தமிழ்த்தேனீ

ஏங்க ஏங்க  ரகசியக் குரலில் ரவியை எழுப்பினாள். ராகினி ரவி :  என்னம்மா  ரொம்ப அலுப்பா இருக்கு , டார்லிங்  என்னைத் தூங்க விடேன் என்று கெஞ்சிவிட்டு , மீண்டும் தூங்கத் தொடங்குகிறான் ரவி.  என்னங்க  நம்ம வீட்டிலே ஏதோ சத்தம் கேக்குது,  முழிச்சிக்கங்க  என்றாள் ராகினி. ரவி  திடுக்கிட்டு எழுந்து மெதுவே நடந்து வந்து  எட்டிப் பார்த்தான். வாசக் கதவு  பூட்டித்தான் இருக்கு யாரும் உள்ளே வர முடியாது  , எலி ,பெருச்சாளி ஏதாவது வந்திருக்கும் அதான் சத்தம் என்றான்.

என்னிக்குமே நான் சமையல் ரூம் கதவைச் சாத்தமாட்டேன், இப்போ சமையல் கதவு  மூடியிருக்கு, எலியெல்லாம் இல்லே வேற ஏதோ சத்தம் கேக்குது, நான் வெளக்கையெல்லாம் அணைச்சிட்டுதான் வந்தேன் ,இப்போ வெளக்கு வேற எரியுது . என்றாள் ராகினி.  கதவு திறக்க முடியலையே , நீ தாப்பாளை இழுக்கும்போது பாதியிலேயே விட்ருவ சரியா கடைசிவரைக்கும் இழுக்க மாட்டே, காத்துலே கதவு தானாமூடிக்கிட்டு இருக்கும், அப்பிடியே உள்ளே தாப்பாள் மாட்டிக்கிச்சுன்னு நெனைக்கிறேன். இரு ஜன்னல் வழியா பாக்கலாம் என்றபடி எட்டிப் பார்த்தான் ,ராகினியும் கையில் ஒரு கம்புடன் எட்டிப் பார்த்தாள்.

உள்ளே.. ஒருவன் முதுகைக் காட்டியபடி தரையில் உட்கார்ந்திருந்தான். பதறிப் போய்  டேய் யார்ரா அது என்றான்  ரவி  , ராகினி நீ போயி சாவிக்கொத்தைக் கொண்டு வா என்றான் , ஏங்க சாவிக்கொத்து, நம்ம ரெண்டு பேரோட செல்போன் எதுவுமே  காணுங்க என்றாள். சரி  இரு இவனை ஒரு வழி செஞ்சிடலாம் என்றபடி சமையற்கட்டின் வெளித்தாப்பாளை போடக் கைவைத்தான்  .

வெளித் தாழ்ப்பாள் பிரித்து எடுக்கப்பட்டிருந்தது. வீட்டு தொலைபேசியின் இணைப்பும்  துண்டிக்கப்படிருந்தது. ரவிக்குப் புரிந்தது சமையல் ரூம்லே இருக்கறவன் ரொம்ப புத்திசாலி . திட்டம் போட்டுத்தான் செய்யறான் ,இப்போ என்ன செய்யறது எனக்கு பயமா இருக்குங்க  என்றாள் ராகினி.

டேய் மரியாதையா வெளியே வந்துடு  நான் கதவை  உடைச்சிகிட்டு உள்ளே வந்தேன்  உன்னை அடிச்சே கொன்னுடுவேன் என்றான் ரவி.எந்தச் சலனமும் இல்லாமல் அவன் உட்கார்ந்திருந்தான் இவர்களுக்கு முதுகைக் காட்டியபடி. நிம்மதியாக இலை போட்டு அதில் இரவு  ராகினியும் ரவியும் சாப்பிட்டு முடித்து மீதம் மிருந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.   டேய் மரியாதையா வெளியிலே வந்துடு இல்லே   நான் துப்பாக்கி வெச்சிருக்கேன் சுட்ருவேன் என்றான் ரவி.

கடகடவென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டுத்  திரும்பினான் அவன் முகத்தை முகமூடி மூடியிருந்தது. கீழே இலையில் உணவு , கவளம் கவளமாய் , கவனமாய் முகமூடியின் வாய் வழியே நிதானமாக சாப்பிட்டு முடித்துவிட்டு , பாட்டிலில் இருந்த  தண்ணீரைக் குடித்துவிட்டு .. எச்சில் இலையை எடுத்து ஜன்னல் வழியாக  குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு   சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு

சமையலறையை விட்டு வெளியே வந்து  எங்க  சுடுங்க பாக்கலாம்   ஒண்ணும் முடியாது உன்னால .இதோ என்கிட்ட இருக்கு உன் துப்பாக்கி , ஏதாவது சத்தம் போட்டீங்க சுட்ருவேன். போயி அந்த சோபாவிலே  உக்காருங்க , இல்லே சுட்ருவேன் என்றான் . ரவி என்ன செய்வதென்றே தெரியாமல்   சோபாவில் போய் உட்கார்ந்தான்.

