இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (20)
சக்தி சக்திதாசன்
முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்
அன்பினியவர்களே !
வணக்கத்துடன் மீண்டும் உங்கள் முன்னே …….. நெஞ்சத்திலே ஒரு கேள்வி ….. ஆயிரம் எண்ணங்கள் அலைமோதிச் சிதறுகின்றன. தெறிக்கும் துளிகளில் மிதக்கும் வினாக்கள்.
முதியோர்கள் ……. யார் இவர்கள் ? சமுதாயத்தின் தேவைக்கு அப்பாற்பட்டவர்களா? அன்றி சமுதாயத்தினால் பராமரிக்கப்படவேண்டியவர்களாக அச்சமுதாயத்திற்குப் பாரமாய் இருப்பவர்களா ?
ஏனிந்தக் கேள்வி ? எனும் உங்களின் கேள்வி எனக்குப் புரிகிறது. சமீபத்தில் இங்கிலாந்து ஊடகங்களில் அடிபட்ட ஒரு கருத்து என் கவனத்தை ஈர்த்தமையே இதற்குக் காரணமாகும்.
இங்கிலாந்தின் வேலையற்றோர் பட்டியலில் கணிசமான இடத்தை வகிப்போர் 50க்கும் 65க்கும் இடப்பட்டோர் எனும் ஒரு செய்தியே.
பலவிதமான விவாதங்கள், பலவிதமான கருத்துக்கள், பல கோணங்களில் இருந்து எழுகின்றன. வயதானோர் வேலயில் தொடர்ந்து நீடிப்பதனால் இளையோர் வேலை பெறும் சந்தர்ப்பங்கள் குறைக்கப்படுகின்றன என்கிறார் ஒரு சாரார். அனுபவமிக்கவர்களின் சேவை இன்றைய சமுதாயத்தில் எத்தனை அவசியம் என்பதை அரசாங்கம் உணரவில்லை என்கிறார்கள் மற்றொரு சாரார்.
உலகப் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தினூடாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அப்பிரயாணத்தில் ஒரு படகாக இங்கிலாந்தும் தத்தளித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறது. புதிய பிரேரணைகள் சட்டங்களாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதுவரை காலமும் ஓய்வூதியம் பெறும் வயது 65 என இருந்தது இப்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்ன? வயது “முதிர்ந்தவர்கள்” எனக் கருதப்படுவோர் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக 65 வதைத் தாண் டியும் பணி புரிய வேண்டிய தேவைக்குள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால் இன்றைய இங்கிலாந்தில் வேலையற்றோர் பட்டியலில் 30 சதவீதமானோர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்கிறது ஒரு ஆய்வு. இந்தக் குழுவினரில் ஜம்பது சதவீதமானோர் ஒரு வருடகாலமாகியும் வேலையற்று இருப்பதாகத் தெரிவிக்கிறது அதே ஆய்வு.
50 வயதுக்கு மேற்பட்டோர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் வாதத்தை நிரூபித்திருக்கிறார் ஒருவர். 60 வயதுடைய இவ்வாங்கிலேய ஆண் 24 வருடங்களாக வியாபாரத்துறையில் அனுபவம் பெற்றவர். இவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் மூடப்பட்டதால் வேலையற்றோரில் ஒருவரானார். 20க்கு மேற்பட்ட விண்ணப்பப் படிவங்களை நிரப்பி அனுப்பியும் ஒரு வெற்றிடத்திற்கும் இவருக்கு நேர்முகப் பரீட்சைக்குக் கூட அழைப்பு வரவில்லை. அடுத்து இவர் ஒரு யுத்தியைக் கையாண்டார்.
ஒரு கம்பெனியில் விளம்பரம் செய்யப்பட்ட வெற்றிடத்திற்கு இரு விண்ணப்பப் படிவங்களை அனுப்பினார். ஒரு விண்ணப்பம் இவரது உண்மையான விபரங்களைத் தாங்கியிருந்தது, மற்றைய விண்ணப்பம் ஒரே பெயரில் வயதை மிகவும் குறைத்து அவ்வயதுக்கேற்ற அனுபவத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இவரது உண்மை விபரங்களைத் தாங்கிய விண்ணப்பத்திற்கு இவருக்கு ஏற்ற வேலை காலி இல்லை என்றும் இவர் அனுப்பிய மற்றைய விண்ணப்பத்திற்கு நேர்முகத்தேர்விற்கு வருமாறும் பதில் வந்தது.
24 வருடங்கள் அனுபவம் இருந்தும் தனது உண்மையான விபரங்கள் அடங்கிய விண்ணப்பம் வெற்றி பெறாததிற்கு தனது வயதே காரணம் என்கிறார் இம்மனிதர்.
வாழ்வின் வாலிபப் பருவம் முழுவதும் உழைத்து அதன் மூலம் ஈட்டிய அனுபவம் தனது எஞ்சிய உழைக்கும் பருவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு உபயோகப்படாத நிலையில், உள்ளத்தில் ஊசலாடும் உணர்வுகள் எத்தகையனவாயிருக்கும் ?
நாம் வாழும் இந்தக் காலகட்டம் மிகவும் பரபரப்பானது, மிகவும் அவசரமானது. வாழ்விலும் சரி, பணிபுரியும் இடங்களிலும் சரி, எதுவுமே ஒரு பனிப்போராகிறது. இத்தகைய ஒரு சூழலில் நிதானமான, தீர்க்கமான முடிவுகள் அவசியமாகிறது. இத்தகைய சூழலில் நிச்சயம் அனுபவம் மிக்க ஒருவர் அருகில் இருப்பது அவசியமாகிறது.
வயதானவர்கள் அனைவரும் கட்டாய ஓய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும் எனும் வாதத்தில் அர்த்தமேயில்லை. நான் அறிந்த 70 வயது கொண்ட பலர் இன்னமும் சமூகத்திற்கு, சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய வகையிலேயே காணப்படுகிறார்கள்.
எனது அயல்வீட்டு நண்பர் 79 வயதுடைய ஆங்கிலேயர். அவரது மனவி 81 வயதுடையவர். இருவரும் இன்றும் தமது வீட்டின் அன்றாட அலுவல்களையும், தமது தோட்டத்துப் பணிகளையும் ஆற்றும் வல்லமையில் என்னைவிட துடிப்புடன் செயல்படுபவர்கள்.
முதியோர்கள் என்று ஓரம் கட்டி வைத்து விடக்கூடிய நிலை அல்ல இன்றைய உலகத்தின் நிலை. எம்மைச் சுற்றி இருக்கும் நபர்களை நோட்டம் விடுங்கள். அதிலே எத்தனை பேர் முதியோர்கள் என்று எம்மால் முத்திரை குத்தப்படக்கூடியவர்கள்? அவர்களால் சமூகம் அடையக்கூடிய பயன்கள் என்ன? அவர்கள் ஒதுக்கப்பட்டு “பெரிசு” எனப் பெயரிடப்பட்டு ஓரத்தில் இருத்தப்பட வேண்டியவர்களா?
ஓ ! எனக்கும் வயது 55ஜத் தொட்டு விட்டதே ! நானும் முதிர்ந்து விட்டேனோ ?
மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்