கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை!

6

 

இணையப்  பயன்பாடு

வருணன்

கட்டுரைப் போட்டி முடிவுகள்

 

உலகின் மக்களெல்லாம் இனத்தாலும், நிறத்தாலும், மொழியாலும், கலாச்சாரத்தாலும் பிரிந்து கிடப்பினும் மானுடர் அனைவரையும் இணைத்துக்கட்ட வல்லதாக  இருக்கிறது இணையமெனும் மாய  வலை. 1960களில் ஆராய்ச்சியாக ஆரம்பமாகி 90களில் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது முதல் கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவாய் மாறிவருகின்றது இணையம். அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருப்பது இறை மட்டுமல்ல இன்று; இணையமும் தான். உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு ( அதாவது 2.2 பில்லியன்) மக்கள் இணையப் பயனீட்டாளர்களாய் இருக்கின்றனர்.  

ஒவ்வொரு யுகங்களாக  கடந்து வந்த மனித இனம் தற்போது  இருப்பது தகவல் யுகம் (Age of Information) கணினிகளின் வரவு, இந்த தகவல் யுகத்தின் உச்சத்தைத் தொடும் மாபெரும் கனவின்,  பாதிக் கிணறைத் தாண்டிட உதவின. மீதி தூரத்தைத் தாவி ஏற இணைய ஏணி உதவியது. ஆயிற்று. கிணறை ஒரு வழியாய் கடந்தாகி விட்டது. இங்குதான் நாம் எதிபார்த்திராத ஒரு புதிய ஆட்டம் களை கட்டத் துவங்கியது. ஆம். பந்தயக் களத்தின் முடிவுக் கோட்டிலிருந்து ஆரம்பித்த அதிசய விளையாட்டாகிப் போனது இணையப் பயன்பாடு. துவக்கத்தில் இத்தகவல் யுகத்தின் முக்கிய சாராம்சமான எல்லோரையும் இணைப்பதுவே இணையத்தின் உச்சகட்ட பயன்பாடு என நம்பப்பட்டது. ஆனால் பிணைப்பதோடு மட்டும் நில்லாமல் பல்வேறு பிற சாத்தியங்களுக்கு கதவுகளை அகலத் திறந்திருகிறது இணையம்.  

வெறும் அறிவியல் துறை அறிஞர்களுக்கும், ஆராய்ச்சி  வல்லுனர்களுக்கு மட்டுமென்று இருந்த கணினியை வீடுகளுக்குள் கொண்டு வந்தது IBM நிறுவனத்தின் PC ( Personal Computer).  1981ல் நடந்தேறிய இந்நிகழ்வு ஒரு மாபெரும் புரட்சியே. அதன் அடுத்த கட்டமாக இணையத்தை எல்லோருக்குமான பயன்பாட்டிற்கு எளிமையாக்கியது NETSCAPE எனும் உலாவி (Browser). அது ஆகஸ்டு 9, 1995 முதல் பயன்பாட்டிற்கு வந்தது. உலகம் மற்றுமொரு அசுர மாற்றத்திற்கான முதல் அடியையும் அன்றுதான் இதன் வழியாக  வைத்தது. அன்று முதல் இன்று வரை, ஏன் இக்கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணத்தில் கூட எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் தன்னை புதுப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது இணையம். இந்த இணையச் சிகரத்தில் ஏறும் லாவகம் தெரிந்து விட்டால் எல்லாமே தொட்டு விடும் தூரம் தான்.  

புதையல் இலவசம்:  

  இணையம் முதன்முதலாய் உருவாக்கப்பட்ட போது , தகவல்களை உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைத்து, திரட்டப்பட்ட அனைத்து தரவுகளையும் முறையாக ஒன்றிணைத்து அனைவருக்கும் வழங்குவதே அதன் அடிப்படை குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. நம்மில் பெரும்பாலானோர் இணையத்தை அணுகுவது தேவைப்படும் தகவல்களைப் பெறவதற்கே. 1995ல் இருந்து இணைய தளங்களின் எண்ணிக்கை, ஏதோ உலக மக்கள் தொகையை விஞ்சி விடும் வேட்கையோடு வளருவது போல், கற்பனை செய்ததைக் காட்டிலும் மகா பெரிய எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன. இன்னும் சில வருடங்களில் உங்கள் தெருவில் தோசை மாவு விற்பனை செய்யும் சரஸ்வதி அக்காள் தனக்கென ஒரு இணைய தளம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.  