ராகினியைப் பாத்து மரியாதையா  உங்க  வுட்டுக்காரரை கட்டிப் போடுங்க இந்தாங்க கவுறு என்று கயிற்றை அவளிடத்தில் தூக்கிப் போட்டு நல்லா இறுக்கிக் கட்டுங்கம்மா என்றான்  

டேய் நான் யாருன்னு தெரியாம எங்கிட்ட விளையாடறே , மவனே நீ என்கிட்ட மாட்டினே  உன்னை அடிச்சே  கொன்னுருவேன் என்றான்  ரவி  நீங்க என்ன  பாக்ஸிங் மாஸ்டரா.  எனக்கு உடம்பிலே அவ்ளோ வலுவெல்லாம் கிடையாது.

அதெல்லாம் நான் உங்ககிட்ட  மாட்டிக்கும் போது அப்புறமா பாத்துக்கலாம், இப்போ நான் சொல்றதைக் கேளுங்க   .இப்போ நீங்கதான் என்கிட்டே மாட்டிகிட்டிருக்கீங்க  நீங்க புத்திசாலின்னு நெனைக்கிறேன். மரியாதையா நான் சொல்றதைக் கேளுங்க , இல்லே ரெண்டு பேரையும் சுட்ருவேன், அடங்கி உக்காருங்க.

சீக்கிரம் கட்டும்மா உன் புருஷனை இல்லேன்னா சுட்ருவேன் என்றான் . ராகினி ரவியை உட்காரவைத்து கட்டினாள். அந்தக் கயிறும் நானே கொண்டாந்ததுதான் ,இது மாதிரி எடத்திலே எங்கேபோயி தேடறது அதான் வரும்போதே கயிறும் நானே கொண்டாந்திட்டேன். தொழிலுக்கு போவும்போது  முறையா போகணுமில்லே

சரி இப்போ நீயும் எதிர்லே இருக்கற இந்த சேர்லே உக்காரும்மா உங்க வூட்டுக்காரரு பக்கத்திலே  . என்றபடி அவளையும் நாற்காலியில் சேர்த்து இறுகக் கட்டிவிட்டு    நிதானமாக சமையல் அறைக்குபோய் உள்ளே அவன் மறைத்து வைத்திருந்த சமையல் அறையின் தாழ்ப்பாளை எடுத்துக் கொன்டு வந்து ஸ்க்ரூட்ரைவரால் . பொருத்திவிட்டு   அந்த ஸ்குரூ டரைவரை டூல் பாக்ஸில் வைத்துவிட்டு ,  அது சரி ,  இருக்கறது ரெண்டு பேரு, எதுக்கு இவ்ளோ சமைச்சு வீணடிக்கிறீங்க, என்னைய மாதிரி யாராவது வந்து சாப்புடுவாங்கன்னுட்டா?   என்று கூறிவிட்டு சிரித்தான்

நான் திருடன் தான் .. திருடத்தாங்க வந்தேன். யதேச்சையா உங்க வீடு கண்ணுலே பட்டுது. கதவுலே புறங்கையை வெச்சேன் திறந்துகிச்சு. மறந்து போயி  பூட்டாம தூங்கிட்டீங்க,  சரீன்னு உள்ளே நுழைஞ்சேன். நான் வந்து உங்க படுக்கை அறையிலே நுழைஞ்சு தலகாணிக்கு அடியிலே கொத்துசாவி கிடைக்குதான்னு துழாவி கொத்துசாவியையும் ,உங்க  துப்பக்கியையும் எடுத்துக்கிட்டேன். அதுகூடத் தெரியாம தூங்கறீங்க பாவம் . இதோ உங்களோட செல்போன், துப்பாக்கி எல்லாத்தையும் வெச்சிட்டேன்  பத்திரம் என்றபடி  இரண்டையும்   மேஜையின் மேல் வைத்துவிட்டு .

எங்களை மாதிரி திருடனுங்களுக்கு எல்லா வசதியையும் செஞ்சு குடுக்கறீங்க ,  அப்புறம் அய்யோ கொள்ளை போயிடிச்சேன்னு புகார் குடுத்தா  கண்டு பிடிச்சிற முடியுமா? ஒவ்வொரு வூட்டுக்கு ஒவ்வொரு போலிஸ்ன்னு போட முடியுமா? நாம்தான்  ஜாக்கிரதையா இருக்கணும். அது உங்களுக்கு புரிய மாட்டேங்குதே. இனிமேயாச்சும்  ஜாக்கிரதையா இருங்க.

