தேர்தல் களத்தில் 136 பெண் வேட்பாளர்கள்

0

2011 ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை, 2748 பேர். இதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 136 பெண் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இவர்கள் போட்டியிடும் மொத்த தொகுதி 97 ஆகும்.

பெண் வேட்பாளர்களே போட்டியிடாத தொகுதிகளின் எண்ணிக்கை 137 ஆகும். இது கடந்த 2006இல் நடைபெற்ற சட்டப் பேரவையில் பங்கேற்ற பெண்களின் அளவை விடக் குறைவாகும்.

மாவட்ட வாரியாகப் பெண்கள் அதிகமாகப் போட்டியிடும் மாவட்டம், சென்னை மாவட்டமாகும். அதில் உள்ள 16 தொகுதிகளில் 17 பெண்கள் போட்டியிடுகிறார்கள். அதில் பெண்கள் அதிகம் போட்டியிடும் தொகுதி ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர் தொகுதிகளாகும். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் மொத்தம் 16 பேரில் மூன்று பேர் பெண் வேட்பாளர்கள். அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் 15க்கு 3 என்ற விகிதத்தில் போட்டியிடுகிறார்கள். ஸ்ரீரங்கம், துறையூர், திண்டுக்கல் தொகுதி ஒவ்வொன்றிலும் மூன்று பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதற்கு அடுத்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 10 பேர் பெண்கள்.

மூன்றாவதாக பெண்கள் அதிகம் போட்டியிடும் மாவட்டங்கள் மதுரை, கடலூர் மாவட்டங்களாகும். இதில் ஒவ்வொன்றிலும் 9 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 7 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளிலிருந்து 18 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

தர்மபுரி, கோவை, திருவாரூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே களத்தில் உள்ளனர்.

பெண் வேட்பாளர்களே போட்டியிடாத மாவட்டம். நீலகிரி மாவட்டமாகும்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் 99 இடங்களில் 156 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 22 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.