ஒரு காலத்தில் நமக்கு தேவைப்படும் தகவல்களைப் பெற நமக்கு இருந்த ஒரே வழி நூலகம் தான். அதிலும்  நாம் தேடும் தகவல் குறித்த  புத்தகம் அங்கு கிடைக்குமென்பது  நிச்சயமில்லை.

ஆனால் இச்சூழலை தலைகீழாய் புரட்டிப் போட்டிருக்கிறது  இணைய வசதி. இன்று நம்மிடையே நிலவுவது தகவல் மீப்பெருக்கமே (Information Explosion) . கொட்டிக் கிடக்கும் கணக்கற்ற இணைய பக்கங்களில் பயனாளருக்குத் தேவைப்படும் தகவலைத் தேடுவது தேடல் பொறிகளால் (Search Engines) மிக எளிதாகி விட்டது. எலியத்தின் ஒற்றைச் சொடுக்கில் கேட்டதற்கு மேலேயே தகவல்களைப் பெறும் காலமிது.  

எனது கல்லூரி  நாட்களில் தகவல் களஞ்சியத்தில் ஏதேனும் குறிப்பெடுக்க கல்லூரி நூலகம் தான் ஒரே வழி. வீட்டில் ஒரு பிரதி இருக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் விலை தான் விழி பிதுங்கச் செய்யும். ஆனால் மக்களால் மக்களுக்கான ஒரு மாபெரும் தகவல் சுரங்கத்தை உருவாக்கும் பெருங்கனவோடு ஜனவரி 15, 2001ல் ஜிம்மி வேல்ஸ் மற்றும் லேரி சாங்கர் ஆகியோரால் துவங்கப்பட்டதுவே விக்கிபீடியா இணைய தளம்( www.wikipedia.org). இன்று மிக நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் வழங்கியாக இதுவே சுட்டப்படுகிறது. இங்கு தற்போது 285 உலக மொழிகளில் பற்பல தலைப்புகளில் கட்டுரைகள் நாம் வாசிக்கக் கிடைக்கின்றன.  

அதுமட்டுமல்லாது நமக்கு துளியும் முன்அறிமுகம் இல்லாத ஆனால் முறையாக தெரிந்து கொள்ளும் நாட்டமிருப்பின்  அத்துறையின் அடிப்படையினின்று சுயமாகக் கற்றுக் கொள்ள  இத்தளத்தின் விக்கிவர்சிட்டி (Wikiversity)  எனும் விக்கி அமைப்பின் துணைத் திட்டம். வசதி செய்கிறது. இத்தளத்தில் மிக முக்கியமான சிறப்பம்சங்கள் என பலர் கருதுவது இரண்டு விஷயங்கள் தான். முதலாவது இது பயனீட்டாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைப்பது. அடுத்ததாக இத்தளத்திலுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தினை முறையான வழியில் யார் வேண்டுமாயினும் திருத்த முடியும் என்பதே. இந்த இரண்டாவது சிறப்பம்சம் எந்த சார்பும் அற்ற நடுநிலையான தகவல்களை உள்ளடக்கத்தினைக் கொண்ட கட்டுரைகள் வருவதனை உறுதி செய்கின்றன.  

பத்தின் அடுக்கு நூறு :  

இந்த உபதலைப்பு  சற்று வித்தியாசமாக, ஏன், இவ்விடத்திற்கு தொடர்பில்லாதது போல தோன்றலாம். ஆனால் இதனை அர்த்தமாகக் கொண்ட வார்த்தையின் பெயருடைய தளமே உலகிலேயே அதிக நபர்களால் தினமும் வருகை தளமாக இருப்பதாக அலெக்ஸா நிறுவனம் ( இது அமேசான் இணையதள நிறுவனத்தின்- தளங்களுள் பயனர்களின் இணையப் போக்குவரத்தை ஆய்வு செய்யும்- ஒரு துணை நிறுவனம்.) தெரிவிக்கிறது. ஆம், அது நம்மில் பெரும்பாலான பயனர்கள் இணையத்தினுள்ளே காலடி எடுத்து வைத்ததும் சொடுக்கும் கூகுல் தளமே அது. ஏறக்குறைய தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நபர்களுக்கு கூகுள் தான் கடவுள்.  

இணையப் பயனீட்டை,ஒற்றை  நிறுவனமாக, நமது கற்பனைக்கும் மேலாக சாத்தியப்படுத்தியபடியே இருக்கும் கூகுள் உண்மையில் இந்நூற்றாண்டின் வளர்ச்சியில் ஒப்புமை கூறவியலாத பங்காற்றிக் கொண்டிருக்கிறது. லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் எனும் இரு ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கருக்கொண்ட கனவு, கூகுள் தேடற் பொறியாக, ஒரு இணைய தளமாக செப்டம்பர் 4, 1998 அன்று நனவானது. அது இன்று பலரின் ஒன்று பட்ட உழைப்பில் விருட்சமாக வளர்ந்து, இன்னும் இன்னும் அன்றாடம் கிளைகள் பரப்பியபடி, நிற்கிறது. இக்கட்டுரையில் நாம் கருத்தில் கொள்ளப் போகும் பல இணையப் பயன்பாடுகளை  வழங்கி வரும் பல தளங்கள் கூகுளுக்கு சொந்தமானவையே.  

மின்னஞ்சல் :  

தகவல் பரிமாற்றங்களில்  அதிமுக்கியமான ஒரு வகை  கடிதப் போக்குவரத்து. இந்த அஞ்சல் இணையத்தின் கைவண்ணத்தால் மின் அஞ்சல் ஆனது. இப்பொது  உலகின் எந்த மூலைக்கும் எதனை வேண்டுமாயினும் ( கோப்புகள், படங்கள், துண்டு படக்காட்சிகள், ஒலி என கடிதத்தோடு இணைத்தும்) கணப்பொழுதில் அனுப்பலாம், பெறலாம். அதுவும் இலவசமாக. இத்துறையில் இருக்கும் ஜாம்பவான்கள் ஹாட் மெயில், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் ஆகிய மூன்றுமே. இக்கட்டுரையையே நான் வல்லமைக்கு மின்னஞ்சல் தான் செய்தேன்.

வெறும் கடிதப் பரிவர்த்தனையோடு இச்சேவைகள் நின்று விடுவதில்லை. ஒரே நேரத்தில் ஒருவருடனோ அல்லது பலருடனோ உரையாடும் வசதியை, ஏன், ஒரு வெப் காமிரா இருந்தால் வீடியோ மூலம் உரையாடுகின்ற வசதியையும் அளிக்கின்றன. இது பயண காலத்தையும் அதனால் ஏற்படும் மிக அதிக பொருட்செலவையும் முற்றிலும் தேவையற்தாக்குகின்றன. இதனால் ஒரு முதுகலை கல்லூரி மாணவர் வேறு கண்டத்திலுள்ள ஒரு பேராசிரியரின் கீழ் தனது ஆராய்ச்சியை செய்ய முடியும், அவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்காமலேயே. இவ்வசதியை பயன்படுத்தி இணையத்தில் ஆன்லைன் தனிப்பயிற்சி (Online Tuition) இணையதளங்கள் சக்கை போடு போடுகின்றன.  

கற்றல்  விளையாட்டு :

கற்கிற ஆர்வமும், கற்றுக் கொள்ள நேரமும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு இணையம் ஒரு கேட்டதை வரமாய் தரும் கடவுள்;அதுவும் தவமேதும் செய்யாமலேயே!  சில வருடங்களுக்கு முன்னர் ஒரு துறையை பற்றி கற்றுக் கொள்ள நாம் அது சார்ந்த கட்டுரைகளாக மட்டுமே வாசிக்கக் கிடைத்தது.  

இதற்கு பல இணைய தளங்கள் பற்றி ஒருவருக்கு தெரிய வேண்டும். அது கூட  தேடல் பொறியின் தயவால் எளிதானது தான். ஆனால் பெரும்பாலும் நமக்கு ஒரு துறை குறித்த  புத்தகங்களே முதலில் தெரியும். யாரையாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து கேட்டால் நிச்சயம் அந்நபர் இதற்கு இன்னார் எழுதிய இன்ன பெயர் கொண்ட புத்தகத்தை வாசியுங்கள் என்று தானே சிபாரிசு செய்வார். ஒரு வேளை அப்புத்தகத்தினை-அது உலகில் எந்த மூலையிலுள்ள நூலகமாக இருப்பினும்- அதன் மென்பதிப்பு வடிவில் (Soft Copy ) வாசிக்க முடிந்தால், அதுவும் காசில்லாமல்? இந்நினைப்பே புத்தக ஆர்வலர்களை வாய் பிளக்க வைத்துவிடும். இக்கனவினை உண்மையாக்கும் முயற்சியை கூகுள் பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கி விட்டது, தனது ”கூகுள் நூலகம்” திட்டத்தின் மூலமாக. அக்டோபர் 2004ல்,

பிராங்ஃபொர்ட் புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் செய்தது. மேலும் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் நூலகங்களின் புத்தகங்களை இணையத்தில் அனைவரும் வாசிக்கும் விதமாக வரிக்கண்ணோட்டம் (Scanning) செய்ய அக்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு அப்பணியை இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றது கூகுள். மார்ச் 2012 வரையிலும் ஏறக்குறைய 2 கோடி புத்தகங்கள் வரிகண்ணோட்டமிடப்பட்டுள்ளன.

