ராம்

 

“எந்திரிக்கலையா?… பொறவு லேட்டாயிடுச்சின்னு சொல்லாத சாவித்ரி!

சுருட்டைமுடியினைக் கையால் இன்னமும் சுருட்டியபடி, “அப்பா சந்தைக்கு கிளம்பிட்டாராம்மா?”

“நீ முதல்ல படுக்கைய விட்டு எந்திரி!“ என பாயை விருட்டென சுருட்டினாள் அஞ்சலை.

சாவித்ரியின் காதோரத் தொங்கட்டான் பதினேழுவயதிற்கு கட்டியங்கூற, வெறுந்தரையில் கிடந்தபடி கதவில் ஒட்டிய சாயம் போன கலர் பேப்பர் ‘கனவு காணுங்கள்‘ கலாமிற்கு மனதிற்குள் சாவித்ரி குட்மார்னிங் சொன்னாள்.

இன்று என்ன நாள்? என்று பார்க்க நிமிர்ந்த சாவித்ரியின் சிவந்த முகத்திற்கெதிரில் லேப்டாப் தெரிந்தது. விசுக்கென்று எழுந்த சாவித்ரி,

“ஏதம்மா இது?“

சாவித்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசம்!

“உனக்காகத்தான்… பக்கத்துவீட்டு மீனாகிட்ட கேட்டு வாங்கினேன். பாத்துட்டு கொடுத்துடு. ஸ்கூலில் சரியா பாக்கமுடியலன்னு சொன்னீல்ல…“

“இதெல்லாம் சொல்றியே? நான் நல்ல மார்க் வாங்கி ஸ்டேட் லெவல் வந்தேன்னா என்னை எப்படிம்மா படிக்க வைப்பே?“

கொஞ்சநேரம் வானத்துச்சூரியனின் வர்ணஜாலத்தை ஓட்டைக்குடிசைப் பொத்தலின் வழியே பார்த்தபடி, பெருமூச்சுடன் “எதெதுக்கு விதி எப்படி இருக்கோ அப்படி நடக்கும்…! அப்பா வந்துட்டாருன்னு நினைக்கிறேன், போய் கதவைத் திற!“ என்றாள் அஞ்சலை.

பழப்பெட்டியுடன் வந்த கந்தனை, “போய்க் குளிங்க! நான் அதுக்குள்ள பழசு,புதுசுன்னு பார்த்து வண்டில அடுக்கறேன். சாப்புட்டுக் கௌம்புனா நாலு தெரு சுத்தி வர  சரியாயிருக்கும்“.

“என்னம்மா ஸ்கூலுக்கு கிளம்பலையா?… ஏதோம்மா… என்னால முடிஞ்சது ஃபீசைக் கட்டி ஒரு ஸ்கூல்ல சேத்து விட்டேன். நல்லாப் படிம்மா.உங்க பிரின்சிபால்தாம்மா உன்னுடைய படிப்புக்குக் காரணம்“.

“தெரியும்பா… ஆனா… என்னை இன்னமும் படிக்க வைக்கணும்னா நிறைய செலவு ஆகுமே! என்னப்பா செய்வீங்க?“

“நீ சும்மா இருக்க மாட்டியா சாவித்ரி?“

“என் கிட்டயும் இதே கேள்விதாங்க கேட்டா!… இவளுக்கு எதுக்கு குடும்ப கஷ்டம்?“

“நீ நல்லா படிம்மா… பெத்தவங்க பாத்துக்கறோம்… ஸ்பெஷல் கிளாசுக்கு நேரம்ஆகலியா?“ சாவித்ரியின் மனம் வருந்தாமலிருக்க,அவளைப் பள்ளிக்கு அனுப்புவதில் குறியாக இருந்தாள் அஞ்சலை.

“ஹூம்… இன்னைக்கு டெஸ்ட்பேப்பரெல்லாம் வரும். நான் கிளம்பறேன். அதுக்குள்ளே இருக்கற பழசை அம்மா நீங்க டிஃபன்பாக்ஸில் வைக்கிறீங்களா?“

“ஏம் புள்ள… அதது ஹாட்பாக்ஸ்ல கட்டி வருதுன்ற… நீ என்னன்னா…“

“நான் இதுக்கெல்லாம் கூச்சப்படமாட்டேன்“.

‘ஐஸ் ஐஸ் தான்

என் அம்மா மனசும் ஐஸ் தான்

எங்க வீட்டு ரைசும் ஐஸ் தான்‘

எனப் பாடியபடி அம்மாவிடம் பழையதை வாங்கி விரிசல் விட்ட டிஃபன்பாக்ஸில் அடைத்தாள் சாவித்ரி.

