நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-9)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
கல்யாணி இப்போதெல்லாம் அதிகமாக வேலை செய்கிறாள். மற்ற நேரங்களில் நண்பர்களோடு சேட் செய்கிறாள். நிறைய மெயில் அனுப்புகிறாள். சுந்தரமும், நிகிலும் எதுவும் சொல்ல முடியாமல் பொறுத்துப் போய்க்கொண்டிருந்தனர்.
அன்று வழக்கத்தை விடக் கூடுதலாக மகிழ்ச்சி, இல்லையில்லை.. துள்ளலோடு காணப்பட்டாள் கல்யாணி. இன்று காலையில் அவளுக்கு ஒரு மெயில் வந்திருந்தது. சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு கம்பெனி கல்யாணியை இந்த ஆண்டின் மிகச் சிறந்த இண்டெர்னெட் பயன்படுத்துபவர் என்று அவார்டு கொடுத்து அதற்குப் பரிசாக ஐந்து கோடி ரூபாய்ப் பணமும் அளிப்பதாக அதில் எழுதியிருந்தது. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் அந்த ஐந்து கோடியை இவள் அடைய வேண்டுமானால் வரியாக ஐம்பதினாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். அதைக் கட்டிய ஒரு வாரத்திற்கெல்லாம் இவள் அக்கவுண்டில் ஐந்து கோடி ரூபாய் வந்து சேர்ந்து விடும். அதைப் படித்ததும் கல்யாணிக்குத் தலை கால் புரியவில்லை.
ஒரு வேளை இவை எல்லாமே பொய்யாக இருக்குமோ என்று அவர்கள் கொடுத்திருந்த நம்பருக்கு ஃபோன் செய்து பேசினாள். அவர்கள் தெளிவாக அழகாகப் பதில் சொல்லி அந்தச் செய்தியை உண்மை என்றார்கள். கல்யாணிக்கு தனக்கு வானத்தில் பறக்க இறக்கை இல்லையே என்ற குறை. ஐந்து கோடி! வாழ் நாள் முழுவதும் வேலை செய்தாலும் அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது.
“இப்ல்லாம் அவர் அடிக்கடி ஆபீஸ் டென்ஷன், ஆபீஸ் டென்ஷன்ன்னு சொல்றாரு. இந்த ரூபாய் கெடச்சதுன்னா அவர வி.ஆர்.எஸ் வாங்கிக்கச் சொல்லிடலாம். நிகில் கவலையே இல்லாம அமெரிக்கா போகலாம். வைர நெக்லஸ் வாங்கலாம். வெளி நாட்டுக்குச் சுத்திப் பாக்கப் போகலாம். இன்னும் என்னென்னவோ செய்யலாம்” மனக்கோட்டை கட்டினாள் அவள். “இந்த நியூசைச் சொன்னதும் அவரு எவ்ளோ சந்தோஷப் படுவாரு? அப்பாடா! கடவுள் இப்பத்தான் கண்ணத் தொறந்து பாத்துருக்காரு” .
இந்த விஷயத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் தலை வெடித்து விடும் போலிருந்தது. கணவனிடம் நேரில் தான் சொல்ல வேண்டும். நிகில் காலேஜில் இருப்பான். அவனைத் தொந்தரவு செய்ய முடியாது. வேறு யார் இவர்கள் வளர்ச்சியில் உண்மையான சந்தோஷம் அடைவார்கள்? யோசித்து பார்த்து விட்டு சுஜாதாவுக்கு ஃபோனைச் சுற்றினாள் கல்யாணி.
“ஹலோ! சுஜா! நான் கல்யாணி பேசறேன்! “
“எப்டி இருக்கீங்க மேடம்?”
“நல்லா இருக்கேன் சுஜா! உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னுதான் கூப்பிட்டேன்”
“என்ன மேடம்? கொண்டு போன ஃபைல்ல ஏதாவது டவுட்டா?”
“அதெல்லாமில்ல! இனிமே நான் வேலையே செய்யத் தேவையில்லாத நிலை வந்திருக்கு”
“ஏன் என்ன ஆச்சு? உங்க ஹஸ்பண்டுக்கு பிரமோஷன் கெடச்சிருக்கா?”
“இல்ல! ஆனா எனக்குப் பிரமோஷன் கெடச்சிருக்கு, கோடீஸ்வரிங்கற பிரமோஷன்”
“புரியலையே?”