கற்கும் பாடத்தின்  புரிதல் ஆழப்பட வாசிப்புடன் சேர்த்து அதனுடன் தொடர்புடைய படக் காட்சிகளை பார்ப்பது சிறந்தது. அதற்கு தான் யூ-டியூப். இன்று உலகின் அதி முக்கிய, புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என அனைத்து கல்வி சார்ந்த நிறுவனங்களும் தங்களுக்கென பிரத்தியேகமான அதிகாரப்பூர்வ தடங்களை (Official Channels) வைத்திருக்கின்றன. இன்றைய சூழலில் ஒரு இந்திய பேராசிரியரின் வகுப்பில் நாம் இங்கிலாந்தில் இருந்தபடியே பங்கு கொள்வது சாத்தியம்.  

எனது தோழரின்  தேடலில் அவருக்கு கிடைத்தவற்றை தங்களோடு பகிர்கின்றேன்.

http://www.refseek.com/directory/educational_videos.html
 

யாவரும் கலைஞராக… :   

2005ல் காதலர் தினத்தன்று உலகிற்கு கிடைத்த ஒரு சிறப்பு பரிசு யூ-டியூப் எனும் வீடியோ பகிரும் தளம். PayPal நிறுவனத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆரம்பித்தது இத்தளம். இத்தளத்தில் பயனர் கணக்கு (User Account) ஒன்றை துவக்கி யார் வேண்டுமாயினும் வீடியோ படக் காட்சிகளை பதிவேற்றலாம். அது அந்த நபரே கூட எடுத்த குறும்படமாக இருக்கலாம். படைக்கிற ஆவலும் திரைப்படமெடுக்கும் கனவும் உடையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தங்களின் படங்களுக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் கிடைப்பது என்றால் சும்மாவா?! அதுவும் படைப்பு குறித்த அவர்களுடைய எதிர்வினையை பின்னூட்டமாக தெரிந்து கொள்ளும் வசதியும் கூடவே இருந்தால்…. !

வாசிப்பு  ஒரு மனிதனைப் பண்படுத்தும். வாசிக்க ஆரம்பிக்கும் பலர் தங்களுக்குள் இருக்கும்  படைப்பாற்றலை சீக்கிரமே  கண்டுகொள்வர். ஆனால் அப்படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ள  ஒரு தக்க மேடை அவசியம். முன்னெல்லாம் இதற்கு ஒரே வழி பத்திரிக்கைகள் தான். ஆனால் படைப்புகள் வெளியீட்டிற்கு தேர்வாகும் என்பது நிச்சயமில்லை. எல்லாரையும் படைப்பாளிகளாக்குகிறது வலையுலகம்.  

1999ல் Pyra Labs எனும் நிறுவனத்தால் துவக்கப்பட்ட போதும், 2003ல் பிளாகர் (Blogger) தளத்தை கூகுள் வாங்கிய பிறகுதான் அது பிரபலமடைய ஆரம்பித்தது. அதற்கு முதன்மையான காரணம் கூகுளுக்கு கைமாறிய பிறகே அத்தளத்தின்  சேவைகள் அனைத்தும்  இலவசமாக வழங்கப்பட்டன. வலைப்பூக்கள் என அழகு தமிழில் அழைக்கப்படும் இவை தேடல் உள்ள யாரும் படைப்பாளியாகவோ அல்லது இதழியல் துறையில் தடம் பதிக்கவும் கதவுகள் திறக்கிறது. தமிழ் உள்பட ஐம்பது மொழிகளில் இத்தளத்தில் தமக்கென யார் வேண்டுமானாலும் ஒரு வலை பக்கம் துவங்கலாம். ஒவ்வொரு தனி மனிதனின் அபிப்ராயங்களுக்கும், சமூக நிலை  குறித்த அவரது நிலைப்பாடுகளுக்கும், இங்கு இடமுண்டு. தணிக்கை கிடையாது என்பதே இதன் மாபெரும் பலம். கருத்து சுதந்திரம் முறையாக பயன்படுத்தப் படும்பொழுது வலைப்பூ மாபெரும் சிந்தனை எழுச்சியை உருவாக்க வல்ல களமாக மாறும்.  

பார்த்திராத நண்பன்:  

ஒத்த கருத்துள்ளவரை  ஒருங்கிணைக்கிறது சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites). பேனா நண்பர்கள் சென்ற நூற்றாண்டின் வரலாறாகிப் போனார்கள். மாறி வரும் இயந்திர வாழ்வில் மனிதன் உறவிற்காய் ஏங்குகிறான். தூரங்கள் பிரிக்கும் மனித மனங்களை பசை போட்டு பிணைக்கின்றன சமூக வலை தளங்கள். இவற்றின் சுருக்கமான வரலாறை நாம் கீழ்கண்ட முகவரியில் வாசிக்கலாம்.

http://lauramdavies.wordpress.com/2010/02/11/timeline-a-history-of-social-networking-sites/

ஆனால் ஏனோ  இதில் ஆர்குட் குறித்த  தகவல் மட்டும் இல்லை.

வெறும் நண்பர்களைப் தொடர்பில் வைத்துக் கொள்ள எனும் நோக்குடன் முதலில் செயல்படத் துவங்கிய இத்தளங்கள், பின்னர் அவகளுக்கு இருக்கும் இன்ன பிற மகத்தான சாத்தியங்களை உணரத் துவங்கியுள்ளன. வாடிக்கையாளரைப் பிடிக்கும் மகத்தான வாய்ப்பை வழங்குகின்றன இத்தளங்கள். ஒவ்வொரு வணிக நிறுவனமும், தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதிலிருந்து, அவற்றை நுகர்வோர் மத்தியில் பிரபலப் படுத்துவது வரை துணை நிற்கின்றன இத்தளங்கள்.  

இதுமட்டுமே  இத்தளங்களினால் ஆகப் பெரிய நன்மையாக கருதப்பட்டது 2010 வரை. ஆனால் ஒரு சரித்திரத்தையே மாற்றி எழுதும் வல்லமை படைத்தவை இத்தளங்கள் என்பது எகிப்து தேசத்தில் 30 வருட சார்வாதிகாரத்தை எதிர்த்த மக்களை ஒன்றிணைப்பதில் அளப்பரிய பங்காற்றியவை முகநூல் மற்றும் டுவிட்டர் சமூக வலைதளங்களே. அவ்வருடத்தில் எகிப்தில் பற்றிய மக்கள் எழுச்சித் தீ மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவிய போதும் இத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இது குறித்த தகவல்களை இங்கு வாசிக்கலாம்.

http://socialcapital.wordpress.com/2011/01/26/twitter-facebook-and-youtubes-role-in-tunisia-uprising/

http://www.thenational.ae/news/uae-news/facebook-and-twitter-key-to-arab-spring-uprisings-report

இது போலவே  பெறுநிறுவனங்களின் பேராசையை எதிர்த்து செப்டம்பர் 17,2011ல் ஆரம்பித்தது ”வால் ஸ்டீர்ட்டை நிரப்புவோம்”  எனும் மக்கள் எழுச்சிப் போராட்டம். இப்போராட்டம் சமூகத்தின் சமத்துவமின்மையையும், அதிகாரத்தின் வல்லாதிக்கத்தையும் எதிர்க்கும் மனிதர்களின் ஒட்டு மொத்த குரலாக ஏகாதிபத்திய அமெரிக்க அரசை ஆட்டி எடுத்து வருகின்றது. போராட்டக்காரர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்தவும், தமக்கு மேலும் ஆதரவு திரட்டவும் மிக அதிகமாக பயன்படுத்தி வருவது சமூக வலை தளங்களைத்தாம். சொல்லப் போனால் “Occupy Wall Street “ எனும் இவ்வியக்கம் முதலில் டுவிட்டர் தளத்தில் ஒரு சோதனை முயற்சியாகவே துவங்கியது. ஆனால் அது மாபெரும் எழுச்சியை உண்டாக்கி விட்டது. இது குறித்த செய்திகளை மேலும் வாசிக்க

http://www.nytimes.com/2011/11/25/business/media/occupy-movement-focuses-on-staying-current-on-social-networks.html

என்ற முகவரியை சொடுக்கவும்.  

மின்னாட்சி :  

முடியாட்சி  முடிந்து மக்களாட்சி மலர்ந்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டில் மின்னாட்சி கால் பதிக்கத் துவங்கியிருக்கிறது. மின்னாட்சி எனப்படும்   e-Governance எனப்படுவது அரசு இயந்திரம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனக்குள்ளேயும், தன் மக்களோடும், நிறுவனங்களோடும், ஏனைய அரசுகளோடும் கொள்ளும் தொடர்பு என வரையறுக்கப்படுகிறது. கணினிகளின் வரவு அரசின் பரிவர்த்தனைகளை ஓரளவு மாற்றியிருந்த போதிலும், இணையமே அதன் உண்மையான திறனை, முழுப் பரிமாணத்துடன் வெளிக்கொணர்கின்றது. மின்னாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது பிரிட்டன். அவர்களுடைய மின்னாட்சி குறித்த கொள்கைளையும் அதன் நடைமுறைகளைக் குறித்தும், அதனால் அந்நாட்டில் ஆரோக்கியமான மாற்றங்களும், சாத்தியப்படும் முன்னேற்றேங்களும் பற்றிய ஒரு முழுமையான தகவலை கீழ் கண்ட இணைப்பை சொடுக்கி வாசிக்கலாம்.  

http://www.epractice.eu/files/eGovernment%20in%20UK%20-%20June%202010-13.0.pdf

மின்னாட்சி  அரசின் இயங்குவதை அதிகமான  வெளிப்படை தன்மையோடு இருப்பதை சாத்தியமாக்குகின்றது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தான் தேர்ந்த அரசு எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய உரிமையுள்ளவன். இவ்வுரிமையை மின்னாட்சி நிலைநாட்டுகிறது. இணையத் தொடர்புகள் வழியே சாத்தியப்படும் அரசில் எல்லா மட்டங்களிலும் தொடர்புகள் எளிமையாகின்றன. பிரிட்டன் அரசே தனது மக்களை வங்கி பரிவர்த்தனைகள், பல்வேறு கட்டணங்களை செலுத்துதல் என சகலத்தையும் இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்துகிறது. மேலும் 2020 க்குள் எல்லா பரிமாற்றங்களையும் இணையத்தின் வழியே நடத்த திட்டமிட்டுள்ளது. மின்னாட்சியின் வெளிப்படைத்தன்மை ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. இந்தியாவில் மின்னாட்சி குறித்து நாம் அறிந்து கொள்ள கீழ்கண்ட ஆய்வறிக்கை உதவும் என நம்புகின்றேன்.  

http://www.iimahd.ernet.in/~subhash/pdfs/CHRIDraftPaper2003.pdf
 

 

மின்வர்த்தகம்:  

இணைய வழி  நடைபெறும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் மின் வர்த்தகம் என்று அழைக்கப் படுகிறது. கடைகளைத் தேடி பொருட்களை  பார்த்து வாங்கும் காலம்  மெல்ல மலையேறத் துவங்கியுள்ளது. வேண்டிய பொருட்களை வாங்கவோ  அல்லது விற்கவோ எலியத்தில் ஒரு சில சொடுக்ககள் போதும். வேலை முடிந்தது. வர்த்தக விதிகளை மாற்றி எழுத வேண்டிய நிலையை உருவாக்கி வருகின்றது வளர்ந்து வரும் மின்வர்த்தகம்.  

இதில் அப்படி என்னதான் சிறப்பு? பொதுவாக  நாம் நடைமுறையில் சரக்குகளை  நேரிடையாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குவதில்லை. மாறாக அது  அதற்குரிய கடைகளில் இருந்தே வாங்குகின்றோம். ஆனால் மின்வர்த்தகத்தில் நாமே எந்த இடைத்தரகரும் இல்லாமல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்தே வாங்க முடிகின்றது. இது வாங்கும் பொருளின் விலையை கணிசமான அளவு குறைக்கும் என்பதே அதன் சிறப்பம்சம். கீழ்கண்ட இணைப்பில் உலக அளவில் மின்வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் இணைய தள நிறுவனங்களின் பட்டியலைக் காணலாம்.  

http://latesttechworld.com/2011/04/best-online-shopping-websites/

நமது நாட்டிலும் மின்வர்த்தகம் பொது வர்த்தகத்துக்கு இணையான பங்கு வகிக்க ஆரம்பித்துள்ளது. இங்கே தரப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி இந்திய அளவில் சிறந்து விளங்கும் தளங்களின் பட்டியலைக் காணலாம்.  

http://indiafreestuff.in/top-10-online-shopping-sites-in-india-html/

இதில் சந்தையில்  இருக்கும் இந்நிறுவனங்களுக்கிடையே தொழில் போட்டி வேறு. அப்புறமென்ன? வருடம் முழுவதும் இத்தளங்களில் ஆடி தள்ளுபடி தான். வாடிக்கையாளர்களாகிய  நமக்கு கொண்டாட்டம் தான்.

