மெலட்டூர் இரா நடராஜன்

 

தரையிலிருந்து நாலு அடி உயரத்தில் பத்துக்கு பத்து நீள அகலத்தில் மரப்பலகைகள் அடித்து, மூன்று பக்கம் நீலத் திரை மாட்டிய மேடையில் ‘தொங்கு’ ‘தொங்கு’ என்ற காலடி சத்தத்துடன் மஹாபரத தெருக் கூத்து நடந்து கொண்டிருந்தது. பீஷ்மனாக நடித்தவன், அர்ஜுணன் பொழிந்த அம்புகளை நெஞ்சில் தாங்கியவாறே, சுழன்று சுழன்று மேடை முழுவதும் தட்டு தடுமாறி ஓடி, நிறைய ஓவர் ஆக்டிங் செய்து தொப்பென விழவும் கூட்டம் விசிலடித்தது. டோலக் வாசிப்பவர் ‘டுங்டக்’ டுங்டக்’ என்று தொடர்ந்து ஒலியெழுப்பி கொண்டே இருந்தார். பின்பாட்டுக்காரர்களின் கூச்சல் உச்சத்தை அடைந்தது. ‘ஜிஞ்சா’ கொட்டுபவன் வெறி பிடித்தவன் மாதிரி எழுந்து நின்று தன் தாளத் திறமையை காட்டினான். சட்டென ஒரு சில நொடிகள் இருட்டடிப்புக்கு பிறகு மேடையில் வெளிச்சம் வர, பீஷ்மன் அம்பு படுக்கையில் படுத்திருந்தான்.

தெருக்கூத்தில் அமுதாவுக்கு எதுவுமே லயிக்கவில்லை. தூசி விழுந்த கண்களில் இருக்கும் எரிச்சல் மாதிரி அவள் மனசுக்குள் ஏதோ நிரடிக் கொண்டே இருந்தது. இருப்பதா அல்லது போய்விடுவதா என்ற எண்ணத்திலேயே இருந்தாள். அமுதா திடீரென தானே அம்புப் படுக்கையில் வீழ்ந்திருப்பது மாதிரி உணர்ந்தாள். தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்திலும் அம்புகள் குத்தி ரத்தம் வழிவதாக உணர்ந்தாள். துரியோதனனை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அவள் கனவன் கதிரேசன் ஞாபகம் வந்தது. கண்கள் இங்கேயும், நினைவுகள் எங்கேயுமாக தடுமாறினாள்.

அடுத்த சீனுக்காக திரை விழுந்ததும், அமுதா தாமதிக்காது எழுந்தாள். அருகில் இருந்த செண்பகம் அவள் தோள்களை அழுத்தினாள். “கொஞ்சம் பொறுக்கா. மணி ஒம்போதுதானே ஆவுது. என் புருசன் இப்ப பெருசா டயலாக் அடிப்பாரு. கேட்டுட்டு போயேன்.” சென்பகத்தின் கனவன் கிருஷ்ணன் வேஷம் கட்டியிருக்கிறான்.

“இல்லை சென்பகம். வயத்தை என்னவோ பண்ணுது. வூட்டுக்கு போயிட்டு பத்து நிமிசத்துல வர்றேன்.”

அரை இருட்டில் கூட்டத்தினரின் தலையை தொட்டு தொட்டு வெளியே வரவும், அவள் உள்ளங்கையில் அடங்கியிருந்த செல் போன் சினுங்கியது.

அப்பா!

“சொல்லுப்பா”

“ஏம்மா. என்னென்னமோ விசயம் கேள்விப்படறேன். என்ன உண்மையா?”

அமுதா எதுவும் சொல்லாமல் பிசுக் பிசுக்கென அழ ஆரம்பித்தாள். எதிர் முனையின் அவள் அப்பா டென்ஷனானார்.

“இங்கபாரு. அமுதா. இப்பத்தான் நீ தைரியமா இருக்கனும். அவன் என்ன சொன்னாலும் நிலத்தை மட்டும் ஒத்திக்கு கொடுத்துடாதே. உன்கிட்டே இருக்கிற கடேசி சொத்து அதுதான்.”

“சரிப்பா”

“அவன் அடிச்சான்னா நீயும் திருப்பி அடிம்மா. ஒடுகாலி பயலுக்கு ஒரு மரியாதையும் தேவையில்லே. நீ திருப்பி அடிக்க மாட்டேங்கிற தைரியத்துலதான் அவன் துள்ளறான். சவுக்கு கட்டையால நாலு போடு. காலை ஒடிம்மா. அப்பறம் பொம்பள, தண்ணின்னு போறானா பார்பம். நான் நாளைக்கு கருக்கல்ல வர்றேன். நீ கவலைப்படாதே. தைரியமா இரு.”

