உமா மோகன்

வாழ்க்கை துரத்துகிறதா?வாழ்க்கையை நாம் துரத்துகிறோமா? கல்லுக்கு ஓடும் நாயா?நாய்க்கு ஓடும் மனிதனா? எது நம் வாழ்க்கை?-இதில் என்ன வித்தியாசம் ?

கல் விழக்கூட வேண்டாம் …எடுப்பதான பாவனைக்கே ,நுரைதள்ள  ஓடும் ஓட்டம்… கெண்டைக்காலின் ஆடுசதையைக் காக்கும் அவசரத்தில் ஓடும்
ஓட்டம்… இதுதான் வித்தியாசம்…!

இப்படி ஒரு ஓட்டத்தின் முன்னேயோ…பின்னேயோ..நம் வெளிப்பாடெல்லாம் சில பெருமூச்சுக்களாகவோ,கோபக்-குமுறல்களாகவோ,எரிச்சலின் எச்சங்களாகவோதான் அமைகிறது.ஆனால்….

வறுமையும் வாழ்க்கையும் துரத்தும்போது திரும்பிப் பார்த்து  தீர்க்கமாய்ச் சிரித்தான் ஒருவன்…அவனால்,கஞ்சிக்கு இருந்த தானியத்தை வாரிப்போட்டு “காக்கை குருவி எங்கள் ஜாதி ” எனப்பாட முடிந்தது..! மழையொழுகும் பழம்வீட்டில் வசித்தபடி

முத்தொளிர் மாடங்களாம்-எங்கும்
                மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்” என அத்தினாபுரத்து
அழகைப் பாட முடிந்தது!

அன்னியரை அண்டியோ,அவர்வழிச் செல்லாமலோ, தம்வாழ்வை  நிறைவாக நடத்திக்கொள்ள கோடானு கோடியினர் இருந்த நாளில்,

                    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
                       மாக்களுக்கோர் கணமும் -கிளியே
                       வாழத் தகுதியுண்டோ?

என்று அக்கினிச் சொற்களை அடுக்கிய கவிஞன் அவன்!

உணவு,உடை,உறையுள் என அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடிய வாழ்வை நடத்தியபடி
       “எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா?”
எனப்பாடிய பாவலன் அவன்!

             ஊர்விட்டு ஊர் அலைந்து,குடும்பம் பிரிந்து ,சிறையேகி, நோயுற்றுத் தன் வாழ்வு தடுமாறுகையில் ,
        “மாகாளி  பராசக்தி கடைக்கண் வைத்தாள்
          ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி”
என ரஷ்யப் புரட்சியைக் கொண்டாட முடிந்தது!

           “விதியே விதியே தமிழ்ச் சாதியை
           என்செய நினைத்தாய்  எனக்குரையாயோ?”
என சமூகக் கவலைப்பட முடிந்தது!

உப்பென்றும்,சீனியென்றும்,  உள்நாட்டுச் சீலைஎன்றும்  ஓடும் வாழ்க்கைக்கு நடுவேயிருந்து என்னவெல்லாம் சொன்னது அந்தக் கவிமனது?

         “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
           செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”
என்றும்…

            “தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
              பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்றும்…மொழியின் உயர்வுக்கு உத்தரவிட்டது!

 

           ” நெஞ்சு பொறுக்குதில்லையே-இதை
                    நினைந்து நினைந்திடினும் பொறுக்குதிலையே?
              கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
                    காரணங்கள் இவைஎனும் அறிவுமிலார்
             பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம்
                     பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
             துஞ்சி மடிகின்றாரே-இவர்
                      துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
என்று சகமனிதர் துயர் தீர்க்க வெம்பியது!
             “நீதிநூறு  சொல்லுவாய் காசொன்று
                     நீட்டினால் வணங்குவாய் போபோபோ
              தீது செய்வதஞ்சிலாய் நின்முன்னே
                     தீமை நிற்கிலோடுவாய்  போபோபோ “
என்று தீயவற்றைத் துரத்தவும்,
               “தெளிவு பெற்ற மதியினாய் வாவாவா
                        சிறுமை கண்டு பொங்குவாய் வாவாவா
                  எளிமை கண்டு இரங்குவாய் வாவாவா
                        ஏறுபோல் நடையினாய் வாவாவா”

என்று வருகின்ற பாரதத்தை வரவேற்கவும் பாடினான்! அதனால்தான் அவன் மகாகவி!

 

           “பெரிதினும் பெரிது கேள் “என்ற உத்தரவல்லவா அவன் நமக்கு இட்டது!

 

            இருப்பதிலேயே நிறைவோடு இருந்துவிடும் மனசு …
                ஆத்மவிடுதலை தேட முடியுமா?
                தேச விடுதலை  தேட முடியுமா?
                இழந்த பெருமை மீட்க முடியுமா?
                ஊறும்   புதுமை சேர்க்க முடியுமா?
உப்புக்கும்,புளிக்கும் உழல்வதே வாழ்வானால்,
             வயிற்றுக்குச் சோறிடவேண்டும்-இங்கு
                  வாழும் மனிதருக்கெல்லாம்  
              பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
                  பாரை உயர்த்திட வேண்டும்
என உலகத்தை வாழவைக்க உபாயம் தேட முடியுமா?
         
             பக்கத்திருப்பவர் துன்பம்-தன்னைப்
                    பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
என்றும்,

           ஊருக்குழைத்திடல்  யோகம்-நலம்
                 ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
என்றும் ,

பெரிதினும் பெரிதான மேன்மைகள் எவையென்று  நமக்கு  அவனே அடையாளம் காட்டியிருக்கின்றான்…

           சிறியவற்றைப் புறந்தள்ள,
           பெரியவற்றை அகங்கொள்ள
           இந்த உலகம் வாழும்!
           நாமும் வாழ்வோம் !

 படத்திற்கு நன்றி : http://bhaarathi.blogspot.in/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.