“லேப்டாப்பைக் கொடுத்துடுங்க நான் பாத்துட்டேன்“ எனஇரட்டைஜடையுடன் விர்ரெனச் சென்ற மகளைப் பார்த்த அஞ்சலை, “இவளை நம்மால் படிக்க வைக்க முடியுமாங்க? நீங்கபாட்டுக்கு பிரின்சிபால் சொல்றாங்கன்னு அவளை இம்புட்டு படிக்க வைச்சிட்டீங்க…“

“நம்ம சாதியில எல்லாமே முக்காவாசி கை நாட்டுதானே… ஏதோ ஒண்ணு ரெண்டு தான் நாலோ,அஞ்சோ படிச்சிருக்கும். அதுவும் அமாவாசை மாதிரியில்ல முகங்கிடக்கும். அதுககிட்டபோய் எம்பொண்ண எப்படி?“

“இதுக்கே நாட்டுக்கு சேவை செய்யறதுக்கா படிக்க வைக்கப்போறீங்கன்னு கேக்கறாங்க? நாத்த வேரோட புடுங்கிவேற இடத்துல நட்டுத் தானே ஆகணும்!னு எங்கிட்டயே கேக்கறாங்க”.

எனக்கும் அதே யோசனைதான் அஞ்சலை.நானும் வர்ற வழியிலே நம்ம ஒறவுமுறை ஒண்ணைப் பாத்தேன். பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற நினைப்பில்லையாங்கறான். சம்பாதிக்க வெச்சி திங்கணும்னு நினைக்கிறியான்னு பச்சையா கேக்குறான்ளா…  ஒடம்பே ஆடிப் போச்சு. பொண்ணு ஒத்தையிலே போவுது. நான் பின்னாடி போறேன். வந்து வேலையப் பாப்போம்“.

“சும்மா கிடங்க… அதோ… ஸ்கூல் பெல் சத்தம் கேக்குது“.

“இந்நேரம் உள்ள போயிருப்பா… இங்கயிருக்கிற ஸ்கூலுக்கு பின்னாடியே போறாராமுல்ல… போய் வெரசா குளிங்க“

“இதுக்கே இப்படி! பொண்ணைக் கட்டிக் கொடுத்தா என்ன செய்வாரோ…“ என்று முணுமுணுத்தபடி ஈர விறகை ஊதி எரிய வைத்தாள் அஞ்சலை.

 

“சாவித்ரி… அந்த ஆன்சர் ஷீட்ல நான் போட்ட கரெக்ஷ்ன்ஸ் பாத்துக்க… மேற்கொண்டு கொஸ்டின் பாங்க் கொஸ்டின்ஸ் எல்லாம் பாத்துக்க. வேறு எதுவும் சந்தேகம்ன்னா கேளு. உன்னை டென்த்ல ஸ்டேட் லெவல் மார்க் வாங்க வைச்ச மாதிரி பிளஸ் டூலயும் வாங்க வைக்கணும்னு நினைக்கிறேன். இஞ்சினீயரிங் சீட் டிரை பண்ணா கிடைச்சுடும்“.

“மேடம் நான் நல்லா படிக்கிறேன். ஆனா இஞ்சினீயரிங் எல்லாம் வேண்டாம்“.

மூக்குக் கண்ணாடியைத் தலைக்கு மாற்றி, சாவித்ரியின் கண்களை ஊடுருவினார் பிரின்சிபால்.

“ஏன்?“

“எங்க வீட்டில பணம் இல்லைன்னு தெரிஞ்சும் என்னை ஏன் இஞ்சினீயரிங் படிக்க வைக்கணும்னு நினைக்கிறீங்க?“

“பாங்க்ல லோன் தராங்க! வேலை கிடைச்சதும் நீ கட்டு. நான் அதுக்கு ஹெல்ப் பண்றேன்.

“மேடம், நீங்க ஃப்ரீயா எங்கிட்ட பேசுறதால ஒண்ணு கேட்கவா? படிச்ச பொண்ணுங்க என்ன செய்கிறார்கள்? வேலை பாத்து சரியான வாழ்க்கைத்துணையுடன் இல்லறத்தைத் தொடங்கறாங்க. தன்னுடைய சுயமுயற்சியில் வாழறாங்க.  நீங்களும் அப்படித்தானே?“

“ஆமாம். அதுக்கென்ன?“

“ஒசந்த படிப்பு படிக்கணும்னா அதுக்குக் குடும்பமும் கொஞ்சம் ஒத்துப்  போகணும்ல மேடம்?“

“ஆமாம்…“

“எங்க குடும்பத்துல அதிகம் படிச்சவங்களே கம்மி.அதுவும் நாலாங்கிளாஸ், அஞ்சாங்கிளாஸ் தான்“.

