சிரிக்கச் சிரிக்க கீதை! – புதிய தொடர் ஆரம்பம்.
ஹாஹோ
முன்னுரை
கீதையை எழுதலாம் என்று நினைத்தபோதே என்னுள் மூன்று கேள்விகள், ஒன்று: கீதையை எழுதலாமா?
இரண்டு: நாம் எழுதலாமா?
மூன்று: இப்படி எழுதலாமா?
ப்ரஸ்தானத் திரயங்களில் ஒன்றான, இந்துக்களின் புனித நூலான, ஆதிசங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார் ஆகியோர் விளக்கிய, வேத வியாஸர் எழுதிய கீதையைப் பற்றி எழுதலாமா?
சமஸ்கிருத அறிவே துளியும் இல்லாத, ஆன்மீக ஞானம் பூஜ்ஜியமான, குருவிடம் முறையாகப் பயிலாத, பாமர மக்களில் ஒருவனான நான் இதை எழுதுவது முறையா? அதற்கு எனக்குத் தகுதி உண்டா?
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை, ஞான, பக்தி, கர்ம, யோக முறைகளில் விளக்கப் படவேண்டிய ஒன்றை, நகைச்சுவையாக விளக்க முனையலாமா?
இதை யோசித்து கொண்டு படுத்ததாலோ என்னவோ அன்று இரவு எனது கனவில் என் உள்ளம் கவர்ந்த இறைவனான ஆஞ்சநேயன் வந்தான். மிகப் பிருமாண்டமான உருவத்தோடு கதையைத் தாங்கி வந்த அவன் அதைக் கீழே வைத்துவிட்டு விடுவிடுவென சிரசாசனத்தில் தன்னை நிறுத்தி, வானமே அதிர என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான். “ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?”, என்று பவ்யமாக உடலைக் குறுக்கிக் கொண்டு கேட்டேன். “அதோ பார் அந்தக் கதையை!; அது இத்தனை நேரம் என்னைத் தூக்கி வந்ததாக நினைத்துக் கொண்டு களைப்பில் சாய்ந்திருப்பதை!”, என்று சொல்லிவிட்டு இன்னும் வேகமாகச் சிரிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு கனவு கலைந்தது. எனக்குப் புரிந்தது. எதையும் நாம் செய்யவில்லை. நாம் ஒரு கருவி மட்டுமே. ஆஞ்சநேயன் நினைப்பதால் மட்டுமே அவன் கையிலுள்ள கதை சுத்துகிறது. அவன்தான் நம்மையும் எழுதத் தூண்டுகின்றான். அவனே அதைப் பற்றிக் கவலை கொள்ளட்டும். போற்றுவார் போற்றலும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அனுமனுக்கே!
இந்த எனது “சிரிக்கச் சிரிக்க கீதை!”, என்னும் தொடரை நகைச்சுவை எழுத்துலகச் சக்ரவர்த்தி, “பாமர கீதை”, படைத்த பெரியவர், “அப்புசாமி சீதாப்பாட்டி” நாயகன், உயர்திரு பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
அன்புடன்,
ஹாஹோ
படத்திற்கு நன்றி:http://webcache.googleusercontent.com/search?q=cache:http://depakmuniraj.blogspot.com/2012/01/bhagavad-gita-wallpapers.html
ஹாஹோ! உங்களை ‘ஆஹா’ என்று வரவேற்கிறேன். கவலையற்க. தடம் மாறினால், வினா எழும்.
இ
அருமையான முன்னுரை.
ஹாஹோ என்ற பெயரே அற்புதம். உலகின் எல்லா மொழியினருக்கும் விரைவில் நெருக்கமானவர் ஆகிவிடுவீர்கள்.
கீதையைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லுங்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
அருமையான முன்னுரை.போற்றுவார் போற்றலும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அனுமனுக்கே! “சிரிக்கச் சிரிக்க கீதை – கண்டிப்பாக வெறும் சிரிப்புடன் இருக்காமல் சிரிப்புடன் கலந்த சிறப்பாக எளிய நடையில் அனைவரின் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் இந்த புதிய முயற்சி வளமான நிலையாக அனைவரையும் கவர்ந்திழுக்க வாழ்த்துக்கள்….!
வாழ்த்துக்கு நன்றி திரு இன்னம்பூரான். அடிக்கடி வினா தொடுத்து எமை மெருகேற்றுங்கள்!
நன்றி திரு அண்ணா கண்ணன் உங்களுக்கும் வல்லமையாளர்களுக்கும் நெருக்கமானதையே பெரும்பேறாக எண்ணுகிறேன். வல்லமை என்ற ஒரு கல்லினால் அடித்து பல மாங்கனிகளை விழவைத்த குழு உங்களுடையது. ஆசிரியர் குழுவுக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
நன்றி திரு சித்திரை சிங்கர். உங்கள் பாடலைப் போன்றே வாழ்த்தும் அருமையாக இனிக்கிறது. உங்களைப் போன்றே தொடர் நன்றாக இருக்கும் என நானும் நம்புகிறேன். நன்றி.
ஜெய் ஸ்ரீ சீதாராம்
வாழ்க நின் தொண்டு சிரிப்பானந்தா! “புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வம்” இவற்றிக்கெல்லாம் அதிபதியான ஆஞ்சனேயனின் அருளும் ஆணையும் பெற்றவரே! தூள் கிளப்பும்.
விரைவிலேயே கலியுக நகைச்சுவை வால்மீகியாக இருந்து ஸகலத்துக்கும் அதிபதியான ஸ்ரீ இராமபிரான் நகைச்சுவையிலும் சளைத்தவரல்ல என்பதையும் எடுத்த்க்காட்ட அடியேனின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.
அடியேன் அயோத்யா தாஸன்.