நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-10)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

வேலுமணியும், கணேசனும் திட்டமிட்டபடி மேலிடத்துக்கும் அந்த ஆபீஸ் மேனேஜருக்கும் மொட்டை லெட்டர் எழுதிப் போட்டார்கள். லெட்டரின் சாராம்சம் இது தான்.

“உங்கள் அலுவலகத்தில் நேர்மையின் சின்னம் என்று நீங்கள் நினைத்திருக்கும் திரு.சுந்தரம் அவர்கள் பல முறை லஞ்சம் வாங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் லோன் கேட்டுத் தன்னிடம் வரும் பொது மக்களிடம் தனக்கு இத்தனை சதவிகிதம் பங்கு கொடுத்தால் தான் லோன் கொடுப்பேன் என்று பேரம் பேசுகிறார். அவருக்கு உங்கள் ஆபீசிலேயே இருக்கும் இருவர் உடந்தை. தன் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்த இருவரை மட்டும் மாட்டி விடத் திட்டமிட்டுள்ளார். இதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. அந்த இருவரும் இவர் பேரைச் சொல்லாமல் இருப்பதற்காகக் கணிசமான பணம் கை மாறி இருக்கிறது.

இப்படி ஊழலில் மூழ்கிக் கிடக்கும் அலுவலர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?”

இப்படிக்கு
உண்மை விளம்பி

அதே லெட்டரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து டெல்லிக்கும் அனுப்பினார்கள். சிறிது நாள் இடைவெளி விட்டு வேறொரு பாதிக்கப்பட்ட நபர் எழுதுவது போல மாற்றி எழுதி அனுப்பினார்கள்.

அந்த லெட்டர் கிடைத்ததும் முதலில் மேனேஜர் அதை லட்சியமே செய்யவில்லை. அதே போல் மேலும் இரண்டு லெட்டர்கள் கிடைக்கவே அவர் அதில் ஏதேனும் உண்மை இருக்குமோவென சந்தேகப் பட ஆரம்பித்தார். யாரிடமும் எதுவும் சொல்லாமல் மௌனமாக சுந்தரத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார்.

வேலுமணியும், கணேசனும் தாங்கள் போட்ட குண்டு எவ்வளவு தூரம் வேலை செய்கிறது என்பதை அறியத் துடித்தார்கள். மேனேஜர் முன் போலச் சுந்தரத்திடம் நெருக்கமாகப் பழகவில்லை என்பதைக் கவனித்துக் கொண்டார்கள். மேலும் அவர்கள் திட்டப்படி மேனேஜர் பார்க்கும் நேரமெல்லாம் சுந்தரத்தோடு ஏதோ ரகசியம் பேசுவது போல நடித்தார்கள்.

இந்தச் சூழ்ச்சியெல்லாம் ஒன்றும் அறியாத சுந்தரம் வழக்கம் போல வேலை செய்தான். ஆனால் ஏன் வேலுமணியும், கணேசனும் தன்னிடம் மெதுவாக எதையாவது பேசுகிறார்கள் என்பது மட்டும் அவனுக்குப் புரியவேயில்லை.

மேனேஜர் கேட்ட ஃபைலை அன்றைக்கே கொடுத்தும் ஏன் இது வரை நடவடிக்கை இல்லை? என்பதைத் தெரிந்து கொள்ள சுந்தரம் மேனேஜரிடம் இது பற்றிக் கேட்டான்.

“ஏன் சார்? நாம தான் பத்து நாளைக்கு முன்னமேயே வேலுமணி, கணேசன் மேல நடவடிக்கை எடுக்கணும்னு ஃபைலை ரெடி பண்ணிட்டோமே! ஆனா ஏன் இன்னும் எந்த நடவடிக்கையுமே எடுக்கல?”

“ஏன் சுந்தரம்? அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு நீங்க ஏன் இவ்ளோ அவசரப் படுத்தறீங்க? உங்களுக்கு என்ன இண்டிரெஸ்ட் இதுல?”

“நான் அவசரப் படுத்தறேனா? நீங்க தானே சார் அந்த ஃபைலை உடனே முடின்னு சொல்லி எங்கிட்டருந்து வாங்கிக்கிட்டீங்க? இப்போ எனக்கென்ன இண்டிரெஸ்டுன்னு கேக்கறீங்க?”

“வேற சில பேர் மேல சந்தேகங்கள் வந்திருக்கு. அவங்க பேரையும் அந்த ஃபைல்ல சேக்கணும். அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.”

“வேற யார் சார் இருக்க முடியும்? எனக்குத் தெரிஞ்சு இந்த பிரான்சுல வேற யாரும் அந்த மாதிரி இல்லியே?”

“என்னாலயே நம்பத்தான் முடியல. என்ன செய்ய சொல்றீங்க?”

“யார் சார் அது? கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“வெளிப்படையா சொல்ல முடியாது சுந்தரம். ஐ ஆம் சாரி. அது இருக்கட்டும் நீங்களும் கணேசன் வேலுமணியும் ஃபிரெண்ட்சுன்னே எனக்குத் தெரியாதே?”

“நானும் அவங்களும் ஃபிரெண்ட்சா? சான்சே இல்ல சார்! உங்களுக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க!”

“தப்பா இருக்கணும்னு தான் எனக்கும் ஆசை. நீங்க போங்க சுந்தரம் போயி உங்க வேலையைப் பாருங்க”

திரும்பி தன் சீட்டுக்கு வந்த சுந்தரம் குழம்பினான். “என்ன ஆச்சு இந்த மேனேஜருக்கு? நல்லாப் பேசிக்கிட்டு இருந்தவரு ஏன் இப்டி மாறிட்டாரு? ஒரு வேளை யாராவது என்னைப் பத்தித் தப்பா சொல்லியிருப்பாங்களோ? அப்டியே சொன்னாலும் என்னைப் பத்தி என்ன சொல்ல முடியும்? அதை எங்கிட்டக் கேட்டு உண்மையா இல்லியான்னு தெரிஞ்சிக்காம மேனேஜர் ஏன் இப்டி விட்டேத்தியா பேசறாரு?” பலவாறு யோசித்தவன் அன்று ஏனோ மேனேஜருக்கு மூடு சரியில்லை. அதனால் தான் அப்படிப் பேசுகிறார் என்ற முடிவுக்கு வந்தான்.

மறு புறம் மேனேஜரும் கவலையில் ஆழ்ந்திருந்தார். ஏனோ சுந்தரம் தவறு செய்திருப்பான் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. நன்கு விசாரித்துப் பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதற்கேற்றார் போல டெல்லி விஜிலன்ஸ் டிப்பார்ட்மெண்டிலிருந்து அவருக்கு ஒரு ஃபோன் வந்தது.உரையாடல் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடந்தது.

“ஹலோ? மிஸ்டர். சேகர்?

“யெஸ் சார்!”

“உங்க ஆபீசுல லஞ்ச ஊழல் ரொம்ப அதிகமா நடக்கறதா எங்களுக்கு நிறைய புகார் வருது! இது பத்தி நீங்க இது வரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க?”

“சார்! ஊழல் செய்யற ரெண்டு பேரை ஐடெண்டிஃபை பண்ணிட்டோம். அது தவிர எந்தெந்த வகையில ஊழல் பண்ணியிருக்காங்கன்னு விவரமா ஒரு ஃபைல் ரெடி பண்ணியிருக்கோம் சார்! உங்க ஆளுங்க இங்கே வந்தா அந்த ஃபைலை உங்க கிட்ட ஒப்படச்சுடுவோம்”

“ஊழல் பண்ணவங்க எத்தனை பேருன்னு சொன்னீங்க?”

“ரெண்டு”

“பேர் சொல்ல முடியுமா? “

“முடியும் சார்! வேலுமணி அண்ட் கணேசன்.”

“இவங்க ரெண்டு பேர் தானா?”

“ஆமா சார்!”

“ஆனா எங்களுக்கு வந்துருக்கற இன்ஃபர்மேஷன் வேற மாதிரி இருக்கே? நீங்க சொல்ற நபர்களோட இன்னும் ஒருத்தருக்கும் ஊழல்ல பங்கு இருக்கறதா இல்ல எனக்குத் தகவல்?”

“சார்! எனக்கும் அந்த நபரை சம்மந்தப் படுத்தி ரெண்டு மூணு மொட்டை லெட்டர் வந்தது. மொட்டை லெட்டருக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கணுமான்னு தான் நான் யோசிச்சேன்”

“மொட்டை லெட்டரை அப்டி அலட்சியப் படுத்திடக் கூடாது மிஸ்டர். சேகர். அதுலயும் உண்மை இருக்கான்னு ஆராஞ்சு பாக்கணும்”

“யெஸ் சார்!”

“நீங்க குறிப்பிட்ட முதல் இரண்டு நபர்களும் எந்த விதமான ஊழல் பண்ணியிருக்காங்க? விவரம் சொல்ல முடியுமா?’

“சார்! எல்லாத்தையும் ஃபோன்ல சொல்லலாமா?”

“பரவாயில்ல சொல்லுங்க! இது ஸ்பெஷல் லைன். இதை யாராலயும் ஒட்டுக் கேக்க முடியாது. சும்மாச் சொல்லுங்க?”

“அதாவது சார்! லோன் அப்ளை பண்ணவங்க கிட்ட லஞ்சம் வாங்கிக்கிட்டு சரியான டாக்குமெண்ட்ஸ் இல்லாத பல பேருக்கு லோன் குடுத்துருக்காங்க. அதனால மன்த்லி இ.எம்.ஐ சரியாக் கட்டாம நெறய பெண்டிங்க் இருக்கு. அதனால் நம்ம கலக்க்ஷன் ரேட் பாதிக்குது. அது மட்டுமில்ல. ஆளே இல்லாம இவங்களா ஒரு ஐடெண்டிடி உருவாக்கி லோன் அப்ளை பண்றா மாதிரி பண்ணி ஊழல் பண்ணியிருக்காங்க. இவங்க பண்ண ஊழல் எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பாத்தா முப்பது லட்சத்தைத் தாண்டுது சார்”

“மிஸ்டர் சேகர்! இவ்ளோ பெரிய ஊழல் அந்த மூன்றாவது நபருக்குத் தெரியாம நடக்க வாய்ப்பு இருக்கா?”