“எங்க பேரண்ட்ஸ் நீங்க சொன்னீங்கன்னுதான் இவ்வளவு கஷ்டப்பட்டு குடும்ப வழக்கத்தை மீறி படிக்க வச்சிருக்காங்க. இதுக்கே படிச்சு ஒவ்வொரு சர்டிபிகேட்டையும் கழுத்துல கட்டித் தொங்க விட்டுக்கப் போறியான்னு எங்க சொந்தங்க கிண்டல் வேற!…“

“அதுக்குன்னு நீ படிக்காமல் இருக்கப் போறியா?“

“இஞ்சினீயரிங் படிச்சு நான் வேலை பாத்து ஃபாரின் போய் கைநிறைய சம்பாதிச்சேன்னு வச்சுக்குங்க. என் குடும்ப வாழ்க்கைய எங்க ஆரம்பிக்கிறது மேடம்?… லவ்  மேரேஜ் தான் வழின்னு சொல்லிடாதீங்க! நான் அதுக்கு முதல் எதிரி“.

“லவ்மேரேஜ் இன்னைக்கு எந்த அளவுல போய்ட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் மேடம். அரேஜ்ட் மேரேஜில் நான் வேலை பார்க்க எனக்கு வரப்போகும் துணை ஒத்துக்கணுமே! படிச்சா நான் அதுக்குத் தகுந்தமாதிரி வெளியுலகத்துல நடந்துக்கணும்.வீட்டுல இருக்கற உறவுகளுக்குத் தகுந்தாற்போல வாழணும். ஒத்து வருமா மேடம்?”

நெற்றிப்பொட்டைத் தேய்த்தபடி யோசித்த பிரின்சிபாலை ஒருகணம் தயக்கத்துடன் பார்த்த சாவித்ரி……

“ஏன் மேடம்! கல்யாணம் பண்ணிக்காம நாட்டில எத்தனையோ பேர் இல்லையா? அது போல் நானும் இருக்க முடியாதா?“

“ஏய் அறிவிருக்கா? உங்க அம்மாவுக்கு நீ ஒரே பொண்ணு. எந்தத் தாயும் அதை விரும்ப மாட்டாள்“.ரொம்பக் குழம்பிப்போயிருக்க……..

“அப்ப எனக்கு வழி…“

“நீயே சொல்லு! இவ்வளவு பேசறல்ல!“

“நான் இந்த உலகுக்கு மெழுகுவத்தியா இருக்கணும்னு நெனைக்கிறேன். என்னுடைய உடல் உறுப்பு முதற்கொண்டு எல்லாத்துக்கும் பயன்படற மாதிரி   வாழணும்னு நினைக்கிறேன். யோசிச்சு நாளைக்கு சொல்றேன் மேடம்.”என சொல்லிவிட்டு, கதவைத்தாண்டி ஓடிய சாவித்ரியை, எமன் தனக்குத் துணையாக இருக்கச் செய்யலாம் என நினைத்து விட்டான் போல் இருக்கிறது.

ரோடைக் கிராஸ் செய்யப் போகும்போது சாவித்ரியின் மீது மணல் ஏற்றிய லாரி நேராக மோதியது.

அடிபட்டுக்கிடந்தவளை ஹாஸ்பிடலுக்கு அள்ளிச்சென்ற பெற்றோரிடம் டாக்டர் மூளைச்சாவு என்றார். மூச்சில்லாமல் வானத்தைப் பார்த்தபடி, ஒருவர் தோளுக்கு ஒருவர் முட்டுக் கொடுத்திருந்த சாவித்ரியின் பெற்றோரைப் பிரின்சிபால் பார்த்தார்.

“நான் உங்களை ஒன்று கேட்கவா?…“

“நீங்கதாம்மா படிக்க வச்சீங்க… எங்க கிட்ட பேசறதை விட அது உங்ககிட்ட தான் நிறைய பேசும்“.

“நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்குத் தெரியும். எம் பொண்ணு ஆசையும் தெரியும். நாலு பேருக்கு ஒளி கொடுக்கிற மெழுவத்தியா வாழணும்னு அது நினைச்சது மாதிரியே செஞ்சிடுங்க, கையெழுத்து எங்க தேவைன்னு சொல்லுங்க. அதுபடியே செஞ்சிடலாம்” எனச் சொல்லிவிட்டு தன் கணவனை அழைத்துக் கொண்டு நடந்தாள் அஞ்சலை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கரையாத மெழுகுவத்தி

  1. நல்ல கதை. படித்தாலும் வாழ்க்கையில் பலபிரச்சனைகள், படிக்காவிட்டால் வாழ்க்கையே பிரச்சனை. நலல் நடை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.