிகள். இவர்களுட் பெரும்பான்மையோர் முன்னோர் வழிபாட்டினர்.
சரவாக்கு மாநிலத்தில் மதமாற்ற முயற்சிகள் கூடுதலாக உள. தொல் குடியினராகிய 27 மொழி வழிக்குழுவினரும் முன்னோர் வழிபாட்டினர். அவர்களைத் தத்தம் மதங்களுக்குள் ஈர்க்கக் கிறித்தவர்களும் இசுலாமியர்களும் முயல்வர். அந்த முயற்சியில் புறக் கோட்டில் தமிழரும் சேர்ந்து கொள்வர்.
தமிழகத்திலிருந்து குடிபெயர்கையில் கிறித்தவராகவும் இசுலாமியராகவும் வந்தோரின் வழிவந்தோர் சரவாக்குத் தமிழராகத் தொடர்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
சரவாக்குத் தமிழருட் சிலர் கலப்பினமாகவே உளர். சரவாக்கின் உள்ளூர்ப் பெண்களைச் சரவாக்குத் தமிழர் மணந்துளர். இபான் மற்றும் தயா இனப் பெண்களை மணந்த தமிழர், அவர்களுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவர். தமிழைப் பேசுவர். கோயில்களுக்கு வருவர். தமிழ்ப பாடல்களைப் பாடுவர்.
நூற்றாண்டுகளுக்கு முன்னர், சீனக் குடும்பங்கள் கைவிட்ட சிறு குழந்தைகளைத் தமிழ்க் குடும்பங்கள் தத்தெடுத்துத் தமிழராக வளர்த்தனர். அக்குழந்தைகள் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்தன. சீனப் பண்பாட்டை அறியாது வளர்ந்தன. தமிழரைப் போலவே கோயில்களுக்கு வருவர். விரதங்களைக் கடைப்பிடிப்பர்.
கொச்சியிலிருந்தும் விசாகப்பட்டினத்திலிருந்தும் கொல்கத்தாவிலிருந்தும் வந்தோர் எனண்ணிக்கையும் மிகக்குறைவு. தமிழரல்லாத இந்தியர்களுடனும் தமிழர் மண உறவு கொள்வர். சிறப்பாகத் தென்னிந்தியருடனான மண உறவுகள் வெளிப்படை.
இதனால் ஒரு தமிழ்க் குடும்பத்துள் மலையாளிகள், தெலுங்கர், சீனர், ஆதிவாசிகள் கலந்திருப்பர். இவர்கள் தமிழ்ப் பண்பாட்டு வழமைகளையும் விடாது கொள்வர்.
கோயில்களில் கொத்துக் கொத்தாக ஊதுவத்தி ஏற்றும் வழமை சீனர் தந்தது. காய்த்திரி மந்திரம் வழமை அண்மைய சமய அமைப்புகள் தந்தது.
தமிழர் கோயில்களில் சீனர் வந்து வழிபடுவதும், திருப்பணிக்கு நிதி வாரி வழங்குவதும் ஆசியான் நாடுகளில் புதுமை அல்ல. சீனர்களில் பலர் ஓதுவார்களாக உளர். பரத நாட்டிய விற்பன்னராக உளர். தமிழிசை வல்லுநராக உளர்.
குச்சிங்கு நகரில் வாழும் தோராயமான 5,000 சரவாக்கு இந்தியர்களுள் 4,000 பேர் முழுமையாகத் தமிழரே. கலப்பினர், மலையாளிகள், தெலுங்கர், வட இந்தியர் எஞ்சியோரே. இவர்களைத் தவிர 3,000 மலேசியத் தமிழரும் குச்சிங்குவில் வாழ்கின்றனர். பேராசிரியர், ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர், காவலர், படைவீரர், வணிகர், பல்தொழில் வல்லுநராக மாநில அரசிடம் உரிமைபெற்றுக் குச்சிங்கில் வாழ்வர்.
ஒரு தலைமுறையினர் தமிழ் மொழியைப் பள்ளிகளில் படிக்கமுடியாமலே வளர்ந்தனர். அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. குச்சிங்கு நகரில் உள்ள மூன்று பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி, தமிழ் மொழி ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. மழலைகள் தொடக்கம் ஆறாம் வகுப்பார் வரை தமிழைப் படிக்கும் வசதி அங்குண்டு.
வார இறுதியில் தமிழ்க் கல்வியைத் தன்னார்வரான ஆறுமுகம் தனித்துப் பல ஆண்டுகளாக நடாத்தி வருகிறார். தேவார வகுப்புகளையும் நடாத்துகிறார். 45-50 மாணவர்கள் அங்கு பயில்கின்றனர். இசைப் பயிற்சிபெற்றவர்கள், தமிழ் மொழி தெரிந்தவர்கள் தொண்டாசிரியர்களாகப் பயிற்றுவிக்கின்றனர்.
இந்தியருக்கான சங்கங்கள் பல இருந்தாலும் குச்சிங்கு இந்தியர் சங்கம் மிக நவீன அரங்கத்தை அமைத்துள்ளது. மாநில அரசும் கூட்டரசும் பெருநிதி வழங்கியுள்ளன.
சீனர்கள் வழங்கிய விருது கப்பித்தான். மலாய்க்காரர் வழங்கிய விருது புலுகிலான். தமிழர் வழங்கிய விருது தொண்டர் மாமணி. இந்த விருதுகளின் சொந்தக்காரர் 84 வயதினரான குமாரசுவாமி. 1912இல் இந்தியா திரும்ப மறுத்த தலைமுறையினர். இன்றைய இந்தியர்களின் சமுதாயத் தலைவர். எறும்பு தோற்றுவிடும் சுறுசுறுப்பாளர்.
மாநில ஆளுநர், முதலமைச்சர், கூட்டரசு அமைச்சர்கள் யாவரும் இவருக்கு நண்பர்கள். ஒழுக்க சீலர், பண்பாளர், திறமைசாலி எனப் பலரும் பாராட்டும் இவரின் தந்தையார் மதாங்கு மலைக்கோயிலை அமைத்தவர்களுள் ஒருவர்.
1941 திசம்பர் 26 தொடக்கம் 1945 ஆகத்து 15 வரை சரவாக்கில் யப்பானியர் காலம். குமாராசாமி யப்பானியர்களுடன் இளமையைக் கழித்தவர். பின்னர் அரசுப் பணியில் சேர்ந்தார். மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் வி. தி. சம்பந்தன், தில்லியில் நேரு குடும்பம் யாவருடனும் நன்கு பழகியவர்.
சரவாக்கு நகரங்கள்
குச்சிங்கு நகருக்கு வெளியே சரவாக்கு மாநிலத்தில் தமிழர் வாழும் நகரங்கள் சிபு, பிந்துலு, மிரி. இந்த நகரங்களில் சரவாக்குத் தமிழர் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் மேற்கு மலேசியத் தமிழர் பரந்து வாழ்கின்றனர்.
சீனர்கள் நெருங்கி வாழும் சிபு நகரில் ஆசிரியராய், காவலராய், படை வீரராய், மருத்துவராய் மேற்கு மலேசியத் தமிழர் வாழ்கின்றனர். அங்குள்ள மாரியம்மன் கோயிலைக் கட்டியோர் சரவாக்குத் தமிழர். பராமரிப்போர் மேற்கு மலேசியத் தமிழர்.
எரிவாயு வளம் பெருகிய பிந்துலு நகரில் மேற்கு மலேசியத் தமிழர் நெருங்கி வாழ்வர். ஆசிரியராய், பொறியியலாளராய், மருத்துவராய் வாழும் இவர்களுடன் ஆங்காங்கே சரவாக்குத் தமிழரையும் காணலாம்.
எரியெண்ணெய் வளம் நிறைந்த நகர் மிரி. கிழக்கெல்லையில் உள்ளது. 800 தமிழர் வாழ்கின்றனர். ஒருவர் மட்டுமே சரவாக்குத் தமிழர். 300 மாணவர். எஞ்சியோர் பேராசிரியராய், ஆசிரியராய், பொறியியலாளராய், மருத்துவராய், கணக்காளராய், பிற தொழில் வல்லவராய் வாழும் மேற்கு மலேசியத் தமிழர். தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழில் வல்லுநராய் உள்ள சிலரையும் சந்தித்தேன்.
சிபு, பிந்துலு, மிரி ஆகிய நகரங்களில் தமிழ்மொழிப் பாட வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் பயிற்றுவர். தமிழ் மாணவர்களுக்குக் கட்டாய பாடம் தமிழ்மொழி. மலாய் மொழி பயிற்று மொழி என்பதால் அயல்மொழி ஒன்றைத் தேர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் அனைத்து மாணவருக்கும் உண்டு.
அந்த வகையில் தமிழர் தமிழையும் சீனர் சீனத்தையும் மலாய்க்காரர் அரபியையும் கற்பர். ஆதிவாசி மாணவர்கள் இந்த மூன்று மொழிகளுள் ஒன்றைத் தேர்வர். இவ்வாறு தமிழ் கற்கும் ஆதிவாசி மாணவர், குச்சிங்கு, சிபு, பிந்துலு, மிரி ஆகிய நகரங்களில் உளர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 100க்குமேலாகும்.
சரவாக்கு மாநிலத்தில் என்பயணம்
13. 08. 2012 முதலாக 22. 08. 2012 ஈறாக, 10 நாள்கள் சரவாக்கு மாநிலத்தில் தங்கினேன். பொது அரங்குகளிலும் தனியார் இல்லங்களிலும் தேவாரம் மின்னம்பல தளத்தினை விளக்கினேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சியிலாயினும் கலந்துகொண்டேன். தமிழில் பாடல்களைத் தேட, ஒருங்குறியில் தட்டச்சிட மாணவருக்குப் பயிற்றினேன். ஒருங்குறியில் உள்ள எந்தத் தமிழ்ப் பனுவலையும் மலாய் வரிவடிவங்களுக்கு மாற்றும் வழி சொன்னேன்.
திருமுறை என்ற சொல்லாட்சி சரவாக்குத் தமிழருக்குப் புதிது. பஞ்சபுராணம் எனில் ஓரளவு தெரியும். தேவாரம், திருவாசகம் எனில் புரிந்துகொள்வர்.
பஞ்சபுராணத்தின் விரிவே பன்னிரு திருமுறை என விளக்குவேன். தேவாரப் பாடசாலைக்குச் செல்பவர்கள் திருமுறைப் பாடல்களைத் தெரிந்து வைத்துள்ளனர். மேற்கு மலேசியத் தமிழரின் புரிதல் கூடுதலாகும்.
தளத்துக்கு உள்ளே சென்று விள்க்கியதும் ஓரளவு புரிந்து கொள்ளும் மக்களுடன் பழகினேன்.
அவர்களுக்குப் பழக்கமான அம்மன் பாடல்கள், அபிராமி அந்தாதி, முருகன் பாடல்கள் யாவற்றையும் இணையத்தில் தேடிக்கண்டுபிடிக்கும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்தேன்.
குச்சிங்கு நகரில் 1. மாரியம்மன் கோயில், 2. சாய்பாபா நிலையம், 3. சீனிவாச காளியம்மன் கோயில், 4. மாரியம்மன் கோயில், 5. மாணவர் பயிற்சி, 6. செந்தூரக் குருக்கள் பயிற்சி, 7. ஆசிரியர் பாலச்சந்திரன் பயிற்சி, 8. ஆசிரியர் வாசுதேவன் பயிற்சி என 7 நாள்களில் 8 நிலைகளில் என் பரப்புரை அமைந்தது.
சிபு, பிந்துலு நகர்களுக்குப் பயணிக்க இருந்தேன். இரமழான் நோன்பு நிறைவு நாளை ஒட்டி, மாநிலம் முழுவதும் விடுமுறை நாள்கள். எனவே அந்நாள்களில் சிபு, பிந்துலு வாசிகள் பிற ஊர்களுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றனர். எனவே துண்டு விளம்பரங்களை அனுப்பிவைத்தேன்.
மிரி நகருக்கு வந்தேன். சரவாக்குத் தமிழர் ஒருவரே உள்ளார். ஆதி வாசிப் பெண்ணை மணந்தவர். மூன்று மாடிக் கட்டட உரிமையாளர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவரது கட்டட மொட்டை மாடியில் மாரியம்மன் கோயில் வழிபாடு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு. சிறப்பு விரத நாள்களிலும் வழிபாடு.
மிரி நகர் வாழ் 800 தமிழருக்கும் இதுவே கோயில். திரு. செல்வராஜ் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பூசனை செய்து வருகிறார். வாரம் முழுவதும் ஆசிரியப் பணி. வெள்ளிக்கிழமை மற்றும் விரத நாள்களில் மாலை வேளைகளில் பூசனைப் பணி.
மிரி நகரில் 1. மாரியம்மன் கோயில், பேராசிரியர் மூவர் இல்லம் என மூன்று நாள்களில் நான்கு நிகழ்ச்சிகள்.
சரவாக்கு அன்பர்கள் பெயர், தொலைப்பேசி எண்கள் பின்வருமாறு.
குமாரசாமி, குச்சிங்கு 0060198674517
காளி கோபால், குச்சிங்கு 0060168647225
கருணாகரன், குச்சிங்கு 0060138111780
குமரன், குச்சிங்கு 0060133441740
முனுசாமி, குச்சிங்கு 0060168914012
இராமச்சந்திரன், குச்சிங்கு 0060138281394
சிவசாமி, குச்சிங்கு 006082256922
வாசுதேவன், குச்சிங்கு 0060128930189
விசயகுமார், குச்சிங்கு 0060138194855
செந்தூரன், குச்சிங்கு 0060146863489
ஆறுமுகம், குச்சிங்கு 0060168560943
பாலச்சந்திரன், குச்சிங்கு 0060128821461
மனோகரன், சிபு 0060164147779
கோபி, பிந்துலு 0060138081000
தீபன், மிரி 0060123366552
செல்வராசு, மிரி 0060138139695
உமா, மிரி 0060138370033
சிவா, மிரி 0060165212153
திருமுறைகளைச் சரவாக்கு மாநிலத்தில் மேலும் பரப்ப இத்தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களோடு தொடர்புகொண்டு தேவையான உதவிகளைச் செய்வது சைவ உலகின் கடன்.
சரவாக்கில் இருந்த பத்து நாள்களில் பற்பல பணிகள் புரிந்தீர்கள். சரவாக்குப் பற்றியும் அங்கு வாழும் தமிழர் பற்றியும் விரிவாக அறியத் தந்தீர்கள். சரவாக்கில் தமிழரின் வரலாறு, நிலவியல், சமூக நிலை என எவ்வளவு செய்திகள்! தொடர்க தொண்டு.
Enjoyed and appreciated the initiation and the function
ஐயா சச்சு அவர்களின் சரவாக் மாநில தமிழர்கள் பற்றிய இக்கட்டுரை, அவர் பயணித்தபோது எடுக்கப்பட்ட படங்களோடு வெளியிடலாமே..
சச்சிதானந்தன் ஐயா அவர்களின் இப்பயணக் கட்டுரை மிகவும் சுவாராசியமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மலேசியாவில் வாழும் எங்களுகே தெரியாத பல விஷயங்கள் – குறிப்பாக சரவாக் மாநிலத்திலும் பிற இன மாணவர்கள் அரசு பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகப் பயில்கின்றனர் என்ற செய்தி- எங்களை வியக்க வைக்கிறது. அவர் தொடர்ந்து இதுபோன்ற பல பயணக் கட்டுரைகளை படங்களோடு வெளியிடல் வேண்டும்.