” குவீன்ஸ்லேண்டுனு ஒரு கம்பெனி சவுத் ஆப்பிரிக்காவுல இருக்கு. அந்தக் கம்பெனி என்னை இந்த ஆண்டின் மிகச் சிறந்த நெட் பயனாளியா தேர்ந்தெடுத்து இருக்கு. அதுக்கு தான் ரொக்கப் பரிசு அஞ்சு கோடி ரூவா! “
” “
“என்ன சத்தத்தையே காணும்? சுஜா! ஹலோ?”
“ஹலோ !மேடம்! நான் லைன்லதான் இருக்கேன்! எந்தக் கம்பெனின்னு சொன்னீங்க?”
“குவீன்ஸ் லேண்டு”
“மேடம்! நான் சொல்றேனேன்னு தயவு செஞ்சி தப்பா நெனச்சுக்காதீங்க! இதெல்லாம் சுத்த ஃபிராடு மேடம்! இதையெல்லாம் நம்பாதீங்க! “
“என்ன சொல்றே? சுஜா?”
“ஆமா! மேடம்! இதெல்லாம் பொய். நீங்க சொல்றா மாதிரி ஒரு கம்பெனி இருக்கவே இருக்காது. நம்மை முட்டாளாக்க இப்டியெல்லாம் மெயில் வரும் அதை எல்லாம் நாம கண்டுக்கவே கூடாது.”
கல்யாணிக்குக் கோபம் பொங்கியது.
“சுஜா! நீ இவ்ளோ சீப்பா இருப்பேன்னு நான் நெனக்கவேயில்ல! எனக்கு இவ்ளோ பெரிய தொகை வரப் போகுதுன்னு தெரிஞ்சதும் உன் பொறாமை புத்தியைக் காட்டிட்ட. நீ மாசாமாசம் பணத்துக்காக வேலை செஞ்சு கஷ்டப் படும் போது நான் மட்டும் ஹாயா இருப்பேன்னு நெனச்சு உனக்குப் பொறாமை வந்துடுச்சு. நாம இவளை விட முன்னாலருந்தே நெட் யூஸ் பண்றோமே நமக்கு இப்டி ஒரு அதிர்ஷ்டம் இல்லியேன்னு உனக்கு வயத்தெரிச்சல். அதான் இப்டிப் பேசற!”
“நிறுத்துங்க மேடம்! எனக்கு ஒரு பொறாமையும் கிடையாது. உங்களுக்கு அவ்ளோ பணம் கெடச்சா எனக்குச் சந்தோஷம்தான். எனக்கு வேலையிருக்கு. நான் இன்னும் வேலை செஞ்சுதான் பொழக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். பணக்காரங்க கூடப் பேசி நேரத்தை வீணடிக்க என்னால முடியாது. சாரி மேடம். பட் அனி ஹவ் கங்கிராஜுலேஷன்ஸ்” என்று கூறி ஃபோனை வைத்து விட்டாள்.
“எல்லாம் பொறாமை பிடிச்ச ஜென்மங்க! மத்தவங்க நல்லா இருந்தா பொறுக்காதே இவங்களுக்கு?” என்று திட்டி விட்டு தானும் ஃபோனை வைத்தாள். மடமடவென்று கடைக்குச் சென்று கேரட் வாங்கி வந்து கேரட் அல்வா செய்தாள். அவர்கள் வந்த பிறகு சூடாகப் பஜ்ஜி போட்டுக் கொள்ளலாம் என்று மாவைக் கலந்து காய்களை நறுக்கி வைத்தாள்.
முதலில் நிகில் தான் வந்தான். என்றைக்குமில்லாத அதிசயமாக அம்மா சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னம்மா இன்னிக்கு உங்க கம்ப்யூட்டர் வேலைக்கு லீவு விட்டுட்டீங்களா? நான் எப்போ வந்தாலும் கப்யூட்டரையேதான் கட்டி அழுதுக்கிட்டு இருப்பீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?”
“ரொம்ப சந்தோஷமான சமாசாரம்டா நிகில். அப்பா வந்த ஒடனே சொல்றேன். விஷயத்தை மட்டும் கேட்ட நீ அப்டியே துள்ளிக் குதிக்க ஆரம்பிச்சுடுவ!”
“அப்டி என்னம்மா விஷயம்? உனக்கு ஒரு ஃபைலுக்கு மூவாயிர ரூவா தரேன்னு சொல்லியிருக்காங்களா?”
