நாதஸ்வரம்
விசாலம்
இப்போதெல்லாம் நாதஸ்வரத்திற்கு, என் தாத்தா காலத்தில் அல்லது அப்பா காலத்தில் இருந்த மவுசு கிடைக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. கும்பகோணத்தில் ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். மாலை நேரம். பெருமாள் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். முன்னால் இருவர் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டு சென்றனர். ஆஹா என்ன அருமையான சங்கீதம்! “மாமவ பட்டாபி ராமா ” என்ற பாடல். மணிரங்கு ராகத்தை இழைத்து இழைத்து வாசிக்க, நான் அந்த இசையில் லயித்தேன். ஒரு அரைமணி நேரம் தான் அந்த வாசிப்பு இருந்தது. கூட்டமும் இல்லை. நான் அவர்களிடம் போய் “அருமையாக வாசித்தீர்கள் ரேடியோவில் வாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“இல்லை இந்தக்கோயிலில் மட்டும் தான் வாசிக்கிறோம். சில நேரம், கல்யாணத்தில் வாசிப்போம்”
“ஏன் இப்படி ?”
“தற்போது பலர் சினிமா பாடல்கள் பாடும் குழுவை அழைத்து விழாவை நடத்திவிடுகிறார்கள். அதற்குத்தான் இந்தக்காலத்தில் வரவேற்பு அதிகம்”
ஆம் அவர் சொன்னதும் சரிதான். இந்தக்காலத்தில் பலரும் லைட் கிளாசிகல் என்று சொல்லப்படும் மெல்லிசையையே விரும்புகின்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். நாதஸ்வரம் ஒரு அருமையான வாத்தியம். பின்னால் சட்ஜமம் கொடுத்தபடி ஒருவர் ஒத்து ஊதிக்கொண்டிருக்க “பிப்பீ பிப்பீ” என்று அதற்குத் தகுந்த ஓலையைப்பொருத்தி ஒலியை ஆரம்பிக்க, கூட தவிலின் சத்தமும் கூட, அங்கு ஒரு மங்கலமான, ஆன்மீக அலைகள் கிளம்பி ஒரு புத்துணர்ச்சி கொடுப்பதை நம்மால் உணரமுடிகிறது.
1940 ல் காளமேகம் என்ற படம் ஒன்றை எலிஸ் ஆர் துங்கன் என்ற ஒரு அமெரிக்கர் தயாரித்தார். அதில் நடித்தவர் யார் தெரியுமா? நாதஸ்வர சக்கரவர்த்தியாய் கொடிக்கட்டிப்பறந்த திரு டி ன் ராஜரத்னம் பிள்ளைதான். தமிழ்ப்புலவர் காளமேகத்தைப் பற்றிய படம் தான். அந்தப்புலவர் நன்கு பாடுவார். ஆனால் நாதஸ்வரம் வாசிக்கமாட்டார். இருப்பினும் காளமேகப்புலவராக இருந்த நம் நாதஸ்வர வித்துவானை நாதஸ்வரம் வாசிக்கவைத்தார் அவர். அவருக்கு ஒத்து ஊதினவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் .
மிஸ் கமலா என்ற படத்தில் திரு ராஜரத்னம் பிள்ளை ” ராகம் தானம் பல்லவி” தோடிராகத்தில் வாசித்தார் என்றும், பின் ரீதிகௌளை ராகத்தில் “நன்னுவிடச்சி ” என்ற பாடலும் அந்தப்படத்தில் இடம் பெற்றது எனவும் என் தந்தை சொல்லியிருக்கிறார். இவர் மணிக்கணக்காய் தோடி ராகம் வாசிப்பார். நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன் கோயிலில் மாலையில் ஆரம்பித்த தோடி இரவு வரை நீடித்ததாம் திரு குப்புஸ்வாமி, திருமதி கோவிந்தம்மாளுக்குப் பிறந்த இவர் முதலில் பாட்டுப்பாட கற்றுக்கொண்டார்
இவரது பெயர் முதலில் சுப்பிரமண்யம் என்றுதான் இருந்தது. ஆனால் இவரை திருமருகன் நடேசப்பிள்ளை என்பவருக்கு தத்து கொடுத்த பின் இவர் டி.என்.ராஜரத்னம் பிள்ளையானார். மழலைச்செல்வம் வேண்டி ஐந்து தடவை திருமணம் செய்துக்கொண்டாராம். ஆனாலும் இவருக்கு இதில் ஏமாற்றமே !
நான் பம்பாயில் இருக்கும் போது மாதுங்கா பஜன சமாஜ், ஆஸ்திகசமாஜ் இரண்டிலும் ராமநவமி உத்சவம் மிகப்பிரமாதமாக நடக்கும். பலதடவைகள் டி என் ஆர் அவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார், நான் சிறுமியாக இருந்த போது. ஒரு தடவை அவரை ஒரு லாரி போன்ற வண்டியில் ஏற்றி, அதில் நின்றபடி அவர் நாதஸ்வரம் வாசித்து வந்தது என் நினைவுக்கு வருகிறது. முதல் நாள் அவர் தன் கச்சேரியை சரியாக தரவில்லை என்பதால் மக்களுக்கு ஒரு அதிருப்தி. அதனால் சில விஷமிகள் அவர் மேல் கையில் கிடைத்ததெல்லாம் வீசி எறிந்தனர். பெரிய வித்வான் என்று வந்தாலே ஒரு சிலருக்கு எதாவது ஒரு வீக்னெஸ் வந்துவிடும் போலிருக்கிறது. மிகவும் புகழ்ப்பெற்றா டி ஆர மாலி அவர்களுக்கும் இது போல் பிரச்சனை இருந்தது. ஆனால் அவர்கள் வாசிக்கும் நேரம் விழும் சில மாணிக்கம்,முத்துக்கள் மறக்கமுடியாத மனதில் பதிந்துவிடும் வைர ஆரங்கள்.
ஒரு தடவை. பம்பாய் ஷண்முகானந்த சபாவில் நாதஸ்வர சக்கரவர்த்தி வாசித்த வாசிப்பு. ஆஹா அருமை! இரவு பத்து மணி ஆகியும் கச்சேரி தொடர்ந்தது. ஒருவரும் எழுந்திருக்கவில்லை. தோடி, சிம்மேந்திரமத்யமம் என்றும், முடிவில் தில்லானாவும் சேர்ந்து கச்சேரி களை கட்டியது. இன்றும் என்னால் அந்த நாளை மறக்க முடியவில்லை.
இவருடைய குரு திருக்கோடிக்காவல் திருகிருஷ்ணய்யர், பின் அம்மாசத்திரம் கண்ணுசாமிப்பிள்ளை. முதலில் பாட்டுக்கச்சேரி செய்ய ஆரம்பித்த இவர் பின் நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் திருவாவடுதுறை கோயிலில் இவர் வாசித்து வந்தார். கோயிலில் அதிகாலை கோயில் திறக்க, கண்டாமணி ஒலிக்க இவர் ஜம்மென்று நெற்றியில் குங்குமப்பொட்டுடன் சுந்தரவதனாக வருவார். அவர் நாதஸ்வரத்திலிருந்து பூபாள ராகம் எழும். அதைக்கேட்கவே பக்தர்கள் கூடுவார்கள். பின் திருவாவடுதுறை ஆதீனத்திலும் நாதஸ்வர ஒலி ஒலிக்க ஆரம்பித்தது. அதன் பின் பல வெற்றிப் படிகள் ஏறி பல இடங்களில் கச்சேரி கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். ரேடியோவிலும் A grade ஆர்டிஸ்ட். நாதஸ்வர வித்வான் என்றால் பளீரென்ற வெள்ளை வேஷ்டியும் மேலே சரிகை அங்கவஸ்த்ரமும் போட்டபடி வரும் உருவம் தான் நம் மனதில் தோன்றும். கேரளாவென்றால் முண்டு வேஷ்டிதான் டிரெஸ். ஆனால் இவர் அந்த உடையையே மாற்றி தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்துக்கொண்டார். வடக்கத்தி பாணியில் இவரது உடை அமைந்திருக்கும் கழுத்தில் ஒரு தங்கச்செயின், கை விரல்களில் பளபளக்கும் கற்கள் பதித்த மோதிரங்கள், மணிக்கட்டில் ஒரு பெரிய அளவு தங்க கடா போன்ற செயின் என்று இவரை என் சிறிய வயதில் பார்த்த ஞாபகம். இவரது நாதஸ்வரத்தில் பல தங்க மெடல்கள் தொங்கியதும் நினைவுக்கு வருகிறது.
அவருடன் எப்போதும் ஒரு கூஜாவும் இருக்கும். இப்போது கூஜா என்ற ஒன்றே காணாமல் போய்விட்டது ஒரு சிலர் வீட்டில் முன் ஹாலில் அலங்கார பொருளாக கூஜா மலர்க்கொத்துடன் நம்மை வரவேற்கிறது. இவரது சீடர்களும் இவரைப்போல் கர்நாடக இசைக்குப்பெருமை சேர்த்தவர்கள். குழிக்கரை பிச்சையப்பா காரைக்குறிச்சி அருணாசலம் போன்றவர்களைச் சொல்லலாம். கொஞ்சும் சலங்கை படத்திலும் அருமையான நாதஸ்வரம், டி என் ஆர் அவர்களின் சீடர் திரு காரைக்குறிச்சி அருணாசலம் அவர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. அட, தில்லான மோஹனாம்பாள் சினிமாவை நினைக்காமல் இருக்கமுடியுமா? அதில் நலந்தானா பாடலில் மிக அருமையான நாதஸ்வரம். அதற்கேற்றாற்போல் சிவாஜி அவர்களின் நடிப்பு ……. இன்றும் பசுமையாக மக்கள் நடுவில் வலம் வருகிறது .