நல்ல பசி ஒழுங்கா சாப்ட்டு நாலு நாளு ஆச்சு, சும்மா சொல்லக் கூடாதுங்க உங்க வூட்டம்மா நல்லாவே சமைக்கிறாங்க .  , உண்டவீட்டிலே ரெண்டகம் செய்யக் கூடாதுன்னு சொல்வாங்க எங்க பரம்பரையிலே , எனக்கு பசி தாளலை  அதுனாலே சாப்பாடு சாப்ட்டேன் , உங்க நல்ல நேரம் நான் உங்க வூட்டிலே கையை நனைச்சிட்டேன்.  நாங்க பரம்பரைத் திருடனுங்க, அன்னம் இட்ட வீட்டுலே  கன்னம் வைக்கமாட்டோம். .அதுனாலே உங்க வீட்டுலே இருக்கற எந்தப் பொருளையும் நான் எடுக்கல . உங்க வூட்டுலே நான் ஒண்ணும் திருடல.

திருட ஆரம்பிச்சதிலேருந்து முத தடவையா  வெறும் கையோட போறேன்   ஆனா நெறைஞ்ச வயித்தோட போறேன் எங்களை மாதிரி இருக்கறவங்களுக்கு  வயிறு நெறைஞ்சாலே மனசு நெறைஞ்சிடும். .

ஐயா  உங்களுக்கு கோவமாத்தா இருக்கும் , என்னிய சுட்டுப் பொசுக்கணும்னு  தோணும் ,ஆனா  என்னைப் புடிக்கணும்ன்னுட்டு  உங்க நேரத்தை வீணாக்காதீங்க , என் முகமும் உங்களுக்கு தெரியாது. துப்பாக்கியிலேயும் என் கைரேகை இருக்காது, உங்க வீட்டுக் கதவுலேயும் என் கைரேகை இருக்காது, சாப்பாட்டுப் பாத்திரத்திலேயும் இருக்காது ,

எது செஞ்சாலும்  கைக்கு ரப்பர் க்ளவுஸ் போட்டுகிட்டுதான்   செய்வேன். சொல்றேன்னு கோவிச்சுக்காத தாயி ஒண்ணு சொல்ல மறந்து பூட்டேனே இப்பல்லாம் காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு முன்னே மாதிரி இல்லே,  இப்போ வரவனுங்க பஞ்சத்துக்கு திருடறவங்க  ,அதுனாலே பஞ்சமா பாதகத்துக்கும் பயப்படமாட்டாங்க  , மனசாட்சியே இல்லாதவங்க நீங்க செஞ்சு வெச்சிருக்கிற சாப்பாட்டையும் சாப்டுட்டு உங்களையும் வெட்டிப் போட்டுட்டு, எல்லாப் பொருளையும் எடுத்துக்கிட்டு போயிடுவானுங்க .ஜாக்கிறதை.

மன்னிச்சிக்க தாயி  யாருக்குமே அதிர்ச்சிலே மூளை வேலை செய்யாது உங்களைக் கட்டி இருக்கற  கவுறு என் தொழிலுக்கு வேணும் ,ஆனா உங்க வூட்டுக் காரரைக் கட்டியிருக்கிற கவுறு  இத்துப் போச்சு ,

அதுனாலே வேற வாங்கிக்கறேன். என்றபடி  உங்க கட்டை அவிழ்த்து விடறேன்   என்றபடி அவள் கட்டை அவிழ்க்கும் போதே   இதோ பாரும்மா உன் வீரத்தையெல்லாம் போலீஸ் ஸ்டேஷன்லே வெச்சிக்கோ  என் கையிலே   துப்பாக்கி இருக்குது என்றபடியே வெளியே சென்று பூட்டி சாவியை ஜன்னல் வழியே எறிந்துவிட்டு,  உள் பக்கமாவும் திறக்க முடியுமே  தொறந்துக்கோங்க.  .

உங்க நல்லதுக்குதான் சொல்றேன்  தாயீ கதவை கவனமாப் பூட்டிக்கோங்க   பத்திரம்

நான் வர்ட்டா என்றபடி இருளில் மறைந்தான் .

                          சுபம்

படத்திற்கு நன்றி:

http://www.123rf.com/photo_8476402_thie-aiming-a-gun-on-a-robbery.html

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on ““ அப்போ நான் வர்ர்ட்டா “

  1. சாப்பிட்டு விட்டு, ‘சமையல் நல்லாருக்கு’ என்று சொல்லி விட்டுப் போகிற வித்தியாசத்திருடன் 🙂

  2. அன்பு சகோதரர் கதையை மிகவும் ரசித்தேன் இதேபோல் சம்பவம் என் வீட்டில்
    தில்லியில் நடந்தது வீட்டில் வந்த திருடன் பூஜை அறையில் வைத்த வெள்ளிப்பொருட்களில் கையை வைக்கவில்லை .பெரிய வெள்ளிக்குத்துவிளக்கு பஞ்சாத்ர உத்தரணியும் அங்கு இருக்க அதை விட்டு வைத்திருந்தான் அந்தக்கொள்ளைக்கூட்டத்தின் ஒரு கொள்கை .பூஜைக்கு உபயோகிக்கும் சாமான்களை எடுக்கக்கூடாது என்பதாம் ………எடுத்துப்போனது ஷிவாஸ் ரீகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *