நூ. த. லோகசுந்தரம்

கல்லாடையும் துவராடையும் ஒரே பொருளைத் தரும் இரு சொற்களாகும். கல்/துவர் எனும் இரு சொற்களும் சிவந்த நிறத்தைக் காட்டும்.

தமிழகத்தும், (ஏனைய இடத்தும்) குன்றுகளில் மலைகளில் காற்று, மழை, பனி, வெப்பம் எனும் இயற்கையால் உருண்டு திரண்ட கற்கள், பெரும்பாலும், உடைபடாது. வெளிப்புறமாக உள்ள பரப்பினில், சற்றே பழுத்த சிவந்த சந்தன நிறமுடைய, அடுக்கல்களாகவும், பாறைகளாகவும் அறைகளாகவும் காணப்படுதலால் ‘கல்‘ எனும் சொல் பண்பாகு பெயராக அவ்விதச் செந்நிறத்தையும் காட்ட நின்றது.

“கோத்த கல்லாடையும் கோவணமும்” (2.103.2)
“கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்”(6.8.6)
“கல்லாடை புனைந்த காபாலி காண்” (6.92.2)
எனக் கல்லாடை எனும் சிவந்த நிற ஆடை புனைந்தவராகச் சிவபெருமான் தேவாரத்தில் போற்றப்படுகிறார்.

இந்து சமயம் எனும் போர்வைக்குள் அடங்கும் பற்பல நெறிகளைச் சார்ந்த துறவிகளும் பௌத்த மதத்தில் தோய்ந்து துறந்தோரும் சுற்றும் ஆடை அல்லது உடுத்தும் குப்பாயம் தனித்ததொரு செந்நிறம் உடையதாய் இருப்பதை நாம் அறிவோம். ‘கல்’ எனும் சொல் சிவந்த நிறத்தினுக்கு ஆளப்படுவதைக் ‘கல்லால மரம்’ எனும் சொல்லிலும் காணலாம். ஆலமரம் தன் பழம் வழி, (இவ்வாடைகளை விட சற்றே மாறுபட்ட சிவந்த நிறம் இருந்தாலும்) ‘சிவந்த நிற பழம் காய்க்கும்’ என இருமடி ஆகுபெயராக விளி பெற்றது.

“கல்லாலின் கீழிருந்த காபாலி காண்”%(6.8.8)%
“கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்”(6.18.3)
“கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானை” (6.20.8)

என வரும் தோவாரப் பாடல் வரிகள் சிவபெருமான் ஞானகுருவாக ஆலமரத்தின் கீழ் இருந்து முனிகளுக்கு அறம் சொன்னதாகப் புராணங்கள் விவரிக்கும். ‘கல்லால்’ என்பதில் சிவந்த பழங்கள் ஈனும் ஆலமரம் என விதந்த விளியாகின்றது.

[[ஆல் எனும் சொல் நீரினைக் குறிக்கும். ஆலங்கட்டிமழை, ஆலவட்டம் (காற்றில் உள்ள நீர்த் திவலைகளால் ஞாயிற்றை, திங்களை சுற்றிச் சில நேரங்களில் தோன்றும் ஒளி வட்டம்) எனவும் நீர் நிலைகளை அணித்து அமைந்த ஊர்கள், ஆலப்பாக்கம், ஆலந்துறை, ஆலந்தூர் எனவும் நீர்வழிப் பெயர் பெறுவதைக் காணலாம். ஓர் பழங்கட்டுரையில் அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி என்பார் தென் சென்னையில் இப்போது தியாகராய நகர் எனும் பெயர் தாங்கி மிளிரும் இடம் 1920-30 களில் ‘மயிலாப்பூர் ஏரி’ எனப் பெரிய ஏரியாக இருந்தது. அதன் உயர்ந்த கரையில் ஓர் அம்மன் கோயில் எழுந்ததற்கு ‘ஆல் அமர்ந்தாள்’ எனப் பெயர் அமைந்தமையைக் காட்டினார். அக்கோயில் ஆலமரத்தின் கீழ் அமையாமல் ஏரிக்கரையின்(நீர்) மேல் அமைந்தது. இன்றும் அக்கோயில் பழைய துண்டான கரை மேலேயே உள்ளது.

ஆலமரமோ அரசமர அத்திமர வகையினது ஆயினும் அரசமரம் போல் கற்களையோ வேறு மரம் போன்று பற்றுக்கோல்களைக் சார்ந்து வளராது. நீர் எப்போதும் தேங்கி நின்று சதுப்பு நிலமாக இளகிய மண்வாகு காணும் இடங்களிலும் வளரக்கூடியது. உயரும் சமயம் பரிணாம வளர்ச்சியால் காற்றில் விழாமலிருக்க, பிடிப்பிற்குப் போதிய திண்மை இருக்காது என்பதால் அங்கங்கே விழுதுகளைத் தாழ்த்தி, கிடையாக வளர்ந்து மண்ணைப்பற்றி வளரும். எப்போதும் ‘ஆல்’ இடையேயே சூழ்ந்து வளரக்கூடிய மரம் அச்சொல்லாலேயே ஆகுபெயராக’ ஆல்’ எனப் பெயர் பெற்றது. இதே வகையைச் சார்ந்த (சிதம்பரம் அடுத்த) காயல்களில் உள்ள ‘தில்லை’ மரங்களுக்கும் தாழை இனத்தில் உள்ளது போல் பரிணாம வளர்ச்சியில் பெருத்த அடிப்பாகத்தின் மேற்பகுதியிலிருந்தே பற்பல வேர் போன்ற சிறுத்த தண்டுகள் முட்டுக் கொடுத்துத் தாங்கி நிற்க வளர்ந்துள்ளமை காணலாம்]]

மேலும், ‘துவர்‘ எனும் சொல்லும் ‘சிவந்த‘ எனும் பொருளில் வருவதை நாம் நன்கு அறிவோம். மகளிரின் இதழ் ‘துவர்’ நிறமாகக் காட்டுவது இலக்கியங்களின் மரபு.

“நடம் தாங்கிய நடையார் நல்பவளத் துவர்வாய் மேல்
விடம்தாங்கிய கண்ணார் பயில்”(1.9.3) /மகளிர் இதழ்=பவழம்போன்ற செந்நிறம்/
“உடுக்கை பல துவர்க்கூறைகள் உடம்பிட்டு உழல் வாரும்”
(1.17.10)/பௌத்த துறவிகளின் ஆடை/
“படம் தாங்(கு) அரவல்குல் பவளத் துவர்வாய் மேல்
(1.82.9)/மகளிர் இதழ்=பவழம்போன்ற செந்நிறம்/
“துவர்தரு வல்ஆடையினாரும்” (3.43.9)/பௌத்த துறவிகளின் ஆடை/

துவரை- ‘துவரம்’ பருப்பில்’ காணும் ‘அரக்கு‘ போன்ற சிவந்த நிறம் சிறிதே கருத்ததாகக் காணும். எவ்வாறாயினும் ‘துவர்’ ‘கல்’ எனும் சொற்கள் ஏறக்குறையச் செம்மண் நிலம் போல் பரந்து பொதுவாகப் பல்வித சிவந்த நிறத்தைக் குறிக்க எழுந்ததை அறியலாம்.

அதான்று, ‘செவ்வாய்‘ எனும் கோளின் செந்நிறமும் ‘செம்மண் சேரி‘ எனும் இடப்பெயரில் வரும் செவ்வண்ணமும் ‘செக்கர்வான்’ என்பதிலுள்ள சிவப்பும் ‘சே’வல் (புள்-கோழி) ‘செந்நாயி’ லுள்ள செம்மையும் “கொவ்வைச் செவ்வாயில்”(கோவைக்காய்) ‘செந்தாமரை’யில் ‘செவ்வான் மதி‘யில் ‘தொண்டைச் செவ்வாய்‘(தொண்டை-ஓர்பயிரினம்), தத்தையின் செவ்வாய் குமுதச் செவ்வாய் முதலியவற்றில் உள்ள செம்மையும் (நிறம்) தம்தம் இடை சிறிது சிறிது வேறுபாடு மட்டும் உடையதே அன்றி மாறுபாடு உடையவை அல்ல.

%% = (…) எனப் பிறை அடைப்புக் குறிகளுள் வருவன சைவத்திருமுறை-பதிக-பாடல்எண்கள்.

 

படத்திற்கு நன்றி:http://www.hinduvedhas.com/hello-world/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கல்லாடம் – கல்லாடை – துவராடை

  1. தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தில் இருப்பவர். இங்கு கல் என்பது குன்று, மலை.
    சங்க இலக்கியத்தில் பெருங்கல் = இமய மலை.
    கல்லால மரம் (கல்லத்தி) ஆங்கிலத்தில் Hill Banyan எனப்படுகிறது.
    தாவரவியல் பெயர்: Ficus Tomentosa
    http://zipcodezoo.com/Plants/F/Ficus_tomentosa/
    http://plants.jstor.org/flora/fwta3534
    http://www.scribd.com/doc/92264885/Tamil-Names-to-Botanical-Names

    கல்லால மரம் ஆங்கிலத்தில் ’ஹில் பன்யன்’ என்ற பெயருடன்
    விளங்குவது சிறப்பு.

    கல்லாடை – இங்கே (ochre) stone எனப்படுவதால் கல் பயன்படுகிறது.

    யால்/ஆல் – மரப்பெயர் விழுதினால் ஏற்படுவதென்று கருதுகின்றனர்,
    விழுதுகள் ஆல மரங்களுக்கே உள்ள சிறப்பு.
    தண்ணீர்க் கரையில் மாத்திரம் ஆல மரம் இருப்பதில்லை. நடு ஊர்களிலும்
    உள்ளது. மேலும் ஆல் = தண்ணீரால் ஏற்படும் பெயர் என்றால்
    தண்ணீர்க்கரைகளில் எத்தனையோ மரங்கள் உள்ளனவே. அவற்றுக்கு
    ஏன் ஆல் என்ற பெயர் இல்லை என்பதும் பார்ப்போம்.
    ஆலம் விழுது வடம் போல் உள்ளது. எனவே, ஆல்/யால் வடமொழியில்
    வட விருட்சம் என்கிறார்கள். தென் திசைக்கு தென்னை, வட திசைக்கு
    ஆல்/வட மரங்கள் விசேடம்.

    நா. கணேசன்

  2. அன்புமிகு கணேசன் அவர்களுக்கு,

    எப்போதும் ஆல் (நீர்) சூழ்ந்த இடத்தில் நிலவாகு இளகியதாக இருக்கும்போது தாங்கி பிடிக்க

    மேலும் சிறப்பான அமைப்பு தேவைப் படுதலால் பரிணாம வளர்ச்சியில் விழுது தோன்றிற்று

    என்பதை நான்காட்டினேன் தாழை தில்லை போன்றவற்றிலும் அவ்வைகை Arial roots எனும்

    காற்றுவழியிலும் வேர் உண்டு ஆனால் சிறிய அளவில்

    ஆல் வேறு இடத்தில் வளர்வதால் தேவையில்லை என்பதால் விழுதுகளை நீகிவிடுமா ??

    அந்நிலத்து மரங்களுக்கு விழுது இல்லை யே என்பதால் அவை ஆல் வரளரக் கூடிய இடத்தில்

    வளரமுடியாது அவ்வளவே.

    நீங்கள் என்ன யானைக்கு யர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்பதுபோல் பேசுகிறீர்களே

    விந்தையான தர்க்க நியாயம் நிறைய அறிந்தவர் என்பதை காட்டுகிறீர்

    (௧)

    mountain banyan = கல் ஆல் என்று எவனோ தனக்குத் தெரிந்த அறிவில் ஆங்கிலத்தில் எழுதி

    விட்டதால் கல் எனும் சொல்லுக்கு சிவப்பு எனும் லோகசுந்தரம் காட்டும் பொருள் இல்லாது

    போய்விடும் என சொல்ல நினைக்கிறீரா அ ய்யா???

    (௨)

    தட்சிணா மூர்த்தி படிமம் கல் ஆல் எனும் சொல்லுடன் வரும் பொது என்னஆலமர பழம் தன்

    சிவப்பு நிறத்தை நீக்கிவிடுமா ???

    (௩)

    கல்லிலே வளரும் ஆலமர வகை சார்ந்த அரசமரதிற்கு விழுதுகள் கிடையாது அது கல்லிலே

    அல்லது எனையும் சுற்றி வளர்ந்து விடும் அதற்கு ஏன் கல்லரசு என பெயர் வைக்கவில்லை??

    (௪)

    சுவற்றில் எங்கோ நாம் காணமுடியாத விரிசலிலும் வளர்ந்து தன் வேர்களை கீழே கொண்டு

    செல்லக் கூடியது அரச மரம் அதற்கு என்ன விடர் அரசு என பெயர் உண்டா??

    வடமொழில் ஒரு சொல்லை வைத்தவன் அவர் பார்தபார்வையைப் பொருத்தது

    கயிறு போல் தொங்கு கிளை (வேர்) கொண்டதால் அச்சொல் அவ்வாறு பிறந்தது அவ்வளவே

    வடம்=கயிறு எனும் பொருளில் வந்த சொல்லின் வட எனும் முற்பகுதியை மட்டும்

    பார்த்த ஒருவன் (அல்லது பலராகட்டும்) அதனில் வேறு பொருளாம் வடக்கு திசையின்

    முற்பகுதியை எனக் கொண்டால் ஆய்வறிவு குறைந்த நிலை அல்லது குழப்பம்

    ஏற்படுத்த நினைக்கு ம் குறும்புத் தனம் அவ்வளவே

    தமிழகத்து கோயில் களில் அம்மையின் பெயர் தமிழில் உள்ளதை வடமொழியில்

    மாற்றி வைக்க நினைத்து தனக்குத் தெரிந்த வழி சொல்லைப் பிரித்து ஏதோ ஒரு

    மொழிமாற்றம் செய்து அதுதான் பெயர் என உளரும் மொழிப்பிதர்களுக்கும் இந்த

    வட வினை வடக்கு என பொருள் காட்டுபவனுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை என

    வட என்ப தனை எடுத்துக்காடாக காட்டும் கணேசன் நன்கு விளங்கிக் கொள்ளக் கேட்டுக்

    கொள்கிறேன்

  3. அருமையான பதிவு. கல்லால் மரம், கல்லாடம், கல்லாடை -சரியான அணுகல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.