ஆறாம் அறிவு :    

Popular Science எனும் பிரபல அமெரிக்க அறிவியல் இதழ் 2009ல், ”சிறந்த கண்டுபிடிப்பு” எனும் தலைப்பில் ஒரு போட்டி நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒரு இந்திய இளைஞர் உலகை தன் கண்டுபிடிப்பால் வாய் பிளக்க வைத்தார்.அவர் பிரனவ் மிஸ்திரி என்ற குஜராத்தி இளைஞர். அவரது ஆறாம் அறிவு தொழில்நுட்பம் அவருக்கு சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதை மட்டும் வாங்கித் தந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கால இணையப் பயன்பாட்டின் போக்கினை நிர்ணயிக்க வல்ல ஒரு வித்து இதனுள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூல முன் மாதிரியில் (Prototype) வன்பொருளாக மொத்தம் இருப்பதே   ஒரு கையடக்க ப்ரொஜெக்டர், ஒரு கண்ணாடி மற்றும் ஒரு காமிரா; கூடவே பிரவின் தொழில்நுட்பத்தின் மூளையான அவ்ரது மென்பொருள். இதில் அப்படி என்னதான் இருக்கிறது? நமக்கும் இணையத்திற்குமான தொடர்பை மறுவரையறை செய்கிறது இது.

சுருங்கச் சொன்னால் நமது சுவாசத்தை போல இணையத்தினை நமது உடலின் ஒரு மெய்நிகர் அங்கமாகவே ஆக்கிட வல்லதே இந்த ஆறாம் அறிவு தொழில்நுட்பம். இதனைப் பற்றியும், இதன் சாத்தியங்களையும் நான் சொல்வதை விட அதன் பிரம்மா பிரனவே விளக்கினால் தான் நன்றாக இருக்கும் இல்லையா? அதனால் அவருக்கு வழிவிட்டு நான் அமைதி காப்பதே சிறந்தது.  

http://www.youtube.com/watch?v=IXWcKmnKLzs
 

முடிவுரை:  

இணையத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? எனும் தலைப்பை வாசித்தவுடன் எப்படி கட்டுரையின் உள்ளடக்கத்தை அமைப்பது என ஒரு சிறு குழப்பம் இருந்தது. தனி மனித வாழ்வில் இணையப் பயன்பாடு பற்றிய பார்வையில் மட்டுமே முழு கட்டுரையும் அமைப்பதா அல்லது இணையம் எனும் பெருவிருட்சம் ஒட்டு மொத்த மனிதகுல மேம்பாட்டிற்கு கொண்டிருக்கும் சாத்தியங்கள் குறித்து அவதானிப்பதா எனும் குழப்பமே அது. இது போன்ற ஒரு தலைப்பில் இந்த இரண்டு கண்ணோட்டத்திலுமே கருப்பொருளை அமைக்கலாம். ஆகவே இவ்விரண்டு பார்வைகளையும் கலந்து எழுதுவது என்று முடிவு செய்து எழுதியுள்ளேன். இன்னோரு முக்கிய செய்தியையும் இங்கு சொல்லியாக வேண்டும். பலப்பல இணையப் பயன்பாடுகளைப் பற்றி எழுதவில்லை தான் வானத்தை முழுமையாய் ஒரு சன்னலின் வழியே அதன் முழு பரிமாணத்தோடும் காண்பது எப்படி சாத்தியமற்றதோ, அது போலவே இணையமெனும் பெருங்கடலை இந்த சிறு கட்டுரை கட்டுமரத்திலேயே சுற்றி வர முடியாது என்பது யதார்த்தம். இறுதியாக இன்னொரு கருத்து. இணையம் எனும் மாயச் சுரங்கம் நாம் கனவிலும் நினைத்திராத வைரங்களை தர வல்லதுதான். அதே வேளையில் அச்சுரங்கத்தில் எண்ணற்ற புதைகுழிகளும், திரும்ப முடியாது தொலைந்து போகக் கூடிய இடங்களும் ஏராளம் இங்கே.       