தில்லி மாநகரம், சுதந்திர நாள் ..1947 ..ஆகஸ்டு 14 முடிந்து 15 ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்க, நம் சுதந்திரம் நம் கைக்கு வரும் வேளை நெருங்க, மங்கலமான ஒலி கிளம்பியது. அந்த ஜனரஞ்சக ஒலியைத் தந்தவர் நாதஸ்வர சக்கரவர்த்தி திரு ராஜரத்னம் பிள்ளை தான் என்று பின்னால் தெரியவந்தது. அன்று அவருடன் கூட தவில் வாசித்தவ்ர் நீடாமங்கலம் மீனாஷிசுந்தரம் பிள்ளையவர்கள். அதே போல் அன்று சர் பிஸ்மில்லகான் அவர்களும் ஷெனாய் வாசித்தார்.
தற்போது கிளாரனெட்டும் செக்சபோன் என்ற வாத்தியமும் பல சினிமாவில் உபயோகப்படுத்தப் படுகின்றன. கத்ரி கோபாலநாத் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார் என நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு தம்பதி நாதஸ்வரம் வாசிக்கக்கண்டேன். தவிர ஒரு டிவிசானலில் பெண்கள் குழு நாதஸ்வரம், தவில், மிருதங்கம் கஞ்சிரா என்று எல்லாம் சேர்ந்து வாத்யவிருந்தம் போல் வாசித்துக்காட்டினார்கள்.
இன்றும் பல சிவன் கோயில்களில் பிரதோஷம் நேரத்தில் நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. கல்யாணங்களில் வாசிக்கும் நாதஸ்வர வித்துவான்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதில்லை. கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஒருவர் குரல் கொடுக்க அந்த நேரத்தில் எந்த ராக ஆலாபனை, இருந்தாலும் அதை நிறுத்தி மேல் சட்ஜமத்தில் பீ ……பீ…………என்று ஒலி கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஊஞ்சல், மாலை மாற்றுதல், தாலி கட்டுதல் போன்ற நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ராகம் அல்லது பாட்டு தான் பாட முடிகிறது. மேலும் நாதஸ்வர கச்சேரி கேட்பதை விட ஒருவர்க்கொருவர் குசலம் விசாரித்து, வம்புக்கதை பேசுவதில் ஆர்வமாக இருப்பதால் நாதஸ்வர வித்துவானை ஒருவரும் கவனிப்பதில்லை.
நாதஸ்வரம் மிகவும் அழகான ஒரு வாத்தியம். வாசிக்கும் இடத்தில் ஒரு மங்கலமான சூழல் உண்டாகிறது.இந்த வாத்தியத்தைக் கற்றுக்கொள்ள பலர் முன்னுக்கு வரவேண்டும். நாதஸ்வரம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோயிலில் வாசிக்கும் வித்துவான்களுக்கு தகுந்த ஊதியமும் கொடுக்க வேண்டும். இசைக்கல்லூரியில் நாதஸ்வரத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும்.
நான்கு கட்டுரை தகவல்களை ஒரு கட்டுரையில் தந்திருந்தாலும், கோர்வையாகவும், தன்னிறைவாகவும், சுவையாகவும் அமைந்துள்ள நினைவலைகளின் கூட்டமிது. திரு.ராஜரத்னம் பிள்ளை அவர்கள் சுந்தரவதனன் தான். அவரை பற்றி தமாஷாக சுப்புடு எழுதியிருக்கிறார். ஜனாதிபதி விருது/மெடல் தரும் விழாவுக்கு, வேன் அனுப்பியிருந்தார்களாம். ‘நான் என்ன செத்தா போயிட்டேன். ப்ளஷர் கார் வேண்டும்’ என்று அதை திருப்பி அனுப்பி விட்டார். அந்த சபையில் வடக்கு வளர, தெற்குத்தேய இருந்தது அவருக்கு எரிச்சல். அங்கு எல்லாம் வல்ல நிர்மலா ஜோஷி, ‘ மிஸ்டர் பிள்ளை1எங்களுக்கு வேணும் உங்கள் தோடி’ என்றாளாம். ஐயா, ‘சரி தாண்டி, போடி’ என்றாம். அவருடைய வாசிப்பை நான் கேட்டிருக்கிறேன்.
நினைவலை -> நினைவலை.
இன்னம்பூரான்