கல்லாடம் – கல்லாடை – துவராடை (இரண்டாம் பகுதி)
நூ. த. லோகசுந்தரம்
‘கல்லாடம்‘ எனும் சொல்லினை நினைவு கூர்ந்த போது
(1) கல்லாடர் எனும் பெயருடைய சங்கப்புலவர் “தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்” எனும் பாண்டியப் பெருமன்னன் மேல் இசைத்த மூன்றும் அம்பர்கிழான் அருவந்தை மற்றும் பொறையாற்றுக் கிழான் மேல் பாடியதும் ஆக 5 புறநானூற்றுப் பாடல்களுக்கும் குறுந் தொகையில் உள்ள 2 புறத்திணை பாடல்களுக்கும் ஆசிரியர் – எனவும்
(2) நல்லம் வல்லம் திண்ணியம் புண்ணியம் நெதியம் கொல்லம் செங்கம் சேலம் என வரும் ‘அம்’ ஈற்று இடப்பெயர் வழி கல்லாடம் (செந்நிறப்புலம்) ஓர் இடப்பேயரே. சென்னை வடக்கே செங்குன்றமும், தெற்கில் செம்மஞ் சேரியும் மண்ணின் நிறம் வழி அமைந்ததே. இக்காலத்து மலைநாட்டு எல்லைக்குள் இருந்தாலும் சங்கப்புலவர் ‘கல்லாடர்‘ ‘இடைக்காடர்’போல் இடப்பெயர் வழியே அப்பெயர் பெற்றார். – எனவும்
(3) திருவாசகம் இயற்றிய மாணிக்க வாசகரின் திருக்கோவையாரினின்று பொறுக்காக நூறு அகத்துறைத் துறைகளைத் தேர்ந்து காலத்தால் பத்து அல்லது பதினோராம் நூற்றாண்டு எனப் பின் வந்தாலும் சங்கத்தமிழுக்கு இணையான நடை கொண்டு ஆசிரியப்பாவினால் யாத்ததுள்ள ‘கல்லாடம்‘ எனும் சிவன்பால் ஆக்கிய அகத்துறை நூலிற்கு ஆசிரியர் கல்லாடர் – எனவும்
(4) தமிழகத்துச் சித்தாந்த சைவநெறியின் புனித திருமுறைகளாகப் போற்றப்படுகின்ற 12 நூற்தொகுதிகளில் 11-வதில் காணும் 12 ஆசிரியர் இயற்றிய 1419 பாசுரங்களைக் கொண்ட 41 நூல்களின் தொகுப்பினில் ‘கண்ணப்ப தேவர் திருமறம்’ எனும் தலைப்பினில் உள்ள ‘மறம்’ (96 பிரபந்த வகைகளில் ஒன்று 38 வரிகள்) இயற்றிய ஆசிரியர் கல்லாடதேவ நாயனார் – எனவும்
(5) “மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10
கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்”
எனவரும் மணிவாசகரின் திருவாசகத்தில் உள்ள ‘கீர்த்தித் திருவகல்’ வரிகளில் குறிக்கப்படுகின்ற சிவத்தலத்தின் பெயர் ‘கல்லாடம்‘ – எனவும்
(6) மேற்குறித்த சிவத்தலம் சென்னை அருகு வடக்காக உள்ள (மீஞ்சூர் பொன்னேரி அணிதுள்ள) ஓர் ஊரிலுள்ள கோயில் கல்வெட்டுகள் அதனைக் ‘கல்லாடீசுவரம்‘ எனக்குறிப்பதாகப் பெருந்தகை மறைமலை அடிகள் தன் ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ எனும் நூலில் குறித்துள்ளார் – எனவும்
(7) தென் தமிழகத்தில் உள்ள மக்களால் பெரிதும் போற்றப் பெறுகின்ற பல குற்றாலத்து அருவிகள் கிளைக்கும் மலைத்தொகுதிகளின் அணித்தே மேற்பால் அமைந்து தற்காலம் மலைநாட்டு எல்லையிலுள்ள ஓர் ஊர் தென்மலை. இதற்கு ஓரிரு கி.மீ தூரத்தில் அணை ஒன்று கட்டப்பட்டுள்ள ஆற்றின் பெயர் ‘கல்லாடம்‘ எனவே காணலாம். – எனவும்
(8) ஆற்றின் பெயர் ‘கல்லாடம்‘ எனக் காண்பதால் மேற்கண்டவாறு செந்நிறத் தொடர்பு கீழ் கண்ட விளக்கத்தினாலும் உணர்ந்து தேர்ந்து முடிவெய்தலாம். ‘பொன்னி’ எனவும் ‘காவேரி’(*) எனவும் வழங்கும் ஆற்றிற்குள்ள இயற்பெயர். கார்காலத்துப் புதுவெள்ளம் சீறிவரும் போது நீரின் நிறம் மண்வாகிற்கு ஏற்ப நிறம் பெறுகின்ற வகையில் மஞ்சள் (பொன்-தங்கம்) நிறமாவதால் மக்கள் ‘பொன்னி’ என அழைத்தனர். ஆந்திர நாட்டில் உள்ள ‘கிருஷ்ணா’ ஆற்றின் நீர் தற்காலம் இராயலசீமை என வழங்கும் பருத்தி விளைச்சலுக்கு உகந்த கரிசல்மண் மிக்குள்ள புலத்தினில் பெய்த மழைநீரால் கரிய நிறமாக ஓடியதால் அப்பெயர் பெற்றது என்பர். சீனாவில் ‘மஞ்சளாறு’ உள்ளதும் ஓடும் நீரின் நிறவழி பிறந்ததே. ‘பாலாறு’ம் அவ்வப்போது வெண்மை நிற மண்வாகு உள்ள இடத்திருந்து இழிந்த மழை நீராலாகும். செந்நிற மண்ணில் பெய்த நீர் சிவந்து ஓடுதலால் செந்நிறத் தொடர்பு காட்ட ‘கல்லாடம்‘ ஆனது.
(*)காவேரி எனும் சொல்லிற்கே வங்காளத்தில் மஞ்சள் நிறம் எனப்பொருளாம். காபேரி முகர்ஜி எனும் முன்னாள் வங்காளத் திரைப்பட நடிகையின் பெயர் பற்றிய ஓர் செய்தியில் கண்டது. நாகர் (மஞ்சள்)இன மக்களில் அச்சொல் உள்ளது ஆகலாம். காவேரி-காபேரி வட மொழியில் வகரம்-பகரம் ‘வங்காளம்”பெங்கால்’ஆவதுபோல் மாறும் – எனவும்
(9) நூற்றுக் கணக்கான இணையதள பக்கங்கள்/வலைப்பூக்கள்/காணொளிகள் மேற்கண்ட மலையாள நாட்டு ‘கல்லாட’ ஆற்றின் தொடர்புடன் காணக்கிடைகின்றன. அவற்றின் நிரல் மிக நீண்டு செல்வதால் வாசகர்கள் எளிதாக ‘கல்லாட’ எனும் ‘தேடுச்சொல்’ வழி பெறலாம். பல கிமீ நீண்ட நீர் வழியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குழுப்படகுப் போட்டிகளில் ‘கல்லாடம்‘ இணைந்துள்ளதும் காண்க – எனவும் பற்பலவாக வந்து நீண்ட கருத்து இழை மணிகளிவை.
படத்திற்கு நன்றி: http://www.hinduvedhas.com/hello-world/