யாரேனும் சற்று கை கொடுங்களேன்!
ராணுவ வீரனாய், நெஞ்சில் நாட்டையும்,
ரத்தத்தில் துடிப்பையும், முதுகில்
பாரம் சுமந்து ஓடியிருக்கிறேன்
அது ஏதும் எனை அழுத்தியதில்லை.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான் மகன் என்று
தந்தை நம்பிக்கையுடன் என் தோளுக்கு மாற்றிய
குடும்ப சுமைகளை விருப்பத்துடன் ஏற்றதால்,
வலி ஏதும் எனை வீழ்த்தியதில்லை.
மண வாழ்வில், நாடி வந்த மங்கையை
இருகரத்தில் தூக்கி வென்றிருக்கிறேன்
பல நாள் காதல் விளையாட்டில்! –
சுமையாய் ஏதும் தோன்றவில்லை.
.
ஆனால் இன்று ,
மனைவி வெளியே சென்றுவிட்டதால்,
பழக்கமான கைச்சூடு இல்லை என்பதால்,
மை கரைய அழுத செல்ல மகள்,
இப்போதுதான் சற்று கண் மூடியுள்ளாள். . .
இண்க்கமாய் என் மார்பின் மீது அவள்
பூப்பொட்டலம் போல் . உறங்கும் நேரம்தானா
கணகணவென்று கைப்பேசி ஒலிக்க வேண்டும்?
மனையாளின் அழைப்பாய் இருக்குமோ?
நாட்டையும், பொறுப்பையும், காதலையும்
சுமந்து வேலை செய்து பழகிய எனக்கு,
மகளின் கண்ணீர்க் கரையை
நெஞ்சில் சுமப்பது பெரும் பாரமாய் உள்ளது.
அலுங்காமல் அவளை அப்புறப்படுத்தவும்,
அழும் முன் அவளை ஆசுவாசப்படுத்திடவும்,
மீண்டும் அவளை உறங்கச் செய்யவும்,
யாரேனும் சற்று கை கொடுங்களேன்!
படத்துக்கு நன்றி
http://eu.fotolia.com/id/4661216
கைகொடுக்கிறேன் நான்-
கைகுலுக்க..
சபாஷ…!
-செண்பக ஜெகதீசன்…
என் கவிதைகளைப் படித்தவுடன் உடனுக்குடன் பாராட்டுக்களை அளித்தரும் திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி
அற்புதமான கவிதை. அதிலும் “பூப்பொட்டலம்” என்னும் வார்த்தை மனதை மயிலிறகால் வருடுகிறது.
திரு முகில் தினகரன் அவர்களின் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி
சுகமான உறவு, புது விதமான உணர்வு, மிக இதமான பகிர்வு.
திரு அண்ணா கண்ணன் அவர்களின் மகிழ்வும், நெகிழ்வும் கலந்த பாராட்டுக்கு நன்றி