தமிழ்த்தேனீ
எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்னர் விநாயகரை நினைத்து வழிபட்டு வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடு வாழும் நமக்கு ஒரே நேரத்தில் 108 விநாயரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்வோம். இதை மனதார எண்ணி திண்டுக்கல்லில் கோபாலசமுத்திரக் கரை என்னும் இடத்தில் ஒரு மனிதர் ஒரே ஆலயத்தில் 108 விநாயகரைப் ப்ரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்.

திண்டுக்கல்லில் அனைத்து மக்களுக்கும் மிக விசேஷமாக அருள் பாலிக்கும் திரு வெள்ளை விநாயகர் ஆலயமும், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ஆலயமும் இந்த நன்மைதரும் ஶ்ரீ 108 விநாயகர் ஆலயமும் மிகப் ப்ரசித்தி பெற்று விளங்குகின்றன.

இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானுக்கு நன்மை தரும் விநாயகர் என்று பெயர் ஏற்பட்டதற்குக் காரணமே மிகவும் அருமையாக இருக்கிறது. திண்டுக்கல்லில் கோபாலசமுத்திரம் உருவான காலத்திலிருந்தே அந்தக் கோபால சமுத்திரக் கரையில் சுமார் 2 அடி உயரமுள்ள இந்த விநாயகர் விக்ரகம், கீழே மண் தரையும், சுற்றிலும் மூங்கில் தட்டிகள் வைக்கப்பட்டு ஓலைகளால் வேயப்பட்ட மேற்கூரையும் கொண்ட சிறு கோயில் இருந்துள்ளது. இந்தக் கோயில் யாரால் எப்போது உருவானது என்பதற்கு சரித்திர பூர்வமாகத் தகவல்கள் இல்லை.

இந்த விநாயகர் ஆலயத்தைக் கண்ட திரு மருதநாயகம் அவர்கள் 1967ஆம் ஆண்டு கையிலிருந்த எட்டணாவைக் கொண்டு மண் சுவர் எழுப்பி வர்ணம் பூசி வழிபடத் தொடங்கினார். பொது மக்களிடம் வசூல் செய்த 120 ரூபாயைக் கொண்டு பக்கத்திலிருந்த ஆஞ்சநேயர் ஆலயத்திலிருந்து மின்சார உதவி பெற்று விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆலயத்துக்கு மின்சார இணைப்புப் பெற வேண்டி மின்சார அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் இந்த ஆலயத்துக்கு ஒரு பெயர் சூட்டுங்கள், அப்போதுதான் மின் இணைப்பு அளிப்போம் என்று கூறவும், அந்த வினாடியில் இவர் மனதில் உதித்த பெயர்தான் நன்மை தரும் விநாயகர்.

1971ஆம் ஆண்டு விநாயகர் ஆலயத்தின் முன் மண்டபம் அமைக்கப்பட்டது. திருவுளச்சீட்டுப் போட்டுக் கிடைக்கும் அனுமதியைப் பொறுத்துக் காரியமாற்றும் வழக்கம் தொடங்கியது.

1977ஆம் ஆண்டு மூலஸ்தான கோபுரமும், 1983ஆம் ஆண்டு பஞ்ச லோகத்தில் விக்ரகமும், உற்சவ மூர்த்தியும் செய்யப்பட்டுக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1992ஆம் ஆண்டு விநாயகருக்குத் தங்கக் கவசம் செய்யப்பட்டது. 1997ஆம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டது. முருகன், துர்கை, நவக்ரகம், ஆஞ்சநேயர் சன்னிதிகள் கட்டிப் ப்ரதிஷ்டை செய்யப்பட்டன.

இதில் என்ன விசேஷமென்றால் ஒவ்வொரு விநாயகருக்கும் ஒவ்வொரு பெயர், அந்தப் பெயருக்கேற்றாற் போன்ற உருவம். மிக ஆச்சரியமாக இருக்கிறது. அந்த மனிதரை வியந்து அவருக்கு எப்படி இந்த எண்ணம் உருவானது என்று நேர்காணல் செய்தேன். அவர் கூறும் காரணம் மிக ஆச்சரியமானது. முதன் முதலாக மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தாலும் எப்போதும் விநாயகர் பேரில் அதீத பக்தி கொண்டவராக இருந்திருக்கிறார் இந்த மனிதர் திரு மருத நாயகம் அவர்கள்.

அங்கே இருந்த ஒரு சிறு கல்லால் ஆன விநாயகர் கோயில் மேற்கூரையும் இல்லாமல் இருப்பதைக் கண்டு திரு மருத நாயகம் அவர்கள் அந்தக் கல்லை விநாயகராக வழிபட்டுக் கையிலிருந்த எட்டணாவைக் கொன்டு பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வழிபட்டுக் கோவிலைத் தொடங்கிப் பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார் நம்பிக்கையுடன். உற்றுப் பார்த்தால் அந்தக் கல்லில் விநாயகர் உருவம் கூட அவ்வளவாக முழுமையாக இல்லை.

ஆனாலும் இந்த மனிதருக்கு ஏற்பட்ட தனி உணர்வினால் அந்தக் கோவிலைப் பராமரிக்கத் தொடங்கி இன்று வரை பராமரித்து வருகிறார். நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்ளிருக்கையில் என்னும் சொல் வழக்குக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் அவர் நட்ட கல்லைத் தெய்வமாக மதித்திருக்கிறார், ஏனென்றால் அந்த கணநாதன் அவர் உள்ளே இருந்திருக்கிறார்.

திரு மருதநாயகம் அவர்கள் கூறுகிறார், “அந்தச் சின்ன விநாயகரை மனப்பூர்வமாக வழிபட்டு அவர் முன்னே திருவுளச் சீட்டு எழுதிப் போட்டு அதில் ஒரு சீட்டை சிறு குழந்தை, அல்லது அந்தக் கோயிலின் அர்ச்சகர் இருவரில் யாரேனும் ஒருவரை விட்டு ஒரு சீட்டு எடுத்துப் பார்த்து அந்தச் சீட்டில் என்ன உத்திரவாகிறதோ அதை நம்பிக்கையோடு இன்று வரை நடத்தி வருகிறேன், இன்று இந்த நன்மைதரும் 108 விநாயகர் ஆலயம் இவ்வளவு ப்ரும்மாண்டமாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு மூலகாரணம் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் அந்த சின்னக் கணபதியே” என்று.

இந்த ஆலயத்தில் மூலத்தானத்தில் ப்ரதானமாகச் சின்னக் கல்லால் ஆன அந்த விநாயகரும் அவருக்குப் பின்னே ஸ்ரீ ராஜ கணபதியும் எழுந்தருளி இருக்கின்றனர். அந்தக் கர்பக் கிருஹத்தின் முன்னால் இரு புறமும் 108 விநாயகர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு தரிசனம் செயவதற்கு மிகவும் எளிதான முறையிலே வடிவமைக்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விநாயகருக்கும் ஒவ்வொரு பெயர் அளித்து அந்தப் பெயரை அந்த விநாயகரின் கீழே அழகாக எழுதி உள்ளனர். அதே போல் ஒவ்வொரு விநாயகரின் பெயருக்கேற்றாற் போல அந்த உருவங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் அந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அத்துணை தெய்வங்களுக்கும் அலங்காரங்கள், நித்திய பூசைகள், எல்லாமே தவறாது நடந்து கொண்டிருக்கின்றன. ஆலயத்தை மிகவும் சுத்தமாக நிர்வகிக்கிறார்கள்.

பக்தர்களுக்குத் திருவுளச் சீட்டு வழங்கப்படுகிறது. அவர்கள் எண்ணத்தை அவர்களே எழுதி விநாயகரிடம் போட்டு, சீட்டு எடுத்து விநாயகரை நம்பிக் காரியத்தை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல மிகவும் சுத்தமாக வருவோர் அவர்களே அபிஷேகம் போன்றவற்றை அவர்கள் கையாலேயே செய்ய நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.மேலும் வரும் பக்தர்களும் இந்தக் கோவிலில் உள்ள திருவுளச் சீட்டு முறையை மனப்பூர்வமாக நம்பி, திருவுளச் சீட்டினைப் பெற்று, அதில் தங்கள் கோரிக்கைகளை எழுதி, விநாயகர் காலடியில் வைத்து, அதிலிருந்து வரும் வாக்கை விநாயகரின் வாக்காகவே மதித்து, திருமணங்கள் போன்ற அனைத்து சுப காரியங்களையும் செய்கின்றனர். மேலும் ப்ரதோஷ காலங்களில், அமாவாசை, போன்ற நாட்களில் மாவிளக்கு ஏற்றுகின்றனர். அப்படி மாவிளக்கு ஏற்றும் பகதர்களுக்கு இலவசமாகப் ப்ரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் 2002ஆம் ஆண்டு 108 விநாயகர் ப்ரதிஷ்டை செய்ய திருவுளச்சீட்டு மூலம் ஸ்ரீ ராஜ கணபதி முன்னால் இருக்கும் ஸ்ரீ நன்மை தரும் விநாயகர் அருள் பாலித்ததை ஒட்டி 108 பக்தர்கள் 108 விநாயகர் விக்ரகங்களை செய்து கொடுத்துள்ளனர். அதன் பக்கத்தில் திரு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் விக்ரகங்களும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், சண்டிகேச்வரர், தக்ஷிணாமூர்த்தி, சமயவரம் மாரியம்மன் விக்ரகம், சன்னிதிகளும் இருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்ப் போல் மும்மதத்தவரையும் எல்லா விழாக்களுக்கும் அழைக்கிறார்கள். மும்மதத்தினரும் வந்து ஆலய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். தவிர, கோட்டை மாரியம்மனுக்குத் தங்கக் கவசம், ஆர்.வீ. நகர் உச்சிமாகாளி அம்மன் கோவில், அங்கு நகரம் ராஜக்காபட்டி பாலவிநாயகர் ஆலயம், சமயவரம் மாரியம்மன், கோவிந்தாபுரம், பிள்ளையார் பாளையம் காளியம்மன் கோயில், சாஸ்திரி நகர் விநாயகர் கோவில், ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகமும் நன்மை தரும் விநாயகர் ஆலயத்தில் திருவுளச் சீட்டு அருளின்படி உத்தரவுப்படி நடத்துகிறார்கள்.

இந்தக் கோவிலில் திருப்பணிகளை அறங்காவலர் திரு மருதநாயகம், செயலாளர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் பிச்சை மாணிக்கம், துணைச் செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் கௌரவ ஆலோசகர்கள், அறங்காவலர் கமிட்டியினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். மேலும் அந்தக் கோவிலை திரு மருதநாயகம் அவர்கள் நிர்வகித்து வந்தாலும் அந்தக் கோவிலில் நிர்வாகஸ்தர்களின் பெயரை எழுதிப் போடுவது வழக்கமல்ல, ஏனென்றால் இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை ப்ரதான நிர்வாகஸ்தர் அந்த விநாயகப் பெருமான்தான் என்கிறார் திரு மருதநாயகம் அவர்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *