தணிக்கைத்துறையின் தணியா வேகம் ~26 வினா-விடை

0

இன்னம்பூரான்

சில நாட்களுக்கு முன் ஒரு அயல் நாட்டு பிரபல இதழ் இந்தியாவின் ஆடிட்டர் ஜெனெரலை பேட்டி கண்டு, சில உண்மைகளை விளம்பியது பற்றி எழுத விழைந்தேன்.அதற்குள்,இத்தொடரின் முந்திய கட்டுரை மீது, வாசகர் ஒருவர் ஒரு கேள்விக்கணை விடுத்திருந்தார். அதற்கு விரிவான விடை அளிக்கவேண்டும், அது எல்லாரையும் அடையவேண்டுமென்பதால், இந்த வினா-விடை பகுதி முந்திக்கொள்கிறது.

ரத்தினச் சுருக்கமா  எழுதியதற்கு மிக மிக நன்றி.

~ இந்த அவசர உலகில் அனேகர் படித்தால் நலம் என்ற எண்ணம், ஐயா.

என்னோட அறிவிலே தினம் தினம் கோடி கோடியா அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் நடத்துகிற கொள்ளையிலே ஏதோ ஒரு சிறிய சதவிகதம் அம்பலமாகுது.

~ விவரமான பதில்: ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கான ஆடிட் ரிப்போர்ட்கள் பிரசுரம் ஆகின்றன, மாநிலங்கள்/மத்திய அரசு/அரசு வாரியங்கள்/பஞ்சாயத்து என்று. அவற்றில் மூன்று வகைகள். 50 வருடங்களாக, யார் கேட்டாலும் இலவசமாக அனுப்புவது மரபு, விலை நிர்ணயம் செய்தாலும். இத்தனைக்கும் டெஸ்ட் ஆடிட் தான் செய்கிறோம். அவற்றில் எத்தனையை படித்து விட்டு, மேற்படி கூறுகிறீர்கள் என்று சொன்னால், வாச்கர்களுக்கும், எனக்கும் உதவும். ஆடிட் மருந்து; விருந்து அல்ல.

வெள்ளாய்க்காரன் விட்டுவிட்டு போன ஓட்டைகள் நிரைந்த சட்டம், அமலாக்கம் இரண்டும் குற்றம் இழைக்கும் பெரும் புள்ளிகளுக்கு வசதியா இருக்கு,

~வெள்ளைக்காரன் விட்டுச்சென்ற ஓட்டைகளில் இரண்டையாவது கூறுங்கள். உதவும். கிழக்கிந்திய கம்பெனியில் லஞ்சம் உலவியது. ஆனால், நல்ல நிர்வாகமும் தலையெடுக்கத்தொடங்கியது. கலோனிய அரசின் நிர்வாகம் மெச்சத்தக்கது. அவர்களின் இலக்கு பற்றி இங்கு பேச்சு இல்லை. டெண்டர், ஏலம், கட்டுமான திட்டம், மேற்பார்வை, தவறுக்கு உடனே தண்டனை (முதல் வகுப்பில் செல்ல தகுதியுள்ள அதிகாரி, மூன்றாம் வகுப்பில் பயணித்து பொய்கணக்கில் படி கேட்டால், வேலை போய்விடும்.), ஆடிட்டுக்கு பதில் ஆகிய எல்லாவற்றிலும் கண்ணியமும், கட்டுப்பாடும் இருந்தது,

இந்தியாவில் சட்டங்கள் பொதுவாக நன்றாக இருக்கின்றன. ஜமீந்தாரி ஒழிப்பு போன்ற சட்டங்களில் ஓட்டையை புகுத்தியது, மக்களின் பிரதிநிதிகள்; அதிகாரிகள் அல்ல. அமலாக்கம் படு மட்டம். அதற்கு, மக்களின் அணுகுமுறை தான் காரணம். நீங்களே. சில நிகழ்வுகளை ஆராய்ந்து பார்க்கலாம்.

எத்தனையோ ஊழல்கள் அம்பலமாயிருக்கு, ஒரு பைசாவானும் அரசாங்க கஜானாவுக்கு திரும்பி இருக்கா?

~ திரும்பியிருக்கு, பல தடவை, ஆடிட் விரட்டியதால். ஒரு உதாரணம். சிமெண்ட் வியாபாரம். அரசு சுங்கவரியில் ஒரு பகுதியை திருப்பிக்கொடுத்தது (ரிபஃண்ட்). சிமண்ட் கம்பெனிகள் அதை ஸ்வாஹா செய்தன. ஆடிட் கேள்விக்கு பதில். “ ஆயிரக்கணக்கான நுகர்வோர். அதனால், நாங்களே வைத்துக்கொண்டோம்!” நுகர்வோரில் 75% அரசுத்துறைகள். அவற்றை விரட்டினேன். கோடிக்கணக்கில் வாபஸ். வருமான வரி இலாக்காவுக்கு தெரிவித்தேன் அவர்களின் கிடிக்கிப்பிடி. இது ஒரு சாம்பிள்.  

மண்ணெண்ணை, அரிசி இரண்டும் திருட்டுத்தனமா, பெட்ரோலுக்கு கலப்படம் செய்யவும், ஏற்றுமதியும் ஆவது எல்லோருக்கும் தெரியும்.

~ தெரிந்து என்ன செய்தீர்கள்? இது வியாபாரியின் தில்லுமுல்லு. ஒரு புகார் செய்தீர்களா, அன்பரே?

ஏழைகளுக்கு போகவேண்டிய அதிகாரி அரசியல்வாதி பையிக்கி போகுது.

~ உண்மை. அது மட்டுமல்ல. 2ஜி, ஸ்பேஸ் துறை விளையாட்டு அம்பலம், காமென்வெல்த் கேம்ஸ், நிலக்கரி, கட்டுமான தட்டுமானம், டில்லி விமானதளம், கர்நாடகா சுரங்கசுரண்டல், கிரானைட்கொள்ளை, மணல்வாரி அம்மை எல்லாம் மக்களுக்கு அருளிய கொடுமை: ஐந்து வருட வருமான வரி தள்ளுபடிக்கு சமானம் என்க, கூட்டிக்கழித்துப் பார்த்தால். அதிகாரிகளில் கணிசமான நம்பர் திரு.சகாயம் போல் நாணயஸ்தர்கள். அரசியல்வாதிகளின் கொம்மாளத்திற்குக் கூட்டு அணி, மக்களின் அறியாமை, அல்பாசை, விழிப்புணர்ச்சி இல்லாமை, அசட்டை போக்கு, திருமங்கல மரபு வாக்களிப்பு.

மக்கள் முட்டாள்களாக இருந்து, தலைவர் முக மூடியில் ஒளிந்திருக்கும் திருடர்களை பதவியில் உட்காரவைத்து, கைதட்டி ஊர்கோலம் போகிறது நின்றால் சரியாகும்.

~ நீங்கள் பிரதிநிதித்துவ குடியரசை குறை கூறுகிறீர்கள். எனக்கும்  ஓரளவு சம்மதம் தான். தணிக்கைத்துறையால் என்ன செய்ய முடியும்? இது ஆளுமை பிரச்ச்னை. தவறு இழைத்தவர்கள், மக்கள்.

ஜாதி, சாராயம், இனம், மொழி எல்லாம் வேணும்தான் (வேண்டாமின்னா கேக்கவா போறாங்க?), ஆனாலும், இதையே படங்காட்டி நம்மையும் நாட்டையும் மொட்டை அடிக்கிறாங்களே இதையும் கொஞ்சம் மனசுலே ஏத்தி, அதே உணர்ச்சிகளாயும் காட்டினா  நல்லா இருக்கும்.  நாமளும் நாடும் பலன் பெறலாம்.

~ ஆடிட்காரன் என்ன செய்வான், இந்த விஷயத்தில்? உங்கள் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் கட்டுரை ஒன்று எழுதுங்கள் நண்பரே.

மத்தபடி, புரிஞ்சவன் எல்லோருக்கும் வயிரு எரியும்.  வயிறு எரிய வேண்டியது முக்கியமா ஏழைகளுக்குத்தான்.  அவங்க வயித்தை சாராயம் ஊத்தினதுனாலே. எப்போதுமே எரியுதே. என்ன செய்ய?

~ இது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக மாறினால், நலம்.

மொத்தத்துலே உங்களுக்கு நன்றி.

~ நான் என் கடமையை செய்கிறேன். நீங்கள் வினா எழுப்பினால், எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்கிறேன். மற்றவர்களும் கேட்பார்கள். நல்லது தானே. நன்றி, அன்பரே.

ராம் தேவ், அன்னா ஹசாரே மாதிரி, உங்கள் பங்கைச் செய்யுங்கள்.

~ மிகுந்த கவலையுடன் அந்த இயக்கங்களின் போக்கை கவனித்து வருகிறேன். நல்லதும், கெட்டதும் கலந்துகட்டியாக இருப்பதால், இயக்கங்கள் ஹீனமாகி வருகின்றன. இது ‘எரிந்த வீட்டில் பிடுங்குபவர்களுக்கு’ ஆதாயம்.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

24 08 2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.