“இல்ல சார்! ஆனா அந்த நபர் லாங் லீவுல போயிருந்த போது தான் இதெல்லாம் நடந்திருக்கு.”

“அவரு எதுக்கு லாங் லீவு போட்டாருன்னு வெரிஃபை பண்ணீங்களா?”

“அவரு மனைவிக்கு டைஃபாய்டு ஃபீவர்ங்கறதால அவங்களைக் கவனிச்சுக்க ஆளில்லன்னு சொல்லி லீவு போட்டாரு சார்!”

“அவரு ஏன் அந்த லீவை ஊழல் பண்றவங்க பண்ணட்டும்ங்கறதுக்காகப் போட்டுருக்கக் கூடாது?”

“சார்? எனக்குப் புரியல்ல!”

“முதல்லருந்தே அவரு ரொம்பப் புத்திசாலித்தனமா செயல் பட்டிருக்காரோன்னு நான் கேக்கறேன்? ஏன் அவங்க மூணு பேரும் கூடிப் பேசி வெச்சுக்கிட்டு இவரு லீவு போட மத்தவங்க ஊழல் பண்ணன்னு பிளான் பண்ணியிருக்கக் கூடாது? “

“சார்! நான் அந்த ஆங்கிள்ள யோசிக்கவேயில்ல சார்?”

“யோசிக்கணும் மிஸ்டர். சேகர். யோசிக்கணும். இல்லன்னா யோக்கியமான ஒருத்தன் மேல ஏன் அனாவசியமா மொட்டை லெட்டர் வரணும்?”

“ஆமா சார்”

“எங்க ஆள் ஒருத்தர் நாளைக்கு உங்க பிரான்சுக்கு வருவார். நீங்க என்ன பண்றீங்க அவரு அந்த மூணு பேரையும் கண்காணிக்க ஏற்பாடு பண்ணுங்க! அந்த மூணு பேரைக் கண்காணிச்சா மட்டும் போதாது. அவங்க வீட்டு ஆட்களையும் அவங்களுக்குத் தெரியாம கண்காணிக்கணும். அவங்க எங்கெங்கே அக்கவுண்ட் வெச்சுருக்காங்க? யார் யார் பேர்ல அக்கவுண்ட் இருக்கு? இந்த ஆதாரங்களையெல்லாம் நாம சேகரிச்சாத்தான் நாளைக்கு நாம அவங்களை குற்றம் சாட்டி ஆக்க்ஷன் எடுக்க முடியும். என்ன புரியுதா?”

“யெஸ் சார்!” என்றவர் ஃபோனை வைத்து விட்டார்.

ஃபோனில் சொன்னது போலவே டெல்லியிலிருந்து இவர்களைக் கண்காணிக்க சுப்பிரமணியம் என்பவர் வந்து விட்டார். மேலும் இரண்டு பேரைச் சேர்த்துக் கொண்டு அன்றிலிருந்தே அனைவரையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் சுந்தரம் தன் பாட்டுக்கு வேலையில் ஆழ்ந்திருந்தான்.

வேலுமணியும், கணேசனும் எளிதில் சிக்கி விட்டார்கள். அவர்கள் கணக்கு வைத்திருந்த பேங்க், வாங்கிய நகை விவரம் எல்லாம் அந்த கண்காணிப்பாளர்கள் சேகரித்து விட்டார்கள். சுந்தரத்துக்கு எதிராக அவர்களுக்கு ஒரு ஆதாரம் கூடக் கிடைக்கவில்லை. சுந்தரத்துக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்று அவர்கள் அநேகமாக முடிவு செய்து விட்டார்கள்.

அந்நிலையில் தான் கல்யாணி வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பியதை அந்தக் கண்காணிப்பவர்கள் பார்த்து சுப்பிரமணியத்திடம் சொல்லி விட்டார்கள். ஊழல் புகாரில் சம்பந்தப் பட்டவர்களில் ஒருவரின் மனைவி வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புகிறார் என்றால் என்ன காரணம் இருக்க முடியும்? அவர்களுக்கு வெளி நாட்டு வங்கியில் கணக்கு இருக்கிறது என்று தானே அர்த்தம்? என்று முடிவு செய்து கல்யாணி பணம் அனுப்பிய தினம், அனுப்பப்பட்ட அக்கவுண்ட் நம்பர் எல்லாவற்றையும் பணம் அனுப்பிய ஏஜன்சியிலிருந்து பெற்றுக் கொண்டு வேகமாகப் பேங்க் நோக்கிச் சென்றார்கள்.

 

படத்திற்கு நன்றி: http://www.shutterstock.com/pic-45357742/stock-photo-middle-aged-hispanic-businessman-working-in-office-reading-reference-book.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *