நாகேஸ்வரி அண்ணாமலை

போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் நடக்கவிருந்த ஐரோபிப்பிய நாடுகளின் தென்கிழக்கு ஆசியக் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள என் கணவருக்கு அழைப்பு வந்த போது அவர் எனக்கும் அங்கு அவரோடு போக விருப்பமா என்று கேட்டார். அப்போது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது 1961 வரை போர்ச்சுகல் அரசு இந்தியாவில் அவர்கள் காலனிகளாகப் பிடித்து வைத்திருந்த கோவா, டையூ, டாமன் ஆகிய பகுதிகளை விடாமல் பிடித்து வைத்திருந்ததும் பின்னர் நம் முதல் பிரதம மந்திரியான ஜவகர்லால் நேரு ராணுவத்தை அனுப்பி அவற்றைப் போர்ச்சுகல் அரசிடமிருந்து விடுவித்து இந்தியாவோடு சேர்த்துக் கொண்டதும்தான். அதெல்லாம் பழங்கதை, லிஸ்பன் மிக அழகிய நகரம், அதை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்து வர வேண்டும் என்று அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னார். லிஸ்பன் அழகிய நகரம் மட்டுமல்ல, பழம் பெருமை வாய்ந்த நகரம் என்பதும் அதற்குள்ளே எத்தனை சரித்திரம் இருக்கிறது என்பதும் லிஸ்பனைப் பார்த்த பிறகு புரிந்தது.

மாநாட்டிற்கு வரும்படி பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்தாலும் இந்தியாவிலுள்ள போர்ச்சுகல் தூதரகம் இந்தா அந்தா என்று இழுத்தடித்து விட்டுத்தான் அங்கு செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கியது. அது ஏன் என்று விளங்கவில்லை. இந்தியா வலுக்கட்டாயமாகப் போர்ச்சுகல் தன்னிடம் வைத்திருந்த இந்தியப் பகுதிகளை பெற்றுக்கொண்ட பிறகும் பல ஆண்டுகள் இந்தியாவிற்கும் போர்ச்சுகலுக்கும் இடையே தூரகத் தொடர்பு இல்லை என்பதையும் இந்தியர்கள் போர்ச்சுகலுக்குப் போக முடியாத சூழ்நிலை இருந்து வந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

போர்ச்சுகல்லின் சரித்திரத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். போர்ச்சுகல்லும் ஸ்பெயினும் சேர்ந்து இருக்கும் பகுதியை ஐபீரிய தீபகற்பம் என்று அழைக்கிறார்கள். இது ஐரோப்பாவின் மேற்குக் கோடி என்பதால் பலர் இதை முற்றுகையிட்டு இதில் பல அரசுகள் இருந்திருக்கின்றன. இந்த ஐபீரிய தீபகற்பத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் வாழ்ந்து வந்ததற்குரிய சின்னங்கள் இப்போதும் போர்ச்சுகலில் காணப்படுவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கல்லில் வரைந்த சிற்பங்கள் இப்போதும் இருக்கின்றனவாம். பல பழங்குடி மக்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.

கி.மு. 700-இல் கெல்டிக் என்னும் பழங்குடி மக்கள் அரண்கள் சூழ்ந்த ஊர்களில் வசித்திருகிறார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ரோமானியர்கள் தங்கள் பேரரசை விஸ்தரித்தபோது அவர்கள் கவனம் போர்ச்சுகல்லின் மேலும் திரும்பியது. கி.பி. 500 வரை ரோமானியர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் இருந்தது. மீன்பிடித் தொழிலை இந்தப் பகுதி மக்கள் முக்கியமாகக் கொண்டிருந்தாலும் மீனிற்கு உப்புப் போட்டுக் காயவைத்து பதப்படுத்தும் முறையை ரோமானியர்கள்தான் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்களாம். ரோமானியர்கள் காலத்தில் சிறந்த சாலைகள் போடப்பட்டன; பாலங்கள் கட்டப்பட்டன. திராட்சை பயிரிடும் தொழிலையும் இந்த மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது ரோமானியர்களே.

கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்த விஸிகோத் இனப் பழங்குடிகளின் வரவால் ரோமானியர்களின் ஆட்சி முடிவடைந்தது. இவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாகப் பரப்பினர். ஆயினும் அதன் பிறகு கி.பி. 700-இல் வட ஆப்பிரிக்காவிலிருந்து மூர் இனத்தவர்கள் இந்தப் பகுதியை வென்று விஸிகோத் இனத்தவர்களை வெளியே தள்ளி விட்டனர். இவர்கள் ஆரஞ்சு போன்ற பயிர் வகைகளை வளர்க்கக் கற்றுக் கொடுத்ததோடு பள்ளிகளையும் தோற்றுவித்திருக்கிறார்கள். (மூர் இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கி.பி. 700-லேயே பள்ளிகளை ஆரம்பிக்கும் நாகரீகத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் நாகரீகம் அற்றவர்கள் என்று சொல்பவர்கள் இதைக் கவனிக்கவும்.) இவர்களுடைய ஆட்சியில் அமைதி நிலவியது. நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஐரோப்பிய இனத்தவர்கள் மறுபடி படையெடுத்ததால் மூர் இன ஆட்சி முடிந்து ஐரோப்பிய கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சி தொடங்கியது.

1139-இல் முதல் கிறிஸ்தவ மன்னன் பதவியேற்றான். 1147-இல் போர்ச்சுகல் என்ற நாடு உருவானது. அவனுக்குப் பிறகு நாட்டை ஆண்ட மன்னர்கள் ஸ்பெயினின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றியதோடு இப்போதைய போர்ச்சுகல்லின் எல்லைகளையும் வகுத்தனர். இன்று வரை அவைதான் போர்ச்சுகல்லின் எல்லைகளாக விளங்குகின்றன. போர்ச்சுகல்லின் முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தோடு சமாதான உடன்படிக்கையும் செய்து கொண்டனர்.

பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல் மன்னர்களின் கவனம் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதில் திரும்பியது. இதனால் போர்ச்சுக்கல்லின் கடல் வணிகம் தொடர்ந்து போர்ச்சுகல் ஐரோப்பாவின் பணக்கார நாடாக விளங்கத் தொடங்கியது. தலைநகர் லிஸ்பன் மிகச் சிறந்த நகரமாக விளங்கியது. 1497-98-இல் வாஸ்கோட காமா (வாஸ்கோ ட காமா என்றுதான் இவர் பெயரை எழுத வேண்டும். வாஸ்கோ என்பது இவருடைய முதல் பெயர்; ட காமா என்பது அவர் காமா என்ற ஊரையோ அல்லது இனத்தையோ சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.) ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிக்கொண்டு தெற்காசிய நாடுகளுக்கு கடல் மார்க்கமாக ஒரு பாதையைக் கண்டு பிடித்தார். இதையடுத்துப் பிரேஸிலும் கண்டு பிடிக்கப்பட்டது. பிரேஸிலில் போர்ச்சுக்கீஸியர்கள் குடியேறினர். (தென் அமெரிக்காவில் பிரேஸிலில் மட்டும்தான் போர்ச்சுகீஸ் பேசப்படுகிறது. மற்ற எல்லா நாடுகளிலும் ஸ்பானிஷ்தான் தேசிய மொழி.) இந்தியா, சைனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளோடு வணிகம் பெருகியது. அதிலிருந்து போர்ச்சுகல்லின் செல்வம் பெருகியது. போர்ச்சுகல்லின் காலனீய ஆதிக்கமும் ஆரம்பித்தது. ஆயினும் 1580-1650 வரை போர்ச்சுகீஸ் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆனால் மறுபடி சுதந்திரம் பெற்றது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மார்க்கச் டி பொம்பால் என்னும் அரசனின் கீழ் போர்ச்சுகீஸ் பலம் பெறத் தொடங்கியது. இவர் அடிமைத்தளையை ஒழித்து நாட்டை நவீனப்படுத்தினார். 1755-இல் தலைநகர் லிஸ்பனில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டு லிஸ்பனின் மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை மாண்டு போனது. நகர் 85 சதவிகிதம் பாழடைந்தது. இதையெல்லாம் சமாளித்துக்கொண்டிருந்தபோது 1800-இல் நெப்போலியன் போர்ச்சுகல் மீது படையெடுத்தான். அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பிரேஸிலுக்கு ஓடிப் போயினர். மிஞ்சியிருந்தவர்களிடையே அரசு அதிகாரத்திற்காகப் போட்டி நடந்தது. 1860-இல் ஒரு வழியாக அமைதி திரும்பியது. தொழிற்புரட்சியின் விளைவாக நாட்டில் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. புதிய கருத்துக்கள் தோன்றத் தொடங்கின. எல்லோருக்கும் சம உரிமைகள் வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுக்கத் தொடங்கியது. 1908-இல் அரசர் கொலை செய்யப்பட்டார். 1910-இல் போர்ச்சுகலில் முடியாட்சி முடிவடைந்தது.

அதன் பிறகும் போர்ச்சுகல் அரசு ஸ்திரப்படவில்லை. சலாஸார் என்பவர் 1926-இல் சர்வாதிகாரியானார். இவருடைய கொடுங்கோல் ஆட்சி 1974 வரை நீடித்தது. அப்போது ராணுவப் புரட்சி ஏற்பட்டு இறுதியாக போர்ச்சுகல் குடியரசானது. 1986-இல் போர்ச்சுகல் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பாவின் பணக்கார நாடாக விளங்கிய போர்ச்சுகல் உலகப் பொருளாதாரச் சரிவிற்குப் பிறகு இன்று கடன் சுமையால் திணறுகிறது. அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கிறது.

டாக்சி டிரைவர் ஒருவரிடம் ‘இப்போது உங்கள் நாட்டில் நிலவுவது ஜனநாயகம்தானே?’ என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்டதும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘நான் ஒரு சாக்லேட்டைத் திருடினால் என்னை ஜெயிலில் அடைத்து விடுவார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளைகளுக்கு அளவே இல்லை. நாட்டின் சொத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனிலிருந்து வரும் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இவ்வளவையும் செய்து விட்டு மறுபடி நாட்டை ஆள் வந்து விடுகிறார்கள்’ என்றார். எல்லா நாட்டிலும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரிதான் போலும்.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://www.infoplease.com/atlas/country/portugal.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *