நிலா!
காதலில் வீழ்ந்தவருக்கெல்லாம்,
தூரிகையாகவும், தூது செல்லும் தோழியாகவும்
இருந்த நிலா வானத்தில் வட்டமாய் ஜொலிக்கிறது.
துக்கத்தின் கடலில் வீழ்ந்தவருக்கு, இரவின் நீளத்தையும்,
உறவின் பிரிவையும், வலியின் முடிச்சையும் அவ்வப்போது
அவஸ்தைகளோடு நினவூட்டிக் கொண்டிருக்கிறது நிலா.
அவரவர் பங்குக்கு பிய்த்துத் தின்றதால்,தேய்ந்து போனதாக
வருந்திய நிலா ஏக்கத்துடன் தவழ்ந்து வந்தது வான் வெளியில்!
கிள்ளிப்போன பகுதியை யார் சீர் செய்யப் போகிறாரென்று?
மழலை ஒன்றுக்கு, உணவூட்ட போராடிக் கொண்டிருந்த அன்னை,
நிலவின் பிம்பத்தைப்பிடிக்க, வட்டப் பாத்திரமொன்றில்
நீரை வைத்து விட்டு, ஒரு கணம் அப்புறம் அகல,
பிள்ளை அதில் தன் முகம் பார்த்து நகர்ந்ததும் ,
பின்னால் நின்ற நிலா, நீரின் மேல் தன் முகத்தைப்
பொருத்திய பொழுதிலானது மீண்டும் ஓர் வட்டமாய் !
இனி காதலரும், கவலை கொள்வோரும்
அவரவர் பங்குக்கு பிய்த்துக் கொள்ளலாம் நிலாவை !
படத்துக்கு நன்றி
http://urbanediary.blogspot.in/2012/06/beauty-not-to-be-appreciated.html
நம் மன நிலைக்கு ஏற்றவாறு நிலவின் தோற்றமும் மாறி விடுவது போல் என்க்குத் தோணுகிற்து…சரியா?
ஆமாம் .திரு முகில் தினகரன் அவர்களே. அதனால்தான் எப்போதும் கவிஞன் பக்க பலமாக இயற்கையை வைத்துக் கொள்கிறான்.