பாரதிக் கவிஞனின் நினைவுநாளில்
செந்தமிழ் சொல்லெடுத்து
செந்தீயாய்க் கவி தொடுத்து
செம்மொழி எம்மொழி யென
செப்பிய பாவலனே ! பாரதியே !
உன் தமிழ் நான் படித்தேன்
உன் பித்தன் ஆகி நின்றேன்
உள்ளமெல்லாம் தமிழே பெரு
வெள்ளமெனப் பாய்ந்ததுவே !
எட்டயபுரத்தில் பிறந்தாய் நீ
எட்டமுடியாக் கவி செய்தாய்
எள்ளளவும் தயங்காமல் நீ
எழுச்சி கொண்டு மொழி காத்தாய்
ஏழ்மையிலே உழன்றாலும் பாரதியே !
எடுத்த அடி பின் வாங்காமல்
துடித்துப் புதுக் கவி செய்தாய்
தூயதமிழ்ப் புலவனே துதிக்கின்றேன்
காதலுக்கும் கவி செய்தாய்
கவிதைகளைக் காதலித்தாய்
கன்னித்தமிழ் மொழியதனை நீயும்
கவிதைகளால் அர்ச்சித்தாய்
முத்தி விட்ட பித்து என்றார்
மூளை பிசகிய மனிதன் என்றார்
முத்தமிழின் மைந்தன் நான் என
முழங்கி நீயும் புன்னகைத்தாய்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
செந்தேன் வந்து பாயுதென் காதினிலே
சத்தமாய் நீ கூவியே சூட்டி வைத்தாய்
செந்தமிழ்த் தாயிற்கோர் மகுடமன்றோ !
பெண்களின் கால்களில் விலங்குகளை
பூட்டிய சமூகத்தைப் பார்த்து நீயும்
ஏட்டினில் தீட்டிய கவிதைகளால்
எத்தனை மனங்களின் சிந்தனை விரிந்தன
மற்றவர் மொழிகளை மதித்திடும் வகையை
மெத்தன இதயத்தில் பதித்தே விட்டனை
வித்தகக் கவியே உந்தன பெருமையை
விரயம் செய்ததே அன்றைய அறியாச் சமூகம்
தாய்த் தமிழ் பாதம் பணிந்தே நானும்
தலைமகன் பாரதியுந்தன் நினைவுகளை
பாரினில் மீட்டிடும் வேளையிது நமது
பாரதிக் கவிஞனின் நினைவுநாளில்
படத்துக்கு நன்றி
http://www.lurvely.com/photo/92121116/Mahakavi_Subramania_Bharathiar/