Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்

வருத்தம் நல்லது!

பவள சங்கரி

சோகம் சுமையல்ல! ஆம். வாழ்க்கையில் நாம் அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டுமே விரும்புகிறோம். ஆனால் முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதானே.. நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றைக் கண்டு ஏன் அஞ்சி ஒதுங்க வேண்டும். நாம் எப்பொழுதுமே, மகிழ்ச்சி, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை போன்றவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்..

     உண்மையாகவே, ஆக்கப்பூர்வமான உணர்வுகளே, உயர்வானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனாலும் அவ்வப்போது வீசுகிற துன்பப் புயலையும், சோகச் சுமையையும், ஏமாற்றங்களையும் எவராலும் தடுக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால் இது போன்ற தருணங்களே, மகிழ்ச்சி என்றால் என்ன, மன நிம்மதியில் எத்தனை சுகம் இருக்கிறது என்பதை உணரச் செய்யக்கூடியது. வெய்யிலில் இருந்தால்தானே நிழலின் அருமை புரியும்?

ஆனால் இவையனைத்தும் நிலையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது என்பதை நாம் உணரும் வகையில்தான் இருக்கிறது! அர்த்தமுளள வாழ்க்கை மட்டுமே மகிழ்ச்சிக்குரிய வாழ்க்கை என்பதே அறிஞர்களின் தீர்க்கமான முடிவாக இருக்கிறது. தத்துவ அறிஞர் அரிஸ்டாடிலின் கூற்றுப்படி, வாழ்க்கையை அர்த்தமுடையதாக ஆக்கிக்கொள்வதும், ஒரு நல்ல குடிமகனுக்குரிய கடமையில் தவறாதிருப்பதும், நற்குணங்களிலிருந்து தவறாமையும், உலகத்துடன் ஒன்றி வாழ்வதும், குறிப்பாக அன்பு மற்றும் நட்பின் உன்னதத்தை உணர்ந்தவராக இருப்பவர்களே மகிழ்ச்சியாக இருப்பவர்களாம்…..

எல்லாம் சரிதான்.. உன்னதமானதுதான் மனித அன்பும், நட்பும் இல்லையா? ஆனால் சுகமான மலர் படுக்கையல்ல அது… மனித உறவுகள் என்றுமே நம் வாழ்க்கையை முழுமையடையச் செய்யக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இந்த உறவுகள் அடிப்படையில் குளறுபடியான ஒன்றாகவும், பல நேரங்களில் எதிர்பாராத ஏமாற்றங்களையும், தாங்கொணாத் துயரங்களையும் கொடுக்கவல்லதும், அந்த மனித உறவுகள்தான். அதிலிருந்து நாம் பெறுகிற பாடங்களும் அதிகம்தான்.

    எங்காவது நாம் மறுதலிக்கப்பட்டாலோ, கொடூரமாக நடத்தப்பட்டாலோ, உடனே ஏதோ வாழ்க்கை நம்மை பரிவற்று, மோசமாக நடத்துவதாக எண்ணி வருந்த ஆரம்பித்துவிடுகிறோம். இதுபோன்ற நேரங்களில்தான் நாம் ஏன் மகிழ்ச்சியையே நம் வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது பாருங்கள்.. ஏன் அப்படியே வருவதை ஏற்றுக்கொண்டு இயற்கையாக இருந்துவிட்டுப் போகக்கூடாது என்று தோன்றுகிறதல்லவா. ஆனால் அதுவும் மனித வாழ்க்கையின் ஒரு முக்கியமான அனுபவத்தை இழக்கச் செய்துவிடாதா? ஆம், மகிழ்ச்சியைப் போலவே துன்பமும் ஒரு ஆக்கப்பூர்வமான உணர்வு அல்லவா? குதூகலம், ஆனந்தம், அத்தி பூத்தாற்போன்று ஏதோ ஒரு சமயம் நம் ஆழ்மனதில் பூக்கும் அந்த அற்புதம் இவையெல்லாம் மட்டும்தானே, நமக்கு, வேதனைகளையும், சோகங்களையும், ஏமாற்றங்களையும், அன்றாட வாழ்வின் சூன்யங்கள், சிக்கல்கள் போன்ற அனைத்தையும் வேறுபடுத்தி உணரச்செய்கிறது.

    என் குழந்தை எப்பொழுதும் மகிழ்ச்சியை மட்டுமே உணர்பவனாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது சரியா? நல்லதும், தீயதும் பாகுபடுத்திப் பார்க்க அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா. எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளையும், வேதனைகளையும், ஏமாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாக இருக்கத் தயாராக வேண்டும். எதிர்மறை எண்ணங்களைவிட, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள்தான் சிறந்தது என்றாலும், உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அதனினும் சிறந்ததல்லவா? ஆக்கப்பூர்வமான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு பொறுமை, சகமனிதரை நேசிக்கும் பண்பு, மற்றும் வாழ்க்கையின் மற்ற முகங்களை அனுசரித்துப் போகும் வழமை இவையெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சி என்ற ஒன்றை நிலைத்து நிற்கச்செய்வது சாத்தியமல்ல. வேதனைகளை எவர் ஒருவர் முழுமையாக அனுபவித்து மீண்டு வருகிறாரோ, அவரே முழுமையான மகிழ்ச்சியையும் அனுபவிக்க வல்லவராகிறார் என்பதே உண்மை.

இறுதியாக இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியும், முன்னேற்றமும், பற்பல சோதனைகளையும், வேதனைகளையும் கடந்துதான் வந்தது என்பதை பல வெற்றியாளர்களும் கூறுவதைக் கேட்கமுடிகிறதே. ஆக நம்முடைய சோகமான தருணங்களை, முழுவதுமாக அனுபவிக்காமல், அவசர, அவசரமாக கடந்து போக நினைப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. மகிழ்ச்சி என்பது சொடுக்கும் நேரத்தில் வந்து சென்றுவிடக்கூடியது. ஆனால் வருத்தம் போன்ற இருண்ட, ஆழமான உணர்வுகள் தம் பணியை முழுமையாக நிறைவேற்ற, அதனுள் மூழ்கி முத்தெடுக்க சிறிது அவகாசம் அளிக்க வேண்டியதும் அவசியம். ஆக நம்மைப் பண்படுத்தி, நல்வழி காட்டும் வருத்தமும் நல்லதுதானே?

படத்திற்கு நன்றி:

http://www.loverofsadness.net/show_picture.php?tag=sorrow

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

  1. Avatar

    Yes…I agree that happiness and sorrow are part of our life…We live in a world of incidents and accidents. As we go on growing in age and becoming mature we learn to face sorrows and find ways and means to overcome them.We are all faced with the bereavement of our dear ones when death strikes them naturally or otherwise through disease,or accidents . We mourn for a certain period and then gradually their thoughts fade away from our memories . Just because we have lost them we do not go on mourning forever. Similarly when we face sorrows we suffer for a short period and go on in our journey….Hence we should face sorrows in a challenging manner and prove our might in overcoming them …Sorroiws are also good experiences for writers!…A thought provoking article by PAVALA SHANKARI,…Dr.G.Johnson.

Comment here