இலக்கியம்சிறுகதைகள்

அக்னிப்பிரவேசம் (ஒரு சரித்திரக் கதை)

விசாலம்

அல்லாவுதீன்  தன் கைகளைப் பின்னால்  கட்டியபடி  குறுக்கும் நெடுக்குமாய்  நடந்து கொண்டிருந்தான். உலகெங்கும்  தனது ராஜ்யமே நடைபெற வேண்டுமென்று பகற்கனவு  கண்டுகொண்டிருந்தான். ராஜபுத்திரர்கள்  தன் மூக்கை அவ்வப்போது  உடைத்து வருவதையும் புரிந்து கொண்டான். ஆனால் என்ன, அந்த அழகு பெட்டகம், ராணி  பத்மினி அவன் கண்முன்னால் எப்போதும் பவனி வந்து கொண்டிருந்தாள். இதற்காகவே  அவன்  சித்தௌட் அரசன் ரத்னசிம்மனைக் கைது செய்து வந்திருக்கிறானே !

அவன் சிந்தனையை  “சலாம் அலேக்கும்”  என்ற ஒலி  கலைக்க,   அவன் தன் பத்மினி உலகிலிருந்து விடுபட்டான்.

சேவகன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன  வேண்டும் ?  நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?  என் பத்மினி  இங்கு வர ஒப்புக் கொண்டாளா? அவள் இங்கு வந்தால்  ரத்னசிம்மனை விடுவிப்பேன் என்று சொன்னாயா ?’     மூச்சுவிடாமல்  கேள்விகள் அங்கு பிறந்தன.

“ஆம்  இளவரசே எத்தனை எடுத்துச்சொல்லியும் அரசி பத்மினி இங்கு  வர மறுக்கிறார். இதனால் பின்னால் பல சேதங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்ற மிரட்டலைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்”

“அதற்கு என்ன சொன்னாள் அவள்?”

“யோசித்து  சொல்வதாகக் கூறியிருக்கிறார்”

“சரி நீ போகலாம்”

கற்பனைக் குதிரை  திரும்பவும் ஓட,  அவன் முன் பேரழகி பத்மினி மணப்பெண்போல்  அன்ன நடை நடந்து வருகிறாள்.

அவன் அவளை ஆசையுடன்  அணைக்கிறான்.

சீ !  இது என்ன கற்பனை ! நான் அவளைப்பார்க்க விரும்பிய போது கூட அவள் என் அருகில் வர மறுத்துவிட்டாளே !

அன்னியபுருஷன் முன்னால்  தான் வருவது  சரியல்ல என்று அவள்  தன் கணவனிடம் வாதாடினதாக  ரத்னசிம்மன் கூறினானே. பின் நான் ரொம்ப கேட்டுக் கொண்டதனால் ஒரு கண்ணாடி வைத்து அதில் விழும் பிரதிபிம்பத்தையல்லவா பார்க்கச்செய்தார்கள். ஆஹா  என்ன அழகு,  என்ன அழகு  ……..

காமவலையில் விழுந்த அவன்  வெறிபிடித்தவன் போல் ஆனான்.

 

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று எண்ணினாள்  சித்தௌட்  மஹாராணி பத்மினி.  அவளுக்கு தன் கணவருடன் பேசியவைகள் நினைவுக்கு வந்தன.  
 
“என்னுயிரே  அந்த கிராதகன்  அல்லாவுதீனுக்கு  உன் மேல் ஒரு கண், கண்ணாடியில் உன் பிரதிபிம்பம் பார்த்தவுடனேயே அவனது முகம் மாறியது. அவன் கண்களில் காமத்தீ எரிந்தது.  ஒரு வேளை அவன்  உன்னைக் கடத்திச் சென்றுவிட்டால் ……”

“அப்படி ஒன்றும் நடக்காது,  நடக்கவும் விடமாட்டேன் என் அன்பரே”

“அப்படி ஏதாவது  அசம்பாவிதம் நடந்தால், நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன். நீ இல்லாமல் நான் இல்லை பத்மினி”

சட்டென்று தன் கையால் அவன் வாயைப்பொத்தினாள் பத்மினி. “ஐயோ  நாதா,  அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். சித்தௌட் மக்களுக்கு நீங்கள் என்றும்  இருந்து  அரசு புரிய  வேண்டும்”

அவளின் இந்த நினைவுகளுடன் ஆதவனும்  மறைந்து போனான்.   இரவில்  அல்லாவுதீனுக்கு  அவள் ஒரு கடிதம் எழுதினாள்.

