திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-14)

விஜயகுமார்

வருடாந்தர போர்டு மீட்டிங் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே ஒரே தட புடல். சொல்லப் போனால் அலுவலகமே கல்யாணக் கோலம் பூண்டு விடும். அப்படி இப்படி என்று ஒரு வழியாக ஆண்டுத் தேர்வை எழுதும் மாணவனைப் போல என்ன கேள்விகள் வரும் என்று எறும்பு பிடித்து விட்டு சிலவற்றைப் பிள்ளையார் துணையுடன் சாய்ஸில் விட்டு ரெடி ஆகினோம். அப்போது நண்பர் ஒருவரிடத்தில் இருந்து போன். மூன்று நாள் சிங்கை அருகில் உள்ள கிழக்கு மலேசியா செல்ல இன்னொரு நண்பர் ஒருவருடன் ப்ளான் போட்டிருந்ததாகவும், கடைசி நேரத்தில் அவர் கம்பி நீட்ட – ஒரு டிக்கெட் வேஸ்ட் ஆகிறது என்றும், வர முடியுமா என்று கேட்டார். எங்கே செல்கிறோம், “அங்கே என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டேன். கோட்டா கினபாலு – அங்கே வைட் வாட்டர் ராஃப்டிங், ட்ரெக்கிங் எல்லாம் உண்டு என்றார். ட்ரெக்கிங் என்றால் எவ்வளவு தூரம் என்று கேட்டதற்கு – எட்டு கிலோமீட்டர் என்றார்! இத்தனை டென்ஷன் இடையில் மீட்டிங் முடிந்தவுடனே இப்படி ஒரு பிரேக் நல்லதே என்று நினைத்துத் தலையை ஆட்டினேன். இணையத்தில் சென்று செல்லப் போகும் இடம் பற்றி ஒரு முறை கூகுளார் உதவி பெற்ற பின்னர் தலையை ஆட்டி இருக்க வேண்டும் என்பது பின்னரே உதைத்து – உரைத்தது.

ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. ஒரே அசதி, வீட்டிற்குச் சென்ற பின்னரும் லாப்டாப்பைத் திறக்கச் சோம்பேறித் தனம். அப்படியே அசதியில் சாய நித்ராதேவி ஆட்கொண்டாள். அலாரம் அடித்து மணி காலை மூன்று என்று சொல்லி எழுப்பியது. அடித்துப் பிடித்து ஒரு ஜீன்ஸ் பான்ட், ரெண்டு டி ஷர்ட், மற்றும் பேஸ்ட் பிரஷ் எடுத்து ஒரு ரக் சாக்குப் பையில் போட்டுக்கொண்டு விரைந்தேன். வெளியில் சரியான இடி மின்னல் மழை! மலேசியா செல்ல சிங்கையில் இருந்து மலாயா டாக்ஸி ஒன்றை எடுத்துக்கொண்டு டூவாஸ் வழியாக ஜோஹோர் மலிவு விமான நிலையமான செனாய் சென்றடைதோம். சிங்கைக்கும் மலேசியாவுக்கும் என்ன ஒரு வித்தியாசம். செனாய் விமான நிலையத்தைச் சுற்றி ரோடு ஓரத்திலேயே அனைவரும் கார்களை நிறுத்தி இருந்தனர். ஒரே களேபரம். நல்லபடியாக மழை நின்று விட்டது. விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது.

விமானத்தில் உள்ள பத்திரிகையில் மலேசியாவின் சுற்றுலா இடங்களின் பட்டியல் இருந்தது. அப்போது கோட்டா என்றால் மலை என்ற குறிப்பைப் படித்தும் ஏனோ களைப்பில் மண்டையில் ஏறவில்லை. மிகச் சிறு பயணம் – நாற்பத்தி ஐந்து நிமிடம் தான், ரம்மியமான சூழ்நிலையில் எங்கும் காடுகளுக்கு இடையே விமானம் கினபாலு விமான நிலையத்தில் தரை இறங்கியது. வெளியே எங்களுக்காக மினி வேன் ஒன்றில் டிராவல் ஏஜென்ட் காத்துக்கொண்டு இருந்தார். போகும் வழியில் சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

ஒரு மணி பயணம் – கினபாலு சிறிய நகரம் தான். பார்ப்பதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. நகரத்தை விட்டுப் போகப்போக பாதை மாறியது, மழைப் பிரதேசம் துவங்கியது. மாமா கடையில் தோசை சாப்பிடலாம் என்றார் கைடு! நம்மவர் கடையை மலேசியாவில் மாமா ஷாப் என்று கூப்பிடுகிறார்கள்! தோசை மொரு மொரு என்று நம்ம ஊரு பேப்பர் ரோஸ்ட் மாதிரி வரவில்லை என்றாலும் க்ளாஸ் டம்ப்ளரில் தெ அலியா ( ஜின்ஜெர் டி!) அருமையாக வந்தது.

மீண்டும் ஒரு அரை மணி பயணத்தில் அருகில் ஒரு காட்டாறு ஓடத் துவங்கியது! ஆங்காங்கே ஆற்றுக்கு மேலே கயிற்றுப் பாலங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இடத்தில் வேன் நின்றது. அருகில் இருந்த ஷெட்டில் எங்களுக்குப் பாதுகாப்பு லைப் ஜாக்கெட், ஹெல்மெட் எல்லாம் மாட்டிக்கொள்ள வசதி செய்தனர். பிறகு பெரிய பிளாஸ்டிக் போல இருந்த ஒன்றில் காற்றை நிரப்பத் துவங்கினார்கள். அது ஒரு ராட்சசனைப் போல உயிர் பெற்றுப் படகாக மாறியது. நடுவே கைடு சில பல பாதுகாப்புக் குறிப்புகளைக் கற்றுக்கொடுத்தார். பிறகு எங்கள் இருவருக்கும் ஒரு துடுப்பைக் கொடுத்து படகில் ஏறிக்கொள்ளச் சொன்னார். படகோட்டி நான் ஒன்றும் செய்ய மாட்டேன் நீங்கள் தான் துடுப்புப் போட வேண்டும் என்றும், முதலில் நீரின் வேகம் சற்றுக் கம்மியாக இருக்கும் என்றும், பிறகு சில இடங்களில் ரேபிட் போல அசுர வேகத்தில் இருக்கும் என்றும் எச்சரித்தார். நீரின் வேகம் பெரிய ஆபாயம் இல்லை, அதன் அடியில் இருக்கும் பாறைகள் தான் அபாயம் என்றும் கூறினார்.

சற்று தயக்கத்துடனே அந்தப் படகில் ஏறினோம். படகைச் சுற்றிலும் உட்பக்கத்திலும் வெளியிலும் கயிறு இருந்தது. அதனுள் கால்களை பின்னிக்கொண்டோம். வெளியில் விழுந்தால் வெளிக்கயிறைக் கொண்டு எப்படி மீண்டும் படகில் ஏறுவது என்று ஒரு முறைக்கு இருமுறை சொல்லிக்கொடுத்தார். சர் என்று படகு புறப்பட்டது. அவர் எளிதாக இருக்கும் என்ற இடத்தில் துடுப்புப் போடும் போதே தோள்பட்டை தனது எதிர்ப்பைத் தெரிவிக்கத் துவங்கியது. பிறகு ஆற்றின் நடை பல மடங்கு கூடியது, நேரே சென்று பெரும் பாறையில் மோதி விடுவோம் என்று நினைக்கும்போது மறு பக்கம் துடுப்பைப் போடச் சொல்லி மிகவும் நேர்த்தியாக எங்களைக் கொண்டே படகைச் செலுத்தினார் அந்தக் கை தேர்ந்த படகோட்டி. ஒரு இடத்தில் ஆற்றின் பரப்பளவு மிகவும் குறுகியது. நாங்கள் எவ்வளவு துடுப்புப் போட்டும் நீரின் பிரவாகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தக்கையைப் போல எங்களை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை அந்தக் காட்டாற்று வெள்ளம். கடைசி நேரத்தில் அவர் எனது துடுப்பை வாங்கி லாவகமாக அந்தக் கல்லிலே முட்டுக் கொடுத்துத் திருப்பி விட மூச்சு திரும்பியது. இது கிளாஸ் இரண்டு மூன்று தான் என்றார். அது என்ன கிளாஸ் என்று கேட்டதற்கு இன்டர்நேஷனல் ஸ்கேல் ஆஃப் ரிவர் டிபீகல்ட்டி என்று ஒன்று இருப்பதாகவும் அது இது போன்ற ஆறுகளை ஒன்றில் இருந்து ஐந்து வரை தர வரிசைப் படுத்துவதாகவும் சொன்னனர். இதுவே மிகவும் சுலபம் என்றும், அங்கே சில கிளாஸ் மூன்று நான்கு இருப்பதாவும் கூறினார். நமக்கு இதுவே வயிற்றைக் கலக்க சரியான நேரத்தில் கரைக்கு வந்தோம் – அங்கே மிகவும் எளிமையான மத்திய உணவு மற்றும் பழங்கள்.