மூக்கை உறிஞ்சிக் கொண்டே செல்லை அணைத்தாள். தெருக்கூத்தில் அபிமன்யூ பாத்திர பிரவேசம் நடந்து கொண்டிருந்தது. புது பையன். நன்றாக அடவு பிடித்து ஆடுவதால் அவன் நண்பர்கள் விசில் அடித்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன்னை பீஷ்மனாக நினைத்து கொண்டிருந்தது போய் தான் அபிமன்யூதானோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. தானும் அபிமன்யூ மாதிரி சக்ரவியூகத்தில் சிக்கி….

தெருக் கூத்து கொட்டகையிலிருந்து கொஞ்சம் விலகி வீடு நோக்கி நடந்து வந்தவளை எதிர் வீட்டு சுசீலா இடை மறித்தாள். தோள்களை பற்றி நிறுத்தினாள்.

‘”என்ன அமுதா. வந்திட்ட? இனிமேதான் கூத்து களை கட்டும்…….எனக்கு கொஞ்சம் துனையா வாயேன். இப்பதான் வீட்டு வேலை முடிஞ்சுது.”

“இல்லேக்கா…. அது வந்து…..”

“இங்க பாரு, எனக்கு உன் பிரச்சனை என்னேன்னு தெரியும். பிரச்சனை இருக்கறவங்கெல்லாம் கூத்து பார்க்க கூடாதுன்னா யாருமே அங்க இருக்கமுடியாது. அதையெல்லாம் மறக்கத்தானே கூத்து இருக்குது.”

அமுதா தீர்மானமாக அசைந்து கொடுக்காமல் இருக்க, சுசீலா அவளை கூர்ந்து கவனித்தாள். ஒரு சிறிய மௌன இடைவெளிக்கு பிறகு, சுசீலாவே ஆரம்பித்தாள்.

“நா ஒன்னு சொல்லட்டா, அமுதா?”

“சொல்லு”

“வெட்டுக்கு வெட்டு. குத்துக்கு குத்து. அதான் சரியான வழி. என் புருசனும் இப்படித்தான் அப்படி இப்படீன்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாலே அலைஞ்சுக்கிட்டு இருந்தாரு,. ஒரு நாளு மண்டையில அடிச்ச மாதிரி நான் ஒரு போடு போட்டேன். நீயு இப்படி இன்னமும் சொகுசா இருந்துகிட்டிருதே, நானும் ஊர் மேல போக வேண்டி வரும்னேன். அன்னிக்கு பஞ்சரானவருதான், இன்னிவரைக்கும் வூட்டோட கெடக்காரு. என்னா சொல்றே?”

“அக்கா. நீ வேற. இருக்கிற பிரச்சனை பத்தாதா? நான் வர்றேன்” ஒரு அடி எடுத்து வைத்தவளை தடுத்து நிறுத்தினாள்.

“சரி. உன் இஷ்டம். போ. கதிரேசன் வீட்டிலேதான் இருக்கான். விறகு கட்டையால அடிப்பான். அடிய வாங்கிக்கிட்டு வலியோட ஒரமா படுத்துக்கிட. நான் கூத்து முடிஞ்சு வந்து தைலம் தடவுறன்.”

அந்த வார்த்தைகள் அவளை சுருக்கென்று தைத்திருக்க வேண்டும். மெல்லியதாக அழ ஆரம்பித்தாள். அமுதா அழுவதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்று சுசீலா அங்கும் இங்கும் நோட்டம் விட்டாள். நல்ல வேளையாக அங்கிருந்த மெல்லிய இருட்டு அவளுக்கு வசதியாக இருந்தது. அமுதாவை தோள்களில் சாய்த்துக் கொண்டு அவளை தேற்றினாள்.

“அளுவாத புள்ளே. ஆத்தாள நேந்துக்கிட்டு தகிரியமா இரு. என் மச்சான் போலீசுலதான் இருக்காரு. அவரை கூட்டியாந்து மெரட்டி பார்க்கரேன். கவலைப்படாதே. இன்னிக்கு என் வீட்டுல தங்கிக்க”

விசும்பிக் கொண்டே இருந்த அமுதா, திடீரென ஆரம்பித்தாள் “அக்கா. நான் பார்க்க நல்லா இல்லையாம். பல்லு வரிசையா இல்லியாம். கிட்ட வந்தாலே வீச்சம் அடிக்குதாம். வூட்டு சாப்படு சரியில்லேன்னா அப்படிதான் கூத்தியாள வைச்சுப்பாராம். பரம்பரை வழக்கமாம்.”

“நாலு காசு சம்பாரிக்க வக்கத்த பயலுக்கு சினிமாகாரி மாதிரி பொண்ணு வேணுமாக்கும். உன் மாமானாருக்கு ஐம்பது ஏக்கர் சொத்து இருந்துச்சு. மூணு கூத்தியா இருந்தாளுக. இப்ப இவன்கிட்ட இடுப்பு லுங்கிய தவிர என்ன இருக்குது? அமுதா இப்படியே பய்ந்துக்கிட்டு இருந்தா, அவ்வளவுதான்……. இந்த நாயிங்க நாம ஓட ஓட தொரத்திகிட்டேதான் வரும். நின்னு கைய ஓங்கு, ஓடிடுவாங்க….. ஒடனே உன் புருசனை நாயின்னு சொல்லிட்டேன்னு கோவிச்சுகாத.”

அமுதா ஒன்றும் பேசாமல் வழிந்த கண்ணிரை புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டா:ள். கொஞ்சம் தன்னை நிலை படுத்திக்கொண்டு சுசீலாவை லேசாக விலக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“வரேங்க்கா”

கொஞ்ச நேரம் அமுதா போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுசீலா, ஒரு பெரு மூச்சுடன் கூத்து கொட்டகையை நோக்கி நடந்தாள். கர்ணனும், அர்ஜுணனும் கடுமையாக வாய் போர் செய்துகொண்டிருந்ததை ஒலிபெருக்கி உழிந்து கொண்டிருந்தது. 

வீட்டை நெருங்கவும் அமுதா துணுக்குற்றாள். நாலைந்து பேர் திண்ணையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். அவள் வரவுக்காக காந்திருந்த மாதிரி சட்டென எழுந்து ஒரு பக்கமாக நின்று அவளுக்கு வழி விட்டனர். அமுதா பயந்தவளாக, கிட்டத்தட்ட சுவரை உரசிக் கொண்டு உடம்பை குறுக்கி, கீழ்பார்வை பார்த்தவாறு வீட்டுக்குள் அடி எடுத்து வைத்ததாள். திடீரென இருட்டிலிருந்து கதிரேசன் வெளிப்பட்டான்..

“வாம்மா. மகாராணி. இங்க நான் அடுத்த சோத்துக்கு வழியில்லாம அல்லாடிகிட்டு இருக்கேன். ஒனக்கு கூத்து கேக்குதோ”

அமுதாவை நோக்கி கையை ஓங்கிய கதிரேசனை, வாசலில் இருந்தவர்களில் வயதான ஒருவர் அவன் கைகளை பிடித்து தடுக்க எத்தனித்தார். முடியவில்லை. ஆனால் இந்த இடர்பாட்டில் அமுதா குனிந்துவிட கதிரேசன் அவள் முடியை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான். பிடித்த பிடியின் வலியை பொறுக்க முடியாமல் அமுதா அரை வட்டமாக சுழண்றாள். விலக்கி விட வந்தவர் கலவரப்பட்டு போய் கதிரேசனை பிடித்து தள்ள, அமுதா மாராப்பு சேலை விலக உள்பாவாடை தெரிய மல்லாக்க விழுந்தாள். வெளியில் இருந்த மற்றவர்கள் சடசடவென உள்ளே வந்தனர்.

தள்ளிய வேகத்தில் கதிரேசன் பின் பக்கமாக தள்ளாடி சரிந்து சுவற்றில் மோதிக்கொண்டான்.  பிடிமானம் இல்லாது போக கால் மடங்கியவாறு ‘தொப்பென’ விழுந்தான். விழுந்த வேகத்தில் முன் பக்கமாக கவிழ்தான். முன்னந்தலை தரையில் மோதியது. அப்படியே பக்கவாட்டில் சரிந்தான். வயிறு முட்ட குடித்திருந்ததால், அது மூக்கு வரை எதுக்களிக்க, தொடர்ச்சியாக வாந்தியெடுத்தான். குவாட்டரும், கண்ட கண்ட சைட் டிஷும் அரை குறை செரிமாணத்தில் வெளியே வந்ததால் நாற்றம் குடலை பிடுங்கியது.

அதற்குள் வந்திருந்தவர்களில் ஒரு பெண் அமுதாவை வெகு தூரம் விலக்கிக் கொண்டு போனாள்

தான் எடுத்த வாந்தியிலே, கைகளை பதித்து, ஊண்றி கொஞ்சம் கூட அருவருப்பின்றி, சிறிது சறுக்கி, பெரிதாக தடுமாறி எழுந்த கதிரேசன் மீண்டும் வன்முறையை பிரயோகிக்க முயற்ச்சித்தான். கால்கல் பின்னிக் கொள்ள அதிலேயே சறுக்கினான். சகதியில் ‘குளித்த’ பண்றி மாதிரி கதிரேசன் ஆவதற்கு நேரம் கொடுக்காமல் யாரோ ஒருத்தர் கதிரேசனை பின் பக்கமாக அழுத்திப் பிடித்து லாவகமாக தூக்கினார். இன்னொருவர் அவன் மேல் இருந்த அசிங்கங்களை வேக வேகமாக அங்கிருந்த அழுக்கு துணியால்  ‘வரட்’ ‘வரட்டென’ துடைத்தார். கதிரேசன் அந்த சமயத்திலும் ஊளையிட்டுக் கொண்டே திமிறிக் கொண்டிருந்தான்.

முதலில் வந்து கதிரேசனை பிடித்து தள்ளிய அந்த பெரியவர் அனைவரையும் விலக்கிக் கொண்டு அவன் முன்னால் வந்தார். அவன் குரலை விட உச்ச ஸ்தாயில் அவர் சப்தமிட கதிரேசன் அமைதியானான்.

“இங்கபாரு கதிரேசா. நல்லா கேட்டுக்க. உன் பொண்டாடியோட வாழ்க்கையை நாசமாக்கி உங்கிட்டே நெலத்தை ஒத்திக்கு வாங்க நாங்க யாரும் தயாரா இல்லை. இந்த மாதிரி பிர்ச்சனை இருக்குன்னு தெரிஞ்சா, நாங்க வந்திருக்கவே மாட்டோம். வர்ரோம்.”

கொஞ்ச நேரம் திடீரென அமைதி நிலவியது.

“வாங்கடா. போவலாம். இங்க என்ன வேடிக்கை?”. அந்த பெரியவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு முன்னால் போக ஆசாமிகள் ஒவ்வொருத்தராக வெளியேறினார்கள். எஞ்சிய ஒரு சிலர் கதிரேசனை வலுக்கட்டாயமாக வெளியே ‘தரதரவென’ இழுத்துக் கொண்டு போனார்கள். கதிரேசன் எதிர் பக்கம் திமிறிக் கொண்டே அமுதாவை நோக்கி கெட்ட வார்த்தைகளை அர்சித்துக் கொண்டே போனான்.

அமுதாவுக்கு ஆறுதலாய் இருந்த ஒரு சில பெண்களும் கொஞ்ச நேரம் அவளையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நடுநடுவே பெருமூச்செரிந்தனர். அமுதா பேய் பிடித்தவள் மாதிரி மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள்.

“அமுதா. நாங்க சொல்லறத கொஞ்சம் கேளு. இனிமே வூட்டுல நீயு தனியா இருக்கறது நல்லதில்லே. கூத்துல எங்கயாவது ஓரமா ஒக்காந்திக்க. நாங்க உனக்கு தொனையா இருக்கோம். நாங்க இங்கேயே ஒன்னோட இருக்கிறது சாத்தியமில்லே. எங்க வீட்டில வேசம் கட்டினவங்களுக்கு சீர் செனத்தி செய்ய கூப்பிடுவாங்க. நாங்க போவனும். அதான்…”

அமுதா தீர்மானமாக யாருக்கும் பதில் சொல்லாமல் ஒரு வெற்று பார்வையுடன் அமர்ந்திருந்தான். எந்தவித சலனமும் இல்லாமல் அவள் இருந்ததால், ‘கடவுள் விட்ட வழி’ என்று சிறிது கால இடைவெளிகளில் ஒவ்வொருவராக கூத்து கொட்டைக்கு போக வேண்டி கழன்று கொண்டார்கள்.

அமுதா எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை. வேட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

துரியோதணனுக்கும் பீமனுக்கும் சண்டை வரும் வரை கூத்து மேடை மேல் நடக்கும். அதன் பிறகு தெருவில் நடக்கும். தெரு தெருவாய் துரியோதணனும் பீமனும் ஓடி ஓடி சண்டையிட்டுக் கொள்வார்கள்.

பீமனின் கதை மாதிரி தன் தலை இருப்பதாக அமுதாவுக்கு பட்டது. எழுந்து மின்சார விளக்கின் ஸ்விட்சை இருட்டில் தேடினாள். தெருக் கூத்து அடுத்த தெரு வரை வந்தவிட்டது போலிருக்கிறது. தோல் பறைகளின் முழக்கங்கள் கேட்டன.

லைட்டை போட்டவள் துணுக்குற்றாள். கதிரேசன் நிலைகுலைந்த நிலையில் சுவரோரமாக சரிந்திருந்தான். விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூச அமுதாவை நோக்கினான்.

“ஏய், இங்க வா”

அமுதா கலவரமானாள். “எதுக்கு?”

‘இங்க பாரு. இப்ப ஒன் நெலமெல்லாம் வேனாம். வேணவே வேனாம். அந்த முண்டச்சி நான் கூப்பிடதுக்கு வர்லேன்னுட்டா. வுட்டேன் பாரு ஒரு அறை. வாயி வெத்தல போட்டுக்கிச்சு. அதான்…. நீ வா…..”

“அட சீ. ஒனக்கு வெக்கமா இல்லே?”

‘எனக்கென்னடி வெக்கம். எம் பொண்டாட்டி. நான் என்ன வேனாலும் பண்ணுவேன். வாண்னா வர்னும். படுண்னா…..”

எழுந்தவன் தள்ளாடினான்.

“வாடி. வாடின்னா”

அமுதாவின் கேடு காலம், அவன் வாசல் பகுதியில் இருந்தான். அமுதாவால் மிஞ்சி மிஞ்சி போனால் சமையல் அறையில் சென்றுவிட முடியும். அதிலும் ஒரு கேடு காலம் இருந்தது. சமையல் அறைக்கு கதவு கிடையாது. கொல்லை புற கதவும் கிடையாது.

“வேனாம். கிட்டே வராத. போயிடு. இந்த கூத்தியா இல்லேன்னா. வேற கூத்தியாகிட்டே போ. நாசமா போ. ஆனா எங்கிட்ட வராத.”

“அது நாளைக்கு. நீ இன்னிக்கு.” விரலை வில்லன் மாதிரி அவள் முன்னால் ஆட்டினான்.

அமுதா கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கி சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள். தற்காப்புக்கு ஏதாவது ஆயுதம் கிடைக்குமா என்று தேடினாள். பாத்திரங்கள் எதுவும் சரி வராது. கூரான கத்தி, வலுவான அகப்பை மாதிரி ஏதாவது கிடைத்தால் நல்லது. குறைவான வெளிச்சத்தில் எதுவும் சரியாக தெரியவில்லை.

அவன் முன்னேறிக் கொண்டிருந்தான். கிட்டதட்ட பல்லி மாதிரி எதிர் பக்க சுவரில் ஒட்டிக் கொண்டாள். திடீரேன மஹாபாரத்தின் திரௌபதியாக தன்னை நினைத்துக் கொண்டாள். அங்காவது வேற்று மனிதன் அவளை மானபங்க செய்ய வந்தான். ஆனால் இங்கு அவள் புருசனே… என்ன கொடுமை இது? அங்கு திரௌபதிக்கு கிருஷ்ணன் வந்து காப்பாற்றினான். இங்கு எந்த கிருஷ்ணன்…..

கூத்து அவள் வசிக்கும் தெருவில் நுழைந்துவிட்ட மாதிரி சத்தம் கேட்டது. வேட்டு சத்தம் அவள் மண்டைக்குள் வெடித்தது.  

“ஏய்! என்னாடி பம்பரம் மாதிரி தொகுற்ர. ஒரு புருசன் சொல்றேன்….”

போதையின் வீரியதை உணராமல் அவளை நெருங்கியவன் தனது லுங்கி நழுவியதை கவனிக்கவில்லை. முழங்கால் முட்டியில் லுங்கி இடற ஒரு பக்கமாக உருண்டான். விழுந்த வேகத்தில் லுங்கி ‘டர்னென’ கிழிந்தது. எக்குதப்பாக விழுந்ததில் முதுகு தண்டில்  நல்ல அடி. அவனால் எழுந்திருக்க முடியவில்லை.

கிடைத்த குறைவான சந்தர்பத்தில் சமையல் அறையில் விளக்கை போட்டாள். இந்த முறை அவளுக்கு நல்ல காலம். ஸ்விட்சுக்கு அருகில் இருந்த சிறிய அலமாரியில் ஒரு அரிவாள் இருந்தது.

அரிவாளை எடுத்த வேகத்தில் அதை ஓங்கினாள். அப்போதே அவளுக்குள் மின்சாரம் பாய்ந்தது மாதிரி இருந்தது. வீட்டுக்கு வெளியே கூப்பிடு தூரத்தில் பீமன் கத்தும் குரல் கேட்டது. அது அவளுக்குள்ளே ஒலித்த மாதிரி இருந்தது. சுசீலாவில் ஆரம்பித்து மற்றவர்கள் சொல்லிப் போன அறிவுரைகள் எல்லாம் அவளுக்கு மின்னல் வேகத்தில் வந்து போயின.

கதிரேசன் பக்கம் பார்வையை ஓட்டியவள் மீண்டும் துனுக்குற்றாள்.

கதிரேசன் அரை அம்மணமாக அரை மயக்கத்தில் கிடந்தான். ஆனாலும் அவன் ஆண்மையின் அடையாளம் கிளர்ச்சியோடு…. ச்சீ…..

மனைவியாக கனவனின் அந்தரங்கம் அவளுக்கு புதிதல்ல என்றாலும் அந்த சமயத்தில் அவளுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது.

அரைகுறையாக மயக்கம் தெளிந்த கதிரேசன் கண்களை இடுக்கியவாறே அமுதாவை பார்த்து கையசைத்தான்.

“ஏய். வாடி. வாடின்னா” இன்னமும் அவன் திமிர் அடங்கவில்லை.

இப்போது அவள் வீட்டு வாசலிலேயே பீமன் குரல் அமுதாவுக்கு கேட்டது. அமுதா பீமனின் கதை மாதிரி தன் கையில் இருந்த அரிவாளை ஓங்கினாள்.

“ஏன்டா. இதுதானே உன்னை இப்படி திமிரு புடிச்சு அலைய வைக்குது. இனிமே இது ஒனக்கு வேண்டவே வேண்டாம்.”

எங்கிருந்து அமுதாவுக்கு அவ்வளவு பலமும் வீரியமும் வந்தது என்று தெரியவில்லை. ஒரே வீச்சில் அவன் ஆண்மையின் அடையாளம் துண்டாகி ஒரு மூலையில் போய் விழுந்தது.

கதிரேசன் போட்ட கூச்சலில் வாசல் வரை வந்திருந்த கூத்து கூட்டம் ‘திமுதிமுவென’ உள்ளே வந்தது. அமுதா சமையல் அறையின் வாசளை மறித்துக் கொண்டாள். ரத்தம் சொட்டிய அரிவாளை அவர்கள் பக்கம் தூக்கி எறிந்தாள். கூட்டம் மிரண்டு பின் வாங்கியது.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு தடியான பெண்மணி முன்னே வந்தாள். அவள் சுசீலா.

“என்னடீ செஞ்சுட்டே? கதிரேசனை வெட்டிட்டையா?”

கைகள் நடுங்க குரல் க்ரீச்சிட அமுதாவை கேட்டாள்.

“ஆமா. வெட்டிட்டேன். அவனோட திமிர. ஆம்பளைங்கிற திமிர”

கூட்டத்தினர் புரியாமல் குழம்பினர். அமுதா சுசிலாவை நெருங்கி, கைகளை முகத்தில் குவித்து ‘ஓவென’ அழத்தொடங்கினாள்.

பீமனாக வேசம் கட்டியவன் சமையல் அறைக்குள் வேகமாக நுழைய எத்தனித்தான். ஆனால், அந்த காட்சியை கண்டு உறைந்து போய் அப்படியே கல்லாக நின்றான். அவன் பின்னால் மற்றவர்கள் சேர ஆரம்பித்தார்கள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பலி

  1. //பிரச்சனை இருக்கறவங்கெல்லாம் கூத்து பார்க்க கூடாதுன்னா யாருமே அங்க இருக்கமுடியாது// நல்ல கூற்று. கதை அருமை. ஆபாசம் தெரியாமல் நாசூக்காக கையாண்ட விதம் நன்று.

  2. இது மாதிரியான ஆம்பளைகளுக்கு இந்த மாதிரியான தண்டனைதான் மிக  சரி . சரியான   முடிவு   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.