“நான் ஒரு பதிவிரதைதான்,  இருப்பினும்  தன் நாட்டிற்காக மிக உன்னதமாய் ஆட்சிபுரியும் என் கணவரை நான் இழக்க விரும்பவில்லை. ராஜபுத்திரன்,  ராஜதானிக்கு  தகுந்த தலைவன்  என் அரசன். நான் உங்களிடம் வந்தால் என் அரசனை விடுவிப்பேன் என்றிருக்கிறீர்கள்.

என் நாட்டிற்காக, என் ராஜ்யத்தைக்காப்பாற்ற நான் இதற்கு  சம்மதிக்கிறேன். ஆனால்  மகாராணி ஆனதால் நான் அங்கு தனியாக வரமுடியாது. என் கூட எழுநூறு ராஜபுத்திர ஸ்த்ரீகளும், கன்னிகைகளும் தனித்தனி பல்லக்கில்  வருவார்கள். என் தற்காப்புக்கு  ஒரு சேனையும் வரும்.  இதற்கு சம்மதிப்பீர்களானால் நான் அங்கு   தங்கள் சேவைக்கு வருகிறேன்”

முகலரசனுக்கு அந்தச் செய்திமடல் போய்ச்சேர்ந்தது. காமவெறி அவன் கண்களை மறைத்தது, அறிவு மழுங்கியது.

பத்மினிக்கென்று அழகான அறையைத்தேர்ந்தெடுத்து அதைப் பூக்களால் அலங்கரிக்க வைத்தான். அத்தர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களைக் கமழ  வைத்தான்.  மிக ஆவலோடு அவள் வருகைக்குக் காத்திருந்தான்.

ராணி பத்மினியின் தளபதி கோரா,  ராணி பத்மினி போல் தன்னை அலங்கரித்துக்கொண்டு  அவள் முன் வந்து நின்றார்.

“யார் நீ  ? இவ்வளவு அழகான பெண்! இந்த அரண்மணையில் பார்த்ததில்லையே ” என்றாள் பத்மினி

தளபதி கோராவுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.

“ராணியாரே,  என்னைத் தெரியவில்லையா ? நான் தான், தங்கள் தளபதி.  நீங்கள் சொல்லியபடி ராணி பத்மினியாக வேஷம் தரித்துள்ளேன்”

“ஆஹா தத்ரூபமாக உள்ளதே வேடம். மற்ற சிப்பாய்கள்  ஸ்திரீ வேடத்துடன்  தயாராக உள்ளனரா?”

“ஆம் மகாராணியே, மற்ற  சிப்பாய்களும்  பெண் வேடம் பூண்டு பல்லக்கில் வரத் தயாராயாக  இருக்கின்றனர்”

“சரி கிளம்புங்கள்,  வெற்றி நமக்கே!      ஓம்    ஜய துர்கே  ….”

படைகள் கிளம்பி அரண்மணையை அடைந்தன.  பத்மினியின் வேடத்தில் இருந்த கோராவின் பல்லக்கு நின்றது.

அதிலிருந்து பத்மினியான கோரா, அழகாக  பல்லக்கிலிருந்த திரையை விலக்கி  எட்டி வெளியே பார்த்தார்.    அவளைக் கண்டு பத்மினி என்றே நினைத்து அல்லாவுதீன்,  ராஜா ரத்னசிம்மனை விடுதலை செய்தான்.

அதுவரை பல்லக்கில் இருந்த தளபதி கோரா  திடீரென்று வெளியில் வந்து  அந்த காம மிருகத்தைத் தாக்கினான்.  ஆனாலும் அந்த கோர சம்பவம் நிகழ்ந்துவிட்டது. நாலு பேர்கள் கோராவைச் சூழ்ந்தபடி தாக்கினர்.  பின் அவனை கொன்றும் விட்டனர்.