தரவுகள் மற்றும் உதவிய  நூல்கள் :  

– கட்டுரையினூடேயே ஆங்காங்கே எனக்கு உதவிய தரவுகளையும், இணைய தளங்கள் என அனைத்தைப் பற்றியும் தங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். குறிப்பாக விக்கிபீடியா தளம் பல செய்திகளைப் பெறுவதில் பேருதவியாக இருந்தது.  

– ‘The World is Flat- A Brief History of the Globalized World in 21st Century, By Thomas Friedman, 2005, Penguin Publications.  
 

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை!

 1. அருமையான கட்டுரை திரு. வருணன். தொழில்நுட்பக் கட்டுரை என்றபோதிலும், எளிமையாகப் புரியும்படி உள்ளது.

  /இணையத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி? எனும் தலைப்பை வாசித்தவுடன் எப்படி கட்டுரையின் உள்ளடக்கத்தை அமைப்பது என ஒரு சிறு குழப்பம் இருந்தது.//
  உண்மையே.

 2. மனதில் தோன்றியவற்றை மட்டும் எழுதாமல், நன்கு திட்டமிட்டு தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் திரு  வருணன்.

 3. ஒரு மலர். அதன் மகரந்தம். ஒரு வண்டு. மகரந்தம் புலன் பெயர்கிறது. வித்து விழுந்தது. மழை பெய்தது. விருக்ஷம் வளர்ந்தது. அம்மாதிரி தான் இதுவும். திரு.வருணனுக்கு என் வாழ்த்துக்கள். நானும் பல விஷயங்கள் அறிந்து கொண்டேன். Knowledge is Power. Information is key. Distillation is the craft.

  என்னுடைய பெயர் இங்கு இணைந்தது, தற்செயல். அன்றொரு நாள் ஒரு போட்டி அறிவிப்பு. அன்று தான் கெடு. ஆர்வத்துடன் கலந்து கொண்டேன், ஒரே நாலில். பரிசு கிடைத்தது. அது தான் மகரந்தம். பரிசு அளிப்பதுடன் என் பணி முடிந்தது. தலைப்பு அளித்த நண்பர் தேவ் அவர்களுக்கும், அருமையான வழிமுறையில் தேர்வு செய்த திரு. மணிவண்ணன் அவர்களுக்கும், என் நன்றி. என்னால் ஆனது: பரிசுகள் தொடரும். 

 4. திரு வருணனும், திருமதி ஹுசைனம்மாவும்
  பயனுள்ள வலைத்தளங்கள் , தொழில்நுட்பம்
  குறித்த தகவல்களையும் தொடராக எழுதலாம்;
  பலரும் பயன் பெறுவர். இவர்கள் வல்லமை
  குழுமத்திலும் இணைந்துகொண்டு எழுதலாம்

  அன்புடன்
  தேவ்

 5. கட்டுரையைத் தேர்வு செய்த திரு மணிவண்ணனின் அவர்களுக்கு மனம் மகிந்த பாராட்டுக்கள். வல்லமை மின் இதழுக்கு மேன்மேலும் வல்லமை சேர்க்கும் விதமாக பல்துரை வித்தகர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்களின் வரவு நல்வரவாகட்டும். தாம் தேர்ந்தெடுத்த கட்டுரைக்கு, அவர் அளித்த முன்னுரை மிக அருமை. பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்த அனைத்து கூட்டு முயற்சியாளருக்கும் நன்றி.

  பரிசுக்குத் தேர்வு பெற்ற திரு வருணனின் கட்டுரை மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இணையத்தின் பயன்பாடு குறித்து குறிப்பாக நான் சொல்ல நினைப்பது, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்கள் அவசியம் முன்வரவேண்டும் என்பதே. பள்ளியில் கற்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இணையத்தின் மூலமாக நடத்தப்படும் அறிவு சார்ந்த போட்டிகளில் கலந்துகொண்டு, குழந்தைகள் தங்கள் அறிவைச் சோதித்துப் பெரும்பயன் அடையமுடியும். எண்ணற்ற வலைதளங்கள், குழந்தைகளின் நலனுக்காவே செயல்படுகின்றன என்பது பெற்றோர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டும் போதுமானது.

 6. பின்னூட்டம் அளித்த தோழி ஹுஸைனம்மா, தோழர்கள் இளங்கோ, இன்னம்பூரான், தேவ் மற்றும் பெருவை பார்த்தசாரதி என அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும் அன்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.