“போடா!போ! என் வாயைப் பிடுங்கி விஷயத்தை வாங்கலாம்னு பாக்காதே! அப்பா வந்த உடனே தான் சொல்வேன்! இப்போ பஜ்ஜியைச் சாப்டுட்டு பேசாம இரு. கேரட் அல்வா வெற இருக்கு தரேன்”
“வாவ் சூப்பர்மா! இப்ப தான் நீங்க பழய அம்மா மாதிரி இருக்கீங்க! பஜ்ஜி குடுங்க! பசிக்குது!”
“ஒரு நிமிஷம் பொறுத்துக்கடா கண்ணா இதோ சட்னி அரச்சிடுறேன். உனக்கு பஜ்ஜியோட சட்னி ரொம்பப் பிடிக்குமே”
தேங்காய் துருவி சட்னி அரைத்து பஜ்ஜியோடு மகனுக்குப் பரிமாறினாள். ஆனால் மனசு முழுக்க சுந்தரம் எப்போது ஆபீசிலிருந்து வருவான் அதிலேயே இருந்தது. அன்றைக்கு என்று பார்த்து சுந்தரம் லேட்டாக 8 மணிக்குத்தான் வந்தான். ஒரு தட்டில் கேரட் அல்வாவும், சூடான வாழைக்காய் பஜ்ஜிகளுமாய் கல்யாணி போய் நின்ற போது அவனுக்கு மயக்கமே வந்து விட்டது.
“கல்யாணியா இது? ஸ்வீட்டு, காரம் என்ன விசேஷம்? உன் கப்யூட்டர் இதெல்லாம் செய்ய விடுதா?”
“சும்மா என்னங்க நீங்க? நிகிலும் இதத்தான் சொன்னான். நீங்களும் இதையே சொல்றீங்களே? நான் என்ன அப்டியா கம்ப்யூட்டர்ல மூழ்கிட்டேன்?”
ரூமிலிருந்து வெளி வந்த நிகிலும், சுந்தரமும் சேர்ந்து கோரசாக “ஆமாம்” என்றனர். கல்யாணி சிரித்து விட்டாள்.
“கல்யாணி நீயா சிரிச்ச? அடேயப்பா உனக்கு சிரிக்கக் கூட தெரிஞ்சிருக்கே?”
“சும்மா கேலி பண்ணாதீங்க! இனிமே நம்ம வீட்டுல எப்பவும் சிரிப்புச் சத்தம் தான் கேக்கும். நம்ம கவலையெல்லாம் தீரப் போகுது”
“என்ன ஜோசியக்காரன் சொல்றா மாதிரி சொல்ற? ஏதாவது லாட்டரி அடிச்சிருக்கா? அதைத்தன் கவர்மெண்டுல தடை பண்ணிட்டாங்களே?”
“உண்மையிலெயே லாட்டரி தாங்க அடிச்சிருக்கு! நான் கப்யூட்டர்ல வேலை செஞ்சதுக்குத் திட்டுனீங்களே அதே கம்ப்யூட்டரால தான் நமக்கு யோகமே அடிச்சிருக்கு!”
“புரியும்படியாச் சொல்லும்மா!”
“சொல்றேன்! ” என்றவள் தனக்கு மெயில் வந்த விவரம், அதில் காணப்பட்ட கண்டிஷன், பரிசுப் பணம் ஐந்து கோடி எல்லாவற்றையும் சொன்னாள். சொன்னவள் எதிர்பார்த்தது போல சுந்தரமும்,நிகிலும் துள்ளிக் குதிக்கவில்லை. மாறாக கல்யாணியை “அட அசடே” என்பது மாதிரிப் பார்த்தார்கள்.
“என்னங்க? நான் இவ்ளோ சொல்லியிருக்கேன்? நீங்க ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்களே/”
“உன் அறியாமையை நெனச்சு சிரிக்கறதா? அழறதா? அப்டீன்னு தெரியல”
“அறியாமையா?’
“ஆமாம்! கல்யாணி! நீ சொன்னதெல்லாம் சுத்த ஃபிராடும்மா! அந்த மாதிரிக் கம்பனியே இருக்காது. நம்ம கிட்ட அம்பதாயிர ரூவா பணம் பறிக்கறதுக்கு இதெல்லாம் ஒரு டிரிக்கு! “
“ஆமாம்மா! எனக்கும் அப்டித்தான் தோணுது. இதுக்காகவா இவ்ளோ சந்தோஷப் பட்டீங்க?”
“எப்டி ஃபிராடுன்னு சொல்றீங்க? உண்மையாக் கூட இருக்கலாம் இல்ல?அவங்க கம்பெனி அட்ரஸ் எல்லாம் குடுத்து ஃபோன் நம்பர் குடுத்து புரொஃபஷனலா இருக்காங்க! நான் ஃபோன் கூடப் பண்ணிப் பாத்தேங்க! அப்டி ஒரு கம்பெனி இருக்கறது நெஜம்”
“ஐயோ!கல்யாணி! இப்டி மெயில் குடுக்கறவனுக்கு ஒரு ஃபோன் நம்பரை செட் அப் பண்றதா கஷ்டம்? எப்பவுமே உழச்சுச் சம்பாதிக்கற காசு தான் நமக்குச் சொந்தம். இந்த மாதிரி பரிசு, லாட்டரி இதுல வர காசெல்லாம் வந்த வழியே போயிடும்”
“தத்துவம் பேசற நேரமா இது? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க? இந்த அஞ்சு கோடி நமக்குக் கெடச்சா நீங்க ஒடனே வி.ஆர்.எஸ் குடுத்துட்டு வீட்டுல உக்காந்து நிம்மதியாக் காலம் தள்ளலாம். நிகில் பேங்க் லோன் போடாமயே அமெரிக்காப் போகலாம். பெரிய வீடு வாங்கலாம்… இன்னும் என்னென்ன வேணுமோ எல்லாமே கிடைக்கும். அதப் போயி ஃபிராடுங்கறீங்களே”
“நீ சொல்றதெல்லாம் கரெக்டு தான். ஆனா இந்த மெயில் ஃபிராடு ஃபிராடு தான்.”
“இப்போ என்ன சொல்ல வரீங்க? அந்தப் பரிசை வாங்க வரியாக் கட்ட அம்பதாயிர ரூவா குடுப்பீங்களா மாட்டீங்களா ?”
“அது வேற இருக்குல்ல? ஏன் பரிசு குடுக்கறவன் அம்பதாயிரத்தைக் கழிச்சிட்டுக் குடுத்தா என்ன? எதுக்கு நம்ம கிட்ட கேக்குறான்?”
“அது வேற ஒண்ணுமில்லீங்க! அவங்க நாட்லருந்து நம்ம நாட்டுக்குப் பணம் வரப் போகுது இல்ல? அதனால நம்ம நாட்டுப் பணமா வரி கட்டுனாத்தான் அந்த நாட்டு கவர்மெண்டு பணம் அனுப்ப அனுமதி தருவாங்களாம். நான் எல்லாம் விவரமா ஃபோன்ல கேட்டுட்டேன்”
“நீ சொல்றது உனக்கே லாஜிக்காப் படுதா? அங்கருந்து பணம் வருமாம். நாம இங்க வரி கட்டணுமாம். என்னடி இது?”
“நீங்க எப்பவுமே இப்டித்தான். மொத மொதல்ல சுஜா கம்பெனில நான் பார்ட் டைம் வேலை பாக்கப்போறேன்னு சொன்ன ஒடனேயும் நீங்க அதெல்லாம் ஃபிராடுன்னு தான் சொன்னீங்க. இப்போ பாருங்க? என்ன ஆச்சு? அது நல்ல கம்பெனி தானே? அது மாதிரி தான் இதுவும் சொல்றீங்க!”
“கல்யாணி அது வேற இது வேறம்மா! நீயே யோசிச்சுப்பாரு எங்கியோ இந்தியாவுல இருக்கற உனக்கு அஞ்சு கோடி ரூவா குடுத்தா அந்தக் கம்பெனிக்கு என்ன லாபம்? அவங்க ஏன் உனக்குக் குடுக்கணும்? அதை யோசிச்சுப் பாத்தியா?”
“இதுல யோசிக்க என்னங்க இருக்கு? நான் இந்த வருஷம் நெட்டை ரொம்ப அதிகமா பயன் படுத்தியிருக்கேன்னு அவங்க குடுக்கறாங்க! “
“சரி! அப்டியே வெச்சுக்குவோம்! இந்தக் கம்பெனி வருஷா வருஷம் குடுக்கும் இல்லியா? அப்போ போன வருஷம் யாரு ஜெயிச்சாங்க? இந்த டீடெயில் எதுவும் உனக்குத் தெரியாது இல்லியா? அதான் சொல்றேன் இதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை இதை நீ நம்பாதே!”
கல்யாணி அப்போதைக்கு அமைதியானாள். சுந்தரமும் அவளே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். சுந்தரம் கேட்ட கேள்விகளை எல்லாம் மெயிலாகத் தானே கேட்பது போல அந்தக் கம்பெனிக்கு அனுப்பினாள். மறு நாளே பதில் வந்து விட்டது. இந்தக் கம்பெனி தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனி அது. கடந்த மூன்று வருடங்களாகத்தான் இம்மாதிரி பரிசு வழங்கி வருகிறது. போன வருடம் வென்றவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் கூப்பர் என்பவர். என்று எழுதி அவருடைய முகவரி ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தது.
கல்யாணியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. நேரே இந்த விஷயத்தை சுந்தரத்திடம் சொன்னாள். சுந்தரத்துக்கு சிரிப்புத் தாங்கவில்லை.
“கல்யாணி! நீ இந்த விஷயத்தை இன்னும் மறக்கலியா? நீ கேட்டப்பறம் இந்த விவரம் குடுத்துருக்காங்களே மொதல்லயே குடுத்தா என்ன? நீ ஃபோன் போட்டுப் பேசினியா? என்ன சொன்னாங்க?”
“ஆமாங்க! நான் பேசினேன். ஒருத்தர் நல்ல தெளிவான இங்கிலீஷுல பேசினாரு. அவரும் போன வருஷம் இப்பிடித்தான் சந்தேகப் பட்டாராம். அப்புறம் காசு கைக்கு வந்த ஒடனே அவர் வாழ்க்கையயே மாறிடிச்சாம். இப்போ ரொம்ப வசதியா சந்தோஷமா இருக்காராம். இது போதுமா? இல்ல இன்னும் வேணுமா?’
“எது எப்டீன்னாலும் இது ஃபிராடுதான். எனக்கே கூட இந்த மாதிரி மெயில் மாசத்துல ஒண்ணு வரும். தூக்கிப் போட்டு போயிட்டே இருக்கணும். நீ புதுசுங்கறதால ஏமாந்துட்ட! இனிமே இந்தப் பேச்சை எடுக்காத. நீ பணம் அனுப்புனா அது யானை வாயில போன கரும்புதான்.” என்று சொல்லி விட்டு டிவியில் ஆழ்ந்து விட்டான்.
“என் விஷயம்னது இவருக்கு எவ்ளோ அலட்சியம் பாரேன். அஞ்சு கோடி ரூவா சும்மா கெடைக்குமா? நாம முன் பணம் அனுப்பத்தான் வேணும். அவங்க வரி தானே கட்டச் சொல்றாங்க? இதுல ஏமாத்து வேலை எங்கருந்து வந்துது?” என்று யோசித்தவள் கணவனுக்குத் தெரியாமல் அந்தப் பணத்தைத் தானே கட்டுவது என்ற முடிவுக்கு வந்தாள். அவளுடைய பேங்க் அக்கவுண்டில் 45,000 இருந்தது. அது நிகிலுக்கு பைக் வாங்கவென சேர்த்து வைத்த பணம். “இப்போதைக்கு இதை எடுத்துக் குடுத்துடலாம், அஞ்சு கோடி வந்த பின்னாடி பைக் என்ன நிகிலுக்குக் காரே வாங்கிக் குடுக்கலாம்” என்று நினைத்தவள் 45,000 ரூபாயையும் எடுத்துக் கொண்டாள். மீதி 5000க்கு தன்னுடைய செயின் ஒன்றை அடகு வைத்தாள்.
மொத்தம் 50,000 உழைத்துத் துளித் துளியாய்ச் சேர்த்த அந்தப் பணத்தை அவர்கள் சொன்ன வெளி நாட்டு அக்கவுண்டில் கட்டினாள். ரசீதை சுந்தரம் கண்களில் படாத இடத்தில் மறைத்து வைத்தாள். “இன்னும் ஏழே நாட்கள். அஞ்சு கோடி ரூவா கைக்கு வந்துடும்” என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுடைய இந்த செயல் எத்தகைய விபரீதத்திற்கு வித்திட்டு விட்டது என்பதை அறியாமல் கல்யாணி வரப் போகும் பணத்திற்காகக் காத்திருந்தாள்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி: http://www.asia-images.com/gallery/detail.php?detail=01029IN02981
வரப்போகும் மெயிலு இறகு போடாது. சிரிதுக்கொண்டே படித்தேன்.