பல்லக்கு சித்தௌடுக்கு  வந்தது  அதிலிருந்து  ஒரு பாலகன்  இறங்கினான்.   அவன் தான் கோராவின் பதிமூன்று வயது  பாலகன் பாதல். தன்  மகன் மட்டும் இறங்குவது கண்டு  கோராவின்  அன்னை  அவனிடம் ஓடிவந்தாள்.

“பாதல்    அப்பா எங்கே ? அவர் எப்படி போரில் சண்டை பிடித்தார்? யாரைத்தாக்கினார்? அல்லாவுதீனைத் தாக்கினாரா?” அடுக்கடுக்காய் கேள்விகள் …………

“மாஜி    பாபூஜி என்னுடன் வரவில்லை. பலரைக்கொன்றார் ஆனாலும்  …….”

“ஆனாலும் என்ன ? அவர் இறந்துவிட்டாரா ? அவர் வீரமாக சண்டை இட்ட காட்சிகளை எனக்கு விவரமாக சொல்லு  மகனே! அதைக் கேட்டுவிட்டு நானும் மகிழ்ச்சியுடன் அவருடன் போய்  சேர்ந்துவிடுவேன். நீ அப்பாவுடன் சேர்ந்து  வாளைச்சுழட்டினாயா ? சொல்லு பாதல்  ..”

‘மாஜி,  பாபூஜி  பல  எதிரிகளை ஒருவராகவே  சர்வசம்ஹாரம் செய்துவிட்டார். ஆனாலும் ஒரு  எதிரி அவருக்குப் பின்னாலிருந்து வஞ்சகமாய் தாக்கிவிட்டான். எனக்கும் கோபம் வந்தது”

“நீ என்ன செய்தாய்  கண்ணே”

“நானா  ?  நான் என் வாளால் அவன் தலையைச் சீவி பாபூஜியின்  காலில் போட்டுவிட்டேன்  மாஜி”

“ஆஹா  சபாஷ்  பாதல்  ! என் அருகில்  வா.”

பாதல் அவன் அருகில் போக, அணைத்து முத்தம் கொடுத்தாள்.

பின் அக்னி குண்டம் வளர்த்தாள்.  அதில் குதித்து பரலோகத்தில்  இருக்கும் தன் கணவர் கோராவுடன் சேர்ந்துவிட்டாள்.

 

மாந்து போன அல்லாவுதீன் அடிப்பட்ட புலியாக உறுமியபடி   திடீரென்று   ஒரு நாள்  சித்தௌடைத் தாக்கினான்.

அந்தப்போரில்  ராஜபுத்திரர்கள் திறமையாகப் போராடினாலும், எதிரியின் பலம் ஓங்கியிருந்தது. மஹராஜா ரத்னசிம்மன் கொல்லப்பட்டான்.  கோட்டைக்குள்   வெறியுடன்  எதிரி நுழைந்தான்.  “எங்கே என் பத்மினி?   இனி நான் உன்னை விடமாட்டேன், வா வெளியே” என  உறுமினான்.

கோட்டைக்குள்  திட்டமிட்டபடி அக்னிகுண்டம்  கபகபவென்று எரியத் தொடங்கியது. “ஜௌஹர் யக்ஞம்”க்கு தயாரானார்கள்,  பல ராஜபுத்ர பெண்மணிகள்.      அழகுபிம்பமாக  மகாராணி பத்மினியும்   நின்றிருந்தாள்.

“என் அன்பு சகோதரிகளே  இனி  சித்தௌட் பூமியை நாம் காப்பாற்றமுடியாது. ஆனால் நம் கற்பை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். இந்த எதிரிகளிடம் நாம் அகப்படக்கூடாது. இதோ நம்மை வரவேற்கிறார் அக்னி பகவான். அக்னிப்பிரவேசம்  செய்து நம் பர்த்தாக்களுடன் மேல் உலகத்தில்  சேர்ந்துவிடுவோம்” என்று சொல்லியபடி,   அவள் ஏகலிங்கேஸ்வரரை வலம் வந்து தொழுதாள். அவளுடன் பலர் சேர்ந்து கொண்டனர்.

“ஜய் ஜோ  ஜய் ஹோ” என்ற கோஷம் கிளம்ப  அந்த மலர்கள்  அக்னிகுண்டத்திற்கு  சமர்ப்பணம் ஆயின.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க