முடித்து விட்டு மேலும் மலையின் மேலே பயணம். சுமார் ஆறு மணி அளவில் எளிமையான பாக் ஸ்டைல் ஹோட்டல். மிகவும் சீப் – நம்ம ஹாஸ்டல் போல பங்க் பெட். இரவு உணவு அங்கே சாப்பிட்டு விட்டு எட்டு மணிக்குள் சென்று மலை ஏற ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் என்றார். என்னது மலை ஏற ரிஜிஸ்ட்டரா? என்றேன். ஆமாம் என்றார் நண்பர். எட்டு கிலோ மீட்டர் ட்ரெக் என்றுதானே சொன்னீர்கள் என்றதற்கு ஆம் அது எட்டு கிலோ மீட்டர் – இப்படி என்று ஆகாயத்தை நோக்கி ராக்கெட் விட்டார்!! கணக்குப் பாட எக்ஸாம் எழுத வேதியல் படித்து விட்டு வந்த மாணவனைப் போலத் தவித்தேன். அருகில் இருந்த சிறு கடைக்குச் சென்று கைக்கு வுல்லன் க்ளோவ், தலைக்கு குரங்குக் குல்லா என்று முடிந்த வரை ஆயுத்தமானேன்.

காலையில் எட்டு மணிக்கு ஏற ஆரம்பிக்க வேண்டும். ஒன்றுக்கு இரண்டு க்ளாஸ் ஹார்லிக்ஸ் குடித்து விட்டுக் கிளம்பினோம். ஒவ்வொரு குரூப்புக்கும் ஒரு மௌன்டைன் கைடு கூடவே வருகிறான். முதல் ஒரு கிலோ மீட்டர் செங்குத்தாக இருந்தது. போகப் போக எளிதாகுமோ என்று கேட்ட போது அவன் ஒரு விஷமச் சிரிப்பு சிரித்தான். ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு பேஸ் கேம்ப் வந்தடையும்போது நாக்குத் தள்ளி, முட்டி விலகி, முதுகு உடைந்து-மண்புழு போல ஊர்ந்து தான் செல்ல முடிந்தது.

பேஸ் கேம்ப் – பேரைக் கேட்கும் போதே ஏதோ எவரஸ்ட் மலையை ஹில்லரி/டென்சிங் ஏறியதைப் பற்றிப் படிப்பது போல அதிர்ந்தது. கட்டையால் ஆன காபின் – சென்ட்ரல் ஹீட்டிங் – நல்ல சாப்பாடு! “இன்றைக்கு இதுதான், சென்று உறங்குங்கள். இரவு எட்டு மணிக்குப் பாதுகாப்பு ப்ரீஃபிங்” என்றார். எட்டு மணிக்கு அனைவரும் (ஒரு நாளைக்கு இருநூறு பேர் மட்டுமே ஏற அனுமதி உண்டு) கூடினோம்.

“காலை இரண்டு மணிக்கு அடுத்த கட்ட ட்ரெக்” என்றார்! கேட்கும் போதே சற்றுத் தலை சுற்றியது. எல்லோருக்கும் தலையில் மாட்டிக்கொள்ள பிளாஷ் லைட் வழங்கப்பட்டது. மனது திக் திக் என்றாலும் அசதியில் உறங்கி விட்டோம். அலாரம் சரியாக நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஒலித்தது.

தொடரும்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க